Sunday, 16 June 2013

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!!!- உலக தந்தையர் தினம்

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!!!
பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம்!
இன்று உலக தந்தையர் தினம்
-----------------------------------------------------------------------------

வயிறோடு விளையாடும் கருவுடன், மனதோடு உறவாடி மகிழ்வாள் அன்னை. தொப்புள்கொடி பந்தம் பிரிக்க முடியாது தான்.

ஆனால் தந்தையின் பாசம் வாழ்வோடு கலந்தது. மனைவியின் வயிற்றில் காதை வைத்து, நிறமறியா, முகமறியா பிள்ளையுடன், காதோடு பேசி மகிழும் தந்தையின் பாசம்... தரணியெல்லாம் பேசும்.

மழலையின் சிரிப்பில் மனதை தொலைத்து... வாழ்க்கையை பிள்ளைக்காக அர்ப்பணிக்கும் நேசம்... எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், தலைகுனிந்து, உடல்குனிந்து பிள்ளையை முதுகில் உப்புமூட்டையாக ஏற்றியும், தலைக்கு மேல் தூக்கியும் கூத்தாடும் பரவசம்...

தந்தையன்றி வேறு யாருக்கு வரும்? "விடு... விடு...' என்று வாழ்க்கை முழுதும் விட்டுக் கொடுக்கும் அந்த பெரிய உள்ளம்... இறைவன் நமக்களித்த இயற்கை வெள்ளம். ஓய்வறியா கால்கள் ஊன்றுகோலைத் தேட... நரை தோன்றி முகச்சுருக்கம் முற்றுகையிட... பிள்ளையின் அன்பே தஞ்சமென தேடும் அப்பாவி(ன்) நெஞ்சம்...

ஆயிரம் தெய்வங்களை மிஞ்சும்.இன்று தந்தையர் தினம். வளர்ந்தாலும் அப்பாவுக்கு நாம் பிள்ளைகள் தான். மழலையில் கைப்பிடித்து, வாழ்வின் பாதைக்கு நம்மை அழைத்துச் சென்ற அப்பாவின் தியாகத்தை நினைவு கூர்வோம்.

முதுமையில் அள்ளி அணைத்து ஆறுதல் செய்வோம். இங்கே... அப்பாவின் அன்பை, ஆசைகளை, அறிவுரைகளை ஆனந்தமாக வெளிப்படுத்துகின்றனர், இவர்கள்.

அன்புக்கு எப்படி அன்னையோ, அதுபோல குழந்தையின் அறிவுக்கு தந்தையே முன்னோடியாக திகழ்கிறார். பெரும்பாலான வீடுகளில் குடும்ப நிர்வாகம் தந்தையின் கைகளிலேயே இருக்கிறது.

குடும்பத்தில் தந்தையின் உழைப்பே அதிகமாக இருக்கும். வாழ்நாளில் கடைசிவரை, குழந்தைகளுக்காக உழைக்கும் தந்தையருக்கு நன்றி செலுத்தும் விதமாக தந்தையர் தினம் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) கொண்டாடப்படுகிறது.

இத்தினம் மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும், இந்தியாவிலும் இத்தினம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

ஒவ்வொருவரும் தந்தைக்கு, நேரிலோ, போனிலோ, பரிசுப் பொருள் அல்லது பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து, இத்தினத்தை கொண்டாடலாம்.

சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இதன் நோக்கம். தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி, அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத் தர வேண்டும்..