Tuesday, 23 August 2016

காமம்

காமம் இயற்கை உணர்வு என்பதை மறுத்து சமூக அறங்களுக்குள் சேர்க்கப்பட்ட போதே அது வக்கிரமாக மாற தொடங்கிவிட்டது.
எதிர்பாலினருடன் பேசுவதையே மாபெரும் கிளர்ச்சியாக நினைக்கும் ஒரு தலைமுறையே உணர்வு சிக்கலில் நிற்கிறது. இதில் ஒரு படி மேலே போய் பெண்ணிடம் எதையும் பேசுபவன் ஆண்மைமிக்கவனாக, பிற ஆண்கள் பொறாமைபடுவார்கள் என எண்ண தொடங்கியதும், எண்ணியதும் அதை பெருமையாக பீற்ற தொடங்கியதும் அந்த தலைமுறையில் தான். பெண் என்பவள் எப்படியும் அடையும் பொருளாக உருமாற தொடங்கியதும் அங்கே தான்.
சர்வ சாதாரணமாக ஆண் பெண் பழகி இன்னும் சொல்லபோனால் கிணற்றடியில், ஆற்றில் ஒரு துண்டை கட்டிக்கொண்டு ஆணும், ஒரு பாவாடையை கட்டி கொண்டு பெண்ணும் ஆளுக்கொரு பக்கம் குளித்த போது இல்லாத வக்கிரம் இன்று பாத்ரூமில் குளிக்கும்போது தலைவிரித்தாடுகிறது.
மிக சாதாரண விஷயத்தை சினிமா ஆபாசமாக்கியது ஒருபுறமென்றால் மறுபுறம் ஆபாசமான பல விஷயங்களை ஹீரோயிசமாக்கியது.
பெண்ணுடன் , பேசுவதே சாதனையாக கருதும் மனதை ஆண்களும், ஆண்கள் பேசினாலே அது காதல் என்றும் (பெண் காமம் என்று கூட நினைக்கமாட்டாள், காரணம் காமம் தவறு அதை பெண் பேச கூடாது) பெண் அர்த்தப்படுத்தி கொள்ளுமாறு ஒரு சமூக கட்டமைப்புக்குள் அத்தனை உணர்வையும் மூச்சு திணற வைத்து கொண்டிருந்தோம். திடீரென சமூக வலைத்தளம் பேஸ்புக் வாட்ஸ் அப் போன்றவை மூச்சு முட்டிக்கிடந்த உணர்வுக்கு வடிகால் அமைக்க பாலியலுக்கான வடிகாலாக ஆண் பெண் பார்க்க தொடங்கிவிட்டனர்.
இந்த சிக்கல்களில் சிக்கி சின்னா பின்னமாவது தான் எதை தேடுகிறோம் என்று தெரியாமல் எதிலோ தொடங்கி எதிலோ சிக்கி கொள்ளும் இருபாலரும் தான். அதிலும் உணர்வு சிக்கலில் சிக்கி கொள்வது அதிகமாக பெண்களே. எப்போதும் ஆண்கள் தெளிவாக இருக்கிறார்கள் காமம் தான் தன் தேடல் என்று ஆனால் பெண்களால் காதல் தாண்டிய காமம் குற்றமாகவே பார்க்கப்படுவதால் அதிக மனச்சிக்கலுக்குள் வீழ்கிறார்கள்.
ஆண் மோசமானவன் என்பது அல்ல என் வாதம். சிக்கலில் அதிகம் சிக்கிக்கொள்ளும் பெண்களை பற்றிய பதிவு.

Best regards,