முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம் ....
முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம் ....
முருக பெருமான் சூரபத்மனை அழித்து உலகுக்கு அருள் புரிந்த நாள் கந்தசஷ்டி திருநாளாகும்.
சூரனை அழித்த நிகழ்ச்சியை நினைவூட்ட சூரசம்ஹாரம் அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று நடைபெறுகிறது.
சூரன் தான் பெற்ற வரத்தால் நன் மக்களுக்கும் தேவர்களுக்கும் துன்பங்கள் பல செய்தான்.
அவன் நீண்ட காலம் இவ்வுலகில் வாழ்ந்தால் ஆயிரக்கணக்கான பாவ செயல்களை
செய்து, நரகத்திற்கு ஆளாவான். தவத்தால் வரம் பலபெற்ற இவன், பெரும்பாவியாகி
விடக்கூடாது என்ற கருணையால் நினைந்து இறைவன் குமாரனாக தோன்றி வேலாயுதத்தால்
அவனுடைய உடலை இரு துண்டுகளாக்கினார்.
அதில் ஒன்றினை மயில் வாகனமாகவும், மற்றொன்றினைச் சேவல் கொடியாகவும், தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
இதனை விளக்கவே சூரசம்ஹாரம் முடிந்த உடன் முருகனை மயில்வாகனத்தில்
ஏற்றுகின்றனர். அப்போது அவனுக்கு “சேவல்’’ கொடியாகிறது. இதில் இருந்து
முருகன் சூரனைக் கொல்லவில்லை என்பதுவும் மறக்கருணையால் ஆட்கொண்டான்
என்பதுவும் குறிப்பிடப்படுகின்றது.
“சிக்கலில் வேல் வாங்கி
செந்தூரில் சூரசம்ஹாரம்’’ என்பது பழமொழி. திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்
நடந்ததால் திருச்செந்தூரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
முருகன் புராணங்களின்படி தன்படைகளுடன் முருகன் திருச்செந்தூர் வந்து
தங்கியதாகவும் அங்கு விஸ்வகர்மாவால் அமைக்கப்பட்ட தேவகுருவாகிய குரு என்ற
வியாழபகவானால் பூஜிக்கப்பட்டு அசுரர்களின் வரலாறு பற்றி அறிந்ததாக
கூறப்படுகிறது. வியாழபகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் திருச்செந்தூர்
சிறப்பு பெற்ற குரு தலமாகவும் போற்றப்படுகிறது.
இங்கிருந்து
குமரபெருமான் வீரபாகு தேவரை சூரபத்மனுக்கு அறிவுரை கூறும்படி தூது
அனுப்பினார். வீரபாகு தேவரின் தூது பயனற்று போகவே முருகப்பெருமான்
திருச்செந்தூரில் சூரனை வெற்றிக்கொண்டார். இந்நகர் வெற்றி மாநகர் என
பொருள்படும்படி ஆரம்பத்தில் வடமொழியில் ஜெயந்திபுரம் என அழைக்கப்பட்டு
பின்னர் சயந்தி, செந்தில், திருச்செந்தூர் என்றெல்லாம் தமிழில் பெயர்கள்
பெற்றுள்ளது.
திருச்செந்தூர் என்ற சொல்லுக்கு புனிதமும் வளமும்
நிறைந்த வெற்றி நகர் என்றும் செல்வமும் வெற்றியும் அருளவல்ல தலம் என்று
பொருள் கூறுவர்.
மாமரமாக நின்ற சூரபத்மன் பிளவுபட்ட இடம்
திருச்செந்தூரில் இருந்து 6 மைல் தூரத்தில் கடல் கரையோரமாக உள்ள மாப்பாடு
என்ற தலம். தற்போது மணப்பாடு என்றும் அழைக்கப்படுகிறது.
அங்கு
இன்றளவும் மாமரங்கள் தழைப்பதில்லை என்று கூறப்படுகிறது. கந்தசஷ்டி விழாவில்
சூரசம்ஹார லீலைக்காக இறைவனின் திருவிக்கிரகத்தை கடற்கரை ஓரமாக உலா
செய்யும் போது இப்போதும் கடல் தற்போது பின்வாங்கி கொடுப்பதாக
சொல்லப்படுகிறது.
சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகபெருமான் சிவபூஜை
புரிந்த இடமும் அபிஷேகத்திற்காக தன்கைவேலினால் கந்தபுஸ்கரணி தீர்த்தத்தை
தோற்றிவித்த இடமும் திருச்செந்தூரே ஆகும்.
இதனை விளக்கும் வகையில்
கோவிலின் கற்பகிரகத்தில் சூரசம்ஹாரமூர்த்தியான பாலசுப்பிரமணியர் சிவபூஜை
புரியும் வகையில் தன்னுடைய நான்கு திருக்கரங்களில் இரண்டு அபயவரத
ஹஸ்தங்களாகவும் (ரட்சிப்பதாகவும்), ஒரு கையில் ருத்ரட்சமாலையும் மற்றொரு
கையில் புஷ்பம் ஏந்தி அர்ச்சனை செய்யும் திருக்கோலத்தில் காட்சி
அருள்கின்றார்.
மூலவருக்கு பின்னால் முருகப்பெருமானால் பூஜிக்கப்பட்ட பஞ்சலிங்கங்கள் உள்ளன.
கோவிலின் தெற்கே கடற்கரை ஓரமாக சிறிது தூரத்தில் கந்தபுஸ்கரணி
அமைந்துள்ளது. இத்தீர்த்தம் நாளி கிணறு என்று அழைக்கப்படுகிறது. இப்புனித
கிணற்று நீர் இனிமையாக இருப்பதுடன் நோய்களை திர்க்கும் குணம் படைத்ததாகவும்
இருக்கிறது.
“கந்தசஷ்டி திருநாளில் என்னவரம் கேட்டாலும் அந்த
வரம் தந்திடுவான் முருகன்’’ என்று கூறப்படுகிறது. திதிகளில் வரிசையில்
சஷ்டி ஆறாவதாக வருகிறது. செல்வத்தை தரும் சுக்கிரனின் எண் 6, சுக்கிரனின்
அதிதேவதை மகாலெட்சுமி.
மற்ற நாட்களில் விரதம் இருக்க
முடியாதவர்கள் கூட 6–வது திதியான சஷ்டியில் விரதம் இருப்பதன் மூலம்
மகாலெட்சுமியின் அருளையும் பெறலாம், மனத்திற்கு அகம் என்ற பொருள் உண்டு.
ஞானமான அறிவை பெற்று மனதளவில் உள்ள குழப்பங்கள் அகன்று உடல், நலம் மனநலம்
கிடைக்க திருச்செந்தூரில் சூரசம்ஹார விழாவில் கலந்து கொண்டு
முருகப்பெருமானை வழிப்படுவது சிறப்பாகும்.