Sunday 14 April 2019

தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்?

தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்?
Image may contain: food
உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வானவியலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே! சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர்.
இதையே உலகின் பல்வேறு நாடுகளும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின.சூரியனை மையமாக வைத்து பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையில் தமிழர்கள் 12 பாகங்களாகப் பிரித்தார்கள்.
இந்த வான வீதியை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் 12 பாகங்களாக பிரித்தார்கள். இவையே ராசிகள் என அழைக்கப்படுகின்றன.சூரியன் மேஷத்திற்குள் நுழையும் நிகழ்வு சித்திரையில் நிகழ்கிறது.
ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழர்கள் ஆரம்பித்தார்கள்.
அது மட்டுமின்றி வான வீதியில் உள்ள 27 நட்சத்திரங்களை சமமாகப் பங்கிட்டு இந்த 12 ராசிகளுள் அடக்கினார்கள்.
அசுவதி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன. அசுவதி மேஷத்தில் தொடங்குவதால் தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது உறுதிப்படுகிறது.
அத்தோடு ஒரு ஆண்டை ஆறு பருவங்களாக பிரித்து வைத்துள்ளார்கள். இளவேனில் (சித்திரை, வைகாசி), முதுவேனில்
(ஆனி, ஆடி), கார் காலம்
(ஆவணி, புரட்டாசி), கூதிர்காலம்
(ஐப்பசி, கார்த்திகை), முன் பனிக்காலம்
(மார்கழி, தை) பின் பனிக்காலம்
(மாசி, பங்குனி) என்ற ஆறு பருவங்களில், இளவேனில் காலம் வசந்த திருவிழாவிற்கு உரிய காலம் ஆகிறது.
உற்சாக ஊற்றாக விளங்கும் இந்தக் காலத்தில் (மதுரை) சித்திரைத் திருவிழா, திருவிடை மருதூர் தேரோட்டம் மற்றும் திருச்சி, காஞ்சி உள்ளிட்ட நகர்களில் கோலாகலத் திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றன.
சூரியனைப் பிரதானமாகக் கொண்ட இந்த வாழ்க்கை முறை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் ஈர்த்தது.
ஆகவேதான் மலையாளம், மணிபூர், அஸ்ஸாம், வங்காளம், திரிபுரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் சித்திரையையே புத்தாண்டாக ஏற்றுள்ளன.
அது மட்டுமல்ல,உலகின் பல நாடுகளையும் கவர்ந்தது. நேபாளம், பர்மா, கம்போடியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகள் சித்திரையிலேயே புத்தாண்டுக் கொண்டாட்டத்தை அமைத்துள்ளன!மகரத்தில் சூரியன் நுழையும் தை மாதம் மிகுந்த புண்ணிய காலமாகக் கொள்ளப்படுகிறது.
காரணம், உத்தராயணம் என்னும் வடக்கு நோக்கி சூரியன் பயணம் துவக்கும் காலம் அது! அது மட்டுமின்றி அறுவடை செய்யப்படும் மன மகிழ்ச்சியான காலம் இது. ஆக, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தைப் பொங்கல் கொண்டாட்டப்படுகிறது.
சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது வேறு; சூரியனின் ஆரம்பத்தை நிர்ணயிப்பது வேறு. நன்றி தெரிவிப்பது தையிலும், ஆரம்பம் சித்திரையிலுமே விழாவாக்க கொண்டாடப்படுகிறது.சித்திரைத்திங்களின் சிறப்பு..............
ஆண்டு தோறும் ஆறு பருவங்கள் மாறி மாறி வருகின்றன. அவற்றுள் வசந்தம் பொங்கும் சிறப்பை கொண்டது சித்திரை மாதம். இந்த மாதத்தில் இளவேனிற் காலம் இன்பமுடன் எழுகிறது.
"வந்தது வசந்தம்'' என்று அனைவரும் மங்களம் பொங்க குதூகலிக்கும் பொன்னான நாள் சித்திரைத் திங்களின் முதல் நாள்.
கரும்பு வில்லேந்தி மன்மதன் பாணம் பொழியும் பேரின்பத் திருநாள். மாமரங்களும் வேப்ப மரங்களும் பூத்து குலுங்கி நிற்கும் குதூகலப்பெருநாள்.
சித்திரை மாதத்தை "சைத்ரா'' என்றும் "சைத்ர விஷூ'' என்றும் கூறுவர்.சித்திரை வருஷப் பிறப்பன்று கோவில்களில் புது வருஷப் பஞ்சாங்கம் படிக்கும் வழக்கம் உண்டு.
சித்திரை வருஷ பிறப்பு தினத்தை கேரள மக்கள் விஷூக் கனி காணல் என்று கொண்டாடுகின்றனர்.அன்றைய தினம் வீட்டிற்கு வருவோர்களுக்கெல்லாம் பணம் கொடுப்பதனை இன்றும் கேரள மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Best regards,