Thursday, 3 November 2011

மழைக் காலங்களில் கடைபிடிக்கப்பட வேண்டியவைகள்

மழைக் காலங்களில் பழங்களைச் சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக ஏற்படாது. ஆனாலும் பழத்தை அப்படியே துண்டுகளாக வெட்டிச் சாப்பிட விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம்.எல்லா சீசனுக்கும் பொருத்தமானது வாழைப்பழம். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக மற்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.
1. மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு உடனடியாக கொடுக்க நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது.
இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.
2. மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில் இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
3. பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக் கூடாது, ஆனால் மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.
4. நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
5. மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.
6. இரவு தூங்குவதற்கு முன் பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.
7. நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை மழை சீசனில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்.
8. கண்டிப்பாக மழைக் காலத்தில் நம் உணவுப் பதார்த்தங்களில் மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
9. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.
10. மழை சீசனில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரைத் துகள்களை போட்டு வைக்கவும்.
11. சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும் விட்டமின் சி சத்து ஒத்துப் போகும். சிலருக்கு மழைக்காலம் வந்து விட்டாலே ஒத்துக் கொள்ளாது. எலுமிச்சம், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது.
ஆனால் ஒத்துக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக சாப்பிடாமல் இருப்பது நல்லது. சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நல்லது.
12. மழை சீசனில் கீரைகள் அதிகம் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் கீரைகளை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கீரைகளால் புதுசாக நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
13. மழை சீசனில் எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக் கொள்ளாது. அத்தகையவர்கள் அவர்களுக்கு ஏற்ற காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம்.
14. அசைவ உணவாக, மீன், முட்டை, கறி, சிக்கன் என்று சாப்பிடலாம், ஆனால் அவை பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மழைக் காலங்களில் கடைகளுக்குப் போய் வாங்குபவர்கள் குறைவு. அதனால் மீன் போன்றவை பழைய ஸ்டாக் இருக்க வாய்ப்பு உண்டு.



மேக்-அப் இல்லாமல் வீட்டு வாசலை தாண்டாதவரா நீங்கள்?


மேக்-அப் போட்ட அடுத்த நிமிடமே வெளியே கிளம்பி விடாதீர்கள். போக வேண்டிய நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே மேக்-அப் போட்டு விடுங்கள். அப்போது தான், அது சருமத்துடன் சேர்ந்து அழகாக, இயற்கையாக தெரியும். இல்லாவிட்டால், பெயின்ட் அடித்த மாதிரி தெரியும்.
மேக்-அப் போட்டு கொள்வது பெரிய விஷயமில்லை. அது, உங்கள் முகத்தில் உள்ள சின்ன, சின்ன குறைகளை தீர்ப்பதாக இருக்க வேண்டும். எனவே, முதலில் அதை கற்றுக் கொள்ளுங்கள். விழாக்களுக்கு செல்லும் போது மட்டுமே பிளஷர் உபயோகிக்கவும். மற்றபடி, முக்கிய இடங்களுக்கு செல்லும் போது, அது வேண்டாம். செயற்கை கண் இமைகளை உபயோகிக்க வேண்டாம். மஸ்காரா உபயோகிப்பதை பழக்கிக் கொள்ளுங்கள். அதுவும் நிறைய கோட் தடவினால், செயற்கையாக தெரியும். ஒன்றிரண்டு கோட்டோடு நிறுத்திக் கொள்ளவும். தலையை விரித்தபடி விட்டுக் கொண்டு போகாதீர்கள். சிறிய கூந்தலாக இருந்தாலும், அதை குதிரை வாலாகக் கட்டிக் கொண்டோ, ப்ரென்ச் பின்னல் போட்டுக் கொண்டோ போனால், அழகோ அழகு.
மேக்-அப் போட்ட அடுத்த நிமிடமே வெளியே கிளம்பி விடாதீர்கள். போக வேண்டிய நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே மேக்-அப் போட்டு விடுங்கள். அப்போது தான், அது சருமத்துடன் சேர்ந்து அழகாக, இயற்கையாக தெரியும். இல்லாவிட்டால், பெயின்ட் அடித்த மாதிரி தெரியும். மேக்-அப் போடும் போது, நல்ல இயற்கை வெளிச்சத்தில் போடவும். லைட் வெளிச்சத்தில் உங்கள் மேக்-அப் சரியாக தெரியாமல், வேறு விதமாக காட்டக் கூடும். மேக்-அப் போட்டு முடித்த பிறகு, குளிர்ந்த ஜூஸ் ஏதாவது குடியுங்கள்; அது, உடலை குளிர்ச்சியாக வைக்கும். இன்டர்வியூ போகிற போது, உடைகளுக்கு மேட்ச்சாக ஐஷேடோ மற்றும் மஸ்காரா உபயோகிப்பதை தவிர்க்கவும். அது, உங்களை நவ நாகரிக பெண்ணாக காட்டினாலும், அந்த இடத்திற்கு ஒத்து வராது.
பகல் வேலைகளில் முக்கிய இடங்களுக்குச் செல்லும் போது, அளவுக்கதிகமாக மேக்-அப் வேண்டாம். அதே மாதிரி அனைத்து மேக்-அப் பொருட்களும், சன் ஸ்கிரீன் கலந்ததாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இப்போது ஐலைனர், மஸ்காரா, லிப்ஸ்டிக் என எல்லாமே, “வாட்டர் புரூப்’ ரகத்தில் கிடைக்கின்றன. இவற்றை உபயோகித்தால், வியர்வையோ, தண்ணீரோ பட்டால், மேக்-அப் கலையாமல், அப்படியே இருக்கும். பவுண்டேஷன், காம்பேக்ட் பவுடர் போன்றவற்றை, கையில் வைத்திருங்கள். நீங்கள் போன காரியம் தாமதமாகும் என தெரிந்தால், மறுபடி ஒருமுறை டச்-அப் செய்து கொள்ளலாம். வேலை முடிந்து, அங்கிருந்து நேராக ஏதேனும் முக்கிய இடத்திற்கோ, தியேட்டருக்கோ விரைய வேண்டுமா? மேக்-அப் செய்ய நேரமில்லையா? கவலை வேண்டாம். கண்களுக்கு மட்டுமாவது மேக்-அப் போட்டுக் கொள்ளுங்கள்; புத்துணர்வோடு தெரிவீர்கள்.
முகத்துக்கேற்ற மேக்-அப் பற்றி சில குறிப்புகள்
முக்கோண வடிவம்: முக்கோண வடிவ முக அமைப்புள்ளவர்களுக்கு தாடை சற்று கூராக இருக்கும். இவர்கள் முகத்தின் இரு பக்கமும் காதுகள் மூடும் அளவுக்கு நெற்றியிலும் கொஞ்சம் முடி விழுமாறு ஹேர் ஸ்டைல் செய்யலாம்.
சதுர வடிவம் : இவர்கள் நெற்றியின் முன்பக்கம் முடி அதிக உயரமாகவும், பக்கங்களில் சற்று குறைவாகவும் வைத்து ஹேர் ஸ்டைல் செய்ய வேண்டும்.
நீண்ட முகம் : நீண்ட முகம் உடையவர்கள் ஹேர் ஸ்டைலை உயர்த்தி செய்யக் கூடாது. பக்கங்களில் அதிக முடி தெரியும்படியும், நெற்றியில் முடி வரும்படியும் ஹேர் ஸ்டைல் செய்யலாம்.
உருண்டை முகம்: பொதுவாக வட்டமுகம் உள்ளவர்களுக்கு எந்த விதமான முன் அலங்காரம் செய்தாலும் சூப்பராக இருக்கும்
.


இந்தியாவின் தேசிய பானம் டீ..?

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொங்கோர்பில்லி கிராமத்தைச் சேர்ந்த வட்டத்தாரா குடும்பத்தினர், பால் சேர்க்காத `கறுப்பு காபி’ அடிமைகள்.
இவர்கள் மட்டுமல்ல, இந்த ஒட்டுமொத்தக் கிராமமுமே அப்படித்தான். இங்கே இது இயல்பான விஷயம். காரணம் இக்கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்தினரும் காபி விளைவிப்பவர்கள்.
இந்நிலையில், 40 வருடங்களுக்கு முன் வட்டத்தாரா குடும்பத்தில் இருந்து வி.எம். தாமஸ் என்பவர் பாதிரியார் படிப்புப் படிக்க அசாமுக்குப் புறப்பட்டுப் போனார்.
தாமஸின் மதக் கல்விப் பற்று, காபியை புதிய எல்லைகளுக்கு எடுத்துச் செல்லும் என்று ஆசிரியரான அவரது தந்தை நம்பினார். ஆனால் நடந்ததோ வேறு. தீவிர டீ பிரியராகிவிட்டார் தாமஸ்.
“டீக்கு புகழ்பெற்ற அசாமில் 30 ஆண்டுகளைக் கழித்த நான், அந்தப் பானத்துக்கு மாறியதில் ஆச்சரியமில்லை. ஆனால் சொந்தக் கிராமத்துக்குத் திரும்பி வந்தபோது இங்கே ஏறக்குறைய எல்லோரும் டீ குடித்துக் கொண்டிருந்ததுதான் என்னை வியப்பில் விழவைத்தது” என்கிறார், தற்போது 60 வயதாகும் தாமஸ்.
கொங்கோர்பில்லி மட்டுமல்ல, இந்தியாவின் 5 லட்சத்து 93 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்களும், 4 ஆயிரத்து 378 நகரங்களும் அன்றாடம் டீ அருந்தி மகிழ்கின்றன.
சென்னை போன்ற பெருநகரங்களில் ஒருநாளைக்கு ஒரு கோடி டீக்கு மேல் அருந்தப்படுகிறது. பெருநகரங்கள், நகரங்களில் மட்டுமல்ல, சாலை வசதி இல்லாத கிராமத்தில் கூட ஒரு குட்டி டீக்கடை முளைத்திருப்பது உங்களுக்கும் தெரியும்.
ஏன், இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் கூட ஒரு டீயை உறிஞ்சிக் கொண்டிருக்கலாம். இந்தியாவின் 83 சதவீதக் குடும்பங்கள் டீக்கு அடிமை என்கிறது ஒரு கணக்கெடுப்பு.
இதெல்லாம் சேர்ந்துதான், டீயை இந்தியாவின் தேசிய பானமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உரத்து ஒலிக்கச் செய்திருக்கின்றன.
சரி, டீயை தேசிய பானமாக அறிவிப்பதால் என்ன நடந்துவிடப் போகிறது?
`பல நல்ல விஷயங்கள் நடக்கும்’ என்கிறார்கள், தேயிலை விளைவிப்போர்.
`டீக்கு ஒரு நல்ல பிராண்ட் மதிப்பு கிடைக்கும், சர்க்கரை, பாலுடன் அல்லது அவையின்றி (சில இடங்களில் வெண்ணையுடனும் கூட) இதை ஓர் ஆரோக்கிய பானமாகப் பிரபலப்படுத்த முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக, தேசிய பானம் என்பது ஒரு நாட்டின் அடையாளம், சுய மதிப்பு, வரலாறு, சூழலியல், கலாசாரம் ஆகியவற்றின் ஓர் அங்கம்’ என்கிறார்கள், தேயிலைக்காரர்கள்.
`டீ தேசிய பானம்’ என்ற கோஷத்தை முன்னெடுத்துச் செல்வதில் முன்னணியில் இருப்பது, வடகிழக்குத் தேயிலைச் சங்கம் (என்.இ.டி.ஏ). கிழக்கு அசாமில் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த கோலாகாட் மாவட்டத்தில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது.
“இந்த விஷயத்தில் நாம் பாகிஸ்தானிடம் பாடம் படிக்க வேண்டும். அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கரும்புச் சாறை தேசியப் பானமாக அறிவித்துவிட்டார்கள். தேயிலை உற்பத்தியில் உலகின் `நம்பர் 1′ நாடாக இருக்கும் சீனாவையும் எடுத்துக்கொள்ளுங்களேன். அங்கு `கிரீன் டீ’தான் தேசிய பானம்” என்கிறார், என்.இ.டி.ஏ.வின் தலைவர் வித்யானந்தா வர்க்ககோதி.
தொடர்ந்து அவரே, “இந்த நாடுகளை எல்லாம் கூட விட்டுவிடுங்கள். இங்கிலாந்தைப் பாருங்கள். அந்நாட்டுக்குப் பெரும்பாலும் தேயிலையை ஏற்றுமதி செய் பவர்கள் நாம்தான். ஆனால் இங்கிலாந்து தேசிய பானம், டீ! கடந்த 180 ஆண்டுகளாக பல்வேறு வகையான தேயிலையை உற்பத்தி செய்துவரும் நாம், டீக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காமல் இருப்பது வினோதமே” என்று ஆதங்கப்படுகிறார்.
சொல்லப் போனால், இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் 50 சதவீதத்துக்குச் சொந்தமான அசாமிலும் கூட டீக்கு இன்னும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
கடந்த 2005-ம் ஆண்டில், இம்மாநிலத்தின் விலங்காக காண்டாமிருகமும், மாநிலப் பறவையாக வெள்ளை இறக்கை மர வாத்தும் அறிவிக்கப்பட்டன. ஆனால் டீயை கண்டுகொள்ளவில்லை.
இதற்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி தருண் கோகோயைச் சந்தித்து வலியுறுத்தியிருப்பதாகக் கூறுகிறார், என்.இ.டி.ஏ. உறுப்பினர் சிங்கானியா. மாநிலப் பானமாக அறிவிப்பது, தேசிய பானமாக்குவதற்கான முதல் படியாக அமையும் என்பது இவரது கருத்து.
ஏறக்குறைய பாதி உலகத்துக்கு, `அசாம்’ என்ற பெயரை அறியச் செய்த டீயை அதிகாரப்பூர்வ பானமாக அறிவிக்காதது தவறுதான் என்று ஒத்துக்கொள்கிறார், அசாம் மாநில தொழில்துறை அமைச்சர் பிரத்யூத் போர்டோலோய். இந்த விஷயத்தில் தாங்கள் கவனம் செலுத்துவோம் என்கிறார் இவர்.
நாடு முழுவதும் உள்ள டீ நேசர்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான்!

டீ… சில துளிகள்

* தேயிலை உற்பத்தியில் உலகளவில் இந்தியாவுக்கு 2-வது இடம்.
* உலகிலேயே அதிகமாக தேநீர் பருகும் நாடு இந்தியா. நாட்டின் தேயிலை உற்பத்தியில் 80 சதவீதத்தையும், உலக உற்பத்தியில் 20 சதவீதத்தையும் இந்தியர்கள் ருசிக்கிறார் கள்.
* இந்தியாவில் ஏறக்குறைய பாதி அளவு தேயிலையை உற்பத்தி செய்வது அசாம். உலக அளவில் இம்மாநிலத் தின் பங்கு 13 சதவீதம்.
* உலகளவில் தேயிலை ஏற்றுமதியில் நான்காவது பெரிய நாடு இந்தியா. உலக ஏற்றுமதியில் நமது பங்கு 13 சதவீதம்.
* பல்வேறு வகையான மணம், திடம், குணம் கொண்ட தேயிலைகளை இந்தியா உற்பத்தி செய்கிறது. அவற்றில் முக்கியமானவை- டார்ஜீலிங், அசாம் பராம்பரியம், அசாம் சிடிசி, டூரர்ஸ்-தேராய், நீலகிரி பாரம்பரியம், நீலகிரி சிடிசி, காங்ரா மற்றும் பச்சைத் தேயிலை.
* பூமியில் தண்ணீருக்குப் பின் விலை மலிவான பானம், டீ.
***

இன்னும் கொஞ்சம் டீ…

இந்தியாவில் தேயிலைத் தொழிலில் 10 லட்சத்து 20 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்கள் உள்ளனர்.
நாட்டில் இத்தொழிலில் 20 லட்சம் பேர் மறைமுகமாக வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.
தேயிலையில் நாட்டின் வருடாந்திர வரவு- செலவு ரூ. 10 ஆயிரம் கோடி.
நாட்டில் சுமார் 5 லட்சத்து 80 ஆயிரம் எக்டேரில் தேயிலை விளைவிக்கப்படுகிறது.
இந்தியாவில் 10 எக்டேருக்கும் குறைவான பரப்பளவுள்ள 1 லட்சத்து 57 ஆயிரத்து 504 தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.
***

சில நாடுகளும், தேசிய பானங்களும்

கிரீஸ் – `ஊஸோ’ என்ற மதுபானம்
ஜப்பான் – `சேக்’ என்ற அரிசி மதுபானம்
பாகிஸ்தான் – கரும்புச் சாறு
சீனா – டீ
இங்கிலாந்து – டீ
ரஷியா – வோட்கா
ஸ்காட்லாந்து – விஸ்கி


நன்றி-தினத்தந்தி