Friday, 2 December 2011

கணினியின் சுவாரஸ்யமான எதிர்காலம்




அது என்ன ஆச்சரியம் என்று கேட்கலாம். இது ஜப்பான் தொழில் நுட்பம், உங்களால் என்ன என்று யூகிக்க முடிகிறதா?

நெருக்கமாக பாருங்கள் அவை என்னவாக இருக்கும் என்று நினைக்கிறிர்கள் ...
அவைகள் கேமிரா பேனாக்களாக இருக்குமா?
நீங்கள் பார்க்கும் இவைகள் எதிர்காலத்தில் உங்கள் பிசி பதிலாக உபயோகிக்கும் கணினி.
மினியேச்சர் கம்ப்யூட்டர்கள் புரட்சியில், விஞ்ஞானிகள் ப்ளூடூத் தொழில்நுட்பம் பெரிய அபிவிருத்திகள் செய்வதனால், உங்கள் பைகளில் எடுத்து செல்ல முடிகிறது. அதனால் எதிர்கால கணினிகளாக உள்ளது.

இந்த 'கருவி பேனா மாதிரி' கண்காணிக்கவும் அத்துடன் நீங்கள் சாதாரணமாக உங்கள் டெஸ்க்டாப் கணினியில் செய்ய வேண்டும் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். எந்த தட்டையான பரப்புகளிலும் கீபோர்டை உருவாக்க முடியும்.
மடிக்கணினிகளுக்கு குட் பை சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை!

விலைக்கு வாங்கும் மின்சாரத்தை வீணடிக்கும் மின் வாரியம்



தமிழகத்தில், காற்றாலை மின்சாரத்தை சேமிக்கும் சலுகைத் திட்டத்தால், மின் வாரியத்திற்கு ஆண்டுதோறும், பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், காற்றாலைகளுக்கான மின் சேமிப்பு முறையை ரத்து செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
சலுகையால் நஷ்டம்: தமிழகத்தில் காற்றாலை மின்சாரத்தை ஊக்குவிக்க, 10 ஆண்டுகளுக்கு முன், “சேமிப்பு முறை திட்டம்’ என்ற சலுகை வழங்கப்பட்டது.காற்றாலை நிறுவனங்கள், தங்கள் தொழில்களுக்கு பயன்படுத்தியது போக மீதமுள்ள மின்சாரத்தை, யூனிட், 3.39 ரூபாய்க்கு மின் வாரியத்திற்கு தருகின்றன. இதை, மின் வாரியம் கணக்கிட்டு, காற்றாலை உற்பத்தி இல்லாத நாட்களில், சம்பந்தப்பட்ட காற்றாலை அதிபர்களின் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கு, விலையில்லாமல் மின்சாரமாகவே கொடுத்து, கடனைக் கழிக்கிறது. இதிலும் ஈடுகட்ட முடியவில்லை என்றால், மின் வாரியம் பணம் தருகிறது. இந்த சலுகை திட்டத்தால், தமிழக மின் வாரியத்திற்கு ஒவ்வொரு ஆண்டும், பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
ஆந்திராவுக்கு இனாம்: இதுகுறித்து, மின் வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:காற்றாலை மின்சாரத்தை யூனிட், 3.39 ரூபாய்க்கு வாங்குகிறோம். மே முதல் அக்டோபர் வரை, காற்று அதிகமாக வீசும் என்பதால், ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான மின்சாரம் உற்பத்தியாகி, மின்தொடரில் இணையும் போது, அதில் திறன் நெருக்கடி ஏற்படுகிறது.தெற்கு மண்டல மின்தொடரில், 50 “ப்ரீக்வன்சி’க்கு மேல் மின்சாரம் வரும் போது, வேறுவழியின்றி அதை, வேறு மாநிலங்களுக்கு, குறிப்பாக ஆந்திராவுக்கு கொடுத்து, மின்தொடர் திறனை பராமரிக்கும் நிலை உள்ளது.காற்றாலை மின்சாரத்தை வேறு மாநிலங்களுக்கு விற்க முடியாதபடி, தமிழக அரசு தடையாணை விதித்துள்ளது. இதனால், அளவுக்கு அதிகமாக வரும் தமிழக காற்றாலை மின்சாரத்தை, ஆந்திர மாநிலம், பல கோடி ரூபாய்க்கு இனாமாக பயன்படுத்திக் கொள்கிறது.
இனாமாக ஆந்திராவுக்கு கொடுக்கப்பட்ட மின்சாரத்திற்கும் சேர்த்து, யூனிட் 10 ரூபாய்க்கும் அதிகமாக, வெளிச்சந்தையில் வாங்கி, காற்றாலை உற்பத்தி இல்லாத நாட்களில், காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு மின் வாரியம் தர வேண்டியுள்ளது. அதாவது, 3.39 ரூபாய்க்கு வாங்கிய மின்சாரத்தை, 10 ரூபாய்க்கு வாங்கி திருப்பித் தருவதோடு, தமிழகத்திற்கும் பயன்படாமல், வேறு மாநிலத்திற்கு இனாமாக செல்கிறது.
சலுகை ரத்து?இந்த சலுகை திட்டம், இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. இந்த வகையில் மட்டும், தமிழக மின் வாரியத்திற்கு ஆண்டுக்கு, பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.எனவே, இந்த சேமிப்பு முறை திட்டத்தை ரத்து செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. விரைவில் இதற்கான மனுவை, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
காற்றாலை மின்சார உற்பத்தி:தமிழகத்தில், 6,008 மெகாவாட் திறன் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. நடப்பாண்டில், மேலும் 2,000 மெகாவாட் காற்றாலைகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.இவற்றில் இருந்து, மே முதல் அக்டோபர் வரை, அதிகபட்சமாக தினமும், 2,500 மெகாவாட் மின்சாரம், தமிழக மின் வாரியத்திற்கு கிடைக்கிறது. மற்ற மாதங்களில், 100, 200 மெகாவாட் தான் கிடைக்கிறது. கடந்த ஆண்டில், 870.7 கோடி யூனிட் மின்சாரம், காற்றாலையில் கிடைத்தது. நடப்பாண்டில், 940 கோடி யூனிட் மின்சாரம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
நன்றி-தினமலர்


Thursday, 1 December 2011

விவாகரத்தின் `மறுபக்கம்’


பார்த்து வாங்கும் ஒரு மாம்பழத்தை சுவையாக இருக்கும் என்று நினைத்து சாப்பிட ஆரம்பிக்கிறோம். ஆனால் அது ஒரு புறத்தில் அழுகிப்போயிருந்ததைக் கண்டால் உடனே தூக்கி தூரவீசிவிடுகிறோம். அதுபோலத்தான் இப்போது திருமண வாழ்க்கையும் ஆகிக்கொண்டிருக்கிறது. அதனால் விவாகரத்துக்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று பலரும் சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். அதன் பிறகும் விவாகரத்து ஏன் ஏற்படுகிறது? என்று ஆராய்ந்தால் விடை எளிதாகவே கிடைத்துவிடும்.
ஒரு காலத்தில் விவாகரத்து என்பது சமூகத்தினரால் கூர்ந்து கவனிக்கக்கூடிய பெரிய சம்பவமாக இருந்தது. ஆனால் இன்று அது வீட்டுக்கு வீடு நடக்கும் சாதாரண சம்பவமாக மாறிக்கொண்டிருக்கிறது. பெற்றோர்களை விட அதிகமாக படித்து விட்ட இளைஞர்கள் தங்களை புத்திசாலிகளாக நினைத்துக்கொண்டு அவர்கள் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக்கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். அந்த வாழ்க்கையில் சந்தாஷம் மட்டுமே இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். துயரங்கள் வரும்போது எளிதாக துவண்டு போய் அவசர முடிவு எடுத்துவிடுகிறார்கள்.
இன்றைய அவசர உலகில் நாம் பயன்படுத்துவதில் “யூஸ் அண்ட் த்ரோ” பொருட்கள் மிக அதிகம். அந்த பொருட்களை போலத்தான் ஆண்- பெண்ணையும், பெண், ஆணையும் கருதுகிறார்கள். `நாம் விரும்பும்போது திருமணம் செய்துக்கொள்ளலாம். ஏதாவது பிரச்சினை வந்தால் தூக்கி எறிந்துவிடலாம்’ என்று நினைக்கிறார்கள். அதன் பின்விளைவுகளைப் பற்றி அவர்கள் சிந்திப்பது குறைவு.
திருமணம் என்பது இருவர் ஒன்று சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல. 2 குடும்பங்கள் ஒன்று சேர்ந்து இயங்கி, புதுமண தம்பதியினருக்கு பலத்தை கொடுத்து புது தெம்பை அளிக்கிறது. சமூக கட்டமைப்புகளும் அதற்கு துணைபுரிகிறது. ஒரு திருமணத்தில் குடும்பங்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைகிறதோ, அதைவிட அதிகமாக ஒரு விவாகரத்தில் குடும்பங்கள் துன்பத்தை சந்திக்கின்றன.
தற்போது விவாகரத்துகள் அதிகரித்துவரும் நேரத்தில், நியாயமான விவாகரத்துகள் மிகக் குறைவாகவே உள்ளன. ஒருவரை புறக்கணிக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு, அவமானப்படுத்தி, அசிங்கமான காரணங்களைக் கூறி விவாகரத்துக்கு முயற்சிப்பது அதிகரித்து வருகிறது. இது ஒரு தொற்றுநோய் போல உலகெங்கும் பரவி வருகிறது.
இந்திய கலாசாரத்தை பொறுத்தவரையில் திருமணங்கள் என்பது இருவரை உலக வாழ்க்கைக்கு பக்குவப்படுத்தும் ஒரு புனித சடங்கு. நம்முடைய சாஸ்திர முறைகள் அதைத்தான் உணர்த்துகின்றன. ஆனால் இப்போது அவசரத் திருமணங்கள் அதிகரித்து, அவசர விவாகரத்துகளும் பெருகிவிட்டன.
பெண்கள் இப்போது நிறைய படித்து, வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பாதித்து சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வருகிறார்கள். அவர்களில் சிலர் தங்கள் எதிர்காலத்தை பணம், பதவி, அந்தஸ்தாக மட்டுமே பார்க்கிறார்கள். சாப்பிடுவதும், தூங்குவதும், விதவிதமாக ஆடைகள் அணிவதும், ஆடிப்பாடி கொண்டாடுவதையும்தான் வாழ்க்கை என்று அவர்கள் கருதுகிறார்கள். அதனால் அவர்கள் திருமணத்தின் முக்கியத்தையும், திருமண வாழ்க்கையை காப்பாற்ற பல விதங்களில் முயற்சிக்க வேண்டும் என்பதை அவர்கள் அறியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.
கணவன், மனைவியில் யார் பெரியவர் என்ற கேள்வி எழுந்துவிடக்கூடாது. எழுந்துவிட்டால் அதில் யாராவது ஒருவர் தாழ்ந்து கொள்ள வேண்டும். ஒருவரின் சுயமரியாதையை கெடுக்கும் விதத்தில் அவமரியாதை செய்யாமல் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
திருமணம் என்பது ஒருவரை ஒருவர் அடக்கி ஆள கொடுக்கும் உரிமை அல்ல. தவறுகளை எடுத்துச் சொல்ல இருவருக்குமே உரிமை இருக்கிறது. ஆனால் அடுத்தவர்கள் முன்னால் வைத்து பகிரங்கமாக தன் இணையை குறை சொல்ல இருவருக்குமே உரிமை இல்லை. அப்படிச் செய்தால் அது அவமானமாகிவிடுகிறது.
திருமணம் கணவன்- மனைவி இருவரின் எதிர்காலத்தை வளமாக்குவதற்காக அமைக்கப்படுகிறது. நிகழ்காலத்தில் சின்ன, சின்ன வேறுபாடுகளை நீக்கினால் மட்டுமே இருவரும் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியும். வளமான எதிர்காலத்தை பற்றிய சிந்தனையோடு செயல்பட்டால், நிகழ்காலத்தில் உள்ள சின்னச்சின்ன பிரச்சினைகளை எளிதாக களைந்துவிடலாம்.
ஆண், பெண் இருவருக்கும் குடும்பத்தை நிர்வகிப்பதில் பொறுப்பு இருக்கிறது. ஆனால் இன்றைய சூழலில், நாள் முழுவதும் உழைத்து விட்டு வீடு திரும்பும் நேரம் இரண்டு பேருக்குமே அந்த கூட்டுபொறுப்பை நிறைவேற்ற பொறுமை இல்லை.தேவையற்ற டென்ஷன், கோபம், வெறுப்பு போன்றவைகளால் இருக்கும் பொறுமையையும் இழந்து, மல்லுக்கட்ட தயாராகிவிடுகிறார்கள். அதுவே பிரச்சினைகளுக்கும், பிரிவுகளுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.
விவாகரத்து வழக்குகளில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகியவை 2-வது இடத்திலும், கேரளா 3-வது இடத்திலும், பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்கள் 4-வது இடத்திலும் உள்ளன.