Friday, 22 November 2013

உங்கள் வீட்டின் நிதி அமைச்சர் யார்?

உங்கள் வீட்டின் நிதி அமைச்சர் யார்?


இல்லற வாழ்க்கையைப் பற்றிப் பெரியவர்கள் அறிவுறுத்தும்போது அன்பும், அறனும் சேர்ந்தால்தான் வாழ்க்கை பண்பும் பயனுமாக இருக்குமென்று சொல்வார்கள். பண்பும் பயனுமான இல்வாழ்க்கையில் இன்றைய காலத்தில் பொருளாதாரமும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கணவனோடு சேர்ந்து மனைவியும் பொருளீட்டுவது தவிர்க்க முடியாததாகிவிட்ட அளவுக்கு இன்றைக்கு வாழ்க்கைச் சூழல்கள் சிக்கலாக மாறி வருவதை கண்கூடாகக் காண்கிறோம். இந்தச் சூழலில் அன்றாட வாழ்வில் அவசியமாகிவிட்ட பொருளாதாரச் சுமையை ஒருவராகவே சமாளிப்பதென்பதும் சிரமமானதாகி வருகிறது. - எப்படி ஒரு கை ஓசை எழுப்பி ஒலியை உருவாக்க முடியாதோ அது போல.. இந்நிலையில் குடும்பத்தின் பொருளாதாரத் திட்டங்களில் கணவனுக்கு மனைவி பக்கபலமாக இருந்து உதவுதலும், தேவையான பொழுதுகளில் கணவனுக்கு அறிவுறுத்துவதும் மிக மிக அவசியமாகும்.

இரண்டு மாடு சேர்ந்து இழுக்கும் வண்டியைப் போலத்தான் குடும்ப வாழ்க்கையும். கணவனும் மனைவியும் எல்லா விஷயங்களிலும் விட்டுக் கொடுத்து புரிந்து சேர்ந்து முடிவெடுத்து திட்டமிட்டால்தான் வாழ்க்கைச் சக்கரம் சீராகச் சுழலும்.

ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு தனியாக இருக்கும்போது தன் தேவையை மட்டும் கவனித்துக்கொள்வது, அனாவசியச் செலவுகள் செய்வது என்று பழக்கப்பட்டு விடுகிறான். அவனுக்குத் திருமணமென்று நேர்ந்து குடும்பப் பொறுப்புகள் கூடும் போது கண்ணைக் கட்டி காட்டில் விட்டதாக புது பொறுப்புகளை கடிந்துக் கொள்கிறான். என்னதான் படித்திருந்தாலும் குடும்பத்தை நிர்வாகம் செய்வது எப்படி என்பதை ஒரு தனிப்பாடமாக இன்னும் கட்டாய கல்வியில் கொண்டு வரவில்லைதானே?! ஆனால் பெண்கள் அப்படி இல்லாமல் திருமணத்திற்கு முன்பிருந்தே தன் தாய்- தந்தையின் வாழ்வை கூர்ந்து கவனிப்பவளாக இருந்து, தந்தைக்கு கணக்கு வழக்குகளிலும், தாயாருக்குக் குடும்ப நிர்வாகத்திலும் உதவியாகப் பங்கேற்று பொறுப்புடன் தலைப்பட தொடங்கிவிடுகிறாள். அவளுக்குத் திருமணமாகி போன பிறகு தன் கணவன் ஈட்டி வரும் வருமானத்திற்குள்ளாக செலவு செய்து செவ்வனே குடும்பம் நடத்த இந்த அனுபவம் அவளுக்குத் துணையாக இருக்கிறது. ஆனால், இது மட்டுமே போதுமா என்றால் போதாது? அடிப்படைச் செலவுகளைக் குறைப்பதில், தேவையறிந்து செலவு செய்வதில் மட்டுமே ஒரு மனைவியின் பங்கு இருந்தால் மட்டும் போதாது. மாறாக ஒட்டுமொத்தமாகக் குடும்பப் பொருளாதாரத் திட்டமிடுதலில் மனைவியும் ஈடுபடும்போதுதான் அந்தக் குடும்பம் பொருளாதார ரீதியாக வளம் பெறுவதோடு, இந்த பங்கிடுதல் குடும்பத்தில் பாசப்பிணைப்பையும் அதிகமாக்குகிறது. எப்படி என்று பார்க்கலாமா?


பொதுவாகவே கணவன் - மனைவி இருவரில் ஏதேனும் ஒருவருக்குச் செலவு செய்ய அலாதிப் பிரியமிருக்கும் மற்றொருவருக்கோ வருங்காலத்திற்காகக் சேமிப்பதே நோக்கமாயிருக்கும். இப்படி இருவேறு துருவங்களாக இருவரும் இருந்தால் அதன் மூலம் ஏற்படப் போகும் விளைவுகள் என்னவென்பது நமக்குத் தெரிந்ததுதானே?! இதைத் தவிர்க்க வேண்டுமானால் ஒரு கூட்டு முயற்சியும், அதற்காக இரண்டு மூளைகளும் சேர்ந்து செயல்படுவதும் அவசியமாகிவிடுகிறது.

உலகமயமாக்கல் காரணமாக திறந்த சந்தை வெளி பெருகி விட்ட இந்தக் காலத்தில் நுகர்வோரின் எதிர்பார்ப்புகளைத் தூண்டி ஏதேனும் பொருளை எப்படியாகிலும் விற்றுவிடும் முயற்சிகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. இந்த நுகர்வோர் சந்தை வெகு இலகுவாக செலவுகளை அதிகரிக்க வைக்கும் தன்மை கொண்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது இருவரின் கடமையாகிறது. கணவன் - மனைவி இருவருமே வேலைக்குப் போக வேண்டிய தேவை இருப்பதால் இருவருமே மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டியதிருக்கிறது. முட்டையிடும் வாத்துக்குதான் வலி தெரியுமென்று ஒரு சொலவடை உண்டு அதன்படி வருமானத்தின் அருமை புரிந்து எந்தப் பொருள் தேவையோ அந்தப் பொருளை வாங்குவது, அந்தப் பொருளை எங்கு வாங்கினால் நியாயமான விலைக்கு கிடைக்கும் என்று மிகுந்த கவனத்துடன் செயல்படுவதும், குழந்தைகளுக்கு எந்த உணவுப் பண்டத்தில் சத்து அதிகம், தூய்மையான நல்ல தரமுள்ள பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பது எங்கே என்று பார்த்துப் பார்த்து வாங்குவதும், அவசரமயமான பணிச்சூழல் காரணமாக உணவகத்தில் அன்றாடமாகவோ அடிக்கடியோ வாங்கிச் சாப்பிடுவதினால் உடலுக்குக் கேடு வராமலும் வரவு- செலவில் துண்டு விழாமலும் பாதுகாப்பதில் பெண்கள் இயல்பாகவே கெட்டிக்காரர்கள். எனவே, இந்த இயல்பை குடும்பப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தினால் அதனால் நன்மைகள் மட்டுமே விளையும்.

வரவு- செலவு கணக்கை தீர்மானித்து அதற்கேற்ப செலவு செய்து இந்த மாதம் இந்த பொருட்கள் வாங்குதல் கட்டாயம், இந்த பொருள் வீண் அல்லது வாங்குவதை தள்ளிப் போடலாம் என்று கூட்டுத் தீர்மானங்களை எடுத்து தேவைக்கேற்ற செலவுகளுடன் சிக்கனமாக வாழலாம். ஒருவருடைய கருத்தை மற்றவர் காது கொடுத்து கேட்பதென்பது மிக அவசியம். அப்போதுதான் ஆலோசித்து முடிவும் எடுக்க முடியும்.

சிலர் இரகசியமாக வைப்பு நிதியை மனைவியறியாமல் சேமிப்பார்கள். ஏதேனும் காரணத்தால் அவருக்கு திடீர் மரணம் நிகழ்ந்தால் அப்படியொரு சேமிப்பு இருப்பதே தெரியாமல் 'நாய் பெற்ற தேங்காயாக' அது யாருக்கும் பயன்படாமல் போய்விடுவதையும் நாம் உலகில் பார்க்கத்தானே செய்கிறோம்? அப்படி நிகழாமல் இருக்க கணவருடைய கடன், வரவு, வைப்பு நிதி, காப்பீடு இவற்றையெல்லாம் பற்றி மனைவி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அறிந்து கொண்டால் அதற்கேற்ப வரவு- செலவைக் கையாளலாம். வேறு வருமானம் இல்லாதபட்சத்திலும் மனைவி கணவருடைய கடனையும் வருமானத்தையும் தெரிந்து வைத்திருந்தால் விரலுக்கேற்ற வீக்கமாக சிக்கனமாகச் செலவிடலாம்.

தண்ணீர், மின்சாரம், தொலைபேசி, பள்ளிக் கட்டணம் என்று மாதா மாதம் வரும் பட்டியலை தயார் செய்து எப்போது செலுத்த வேண்டுமென்று அறிந்தும் வைத்துக் கொண்டு பணத்தை உரிய நேரத்தில் கட்டிவிடலாம். விலைப்பட்டியல்களையும், ரசீதுகளையும், வங்கியிலிருந்து வரும் கணக்கு விபரங்களையும் சரி பார்த்து ஒழுங்காக ஒரு கோப்பில் அடுக்கிவைத்தால் இந்த மாதத்திற்கும் போன மாதத்திற்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டறியலாம். இவ்வகையான சின்ன விஷயமாகத் தெரியும் வேலைகளை பகிர்ந்துக் கொள்வதன் மூலம் கணவருக்கும் தன்னாலான உதவிகளை மனைவிக்கு செய்ய உந்துதல் வரும்.

என்னதான் ஞாபக சக்தி இருந்தாலும் தினப்படி நடக்கும் செலவுகளை எழுதி வைக்க வேண்டும். இதன் மூலம் இது தேவையற்ற செலவு வரும் நாட்களில் இது இருக்கக் கூடாது என்பதை கண் கூடாகப் பார்த்து புத்திசாலித்தனமாக கையிருப்பை எப்படி புது முதலீட்டில் செலுத்தலாம் என்பதைப் பற்றியும் யோசிக்க அது உதவும். செலவு செய்யும் போது கஞ்சத்தனத்திற்கும் சிக்கனத்திற்குமான வேறுபாட்டை மனைவி கணவருக்கு எடுத்துச் சொல்லலாம். தேவையான பொருட்களையும் வாங்காமல் மிச்சப்படுத்துவது சிக்கனமல்ல லோபித்தனம், அதே போல் ஆடம்பரமென்று ஊதாரித்தனமும் கூடாது செலவு செய்வதை ஒரு கலையாக எண்ணி நடைமுறைப்படுத்தினால் எதுவும் கடினமாகவே இருக்காது என்பதை பொருளாதாரத் திட்டமிடுதலின் மூலமாக ஒரு மனைவியால் உணர்த்த முடியும்.

அன்றாடச் செலவுகளைத் தவிர மற்ற திடீர் செலவான மருத்துவ செலவு, விடுமுறை கொண்டாட்டம், பண்டிகை நாட்களுக்கான விசேஷ செலவு, எதிர்பாராமல் கார் பழுதடைந்தாலோ, விபத்து நேர்ந்தாலோ ஆகும் உபரி செலவு என்று எல்லாவற்றையும் கணக்கில் வைக்காமலிருந்தால் 'பட்ஜெட்'டில் துண்டென்ன வேட்டியே விழும். வரவு- செலவு பட்டியலிடாமல் இருந்தால் செலவுகள் கணக்கில்லாமல் போய்விடும். வரவு- செலவு எழுதிய படி செயல்பட முடியவில்லை என்று கைவிட்டுவிடாமல் அதற்கென்று ஒவ்வொரு வார இறுதியிலும் கணவர்- மனைவி இருவரும் நேரம் ஒதுக்கி சரியாக திட்டம் தீட்டினால் முடிவு பலன் தரும், சேமிப்பும் கூடும். இப்படி அடிக்கடி செலவுகளை விவாதிப்பதில் மனைவி முன்கையெடுப்பதன் மூலம் கணவருக்கும் குடும்பச் செலவுகள் குறித்த பூரணமான நிலை தெரிய வரும். இப்படி செய்வதனால் 'ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் திண்டாட்டம்' என்றெல்லாம் பாடத் தேவையே இருக்காது.. இப்படி அடிக்கடி விவாதிப்பதும், குடும்பம் தொடர்பான செலவுகளைப் பகிர்ந்து கொள்வதும் குடும்பச் செலவுகளுக்கு ஒரு வெளிப்படையான அணுகுமுறையை ஏற்படுத்துவதோடு, பகிர்ந்துகொள்ளுதலும், புரிந்துணர்வும் கணவன் மனைவியிடையே அதன் மூலம் அதிகமாகிறது.