Thursday, 14 March 2019

தனி மனித ஒழுக்கம் தன்னிகரில்லா ஆயுதம்: பாலியல் வக்கிரங்களை பந்தாடுவோம்!

தனி மனித ஒழுக்கம் தன்னிகரில்லா ஆயுதம்: பாலியல் வக்கிரங்களை பந்தாடுவோம்!
 


கடந்த ஆண்டு, பேராசிரியை நிர்மலாதேவி, 4 மாணவிகளை பாலியல் உறவுக்கு அழைத்த ஆடியோ வெளியாகி, தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு சில நாட்கள், அந்த பேராசிரியைக்கு எதிராக கோபத்தில் கொதித்து, பின்னர் பால் அடங்குவதற்கு இணையாக அடங்கிவிட்டது.


இந்த சம்பவத்திற்கு பிறகும், யாரும் திருந்தவில்லை என்பதற்கு, பொள்ளாச்சியில் நடந்த சம்பவங்களே உதாரணம்.
பொள்ளாச்சியில் சில வாலிபர்கள், பெண்களை குறிவைத்து அழைத்து சென்று, பாலியல் பலாத்காரங்கள் செய்துள்ளனர்.

திருநாவுக்கரசு என்பவன் தலைமையில், சில வாலிபர்கள் இதை திட்டமிட்டு, 2012ம் ஆண்டு முதல் இந்த கொடூரமான சம்பவம் அரங்கேற்றி உள்ளனர். 250 பெண்கள் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 1500க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதில், 249 பெண்கள் மவுனமாக இருக்க, ஒரே ஒரு பெண் தைரியமாக தங்கள் குடும்பத்தினரிடம் சென்று சொல்கிறார். குடும்பத்தினர், காவல்துறையினரிடம் சென்று புகார் கொடுக்கின்றனர். சம்பந்தப்பட்ட பெண்ணின் அண்ணன் தாக்கப்படுகிறார்.  அதன் பின்னர் பத்திரிக்கைகள் இதை வெளிப்படுத்துகின்றன.

இவ்வளவும் நடந்த பின், இதில் தொடர்புடைய, 4 பேர் கைது செய்யப்படுகிறன்றனர். தமிழகம் மீண்டும் ஆத்திரத்தில் பொங்குகிறது. இதனால், பலரும் பல விஷயங்களை கொட்டி தீர்க்கின்றோம்.


இன்னொரு புறம், தன் அழகை காட்டிக் கொண்டு, ஒரு சில ஆப்ஸ்களில் அரைகுறை ஆடையுடன் பாடிக்கொண்டு தான் இருக்கின்றனர். பெற்றோர், கணவன், மனைவி ஒருவரிடம் ஒருவர் மனம் விட்டு பகிருவதை நிறுத்தி, பல ஆண்டுகள் ஆகிவிட்டதால்,  அனைவரும் அனைத்து விஷயங்களையும் பேஸ்புக், வாட்ஸ் அப்பில் தான் பகிர்ந்து கொள்கின்றனர்.


பருவ வயதை அடைந்த ஆண், பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில், அவர்களின் பெற்றோர், உடன் பிறப்புகள் மற்றும் பெரியவர்கள், தங்கள் வீட்டு பிள்ளைகளின் நடவடிக்கையில் சற்றேனும் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். இதற்கு பெயர் சந்தேகப்படுவது இல்லை. நம் பிள்ளை சரியான பாதையில் தான் பயணிக்கிறதா என்ற அக்கறை.
சரியான பாதை எது என்பதை அவர்களுக்கு ஆரம்பம் முதலே கற்றுத் தருவது தான் பெற்றோரின் மிக முக்கிய கடமை.


‛‛பெற்றோரின் தியாகங்கள் இல்லாமல் எந்த குழந்தையும் உயர் நிலைக்கு வந்துவிடுவதில்லை. வெறும் சோறு போட்டு வளர்ப்பது மட்டுமே குழந்தை வளர்ப்பு ஆகிவிடாது. பள்ளிக் கட்டணம், பாட புத்தகம் வாங்கித் தருவது மட்டுமே அவர்களுக்கு பலம் கொடுத்துவிடாது. நல்லன சொல்லிக் கொடுத்தும், அங்ஙாதவைகளிலிருந்து அவர்களை விலகியிருக்க செய்வதுமே குழந்தை வளர்ப்பின் முக்கிய அங்கமாக இருக்கிறது’’

இதை நான் சொல்லவில்லை; நம்மிடையே வாழ்ந்து மறைந்த பிரபல எழுத்தாளர், எழுத்து சித்தர் பாலகுமார் சொல்லியிருக்கிறார்.

நம் குழந்தைகளின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றம் ஏற்படும் போதே அதை கவனிக்க  தெரிய வேண்டும். அதை சந்தேகக் கண்ணுடன் பார்க்காமல், அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டும். அவர்கள் தங்கள் உடல் ரீதியான, மன ரீதியான மாற்றங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் வகையிலான நம்பிக்கையை அந்த பேச்சு அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

முதல் பேச்சிலேயே, எந்த குழந்தையும் தங்கள் பெற்றோரிடம் அனைத்தையும் பகிர்ந்துவிடாது. மெல்ல மெல்ல பேசி அவர்களின் நண்பனாகவே மாற வேண்டும். இந்த நண்பன் நம் நலத்திற்காகவே எடுத்துரைப்பான் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் ஊட்ட வேண்டும்.

அவர்கள் அளவுக்கு நீங்கள் இறங்கிப் போய் மனம் திறந்து பேசினால், பெற்றோர் என்ற உங்கள் உயரம், பிள்ளைகளின் மனதில் இன்னும் பல ஆயிரம் மடங்கு உயரும். அந்த உயரத்தை எட்டுவதும், அனைத்திற்கும் கோபப்பட்டு, அல்லது எதையும் கண்டு காெள்ளாமல் இருப்பதன் மூலம், உங்கள் உயரத்தை பாழாக்கி கொள்வதும் பெற்றோர் கையில் தான் உள்ளது.


 எதற்கெடுத்தாலும் சந்தேகமும் கூடாது. அதீத நம்பிக்கையும் கூடாது. என் மகன் அல்லது மகள் இதை நிச்சயம் செய்ய மாட்டாள் என்ற ஓவர் கான்பிடன்ஸ் எப்போதும் இருப்பது நல்லதல்ல. ஒரு வேளை செய்திருக்க வாய்ப்பிருக்கலாம், அவர்களிடமே கேட்டுவிடலாமே என்ற பாணியில் செயல்பட்டால், பெரும் பேராபத்தை தடுக்கலாம்.

இதைத்தான், வாரியார் சுவாமிகள், ‛பார்த்து கெட்டது பிள்ளை, பாராமல் கெட்டது பயிர்’ என்பார். அது நுாற்று நுாறு சரி என்பதை தற்கால குடும்பங்கள் நிரூபித்துவருகின்றன.

இன்னொருபுறம் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல் கையளவு உலகம் வந்துவிட்டதை பயன்படுத்தி அறிவை விருத்தி செய்ய வேண்டிய ஆண், பெண்கள் அதற்கு பதிலாக ஆபாசத்தை மட்டுமே பார்த்து ரசிக்கிறார்கள்.

ஒரு காலகட்டத்தில் முக்கு சந்துகளில் போலீஸ் பயத்துடன் பாலியல் தொடர்பான புத்தங்கள் விற்கப்பட்ட நிலை மாறி, இன்று செல்போனில் பட்டனை தட்டினால் போதும் என்ற நிலை. இதன் பின்னணியில் பல கோடி ரூபாய் வர்த்தகம் மறைந்து கிடக்கிறது.
தற்கால சினிமாக்களில் ஆபாசங்களை அள்ளி வீசும், நடிகர்கள், இயக்குனர்கள், தற்போது யோக்கியர்கள் போல் கண்டன அறிக்கை விடுகின்றனர். கொதித்தெழுந்து பேட்டி கொடுக்கின்றனர். காதல் இல்லாமல் ஒரு சினிமாவாவது வருவதுண்டா? அல்லது காதலிக்கும் அனைவருமே, பீச், பார்க், ஓட்டல்களுக்கு சென்று தனிமையில் கட்டிப்பிடிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதா?

இப்படிப்பட்ட சீன்களை தொடர்ந்து திரைப்படங்களில் காட்டி, இளைய சமுதாயத்தை சீரழிக்கின்றனர்.இதில் எளிதில் சிக்கி கொண்டு சின்னாபின்னமாகிறது இளைய சமுதாயம். ஆனால் தட்டிக் கேட்க வேண்டியவர்கள் யாரும் கவலைப்படுவதில்லை.

பொள்ளாச்சி விவகாரத்திற்கே வருவோம், ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார். அவர் அண்ணன் தாக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் மவுனமாக இருக்கிறார்கள். நாளை குற்றவாளிகள், நீதிமன்றத்தில் ‛‛எங்களை போலீஸ் அடித்து சொல்ல வைத்தனர். இந்த விடியோக்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை’’ என்று வாக்குமூலம் கொடுப்பார்கள்.

தற்போது பரவிவரும் விடியோவில், குற்றவாளி ஒருவன் இது சம்பந்தப்பட்ட பெண்கள் ஒப்புதல் பேரில் எடுத்தது என்று பகீர் குற்றச்சாட்டை முன் வைக்கிறான்.  குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால், இந்த பரபரப்பு அடங்கிய பின்னர் அனைவரும் ஜாமினில் வெளிவரலாம்.

நிர்மலாதேவியை துாக்கில் போடு என்று கத்திய இதே சமூகம் தான், அந்த பெண்ணுக்கு ஏன் இன்னமும் ஜாமீன் கொடுக்க வில்லை என்று கேட்கிறது. அதே போல, பொள்ளாட்சி குற்றவாளிகளுக்கும் இன்னும் சில காலம் கழித்து கேள்வி எழுப்பபடலாம்.

பெற்றோர் ஒவ்வொருவரும், தங்கள் பிள்ளைகள், சமுதாயத்தில், அந்தஸ்த்து மிக்க பதவியை பிடிக்க வேண்டும், புகழை பெற வேண்டும், பணம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பதில் தவறில்லை. ஆனால், அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை என்ன என்பதையும் அறிய வேண்டும்.

கடின உழைப்பு, நேர் வழி, புத்தி கூர்மை போன்றவற்றால் பணம், புகழ், பதவியை அடைவதில் தவறில்லை. ஆனால், கலாசார சீர்கேட்டுக்கு ஆளாகி, ஆபாசத்தின் பிடியில் சிக்கி, பெயர், புகழ், பதவி, வசதிக்காக, மானத்தையும், கற்பையும் விட்டுக் கொடுக்கும் நிலை படுபயங்கரமானது.

இதை, பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டம். அதே போல், ஆசை வார்த்தையில் மயங்குதல், இனக்கவர்ச்சிக்கு ஆளாகி, கண்டவர்களிடம் ஏமாறுவது, என்ற நிலைக்கு ஆளாகும் பெண்களும் சரி, ஆண்களும் சரி, நாளடைவில், நயவஞ்சர்களால் மிரட்டப்பட்டு, தொடர்ந்து சீரழிக்கப்படுகிறார்கள். இதுவே, பழகிப் போவதால், வேறு வழியின்றி, தான் கெட்டது மட்டுமின்றி, தன் தோழர், தோழியரையும் இந்த பாதையில் அழைத்துச் செல்லும் அவலமும் நடக்கத்தான் செய்கிறது.

கொடூர குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் தவறில்லை. அதே சமயம், கொடூரர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் நம்மை பாதுகாத்து கொள்வதும், அனைத்து விஷயங்களையும் விழிப்புடன் அணுகுவதும் நம் கையில் தான் உள்ளது.

மாணவர்கள், இளம் பருவத்தினர், தங்களை தாங்களே தற்காத்து கொள்வது மட்டுமின்றி, சமூக வலைதளங்கள், மாெபைல் போன்கள் மூலம் கிடைக்கும் முன் பின் அறிமுகம் இல்லாத நட்பு வலையில் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும். பெற்றோரும் தங்கள் கடமையை சரி வர செய்தால், குற்றங்களை குறைப்பதோடு, குற்றவாளிகள் உருவாவதையும் தடுக்கலாம்.

Best regards,