Friday, 9 August 2019

காஷ்மீரைப் போல் கட்சத் தீவும் மீட்கப்படுமா? இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை என்னென்னெ ?

காஷ்மீரைப் போல் கட்சத் தீவும் மீட்கப்படுமா? இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை என்னென்னெ ?



காஷ்மீர் – வரலாற்றுப் பிழை திருத்தப்பட்டுள்ளதா? அரங்கேற்றப்பட்டுள்ளதா என விவாதம் நடைபெற்று வரும் வேளையில்காஷ்மீருக்கான 370-வது பிரிவு நீக்கப்பட்டது வரலாற்றுப் பிழை சரிசெய்யப்பட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்த்தன் திவேதி தெரிவித்துள்ளார்.

கடந்த 1954-ம் ஆண்டு அரசமைப்புச்சட்டம் 370 பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமை அந்தஸ்தை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. அதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தார். நீண்ட விவாதத்துக்குப் பின் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 - ஏ பிரிவுகளை மத்திய அரசு நேற்று ரத்து செய்ததன் மூலம் முடிவுக்கு வந்தன. இதன் மூலம் ஒரே நாடு; ஒரே அரசியல் சட்டம் என்பது அமலாகியுள்ளது.

இந்த தீர்மானத்தின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும், சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான ஒப்பந்தம் (Instrument of Accession)
ரன்பீர் சிங்கின் பேரன் ஹரி சிங் 1925 ஆம் ஆண்டு அரியணை ஏற்றபோது, இந்திய விடுதலை போராட்டம் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருந்தது. 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தியப் பிரிவினையின் போது இரு நாடுகளும் அப்போதைய இந்தியாவில் இருந்த அனைத்து சிற்றரசர்களும் தம் விருப்பப்பட்டு தாம் விரும்பும் படி இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணையவோ, அல்லது சில குறிப்பிட்ட பகுதிகளில் தனி நாடாகச் செயல்படவோ ஒப்புக் கொண்டன. 1947 ஆம் ஆண்டு காஷ்மீர் அரசின் மக்கள்தொகையில் சுமார் 77% இஸ்லாமியர் வாழ்ந்து வந்தனர். ஒப்பந்தத்தை மீறி அக்டோபர் 20, 1947 அன்று பாகிஸ்தான் ஆதரவில் செயல்பட்ட பழங்குடிகள் காஷ்மீரைத் தாக்கிக் கைப்பற்ற முயன்றனர். ஆரம்பத்தில் பாகிஸ்தானை எதிர்த்துப் போராடிய காஷ்மீர் அரசர் ஹரி சிங், அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவின் தலைமை ஆளுனர் மவுண்ட்பேட்டன் பிரபுவின் உதவியை நாடினார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முன்வந்தால் உதவ இயலும் என்ற மவுண்ட்பேட்டன் பிரபுவின் நிபந்தனையின் பேரில், இந்தியாவுடன் இணையும் உடன்பாட்டு ஆவணம் கையெழுத்து ஆனது.


1947 இந்திய விடுதலை சட்டத்தின் படி, மகாராஜா ஹரி சிங் தனது ஜம்மு காஷ்மீரை, இந்தியாவுடன் இணைத்துக் கொள்வதை தாமாக முன்வந்து ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டார். இந்திய கவர்னர் ஜெனரலராக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபு 27 அக்டோபர் 1947 அன்று, ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தார். ஒப்பந்தம் கையெழுத்து ஆனதும் இந்திய போர்வீரர்கள் மேற்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் ஆணையுடன் காஷ்மீருக்குள் நுழைந்தனர். ஆனால், அவ்வாணைப்படி புதிய ஆக்கிரமிப்பை மட்டுமே தடுக்க வேண்டும். ஏற்கனவே பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியைத் திரும்பப் பெறும் முயற்சி செய்யப்பட மாட்டாது. இம்முயற்சியின் போது இந்தியா இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் அவைக்கு கொண்டு சென்றது. ஐநா தீர்மானத்தில், பாகிஸ்தான் தாம் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேறவும், இந்தியா, மக்கள் எந்த நாட்டுடன் வாழ விரும்புகிறார்கள் என்பதை அறியும் வகையில் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வழி கூறப்பட்டது இந்த உடன்படிக்கையால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் உரிமைப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், இந்தியாவுடன் இணைக்க ஒப்பந்தம் செய்து கொண்ட நாளான அக்டோபர் 26ஆம் தேதியை, ஆண்டுதோறும் ஜம்மு காஷ்மீர் இணைப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது.

கச்சத்தீவு வரலாறு

கி.பி.1605-ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசருக்கு உரிமையாக்கப்பட்டிருந்தன. தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622–1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795 இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கிழக்கிந்திய கம்பெனியார் ஜமீன்தாரினியாக்கினர். அவர் 1803 முதல் 1812 வரை நிர்வாகம் செய்தார்.

கட்சத்தீவு தாரை வார்ப்பு

1920 ஆம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது.
1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது.

28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு.
இது தொடர்பான விவாதம் 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா; ஸ்வரன்சிங், “1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு கச்சத் தீவின் மேற்குப் பகுதியில் இந்திய மீனவர்களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத் தீவு. இலங்கைக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இந்தியாவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து, கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார்.

1976 ஆம் ஆண்டு ஒப்பந்தம் (இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே மீன்பிடி உரிமை பற்றிய கடிதப் போக்குவரத்து நடந்தது. அந்த கடிதங்களே 1976 மார்ச் மாதம் ஒப்பந்தமாக அங்கீகரிக்கப்பட்டது) கச்சத் தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லவும் கூடாது. மீன் பிடிக்கவும் கூடாது. கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு மக்கள் செல்லக்கூடாது என்று முற்று புள்ளி வைத்தே விட்டது.

1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21லிருந்து இன்றுவரை நாம் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறோம்.சீன ராணுவம் கச்சத் தீவை தனது தளமாக பயன்படுத்த இலங்கை அனுமதித்துள்ளது என செய்திகள் வருகின்றன. அதன்படி பார்த்தால் கச்சத் தீவை நாம் மீட்காவிட்டால் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு – குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக கச்சத்தீவு இருக்கப் போகிறது.

1971 முதல் 1974 ஆம் ஆண்டு வரை அந்தோணியார் விழாவின் போது இலங்கை முப்படைகளம் அங்கு முகாமிட்டன. இராணுவ ஹெலிகாப்டர் கச்சத் தீவில் வட்டமிட்டுக் கொண்டேயிருந்தது. போர்க் கப்பல் கஜபாகு கச்சத் தீவில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தியா கடுமையான எதிர் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை; தன் படையையோ அதிகாரிகளையோ அனுப்பி உரிமையை நிலைநாட்டவில்லை. தன் நாட்டுத் தீவு என்ற அக்கறையே இல்லாமல் இருந்தது. பாகிஸ்தான், சீனப் போரில் பல்லாயிரக்கணக்கான சதுர மைல் பூமிகளை அந்நாட்டிடம் இழந்து இன்னும் அதை மீட்க முடியாத இந்திய அரசு – மேற்கு வங்கத்தின் பெருவாரியை வங்க நாட்டுக்கும், அந்தமான் நிக்போபர் அருகில் உள்ள கொக்கோ தீவை பர்மாவிற்கும் தானம் செய்த இந்திய அரசு அதுபோல் கச்சத் தீவைத் தாமாகவே இலங்கைக்குக் கொடுக்க முடிவு செய்து விட்டது.

இந்திய அரசு கச்சத் தீவைக் “கண்டுகொள்ளாததால்” இலங்கை எளிதாக ஆக்கிரமிப்புச் செய்தது. இந்திய மண்ணில் அடிக்கடி கால் வைத்தது. இலங்கை முப்படையினர் கச்சத் தீவில் முகாம் இட்டும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதால் கச்சத் தீவு இலங்கைக்கு உரியது என்று ஒப்புக் கொண்டது என்பதே பொருளாகும். இது இந்திய அரசின் மாபெரும் தவறாகும். தமிழகம் அவற்றைக் கண்டு மவுனம் காத்தது அதைவிடப் பெரிய தவறு.
ஸ்ரீலங்கா மற்றும் இந்திய குடியரசு நாடுகளுக்கிடையே நீண்ட கடல்(Historic Waters) எல்லையும் சம்மந்தமான விவகாரங்களுக்கான ஒப்பந்தம் 26,28 ஜூன் 1974 கையெழுத்தானது.

காஷ்மீர்-கச்சத்தீவு ஒற்றுமைகள்

இரண்டு பகுதிகளுமே ஒப்பந்தத்தால் ஆனவை. இரண்டையுமே காங்கிரஸ் அரசே செய்துள்ளது. காஷ்மீரை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுடன் இணைத்தது. அதேபோல் கச்சத்தீவை ஒப்பந்தத்தின் மூலம் தாரை வார்த்தது.
ஆனால் காஷ்மீர் நாடாளுமன்ற ஒப்புதலுடன், அரசமைப்புச் சட்ட வடிவம் பெற்று இணைந்தது. கச்சத்தீவோ எந்த நாடாளுமன்ற ஒப்புதலுமின்றி தாரை வார்க்கப்பட்டுள்ளது. காஷ்மீர் வரலாற்றுப் பிழை என்றால், முழுக்க முழுக்க தமிழ்நாட்டிற்குச் சொந்தமான கச்சத்தீவு தாரைவார்ப்பும் வரலாற்று மற்றும் சட்டப் பிழை.

Best regards,