Tuesday, 3 April 2012

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்
பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..
நன்றி - தமிழ்க்குடில்
தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.
நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் .
தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.


Monday, 2 April 2012

தற்கொலை ஒருவரது பிரச்சனைக்கு தீர்வாகுமா ......?


இந்த தகவலை பொறுமையுடன் படியுங்கள் நண்பர்களே. அலச்சியம் வேண்டாம் அவசியம் வேண்டும். இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. சிலரின் வாழ்க்கை வசந்தம் வீசும் இன்பப் பூஞ்சோலையாகிறது, சிலரது வாழ்க்கையோ வறுமையும், துன்பமும் சுழன்று தாக்க வாழ்க்கையே சோகமாகி சுட்டெரிக்கும் பாலைவனமாக மாறிவிடுவதும் உண்டு. ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான், தனக்கு பிரச்சினையே வரக்கூடாது மற்றும் உலகின் சகல சுகமும் ஒருங்கே பெற்று இன்பத்தில் உலா வரவேண்டும் என்று, அதுதான் மனித இயல்பும்கூட. வெளி உலகில் வீராப்பு பேசும் எத்தனையோ நபர்கள் தன் சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை வந்துவிட்டால் உள்ளங்கள் உடைந்து கதறி கண்ணீர் சிந்தி நம்மால் இந்த பிரச்சினையை தீர்க்கவே முடியாது என்றெண்ணி தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளும் தடுக்கப்பட்ட செயலைச் செய்யவும் துணிந்து விடுகின்றனர். உயிரை மாய்த்துக் கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடுமா என்ன ? எதற்கு இந்த கோழைத்தனம் ? அவர்களின் நினைப்பு பிரச்சினைகள் தனக்கு மட்டும்தான் வருகிறது. உலகிலேயே யாருக்கும் வராத தர்ம சங்கடம் ஏன் தனது வாழ்க்கையில் வந்துவிட்டது என்று மனம் உடைந்துதான் இத்தகைய முடிவை எடுக்கின்றார்கள். பிரச்சினைக்கு தீர்வு தற்கொலைதான் என்றால் இன்று உலகில் ஒருவரும் உயிர்வாழ முடியாது ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்துகொண்டுதான் இருக்கின்றது, இருக்கும். ஏழைக்கு பணப்பிரச்சினை என்றால் பணக்காரருக்கு உடல் பிரச்சினை. சிலருக்கு பெற்ற மக்களால் பிரச்சினை என்றால் சிலருக்கு மக்களை பெற்றெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கங்கள், இவ்வாறாக ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் உட்பட்டவனாகவே வாழ்கின்றனர். இன்னும் சோகங்களையும், கஷ்டங்களையும், ஏக்கங்களையும், ஆசைகளையும் மனதில் தேக்கி வைத்துக் கொண்டு உதட்டில் புன்னகை சிந்தும் எத்தனையோ மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆக, பிரச்சினை என்பது தற்கொலை செய்பவருக்கு மட்டுமல்ல, ஊர் முழவதும், நாடு முழவதும் ஏன்! உலகம் முழவதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஏதாவது ஒரு காரணம் அல்லது முக்கிய சம்பவம் தற்கொலைக்குத் தூண்டுகோலாக அமைவதாக இருந்தாலும், நாள்பட்ட தற்கொலை எண்ணங்களும், உணர்வுப் போராட்டங்களும் கூட காரணமாக அமைகின்றன.. துக்கமான சூழ்நிலை அன்பிற்குரியவரின் இறப்பு, மணமுறிவு, முற்றிய சண்டை, கணவனிடமிருந்தோ, மனைவியிடமிருந்தோ பிரிந்திருப்பது. பணப் பிரச்சினை, திடீரென நோய் வாய்ப்படுவது, வேலை இழப்பு, கடன் தொல்லை. தன் மேல் வழக்கு விவகாரம் எதாவது வந்துவிடுமோ என்ற பயம்; தன்னை யாராவது அடித்து விடுவார்களோ என்ற பயம். போதை மருந்துக்கு அல்லது குடிக்கு அடிமை ஆதல். ஏற்கனவே தற்கொலை முயற்சியில் தோல்வி, குடும்பத்தில் வேறு யாராவது தற்கொலை செய்துகொண்டிருப்பது. நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள், துக்கத்தில் ஆழ்ந்து இருப்பது, எதிலும் பற்றில்லாமல் போவது, எரிச்சல், பரபரப்பு, முடிவு எடுக்க முடியாமல் குழப்பம், தூக்கமின்மை, அதீத சோர்வு, கவனமின்மை; அளவுக்கு மிஞ்சி சாப்பிடுவது, அல்லது பசியின்மை; பணக்கவலை, தன்னை நம்பியிருப்பவர்களைப் பற்றிய கவலை; திடீரென்று அழுவது, அல்லது மிதமிஞ்சிய சந்தோஷத்தை காட்டுவது பேச்சில் மாற்றம்: தான் தனிமையை விரும்புவதாக அடிக்கடி கூறுவது; அல்லது தான் தனி, தனக்கு யாருமில்லை என்று சொல்லுவது; தான் எதற்கும் லாயக்கில்லை, தன் வாழ்வு வீண் என்பது; சுய மரியாதையை இழந்துவிட்டதாக நினைப்பது; குற்ற உணர்ச்சி; அவமான உணர்ச்சி; வாழ்வதினால் என்ன பயன் என்பது; இறப்பைப் பற்றியும் தற்கொலையைப் பற்றியும் அடிக்கடி பேசுவ தற்கொலை முயற்சி செய்யும் ஒருவருக்கு வெளியில் இருப்பவர்கள் எப்படி உதவலாம்? அவர்கள் பேசும் போது, அதாவது தங்கள் துக்கத்தையோ, ஏமாற்றத்தையோ வெளியிடும் போது காது கொடுத்துக் கேளுங்கள். அவர்களது உணர்வுகளை மதியுங்கள். விமரிசனம் செய்யாமல் முழுக் கவனத்துடன் கேளுங்கள். தனெக்கென ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு தற்கொலை முயற்சியில் இருந்து ஒருவரை மீட்கும். அவர் உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தை காப்பாற்றுங்கள். வேறு நண்பர்களிடமோ, உறவினரிடமோ அவரது ரகசியம் உங்கள் மூலம் வெளிப் படாமல் இருக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுங்கள். எந்தச் சூழ்நிலையிலும் உங்களது நட்பு மாறாது, அவரை விட்டுக் கொடுத்து பேச மாட்டீர்கள் என்ற உத்திரவாதம் கொடுங்கள். அவரிடம் நீங்கள் எத்தனை அன்பும் அக்கறையும் உடையவர் என்பதை உங்கள் பேச்சில் வெளிப் படுத்துங்கள். கனிவும் கருணையும் நிறைந்த சொற்களால் அவரது மனப் புண்ணுக்கு ஆறுதல் களிம்பு பூசுங்கள். முடிந்து போனவற்றைக் கிளறாதீர்கள். முடிந்தவை முடிந்தவைகளாகவே மடிந்து போகட்டும். அதிகமாக அறிவுரை கூறாதீர்கள். புதிய கோணத்தில் வாழ்க்கையைப் பார்க்க அவருக்கு உதவுங்கள். இததனைதான் வாழ்க்கை என்றில்லை; இன்னும் எத்தனையோ இருக்கிறது என்று புதிய பாதையைக் காட்டுங்கள். குடும்பங்களிலும் கல்விக் கூடங்களிலும் குழந்தைகளுக்கு நல்ல விழுமியங்களை உணர்த்துதல், உறவு, நட்பு, சுற்றம் இவற்றோடு நல்லுறவுகளைப் பேணுதல், தவறான உறவு மற்றும் நட்பு வட்டங்களைத் தவிர்த்தல், நேர்மறைச் சிந்தனைகள், வரவுக்கேற்ற செலவு, திட்டமிட்ட வாழ்க்கை, உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவைகளின் மூலம் மனதை ஒருமுகப்படுத்துதல், இவையெல்லாம் மனம் செம்மைப்பட உதவும். நம் உயிரைப் படைக்கும் உரிமை நமக்கே இல்லை எனும்போது, அதை மாய்க்கும் எண்ணம் மட்டும் எழலாமா ? பயம் காரணமாய் கணப்பொழுதில் பிணமாக விழும் மனிதன், சற்றே சிந்தித்துச் செயல்பட்டால் வையம் போற்றும் வகையில் வாழலாம்.அரிது அரிது மானிடரைப் பிறத்தல் அரிதுஉயிர் வாழ்தல் என்பது மனிதனின் உரிமை. அதைக் காப்பது அவனது கடமை. ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் மனித நேயம் வேறு ஏதாவது உண்டா? சிந்திப்போம் செயல் படுவோம் வாழ்வின் அற்புதத்தை அறிவோம்.




படியுங்க இளைஞர்களே! - ராமநவமி!


அக்காலத்தில், மன்னர்கள் சந்திரனை குறித்து, "சோமபவம்' என்ற யாகம் செய்து, தங்கள் தேவைகளைக் கேட்பர். "அதிக பால் கறக்கும் பசுக்கள் வேண்டும், வேகமாக ஓடக்கூடிய குதிரைகள் வேண்டும்...' என்று கேட்டுவிட்டு, "சத்புத்திரர்கள் வேண்டும்...' என்றும் கேட்பர். "சத்புத்திரன்' என்றால் "உத்தமமான பிள்ளை' என்று பொருள்.

பெற்றோருக்கு பணம், ஆடை, ஆபரணம், பங்களா, கார் கிடைப்பதை விட, ஒரு நல்ல பிள்ளை இருந்து விட்டால், அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது. அந்த கொடுப்பினை யாருக்கு இருந்தது தெரியுமா? ராமனின் தந்தை தசரதருக்கும், தாய் கவுசல்யாவுக்கும் அதனால் தான், சுப்ரபாதம் துவங்கும் போது, "கவுசல்யா சுப்ரஜா ராமா' என்று துவங்குகிறது. ராமனைக் காட்டிற்கு அழைத்துச் சென்ற விஸ்வாமித்திரர், அதிகாலை வேளையில் அவரை எழுப்பும்போது, "கவுசல்யாவின் புத்திரனான ராமனே, எழுந்திரு...' என்றார்.

ராமனை அழைத்தார் தசரதர். அவர் உடனடியாக அப்பாவிடம் சென்றார். "ராமா... பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குப் போ..' என்றார். என்ன ஏதென்று எதுவும் கேட்கவில்லை, உடனே கிளம்பி விட்டார். இந்த பண்பு எப்படி வந்தது என்றால், இளமையிலேயே அவரது வளர்ப்பை பொறுத்து அமைந்தது.

தாடகையை வதம் செய்வதற்காக, விஸ்வாமித்திரர் தசரதரின் உதவியை நாடினார். "உன் மகன் ராமனை அனுப்பு...' என்றார். "என் மகன் சிறுவனல்லவா! அவனால் எப்படி அந்த அரக்கியை வதம் செய்ய முடியும்? வேண்டுமானால், நான் வருகிறேன்...' என்றார் தசரதர்; மறுத்து விட்டார் விஸ்வாமித்திரர்; ராமன் தான் வந்தாக வேண்டுமென அடம் பிடித்தார். ராமனும், முனிவருடன் சென்றார். அங்கு சென்றதும், "முனிவரே... ஒரு பெண்ணை வதம் செய்வது, ஆண்மைக்கு அழகல்ல. இருந்தாலும், என் தந்தை, நீங்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றச் சொல்லி அனுப்பியுள்ளார். இதை உங்களுக்காக மட்டுமல்ல, என் தந்தை எனக்கிட்ட கட்டளைக்காகவும் செய்கிறேன்...' என்றார்.

இதை விட ஒரு தந்தைக்கு என்ன பாக்கியம் வேண்டும்!

அப்படிப்பட்ட உத்தமமான பிள்ளையை, "தசரத சுப்ரஜா' என்பதற்கு பதிலாக "கவுசல்யா சுப்ரஜா' என்று விஸ்வாமித்திரர் ஏன் சொல்கிறார் தெரியுமா? ராமன் தூங்கும்போது, அவனது அழகை ரசிக்கிறார் விஸ்வாமித்திரர். "இக்காட்சி நமக்கு தற்காலிக மானது. தாடகை வதம் முடிந்தால், ராமன் அயோத்திக்குப் போய் விடுவான். ஆனால், அவனது தாய், இந்த அழகை தினமும் ரசிக்கிறாள். தகப்பன் சொல்லைக், கேட்கும் உத்தமனை, வீரனைப் புத்திரனாகப் பெற்றவள் எவ்வளவு பெரிய பாக்கியசாலி...' என்பதால், அவளை முன்னிலைப்படுத்தி ராமனை எழுப்புகிறார்.

அது மட்டுமல்ல, அவன், பெண்கள் விஷயத்தில், எவ்வளவு பெரிய மகாத்மா என்பதையும், ஒரு சம்பவத்தால் உணரலாம்.
"இந்த சீதையை அடைய, நீ இவ்வளவு சிரமப்பட வேண்டுமா? நீ தான் மாறுவேடங்கள் புனைவதில் மன்னனாயிற்றே, ராமனைப் போல் வேஷமிட்டு, அவள் அருகில் செல். அவள் மயங்கி விடுவாள்...' என்று ராவணனுக்கு யோசனை கூறினர் அசுரர்கள்.

அப்போது ராவணன் கூறியது...
"நான் என்ன முட்டாளா? இந்த யோசனை எனக்கு வராமல் இருந்திருக்குமா! அவனைப் போல் வேஷமிட்டு அவளை நெருங்கினேன். ஆனால், அதென்னவோ தெரியவில்லை! அவளை கையெடுத்து கும்பிடத்தான் தோன்றுகிறது...' என்றான்.

ராமனை போல் வேஷம் போடுகிற அயோக்கியர்களுக்கே இவ்வளவு பெரிய மகோன்னதம் இருக்கிறதென்றால், ராமநாமத்தை, பக்தி சிரத்தையுடன் உச்சரிப்பவர்கள் எவ்வளவு பெரிய நன்மைகளை அடைவர் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ராமனின் அவதார தினத்தில், "ஸ்ரீராம ஜெயம்' முழக்கம், இல்லங்களில் ஒலிக்கட்டும். "ராம'மந்திரம் எங்கும் கேட்கட்டும். ராமனைப் போல், நல்ல பிள்ளையாய் விளங்கி, பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்க, இளைஞர்கள் உறுதியெடுக்கட்டும்.