கபாலி..
சில திரைபடங்களை சின்ன வயதில்
பார்த்திருப்போம்.
பன்னிரெண்டு வயது, அப்போது அம்மா, அப்பா, மாமா அத்தை போன்றோர்களின் பெரிய அளவிலான சினிமா பேச்சில் குதூகலித்து சினிமா பார்க்க ஆவல் கொண்டு அவர்களோடு படம் பார்க்கச் சென்றிருப்போம்.
பன்னிரெண்டு வயது, அப்போது அம்மா, அப்பா, மாமா அத்தை போன்றோர்களின் பெரிய அளவிலான சினிமா பேச்சில் குதூகலித்து சினிமா பார்க்க ஆவல் கொண்டு அவர்களோடு படம் பார்க்கச் சென்றிருப்போம்.
பொதுவாக அந்த காலகட்டத்தில் எல்லா
படமும் பிடிக்கும். நல்லா நடித்தார்கள் என்பதைவிட, இந்தந்த ஜோடி சேர்ந்தால் நல்லா
இருக்கும். ஹீரோ அழகா இருக்கார். ஹீரோயின் அழகா இருக்காங்க. நகைச்சுவை சூப்பர்
என்கிற பார்வை மட்டுமே இருக்கும்.
கொஞ்சம் வயதானவுடன் (18வயது), பிடித்த ஹீரோ ஹீரொயின் நடித்தால்
பார்க்கலாம், அதுவும்
ஹீரோவிற்காக பார்ப்பது.. கமல், சரத்பாபு, விஷ்ணுவர்த்தன், கார்த்திக் என அழகான ஹீரோக்கள்
நடித்தால் பார்த்தே ஆகவேண்டும் என்கிற ஆவல் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில்
சினிமா பைத்தியம் என்கிற பட்டமும் எனக்குக் கிடைத்ததுண்டு.
பிறகு திருமணம் ஆனவுடன் கதை, வசனம், டைரக்டர் என்கிற தேடல்
எட்டிப்பார்க்கத் துவங்கியது. விசு, பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ் போன்றோர்களின்
படமாகத் தேடிப்பிடித்து பார்த்து மகிழ்ந்த காலகட்டம் அது. படம் நன்றாக இருக்கிறதோ
இல்லையோ, குடும்பம்
இருக்கும் அங்கே நிகழ்கின்ற பிரச்சனைகள் நம் குடும்ப பிரச்சனைகளோடு ஒத்துப்போகும்
அதனால் அது படுசூப்பர் படமாகப் பார்க்கப்பட்டது. அங்கே கதையில் எல்லாமும் கலந்து
இருக்கும். சண்டை, காதல், நகைச்சுவை என.. படமென்றால்
இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற கண்ணோட்டம் மோலோங்கிய காலகட்டம் அது.
பிறகு திரைப்படங்களின் பாணி மாறி
வேறொரு பாதைக்குச் சென்றது, அது
இன்றுவரை அப்படியே தொடர்கிறது. பிடிக்கும் ஆனால் ஏன் பிடிக்கும் என்று வெளியே
சொல்லமுடியாத அளவிற்கு படத்தின் திரைக்கதை அங்கொன்னும் இங்கொன்னுமாக
பிய்த்துப்போட்டிருப்பார்கள். பிடிக்கும் ஆனால் கதை ஞாபத்திலேயே இருக்காது. அதைவிட
கொடுமை ஒரு படத்தில் நடிக்கின்ற நடிகர்கள் அதோடு காணாமல் போவது. அவர்களும்
அவர்களின் பெயரும் நினைவில் கூட நிற்பது இல்லை.
இரண்டு நாட்களுக்குமுன்
தொலைக்காட்சியில் கே.பாலச்சந்தரின் `அவள் ஒரு தொடர்கதை’ என்கிற திரைப்படம்
காண்பிக்கப்பட்டது பலவருடங்களுக்குப்பிறகு மீண்டும் பார்க்கநேர்ந்தது.
பன்னிரெண்டு வயதில் அப்படம்
வீட்டில் உள்ள பெரியவர்களின் பேச்சில் குதூகலித்து பார்க்கச்சென்று, கமல் வருகிற காட்சிகளை மட்டும்
ரசித்து (ரொம்ப அழகாக இருப்பார் அப்படத்தில்), எதோ குடும்ப படம், கதையினைப் புரிந்தும் புரியாமலும்
பார்த்துவிட்டு வந்தேன்.
பிறகு பதினெட்டு வயதில் மீண்டும்
இரண்டு மூன்று முறை வீடியோவில் பார்த்து ரசித்தேன். தைரியமான பெண் நடிகை சுஜாதா
பளிச்சென்று தென்பட்டார். கதைப்போக்கு அழகாக இருந்தது. தெய்வம் தந்த வீடு, பாடல் மனதில் பதிந்தது. அருமையான
படம் என தோழிகளுடன் அக்கதையின் கருவை பரிமாறிக்கொண்டேன்.
எத்தனையோ ஆண்டுகள் கழித்து
மீண்டும் அத்திரைப்படத்தை எந்த ஒரு முன்முடிவும் இல்லாமல் புதிதாகப்
பார்ப்பதைப்போல் பார்த்தேன். ஒவ்வொரு காட்சியையும் அற்புதமாக குறை ஒன்றும்
சொல்வதற்கில்லாமல் கட்டமைத்திருப்பார் கே.பாலச்சந்தர். ஏற்கனவே நான் வைத்திருந்த
அனைத்து கருத்துக்களும் காணாமல் போனது இத்திரைப்படத்தினைப் புதிதாகப்
பார்க்கின்றபோது.
சுஜாதாவின் அம்மாவாக ஒருவர்
நடித்திருப்பார் பாருங்க. அற்புதமான நவரசத்திலகம் அவர். இயற்கையான நடிப்பு.
நடிப்பு போலவே இல்லை, அவ்வளவு
யதார்த்தம். அவர் தோன்றுகிற காட்சிகளில் நான் அவரைத்தவிர வேறு யாரையும்
பார்க்கவில்லை. படபடப்பு, பதற்றம், பயம், அன்பு, ஏமாற்றம், மகிழ்ச்சி, கோபம், தாழ்வுமனப்பான்மை என எல்லா
நிலையிலும் அப்படித்தான் ஜொலித்திருப்பார்.
அடுத்து ஜெயகணேஷ், முன்பெல்லாம் படம் பார்க்கிறபோது
அவர் படத்தில் ஒரு பாத்திரமாக
இருந்தது எனக்கு நினைவே இல்லை. இப்போது அப்படத்தின் கதாநாயகனே அவர்தான். கதை
நகர்வதற்கு அவர்தான் மூலம். குடும்பத்தைப் பாதுகாக்காமல் எல்லா சுமைகளையும்
தங்கையின் தலையில் போட்டுவிட்டு வெட்டிக்கதைகளைப் பேசித்திரிவார். அருமையான
வெட்டிப் பாத்திரம். இதுபோன்று வெட்டியாக சுற்றித்திரிகிற பாத்திரத்தை இவ்வளவு
அழகாக வேறு எந்த டைரக்டரும் சொல்லி இருப்பார்களா என்பது சந்தேகம்தான். அதாவது
யாருக்கும் உதவாத பேச்சுகளை தேவையில்லாமல் காக்கா பிடிப்பதற்காகப் பேசி பொழுதைக்
கழிப்பார். ஒரு கட்டத்தில், தங்கையின்
அலட்சியப்போக்கினை சக்கித்துக்கொள்ளமுடியாத நிலையில், எரிச்சலின் உச்சத்தில் தங்கையையே
அசிங்கமாகப் பேசிவிடுவார். உணர்ச்சிப்பூர்வமான வசனநடை அங்கே. படம் முழுக்க
வசனங்கள் மனதில் பதிகிறது. உள் அர்த்தம், உள்குத்து என விளாசியிருப்பார்
இயக்குநர். அப்போதும் திருந்தாத ஜெயகணேஷ், சுஜாதா, `எங்களை வைத்து விபாரம் செய்.’, பணம் வரும், என்று கடைசி ஆயுதமாக
வார்த்தைகளைக் கொட்டியபின்புதான் அவர் திருந்துவார். அதுவரையில் அவர் செய்கிற
அட்டகாசம், மண்டைக்கு
மணி.
விதவைக்கு மணமுடிக்க
முடிவெடுக்கின்ற கட்டத்திலும், சுஜாதாவைத்தவிர மற்ற அனைவரும்
பதற்றநிலையிலேயே இருப்பதை மிக அழகாகக் காட்டியிருப்பார் கே.பி.
எதுக்குடி வெள்ளைப்புடவை
கட்டிக்கிட்டு உன்னை நீயே ஏமாத்திக்கிற, நான் அப்பவே சொன்னேன், இந்த வெள்ளைப்புடவை எல்லாம்
வேண்டாம்’ன்னு, நீதான், வெள்ளைப்புடவை உணர்ச்சிகளை
அடக்கும் என்றாய், அடங்கியா
இருக்கு.!? கேட்பார்.
யோசிக்கவைக்கிற கேள்விகள் அங்கே.
வயதுக்கு வந்த தங்கைகளை வீட்டில்
வைத்துக்கொண்டு, அழுகிற
குழந்தையையும் பொருட்படுத்தாமல், இரவு லீலையில் ஈடுபட்டிருக்கின்ற
அண்ணி அண்ணனை காறித்துப்புகிற வசனம்.. அங்கேயும் கே.பி நிலைக்கின்றார்.
குடும்பத்தலைவர் அப்பா வருவார், அவரும் ஒரு அழகிய கருத்தினை
பகிர்ந்துவிட்டுச்செல்வார். குடும்பசுமையைச் சுமக்க எவ்வளவு தைரியம் வேணும்
தெரியுமா..! என்பார். அருமை.
தொடர் ஏமாற்றத்தில், நான் வெளியே பேசுவதை மட்டும்தான்
பெரிய விஷயமாகப் பார்க்கிறார்களேயொழிய, யாருமே என் மனதைப்
புரிந்துகொள்ளவில்லையே என்று நாயகி மனம்விட்டு அழுகிற காட்சி, நமக்கும் கண்கலங்குகிறது. பாவம்
பெண்கள்.
படாபாட் அம்மாவை அந்நியாயமாகச்
சாகடித்தது, காலத்தின்
கட்டாயம். இப்போதென்றால், இக்காட்சியும்
கதாபாத்திரமும் தேவையில்லாத ஒன்று. ஜெயகாந்தனின் புத்தகத்திற்கு நல்ல விளம்பரம், இந்தப் பாத்திரத்தின் மூலமாக.
படாபாட் ஜெயலட்சுமியின் மூலமாகச்
சொல்லிச்சென்ற கருத்து, காலம்
கடந்தும் வாழும் என்று திட்டவட்டமாகச் சொல்லலாம். இன்றைய காலகட்டத்திற்கும்
பெண்களின் வாழும் சூழலுக்கும், சமூகவலைத்தலங்களில்
நிகழ்ந்துகொண்டிருக்கின்ற அக்கப்போருக்கும் மிகப்பொருந்தி வருகிறது.
விஜயக்குமாரின் காதலை
நிதர்சனத்தோடு ஒப்பிட்டு இணைத்துவிட்டார் இயக்குநர். அதுதான் நிஜமும் கூட.
சினிமாதான் காதலைப் புனிதப்படுத்தும். நிஜவாழ்வில் அது கொஞ்சம் கஷ்டமே. அன்றே அதை
தைரியாமாகப் பொய்யாக்கிக் காட்டிவிட்ட கே.பி சாருக்கு கோடி சபாஷ்..
கமலின் கல்யாணம்தான்
திரைப்படத்தில் இன்னமும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகவே இருக்கிறது எனக்கு. அப்பாவி
விகடகவிக்கு அந்தப்பெண்ணா.!? என்று, கொஞ்சம் பொறாமை
எட்டிப்பார்க்கிறது. இங்கு மட்டுதான் சினிமாத்தனம் தெரிந்தது. மற்றபடி படம் அருமையான
குடும்பச்சித்திரம்.
இனி இதுபோன்றதொரு திரைப்படம்
வருமா.!?
கபாலிக்கு இவ்வளவு விளம்பரமா.!
Your Name
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com