பராசக்தி (புத்தம் புதிய காப்பி)-----------------------------------------------
மடாதிபதி ஆனேன்; நீதிபதி வேண்டாம் என்பதற்காக அல்ல; நீதிபதியின் தீர்ப்பை விட இறைவனின் தீர்ப்பு பெரிது என்பதற்காக.
உனக்கெதற்கு இந்தப் பதவி, பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கும்போது என்று கேட்கலாம்; எனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டது; உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எனது வளர்ச்சி பாதிக்கப்பட்டது; எனது பக்தர்கள் பாதிக்கப்பட்டார்கள்; 293-வது ஆதீனமாக பதவி ஏற்றேன்!நல்லது!
ஞானமும், பேச்சாற்றலும், வீரமும், போர் குணமும், அழகும், ஆங்கில அறிவும் கொண்ட நித்திதான் தனது அடுத்த ஆதீனகர்த்தா என்று கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்தார் மதுரை ஆதீனம்!அப்படி அவர் பாராட்டியது தவறா? இது போறாதா? பொங்கி எழுந்தனர் எங்கள் எதிரிகள்! ஊடகத் துறையை உசுப்பினார்கள், விஷயத்தை ஊதிப் பெரிதாக்கச் சொன்னார்கள்! அந்த விஷமிகள் நினைத்தவாறே விஷயம் இப்போது நீதிமன்றம்வரை வந்துவிட்டது! ஆகாரத்திற்காக அழுக்கை உண்டு தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன்... அதுபோலதான் நானும். உலகின் நன்மைக்காக ஆன்மிகத்தில் குதித்தேன்; நாட்டுக்குத் தொண்டாற்ற மடங்களை ஆரம்பித்தேன்; என் சுயநலத்தில் பக்தர்களின் பொதுநலம் மட்டுமே கலந்திருந்தது!
பாவம் அந்த ரஞ்சி; சினிமாத் துறையால் ஓரங்கட்டப் பட்ட ஒரு அபலைப் பெண்; அப்போதெல்லாம் கவலைப் பட்டதா இந்த ஊடகங்கள்? அவரை தேடிப் பிடித்து அவரது வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை! அந்த பக்தையை கைபிடித்து கரையேற்றியபோது வந்தார்கள்!
"கதவைத் திற காற்று வரட்டும்' என்றுதான் சொன்னேன்! ஆனால் காற்றுக்குப் பதிலாக காமெராவுடன் உள்ளே வந்தது ஒரு ஊடகம்! பொல்லாதது எல்லாவற்றையும் படம் பிடித்தான்; பணம் கேட்டு மிரட்டினான், இல்லை என்றேன்! தனது செய்தி சானலின் மூலம் வீடு வீடாக நீலப்படம் காண்பித்து பிஞ்சுகளின் மனத்தில் கூட என் மீது வஞ்சகம் வளரச் செய்தான்! அவனைக் கண்டித்ததா இந்த உலகம்?
நிம்மதியாக வாழவிட்டார்களா என்னை? வழக்குமேல் வழக்கு தொடுத்தார்கள்!கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் போய் விடுவேனோ என்று பதறினேன்!
முதலில் ரஞ்சி ஓடினாள்; பிறகு நானும் ஓடினேன்; பின்னர் இருவரும் சேர்ந்து ஓடினோம்; ஓடினோம் ஓடினோம் பிடதியில் இருந்து ஊர் ஊராய் ஓடினோம்! மதுரையை அடைந்தோம். இறைவனேஆதீனம் உருவில் வந்து என்னை அடுத்த ஆதீனம் நீதான் என முடிசூட்டி மகிழ்ந்தார்! இப்போதாவது விட்டார்களா?
ஆதீனத்தை போதையிலும் மயக்கத்திலும் வைத்திருக்கிறேன் என்கிறது ஊடகங்கள்? யார் இவர்கள்? ஐபிஎல், சினிமா செய்திகள், டி.வி. சீரியல்கள்... என பல்வேறு போதை வஸ்துகளுக்கு மக்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தி வைத்திருப்பவர்கள்! இப்போதாவது கூறுங்கள், இது யார் தவறு?என் தவறா? ஆதீனத்தின் தவறா? இறைவனின் தவறா...?!