Sunday, 9 September 2012

நீங்கள் யார்? முறமா? சல்லடையா?.....



மற்ற உயிரினங்கள் எதற்கும் இல்லாத ஒரு திறன் மனிதர்களான நமக்கு இருக்கிறது. அதுதான், சிந்தித்தல்!

பல ஆயிரம் கிலோ மீட்டர்  உயரத்தில் இருக்கும் செயர்க்கைகோள்களைக்  கூட பூமியில் இருக்கும் கம்ப்யூடர் இயக்கும். மனிதன் இடும் கட்டளைகளை அடிமை மாதிரி நூறு சதவிகிதம்  அது துல்லியமாக நிறைவேற்றி விடும். அனால், அதற்குச் சிந்திக்க தெரியாது! சிந்திக்கும் திறன் படைத்த ஒரே உயிரினம் மனிதன் மட்டுமே!

நம்மில் எத்தனை பேர் சிந்தனைத் திறனை பயன் படுத்துகிறோம்? தானாக சிந்திக்க தெரியாத மாணவர்களை சிந்திக்க வைக்க, "கேனோ " வேதத்தில் உத்திகள் பல ஆங்காங்கே உள்ளன!   சிந்தனையின் கதவுகளை மூடிவிட்டால் நாம் முட்டாள் ஆகிவிடுவோம்! இதோ இந்த கதையில் வரும் வேலையாள் மாதிரி.

ஒரு முயல் வியாபாரி,  அவன் தனது வேலையாளிடம் ஒரு முயலை கொடுத்து,    " இந்த விலாசத்தில் உள்ள பெண்மணியிடம்  போய் இதைக் கொடுத்துவிட்டுப் பணம் வாங்கி வா" என்று  அனுப்புகிறான். வேலையாள்  முயலை எடுத்துக் கொண்டு  கடைவீதி வழியாக  நடந்து போகிறான். எதிரில் வந்தவன் இவன் மீது மோத, முயலின் மீது இவனுக்கு இருந்த பிடி தளர்ந்து விடுகிறது. முயலும் துள்ளி குதித்து  ஓடிவிடுகிறது.

வேலையாள் முயலை துரத்திக்கொண்டு ஓடாமல், கையை கட்டிக்கொண்டு  சும்மா நிற்பதை பார்த்த வழிபோக்கர்கள், " முட்டாளே! முயலை பிடி!"  என்று இவனை விரட்டுகிறார்கள். வேலையாள் அலட்டி கொள்ளாமல் சொன்னான்," முயல் போனால் என்ன?  என் எஜமான்  கொடுத்த விலாசம் என்னிடம் பத்திரமாக இருக்கிறதே!"

இந்த கதை எதற்கு என்றால், இத்தனை நாள் வந்த மெயில்களில் இருந்த கதைகளை  மட்டும் எடுத்துக் கொண்டு, கருத்துகளை  தவற விட்டு விட்டால், முயலைத் தொலைத்துவிட்டு  " விலாசம் தான் இருக்கிறதே" என்று திருப்திப்பட்டுக் கொண்டவனைப் போல் ஆகிவிடும்.

அறியாமை என்பது மிகப்பெரிய சாபம்.

ஆகையால் நிறைய படியுங்கள்! தீர்க்கமாக யோசியுங்கள்! சளைக்காமல் வேலை செய்யுங்கள்! உங்கள் வாழ்க்கையில் பன்னிரண்டு மாதங்களும் வசந்த காலங்களாக இருக்கும்!

பல ஆண்டுகளாக காலம் கல்வி பயின்று விட்டுத் தனது குருகுலத்திலிருந்து வெளியுலகுக்கு செல்லும் மாணவன் ஒருவனை பார்த்து அந்த குரு சொன்னார்:   " நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!"

இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

சல்லடை நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளி விட்டு, தேவை இல்லாத கசடுகளையும், கல்லையும், மண்ணையும் தான் வைத்து கொள்ளும்.

முறமோ,  பதர், கல், மண் ஆகியவற்றை கீழே தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும்!

நீங்கள் யார்? சல்லடையா? முறமா?