Thursday 6 September 2012

திருப்பூர் மக்களுக்காக ஒரு பெரிய வணக்கம்...!!!! - மனம் இருந்தால் மரம் உண்டு!


னம் இருந்தால் மார்க்கம் உண்டு... அது பழைய பேச்சு.
மனம் இருந்தால் மரமும் உண்டு என்று புதுப் பேச்சுப் பேசுகிறார்கள் திருப்பூரில்.

திருப்பூர் சபாபதிபுரத்தில் வேம்பும் அரசும் ஓருடல் ஈருயிர் எனப்  பின்னிப் பிணைந்தபடி 75 ஆண்டுகளுக்கு முன்பான பழமை வாய்ந்த மரம் ஒன்று  இருந்தது. ஆனால், ரயில்வே சுரங்கப் பணிகளுக்காக மரத்தை அப்புறப்படுத்த வேண்டிய நிலை. திருப்பூர் மக்களுக்கோ மரத்தை வெட்ட மனமே இல்லை. நீண்ட நாள்  ஆலோசனைக்குப் பிறகு, திருப்பூர் நிப்ட்டி கல்லூரி, சுற்றுச்சூழல்  அமைப்புகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது மக்கள் ஒன்று சேர, மரத்தை அதன்  ஆணி வேரோடு அப்படியே பெயர்த்து, நிப்ட்டி கல்லூரி வளாகத்தில் நட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 23-ம் தேதி அன்று காலை ஒன்பது மணிக்குப் பூஜை  போட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன.
சிவா  கிரேன்ஸ் நிறுவனம் கட்டணம் இல்லாமல் மூன்று கிரேன்கள், ஒரு பொக்லைனை  அனுப்பி வைத்தது. சுமார் நான்கு மணி நேர முயற்சிக்குப் பின்னர் மரம் ஆறு  அடி நீளமான வேரோடு அப்படியே பெயர்த்து எடுக்கப்பட்டது. பின்னர் சாலையில் மரத்தை சிரமம் இல்லாமல் கொண்டு செல்வதற்கு வசதியாக மரத்தின் அகன்ற பாகங்கள்  வெட்டி சீராக்கப்பட்டன. அப்படிக் கிளைகளை வெட்டிய இடங்களிலும் பசுஞ்சாணம் பூசி காயத்துக்கு மருந்திட்டார்கள். வேர்ப் பகுதி மிகவும் சென்சிடிவ்  என்பதால் அங்கு வெயில் படாமல் மெகா சைஸ்
ஈரத்துணியைப் போட்டு மூடினார்கள்.

மரம் வெட்டப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லூரிக்கு நெடுஞ்சாலைத் துறையின் வாகனத்தில்
ஊர்வலமாகக்கொண்டு செல்லப்பட்டது. வழி எங்கும் மரத்துக்கு ஆரவார வரவேற்பு  அளித்தார்கள் மக்கள். தாழ்வாக இருந்த மின்சாரக் கம்பிகள் தங்கள் பங்குக்கு மரத்தில் உரசி தீப்பொறி பறக்க தீபாவளி கொண்டாடின. மூன்று கிலோ மீட்டர்  தூரம் கடக்கவே நான்கு மணி நேரத்துக்கும் மேல் ஆனது. ஒருவழியாக நள்ளிரவு 12 மணிக்கு கல்லூரி வளாகத்தை அடைந்தது மரம். அங்கு மரத்தை நடுவதற்குத் தயாராக
இருந்தது 16-க்கு 16 அடி அளவில் தோண்டி வைக்கப்பட்ட பள்ளம். பள்ளத்தில்  ஏற்கெனவே மரம் இருந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட தாய் மண்ணைக் கொட்டினார்கள். கூடவே அசோஸ் பைரில்லம், பாஸ்பேட் பாக்டீரியா கலவை  இத்யாதிகளைக் கொட்டினார்கள். கிரேன் உதவியுடன் பத்திரமாய் நடப்பட்டது மரம். குழியைச் சாண உரம் கலந்த வளமான மண்ணைப் போட்டு நிறைத்தார்கள். மரத்தைச்
சுற்றி நான்கு பக்கமும் சொட்டு நீர்ப் பாசனத் தொழில்நுட்பத்தில் குழாய்கள்  பதிக்கப்பட்டு, மரத்துக்கு சலைன் ஏற்றப்பட்டு வருகிறது.

நிப்ட்டி கல்லூரியின் தலைவர் ராஜா சண்முகத்திடம் பேசியதில்... ''திருப்பூரின் படிப்படியான வளர்ச்சிகளைப் பார்த்து வளர்ந்த சாட்சியாக
நிற்கிறது இந்த மரம். லட்சக்கணக்கான மக்களுக்கு நிழல் தந்தது. கோடிக்கணக்கான பறவைகளுக்கும், புழு, பூச்சிகளுக்கும் இடம் கொடுத்த மரம்.
திருப்பூர் மக்களுக்கு, நொய்யல் ஆற்றுக்கு மழை நீர் தந்த மரம். தெய்வ நம்பிக்கை கொண்டவர்களுக்குப் பிள்ளைப் பேறு  அளித்த மரம். மொத்தத்தில் ஒரு அதிசய மரம் இது. இனி மரங்களை வெட்டும்போது
இப்படியும் மரங்களை மீட்டு வளர்க்கலாம் என்பதற்கு முன் உதாரணமாக நிற்கும் இந்த மரம்'' என்றார் உணர்ச்சிப் பெருக்குடன்.

இந்த முயற்சிக்கு முன்நின்றவர்களில் ஒருவரான 'மக்கள் பசுமை அமைப்பின்’  தலைவர் சிவநாதன், ''ஏற்கெனவே ஏகப்பட்ட மாசுகளால் திருப்பூரின் நிலம், நீர், காற்று எல்லாமே சீரழிந்துகொண்டு இருக்கும் நிலையில், இங்கு இருக்கும் மரங்களைக் காக்க வேண்டியது திருப்பூரைச் சேர்ந்த ஒவ்வொரு குடிமகனின் கடமை. அதைத்தான் நாங்கள் செய்தோம்'' என்றார்.

இனி திருப்பூர் எங்கும் நன்றியாக நிறைந்து இருக்கும் அந்த மரம் தரும் ஈரக் காற்று!