Showing posts with label ஆசிரியர். Show all posts
Showing posts with label ஆசிரியர். Show all posts

Monday, 11 January 2021

என்று தணியும் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களின் குமுறல்?!

என்று தணியும் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களின் குமுறல்?!

கஜானா நிரம்ப டாஸ்மாக் கடை, ரசிகர்கள் மனம் மகிழ திரையரங்க திறப்பு, தேர்தல் வசூலுக்கு வியாபாரிகள் தயவு வேண்டும் என அனைத்து வணிக நிறுவனங்களும் திறப்பு... இதிலெல்லாம் வராத கொரோனா, கல்வி நிலையங்களில் வந்துவிடும் என்பதால், அவற்றை மட்டும் திறப்பதில்லை.  எல்லாவற்றிலும் மல்லுக்கட்டும் எதிர்க்கட்சியும், இந்த விஷயத்தில் மட்டும் மவுனம் சாதிக்கிறது.

தமிழகத்தில், ஒரு கோடியே 31 லட்சத்து 86 ஆயிரத்து 526 பள்ளி மாணவர்களும், 15 லட்சத்திற்கும் மேலான கல்லூரி மாணவர்களும் உள்ளனர். இது, தமிழக மக்கள் தொகையில் 19.58 சதவிகிதம்.  ஆனால் எந்த அரசியல் கட்சியும் இவர்கள் நலனில் அக்கறை காட்டத் தயாராக இல்லை. 

அனைவருக்கும் கல்வித் திட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் 37,217 அரசு பள்ளிகளும், 8,403 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 12,419 தனியார் பள்ளிகளும் உள்ளன.  இதில் தனியார் பள்ளிகளில் மட்டும், 48 லட்சத்து 69 ஆயிரத்து 279 மாணவர்கள் படிக்கின்றனர். ஏறத்தாழ 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ஆசிரியர்கள், தனியார் பள்ளி வேலையை நம்பி உள்ளனர்.  

தமிழகத்தில் 550 பொறியியல் கல்லூரிகள், 449 பாலிடெக்னிக் கல்லூரிகள், 566 கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் 37 பல்கலைக்கழகங்கள் உள்ளன.  இதில் 15 லட்சத்திற்கும் மேலாக மாணவர்கள் படிக்கின்றனர்.  இதில் அரசால் 11 பொறியியல் கல்லூரிகளும், 47 பாலிடெக்னிக் கல்லூரியும், 79 அரசு அறிவியல் கல்லூரிகளும் நடத்தப்படுகின்றன. ஏனைய அனைத்து கல்வி நிறுவனங்களும், தனியார்களாலேயே நடத்தப்படுகிறது. இந்த தனியார் கல்லூரிகளை நம்பி 1,10,000ற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் அவர்களின் குடும்பங்களும் உள்ளன.

மார்ச் மாதத்திற்கு பிறகு மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள், இன்று வரை திறக்கப்படவில்லை. அரசு திறக்க நினைத்தாலும் எதிர்க்கட்சிகள் அனுமதிப்பதில்லை. கல்விக் கட்டணம் குறைப்பு, கட்டவேண்டிய நாட்களில் தளர்வு, கட்டாவிட்டால் கட்டாயப்படுத்த முடியாத நீதிமன்ற உத்தரவு, இவை அத்தனையும் பாதிப்பது, அந்த வருமானத்தை நம்பியுள்ள 2 லட்சத்து பத்தாயிரம் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களையும், அவர்களை நம்பியுள்ள குடும்பத்தையும் என்பது, யாரும் உணராத, உணர்ந்தாலும் கண்டு கொள்ளாத விஷயம். 

பெரிய அளவில் சங்கம் கூட இல்லாமல், தன் வறுமையை உரக்கச் சொல்ல முடியாத, கையறு நிலையில் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் இருக்கிறார்கள். பிச்சை புகினும் கற்கை நன்றே என்று தான் முன்னோர்கள் சொன்னார்களே தவிர, பிச்சை எடுத்தும் கற்றுக்கொடு என்று சொல்லவில்லையே! கல்வி போதிப்பதை தவிர மற்ற பணிகளை அறியாத தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் நிலை, அவர்களின் துயரம், கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதது. 

தனியார் பள்ளிகள், அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்டாலும் மாணவர்களின் கட்டணத்தை வைத்து ஆசிரியர்களின் சம்பளம் தருவதாகவும், அதனால் பல மாதங்கள் சம்பளமே இல்லாமலும், அதன் பின்னர் இன்றுவரை 50 சதவீத ஊதியம் பெற்றுக் கொண்டு, முன்னர் இருந்ததை விட அதிக வேலைப் பளுவுடன், மன அழுத்தத்துடன் நடைபிணமாக நடமாடி வருகிறார்கள். இதைப் பற்றி, ஆள்வோரும் கண்டுகொள்ளவில்லை, சமூக நீதிப் போராளிகளும் குரல் கொடுக்கவில்லை, 

அடுத்து நாங்கள் மக்கள் துயர்துடைக்க 30 நாள், 90 நாளில் வருவோம் என கட்டியம் கட்டும் எதிர்க்கட்சிகளோ, மக்கள் நலனில் மக்களுக்காக என மார்தட்டும் ஆளும் அரசோ அக்கறை காட்டவில்லையென்றால் இந்த இரண்டு லட்சம் ஆசிரியர்கள் மட்டுமல்ல அவர்களின் குடும்பங்களும், மாற்றி வாக்களிக்க முடிவு செய்தால், ஓட்டு மட்டும் நஷ்டம் அல்ல; ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் கேடு என்பதை உணர்வோம். 

உடனடியாக அரசு, அவர்கள் குறைகளைக் களைய, பள்ளி கல்லூரிகளை திறந்து, அவர்களை வாழ்வின் விளிம்பில் இருந்து காப்பாற்றலாம். எளிதில் கொரோனா பரவும் என நம்பினால், இந்த ஆசிரியர்களுக்கு, நிலைமை சரியாகும் வரை ஊக்க தொகை தந்தால், உங்களுக்கு ஓட்டும் கிடைக்கும்; ஆசிரியர்களுக்கு நோட்டும் கிடைக்கும்.  

Dr.R.காயத்ரி
கல்வியாளர்.

Best regards,

Monday, 29 April 2019

ஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்!!

ஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்!!

 1. எனக்குரிய இடம் எங்கே? – பேரா.ச.மாடசாமி.

2. கனவு ஆசிரியர் – க.துளசிதாசன்.

3. ஆயிஷா – இரா.நடராசன்.

4. போயிட்டு வாங்க சார் – பேரா.ச.மாடசாமி.

5. டோட்டோசான் – ஜன்னலில் ஒரு சிறுமி – தமிழில். சு.வள்ளிநாயகம்& சொ.பிரபாகரன்.

6. ஆசிரிய முகமூடி அகற்றி – பேரா.ச.மாடசாமி

7. இது யாருடைய வகுப்பறை – இரா.நடராசன். .


8. குழந்தையும் கல்வியும் – பேரா.இரா.காமராசு

9. அமிர்தா பள்ளிக்குப் போகனுமா?. – விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.

10. கற்க கசடற – பாரதி தம்பி

11. முதல் ஆசிரியர் – தமிழில் பூ.சோமசுந்தரம்.

12. ஆளுக்கொரு கிணறு – பேரா.ச.மாடசாமி.


13. குழந்தைகளின் நூறு மொழிகள் – பேரா.ச.மாடசாமி.


14. கதை சொல்லும் கலை – ச.முருகபூபதி

15. வாழ்க்கையை புரிய வைப்பதுதான் கல்வி – முனைவர். ச.சீ.ராசகோபாலன்.


16. கல்விக் குழப்பங்கள் – மு.சிவகுருநாதன்.

17. சுகந்தி டீச்சர் – பாபு எழில்தாசன்.

18. கரும்பலகையில் எழுதாதவை – பழ. புகழேந்தி.

19. வகுப்பறையின் கடைசி நாற்காலி – ம.நவீன்

20. பகல்கனவு – டாக்டர்.சங்கரராஜுலு.

21. பள்ளிக்கூடம் – பா.ஜெயப்பிரகாசம்.

22. கல்வி சமூக மாற்றத்துக்கான கருவி – தமிழில் மூ.அப்பணசாமி

23. எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க – தமிழில் ஜே.ஷாஜகான்

24. காலந்தோறும் கல்வி – முனைவர். என்.மாதவன்

25. என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா – பேரா.ச.மாடசாமி

26. சொர்க்கத்தின் குழந்தைகள் – தி.குலசேகர்

27. ஆயுதம் செய்வோம் – முனைவர். என்.மாதவன்

28. குழந்தைகளைக் கொண்டாடுவோம் – பேரா.இரா.காமராசு


29. தோட்டியின் மகன் – தமிழில். சுந்தர ராமசாமி

30. முரண்பாடுகளிலிருந்து கற்றல் – தமிழில். ஜே.ஷாஜகான்


31. உலகமயமாக்கலும் பெண் கல்வியும் – முனைவர்.சா.சுபா

32. தமிழக பள்ளிக் கல்வி – ச.சீ.ராசகோபாலன்.

33. இது எங்கள் வகுப்பறை – வே.சசிகலா உதயகுமார்.

34. கதைகதையாம் காரணமாம் – விஷ்ணுபுரம் சரவணன்.

35. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் – பிரியசகி, ஜோசப் ஜெயராஜ்

36. சூப்பர் 30 ஆனந்தகுமார் – தமிழில் D I. ரவீந்திரன்.

37. ரோஸ் – இரா.நடராசன்.


38. வன்முறையில்லா வகுப்பறை – இரா.நடராசன்

39. தெருவிளக்கும் மரத்தடியும் – பேரா.ச.மாடசாமி

40. உனக்குப் படிக்கத் தெரியாது – தமிழில்.கமலாலயன்.

41. குழந்தைமையைக் கொண்டாடுவோம் – முனைவர்.என்.மாதவன்.

42. இவைகளா… கனவுப்பள்ளிகள்? பேரா.பொ.ராஜமாணிக்கம்


43. மீண்டெழும் அரசுப்பள்ளிகள் – பேரா.நா.மணி

44. கண்டேன் புதையலை – பிரியசகி

45. பாகுபடுத்தும் கல்வி -பேரா.வசந்திதேவி, பேரா.அனில் சத்கோபால்

46. கனவுப்பட்டறை – மதி

47. கல்வியில் வேண்டும் புரட்சி – தமிழில் அருணாசலம்.

48. கியூபா: கல்விக்கு ஒரு.கலங்கரை விளக்கம் – தியாகு.

49. ஓய்ந்திருக்கலாகாது – அரசி, ஆதி வள்ளியப்பன்.

50. பள்ளிக்கல்வி – புத்தகம் பேசுது கட்டுரைகள்


51. கரும்பலகைக்கு அப்பால் – கலகலவகுப்பறை சிவா

52. 13 லிருந்து 19வரை – முனைவர்.என்.மாதவன்.


இந்தப் புத்தகங்களை எழுதிய கல்வியின்பாலும் குழந்தைகள் மேலும் பிரியம் கொண்ட நூலாசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான வணக்கங்களும், நன்றிகளும்...



 ஆசிரியர்களுக்கான புத்தகங்கள் மட்டுமல்ல இவைகள்….


பள்ளிக்கல்வியை நேசிக்கும் எல்லோருக்குமான புத்தகங்கள். சுவாசிப்பு உயிர் பிழைக்க….. வாசிப்பு உயிர் தழைக்க…. வாசிப்பை நேசிப்போம்…. வாசிப்பை சுவாசிப்போம்… நன்றி!
Best regards,

Thursday, 31 January 2019

”கைது, சிறை, பிணை”

”கைது, சிறை, பிணை”

சல்லிக்கட்டுப் போராட்டத்தின் முடிவில் நடத்தப்பட்ட அரச வன்முறை தொடங்கி தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரச வன்முறை வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றைக்குவரை நீதி கிடைக்காமல் செய்தது போல் நம் ஆசிரியர் இனத்தையும் வஞ்சித்துவிட்டது நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த நம் அரசு...

    தெரிந்தோ தெரியாமலோ நம் ஆசிரியர் இனப்போராட்டம் தோல்வியடைந்ததற்கு நானும் ஏதோனொருவகையில் காரணமாகிறேன் எனக்கருதி இனி எந்த ஆசிரியர் சங்கத்திலும் பொறுப்பு வகிக்கவோ , உறுப்பினராகவோ இருக்க எனக்கு தகுதியில்லை என தகுதித்தேர்வெழுதி வந்த தகுதியற்ற ஆசிரியனாக அறிவிக்கிறேன்...

      வெறும் 105 எம்.எல்.ஏ. க்களை வைத்துள்ள பலவீனமான பாசிச அரசு இம்மாநிலத்தில்  இத்தனையையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. 89 எம்.எல்.ஏ. க்களை வைத்துள்ள எதிர்க்கட்சியோ செயலற்று நிற்கிறது.

இந்த அடக்குமுறைக் கட்டத்தின் முதல் இலக்கு புதிதாக களத்திற்கு வந்துள்ள ஆசிரியர்கள் ’தன் பெண்டு, தன் பிள்ளை , தன் குடும்பம்” என வாழும்படி வீட்டுக்குள் முடக்குவதாகும்

”ஜனநாயகம் என்ற இந்த போலி ஜனநாயகம் அதன் வாழ்நாளின் கடைசி கட்டத்தில் நிற்கிறது. இற்று வீழ்ந்து விட்டது”


எனவே, கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, ஆசிரியர்களை சந்திக்கும் உரிமை, பரப்புரை செய்யும் உரிமை, போராடும் உரிமை, போராட்டங்களுக்கு ஆசிரியர்களை அணி திரட்டும் உரிமை, ஆசிரியர்கள்
ஓரிடத்தில் ஒன்றுகூடும் உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை, அரசமைப்பு சட்ட உரிமைகளை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கும் இந்த அடக்குமுறைக்கு எதிராய்
“ வாக்கரசியல் “ என்ற இறுதி ஆயுதம் மூலம் ஒன்றுபட்டு நிற்போம்

”ஆணவ அதிகார அடக்குமுறை “ என்ற இந்த பேரபாயம் தமிழகத்தை எப்படி சூழ்ந்திருக்கிறது என்பதை தயவு செய்து சிந்தித்துப் பார்த்து, இதைவிட விரைவான, இதைவிட சாத்தியமான வேறு வழிகள் இருக்கின்றனவா என்பதை யோசித்துப் பார்த்து அதன் பிறகு, உங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்தி தீர்ப்பை அதன் மீது வழங்குங்கள்.

அடக்கி வாழ்ந்திட மிருகமில்லை நாம்
அடங்கி வாழ்ந்திடும் மனிதர்களே நாம்!

இவண்:-
மா.முருகேசன்,
அரசுப்பள்ளி ஆசிரியர்,
தூத்துக்குடி.

Best regards,

Monday, 5 November 2018

....ஆசிரியர்களை போற்றுங்கள்!

....ஆசிரியர்களை போற்றுங்கள்!

ஒரு காலம் இருந்தது பெற்றோர்களும் மாணவர்களும் ஆசிரியர்களை தெய்வமென போற்றினார்கள்; கொண்டாடினார்கள். அவர்களை முழுமையாக நம்பியே தமது பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பினார்கள் பெற்றோர்கள்; மாணவர்களும் ஒரு பயபக்தியோடு ஆசிரியர்களை அணுகினார்கள்.

இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. ஆசிரியர்களை புழுவை விட கேவலமாக பார்க்க தொடங்கிவிட்டார்கள் தனியார் கல்வி தந்தைகள். அதன் தொடர்ச்சியாக ஆசிரியர்களை மாணவர்களும் சாதாரணமாக எண்ணுகிறார்கள்; அலட்சியமாக பார்க்கிறார்கள்.

இது சமூகத்திற்கு நல்லதன்று. இன்று தமிழ் சமூகத்தில் இதுவொரு பெருநோயாக வளர்ந்து வருகிறது. இதனைத் தொடங்கி வைத்தது தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் தான். ஆசிரியர்களை நேர்முகத் தேர்வு வைத்தது தேர்வு செய்துவிட்டு மீண்டும் அவர்களின் வகுப்பில் உள்ள மாணவ/ மாணவிகளிடம் கருத்துக் கேட்கிறேன் (feedback) என்ற பேரில் ஒரு இழிவான வேலையை பள்ளி கல்லூரி நிர்வாகங்கள் செய்கிறார்கள்.

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மதிப்பெண் கொடுத்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது; இன்று ஆசிரியர் எப்படி பாடம் நடத்துகிறார் என்று மாணவர்கள் தான் மதிப்பெண் போடுகிறார்கள். விளைவு மாணவன் ஆசிரியரைவிட மேலானவன் என்ற உளவியலுக்குள் தள்ளப்பட்டு ஆசிரியர்கள் மீதான பயபக்தியை இழக்கிறான்.

மாணவன்தான் மதிப்பெண் கொடுக்க வேண்டுமெனில் ஆசிரியரின் படிப்பிற்கு என்ன மரியாதை?
பிறகு எதற்கு நிர்வாகம் ஒரு நேர்முகத் தேர்வை நடத்த வேண்டும்?

இன்று பொதுவாகவே ஆசிரியர்கள் பாடம் மட்டும் நடத்துவதில்லை. தனியார் நிறுவனங்கள் கொடுக்கின்ற அடிமாட்டு சம்பளத்திற்கு மேலாக ஏராளமான எடுபுடி வேலைகளையும் சேரந்துதான் செய்கிறார்கள். இந்த சூழலில் அவர்கள் எப்படி பாடம் நடத்த முன் தயாரிப்புகளில் ஈடுபடுவார்கள்? முன் தயாரிப்பு இல்லாமல் பாடம் நடத்துவதால்தான் இங்கு தரமான மாணவர்களும் உருவாகவில்லை; தரமான ஆசிரியர்களும் உருவாகவில்லை.

பள்ளி கல்லூரிகளில் வேலை முடிந்து வீடு சென்றாலும் எடுப்பு மற்றும் துடுப்பு வேலைகளையும் கையோடு கொண்டு சென்றால்தான் நிர்வாகம் மதிக்கும் என்ற சூழல் இருப்பதால் ஆசிரியர்கள் இன்னும் இன்னும் தரம் குறைந்து கொண்டேதான் செல்கிறார்கள்.

அவர்கள் அப்படி நடந்து கொள்வதற்கும் ஒரு காரணம் உண்டு. ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் எவ்வளவு தரக்குறைவாக நடத்த முடியுமோ அவ்வளவும் செய்கிறார்கள் தனியார் நிர்வாகத்தினர். அவர்கள் வீட்டு தோட்டங்களில் பண்ணையம் அடிக்க வந்தவனை அடிமைபோல நடத்துவார்களே அப்படி நடத்துகிறார்கள். அதனை சகித்துக் கொள்ளாமல் போனால் உடனே வேலைவிட்டு துரத்திவிடுவார்கள்.

எனக்கு தெரிந்த ஒரு கல்லூரி தாளாளர்..
 'சோற்றை கூரையில் வீசினால் ஆயிரம் காக்கா வரும்..
எங்களின் கட்டுபாடுகளுக்கு ஒத்துபோனால் பணி செய்யுங்கள் இல்லையேல் தொரத்திவிடுவேன்...' என்று பேராசிரியர்களை மிரட்டுவார்.

வேலையை தக்கவைக்க வேறுவழி இல்லாமல் எல்லாவற்றுக்கும் 'ஆமாம் சாமி' போட்டே.. இங்கு பல படித்த பட்டதாரிகளின் வாழவும் மரண வேதனையோடு நகருகிறது.

அந்த ஆசிரியனும் ஒரு இரத்தமும் சதையும் உள்ள மனிதன் தான். அவனுக்கும் ஆசாபாசங்கள் இருக்கும்; அவனுக்கும் குடும்பம் இருக்கும்; அவனுக்கு ஓய்வு தேவைப்படும் என்ற எந்தவிதமான புரிதலும் நிர்வாகங்களுக்கும் இல்லை; மாணவர்களுக்கும் இல்லை. இன்று மொத்தமாகவே ஆசிரியர் என்பவன் எல்லோரும் காட்சி பொருள்; காமடி பொருள்.

பணிப்பாதுகாப்பு என்ற ஒன்றே தனியார் பள்ளி கல்லூரிகளில் இன்று இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் எவ்வளவு சிறந்த ஆசிரியராக இருந்தாலும் வெளியேற்றப்படுவார். ஏனெனில் அவரது சம்பளம் உயர்வாக இருப்பதை நிர்வாகம் விரும்புவது இல்லை.

இத்தகைய நெருக்கடிகளுக்கு இடையே எப்படி ஒரு ஆசியரியரோ பேராசிரியரோ சிறந்த முறையில் பாடம் நடத்த முடியும்? எப்படி தலைச்சிறந்த மாணவர்கள் உருவாக முடியும்?
எப்படி சிறந்த சமூகம் மலரும்?

உலகின் வளர்ந்த வல்லரசு நாடுகளில் எல்லாம் ஆசிரியர்கள் தான் கல்வி சார்ந்த நடைமுறை குறித்த எல்லா முடிவுகளையும் எடுப்பார்கள். அதில் நிர்வாகம் ஒருபோதும் தலையிடாது.
இன்று என்ன பாடம் எடுக்க வேண்டுமென தீர்மானிக்கிறார்கள்; மாணவன் எப்பொழுது எந்த நேரத்திற்கு எந்த வகுப்பறைக்கு வர வேண்டும்; எப்பொழுது எந்த தேர்வை எழுத வேண்டும்; மாணவரோ/பெற்றோரோ ஆசிரியரை எப்பொழுது சந்திக்கலாம் என்பதை எல்லாம் ஆசிரியர்கள் தான் முடிவெடுப்பார்கள்.

எல்லா வல்லரசு நாடுகளிலும் ஆசிரியர்களை கொண்டாடுகிறார்கள். ஒரு நல்ல மனித சமூகம் மலர முதலில் ஒரு நல்ல ஆசிரியர் சமூகம் இருக்க வேண்டும்...

ஆசிரியரை ஆசிரியர் தினத்தில் மட்டும் கொண்டாடினால் போதாது...
தினம் தினம் கொண்டாட வேண்டும் ஏனெனில் எதிர்கால தலைமுறையின் விதியை தீர்மானிக்கும் பிரம்மாக்கள் ஆசிரியர்கள் என்பதை உணருங்கள்...!

#பேராசிரியர் ....

Best regards,