Tuesday, 29 September 2020

பத்திரம் பிழைத்திருத்தல் பற்றிய தகவல்

பத்திரம் பிழைத்திருத்தல் பற்றிய தகவல்..! 📋





கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பிழைத்திருத்தல் பத்திரத்தின் 20 தகவல்கள்:

1. பத்திரத்தில் ஏற்படும் எழுத்து மற்றும் வார்த்தை பிழைகள் சரிசெய்யவே பிழைத்திருத்தல் பத்திரம். அதனைச் சரிப்படுத்தும் ஆவணம் (அல்லது) சீர் செய் ஆவணம் ( RECTIFICATION DEED) என்பர்.

2. கிரயம், செடில்மெண்ட், பாகப்பிரிவினை, உயில் சாசனம், பவர் பத்திரம் அடைமானம், விடுதலை, அக்ரிமெண்ட் போன்ற அனைத்து ஆவணங்களையும் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.

3. சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம், உரிமை மாறக்கூடிய பிழைத்திருத்தல் பத்திரம் என இரண்டு வகைப் பிழைத்திருத்தல் இருக்கிறது.

4. திசைகள், ஊர்ப் பெயர், தன்னுடைய பெயர் என யாருக்கும் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல் தனக்கு மட்டுமே பிரச்சனையாகவே உள்ள பிழைகள் சாதாரணப் பிழைகள்.

5. பட்டாவையும், பத்திரத்தையும் காணும்போது. பட்டாவில் உள்ள பெயரும், பத்திரத்தில் உள்ள பெயரும் நேராக இல்லையென்றால் சொத்தை வாங்கப் பலர் தயங்குவர். அதனால் இந்தச் சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் போடப்படுகிறது.

6. செக்குப் பந்தியில் இன்னார் வீட்டுக்கு வடக்கே என எழுதுவதை இன்னார் வீட்டுக்கு கிழக்கே என எழுதுவது. பட்டா எண்ணைப் பத்திரத்தில் தவறாகக் குறிப்பிடுவது, சர்வே எண்ணை தவறாகக் குறிப்பிடுவது, முன்புள்ள பத்திரங்களில் எண்களைத் தற்போது எழுதும்போதும் தவறாக எழுதுவது, இன்சியல், தந்தை பெயர் தவறாக எழுதிவிடுவது. கதவு எண்கள், ஊர்ப் பெயர், தன் பெயர் ஆகியவற்றைத் தவறாக எழுதுவது.

7.கிரயப் பத்திரத்தில் வரைபடம் மேப் விடுபட்டுவிடுவது , மின் இணைப்பு எண் மாற்றி எழுதிவிட்டால், தெருப்பெயர் மாறி விட்டு இருந்தால் திசைகள், எல்லைகள் தவறுதல்கள் எல்லாம், சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் மூலம் திருத்தி விடலாம்.

8. சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரத்திற்கு முத்திரைத்தாள் கட்டணம் ரூ. 1௦௦/- மொத்த செலவும், 5௦௦க்குள் முடியும்.

9. உரிமை மாற்றம் பிழைத்திருத்தலில் 2ஏக்கர் 1 சென்ட் என்பதை 1 ஏக்கர் 2 சென்ட் என்று எழுதி விடுவது ஆனால் 2 ஏக்கர் 1 சென்ட்டுக்கு பணம் கொடுத்து இருப்பார்கள், ஆனால் இந்தப் பிழையால் பட்டா மாறுவது தடையாகி விடும். இதனைத் திருத்துவதற்கு உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட வேண்டும்.

10. மேற்படி பிழைத்திருத்தல் பத்திரம் எழுதும் போது சரியான அளவினை குறிப்பிட்டு அதற்கு உண்டான அன்றைய சந்தை வால்யூவை வைத்து அதற்குண்டான கட்டணம் செலுத்தினால்தான் இந்த உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட முடியும்.

11. குறைவான சதுரஅடி நிலத்தை அதிக சதுரஅடியாக எழுதினால் அதனை தற்பொழுது திருத்தம் செய்யும்போது ஏற்கனவே சார்பதிவகத்தில் கட்டிய முத்திரைத்தாளின் தொகையை திரும்பிப் பெற்று கொள்ள முடியாது.

12. சொத்து விற்ற நபர் பிழைத்திருத்தல் போட வேண்டிய சமயத்தில் உயிருடன் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளை வைத்துப் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.

13. விற்ற நபருக்கு, வாரிசுகள் இல்லை என்றால் இரண்டாம் வாரிசுகள், மூன்றாம் வாரிசுகள் மூலம், பிழைத்திருத்தல் போடலாம். அதற்கும் வழி இல்லை என்றால் நீதிமன்றம் தான் நாட வேண்டும்.

14. சொத்தை விற்ற நபர் உயிருடன் இருக்கிறார், பிழைத்திருத்தல் போட வர மறுக்கிறார் என்றாலும், நீதிமன்றம் நாடி அதனைத் தீர்க்க வேண்டும்.

15. சர்வே எண், விஸ்தீரணம் , நீள அகல அளவுகள், என அனைத்துமே பிழையாக இருந்தால் , பிழை திருத்தம் பத்திரத்திற்குப் பதிலாக புதிய கிரய பத்திரம் போட வேண்டி இருக்கும்.

16. சில ஆவணங்களில் ஏற்படும் சிறு சிறு தவறுகளை உதாரணமாக சர்வே எண், மனை எண், இனிசியல் தவறுகளை பத்திரபதிவு செய்துவிட்ட பிறகு கண்டுப் பிடித்தால் அதனை அமிலம் வைத்தோ ஒயிட்னர் போட்டோ நீங்ளே திருத்தி விடுவது முற்றிலும் தவறு.

17. மனை எண் 10 யை மனை எண் 11 என்று தவறாக டைப் ஆகி இருந்தால், தாங்கள் பத்திர பதிவுக்கு பிறகு பத்திரத்தில் 10 என்று பேனாவில் போட்டாலும் பதிவு அலுவலக பராமரிப்பு ஆவணங்களில்11 என்றே இருக்கும்

18. இது போன்ற திருத்தம் சட்ட விரோத திருத்தமே இதனால் எந்தவித உரிமை மாற்றமும் வாரது. எவே நிச்சயம் பிழை திருத்தல் பத்திரம் போட வேண்டும்.

19. ஆவணங்களில் எழுதப்பட்ட ஷரத்துக்களில் சில வார்த்தைகள் அடிக்கப்பட்டு மாற்றப்பட்டு இருப்பின் அடித்தல் திருத்தல் வரி பிளவுக்கு நேராகவோ , குறுக்காகவோ இரண்டு நபர்களும் சான்று கையொப்பம் இட வேண்டும்.

20. சொத்து விபரம், சர்வே எண்ணில், வரிபிளப்பு ஏற்படுத்தி திருத்தி இருந்து அட்டேஸ்டேசன் வாங்காமல் இருந்தால் அந்த பதிவு நீதி மன்றம் செல்லாது என்றே தீர்ப்பளித்து இருக்கிறது.

Best regards,

Sunday, 20 September 2020

சுழன்றிடும் வெற்றி :

சுழன்றிடும் வெற்றி : 🌹

4 வயதில், உறங்கும் போது அறியாமல் உடையில் சிறுநீரை கழிக்காமல் இருந்தால், அது வெற்றி ! 

8 வயதில், தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !

12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !

18 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !

22 வயதில்,   பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால்,  அது வெற்றி !

25 வயதில், நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !

30 வயதில்,  தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !

35 வயதில்,  போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !

45 வயதில்,  இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது  வெற்றி  !

50 வயதில், தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !

55 வயதில், நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !

60 வயதில், ஓய்வு பெற வேண்டியவர் என  நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !

65 வயதில்,   நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி ! 

70 வயதில்,   மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

75 வயதில், பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி ! 

80 வயதில், மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !

85 வயதில், உறங்கும் போது அறியாமல் உடையில் சிறுநீரை கழிக்காமல் இருந்தால், அது வெற்றி ! 

இப்படி சுழன்றுகொண்டேயிருக்கும் நிலையற்ற தன்மையுடைய வெற்றியை மட்டுமே துரத்திக்கொண்டு அறியாமையில்  வாழ்தலைக்காட்டிலும்,  எல்லோருக்கும் நன்மையே நினைத்து, அனைவரும் சமமென எண்ணி,  அந்தந்த வயதில் செய்ய வேண்டிய கடமைகளை யாருக்கும் துன்பமளிக்காமல் செய்து, மகிழ்ந்து கடந்து வாழ்தலே அர்த்தம் நிறைந்த வாழ்க்கை !
பப.

Best regards,

மெல்ல மெல்ல இறக்கும் கண்கள் 🌺

மெல்ல மெல்ல இறக்கும் கண்கள் 🌺

நீங்கள் பார்வையை இழந்துகொண்டிருக்கிறீர்கள்....! 

லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த 20 மற்றும் 40 வயதுடைய இரு பெண்கள்,  கடந்த சில நாட்களாக தங்களது கண்பார்வை மங்கி வருவதாக மருத்துவரிடம் கவலையுடன் தெரிவித்தனர். 

இருவரிடமும் நீண்ட நேரம் விசாரித்தார் மருத்துவர். விசாரணையில் 20வயது இளம்பெண், தினமும் இரவில் தூங்கும் முன் படுத்தபடியே ஸ்மார்ட்போனில் தகவல்களை பார்ப்பது, நட்புகளுடன் அரட்டை என்று செலவிடுபவர் என்றும், 40வயது பெண்மணி தினம் அதிகாலையிலேயே, அதாவது சூரிய உதயத்துக்கு முன்பே விழித்து படுக்கையில் இருந்த நிலையிலேயே ஸ்மார்ட்போனில் செய்தி மற்றும் தகவல்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளவர் என்பது தெரியவந்தது. அவர்களின் பார்வை குறைபாட்டுக்கு இதுவே காரணம் என்று உறுதி செய்தனர் மருத்துவர்கள். 

லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த இந்த இரண்டு இளம்பெண்கள் மட்டுமல்ல..,  இன்று உலகம் முழுவதும் இந்தப் பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ளது. 'ஒளி மாசு'  என்ற வார்த்தை,  உலகை அச்சுறுத்தும் விஷயமாக உருவெடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் அபரித வளர்ச்சி காரணமாக, இன்று ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்கள் அரிதாகிவிட்டனர். நம் வேலை நேரத்தில் மட்டுமல்ல..., அதைத்தாண்டியும் இன்று நாம் செல்போன்களிலேயே உழன்று வருகிறோம். இரவு நேரமும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்படி தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஆதரித்து, அதற்கு நம் கண் பார்வையை தியாகம் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
"நல்ல பிரகாசமான சூரிய வெளிச்சத்தை பார்த்துக்கொண்டிருந்து விட்டு, நாம் திடீரென நம் அறைக்குள் நுழையும்போது, சில நொடிகள் கண் இருண்டுவிட்டது போன்று போல் தோன்றும். நம் விழித்திரை பளீர் வெளிச்சத்தை எந்தளவுக்கு சந்திக்கின்றதோ அதே அளவுக்கு சாதாரண நிலையில் குருட்டுத் தன்மை நீடிக்கும் என்பது அறிவியல்.  

அதேபோல் ஸ்மார்ட்போனின் பிரகாசமான ஸ்கீரீனை தொடர்ந்து பார்த்தபடி இருந்துவிட்டு, வெளியில் சாதாரண வெளிச்சத்தில் காட்சிகளை நாம் பார்க்கும்போது தெளிவாக தெரியாது, சில  வினாடிகளுக்குப் பின்னர்தான் நம் கண்கள் இயல்பான பார்வையைப் பெற்று பொருட்களை பார்க்கநேரிடும். ஆனால் இதுவே தொடர்ந்தால் ஒருகட்டத்தில் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படும்” என்கிறார் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர் ஓமர் மஹ்ரு.

அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில்,  பெற்றோரில் 27% க்கும் மேற்பட்டவர்களும், குழந்தைகளில் 50%க்கும் மேலானவர்களும் மொபைல் போனுக்கு அடிமையானவர்கள் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இன்று பல வீடுகளில், குழந்தைகளை ஒரே இடத்தில் உட்காரவைக்க கூடிய கருவியாக ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன. குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்த்து, வீட்டிலேயே ஸ்மார்ட்போன்களில் பல மணிநேரம் விளையாடுவது, ரைம்ஸ் பாடல்கள் பார்க்க வைப்பது என்ற  அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது.

இதை ஸ்மார்ட் மெத்தடாக கருதும் பெற்றோர்கள், குழந்தையின் கண்களையும் அவர்கள் உடல்நலனிலும் அக்கறைக்கொள்வதில் கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருந்தால் நலம்.
செல்போன்களை முழுமையாக பயன்படுத்தும் முதல்தலைமுறை நாம்தான் என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்வது நலம். செல்போன்களால் ஏற்படும் தீமைகள் இன்னும் முற்றாக வெளியுலகிற்கு கொண்டுவரப்படவில்லை. ஒளி மாசைத் தொடர்ந்து செல்போன் கதிர்வீச்சுகளால் ஏற்படும் பாதிப்புகளையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். இதனால் செல்போன் உபயோகத்தில் கட்டற்ற சுதந்திரத்தை கொஞ்சம் குறைத்து, கண்களை பாதுகாத்துக்கொள்வது நலம்.

கண்கெட்டபிறகு கண்மருத்துவர் நமஸ்காரம் வேண்டாம் நண்பர்களே... 

இரவினில் படுக்கையில் படுத்து உறங்குவதற்கு முன் 

உங்கள் குழந்தைகளை கொஞ்சுங்கள்.. . 

உங்கள் பெற்றவர்களின் நலன் விசாரியுங்கள்... 

உங்கள் ஆருயிர் நண்பனிடம் சந்தோஷங்களை பகிருங்கள்... 

மற்றும் மிக முக்கியமாக 
 உங்கள் அன்பு கணவனிடம்/மனைவியிடம்  மிகுந்த அன்பை பரிமாறுங்கள்...

இவ்வாறு உறங்கும் முன் செய்யும் செயலால் உடல் மட்டுமல்ல... மனமும் நன்றாக இருக்கும்... வாழ்வும் இனிமையாக அமையும்.

வாழ்க்கையின் அவசர, அத்தியாவசிய
தேவைக்கு மட்டுமே தான் செல்போன்.. 
செல்போனே வாழ்க்கை அல்ல...

இறைவனுக்கும் இறையருளுக்கும் நன்றி நன்றி 🙏🙏

இதை 👆 புரிந்துகொண்டால் ...

வெற்றி நிச்சயம்!
👏👏👏👏
🙏
✨ வாழ்க வளமுடன்.

Best regards,

Tuesday, 8 September 2020

ஓமந்தூரார் பற்றி பலருக்கு தெரிவதில்லை!

ஓமந்தூரார் பற்றி பலருக்கு தெரிவதில்லை!

 வரலாற்று முதுகலையில் முதுநிலைப்பட்டம் பெற்ற அனைவருக்குமே வியப்பு...
பலர் வரலாற்றை நாம் படிக்கின்றோம், இவர் வரலாற்றை தெரிந்து கொள்ளவில்லையே ...

 தெரிந்து கொள்ளுவோம், இனியாவது ...

   அரசியல் தலைமைக்கு அவர் ஆகாது போனது ஒரு காரணமென்றால் மீதிக் காரணம் முழுக்கவே அவராகவே இருந்தார்!

  பதவி ஏற்ற அன்றைக்கே விளம்பரப் பிரிவை அழைத்து "நானும் சம்பளம் வாங்கும் அரசு ஊழியன் ஆகி விட்டேன்! ஒரு அரசு ஊழியனுக்கு என்ன செய்வீர்களோ அதை மட்டும்தான் எனக்கு செய்ய வேண்டும்" என்று சொல்லி விட்டார்! அதனாலேயே அவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் ஒன்றோ இரண்டோதான் இருக்கிறது!
 விளம்பரப் பிரிவுக்கு அவர் சம்பந்தபட்ட படங்களை அவரிடம் காட்டி ஒப்புதல் பெற பயம்! 
  பாராட்டு விழா, சைரன் வைத்த கார், போலிஸ் அணிவகுப்பு, விளம்பரங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை!  மாலை மரியாதை, அன்பளிப்புகள், பொன்னாடைகள் எல்லாவற்றுக்கும் தடா!

  பார்வையாளர்களுடன்  போட்டோவுக்கு போஸ் தருவது கிடையாது! அவ்வளவு ஏன், தட்டச்சர் சுருக்கெழுத்தில் எழுத உதவியாளர் எழுத இருக்கும் போது மட்டுமே தேவையிருந்தால் சந்திக்க அனுமதி! தனிமையாக சந்திக்க அனுமதியில்லை!

  அவ்வளவு பெரிய மெட்ராஸ் மாகாண முதல்வருக்கு (தற்போது உள்ள ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளடக்கிய ஆனால் திருவனந்தபுரம், ஹைதராபாத் இல்லாத இடம்) ஒரே போன்! அவர் அனுமதியோடே பேச வேண்டும்!
 மாகாண முதல்வருக்கு ஒரே கார்! அதற்கான பெட்ரோல் அலவன்ஸை ஏற்க மறுத்து தன் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வைத்தார்! 
   
 கல்கி, சின்னஅண்ணாமலை உள்ளிட்ட நாற்பது பிரபலங்கள் அவரை சந்தித்து அந்த ஒரு  பாராட்டு விழாவிற்காவது ஒப்புக் கொள்ள கெஞ்சினர்!

   "அரசு வீட்டில் குடியிருந்து கொண்டு, அரசு தரும் சம்பளத்தில் ஜீவிதம் செய்யும் அரசு ஊழியன் நான்! நான் பதவி விலகும் போது வேண்டுமானால் நடத்திக் கொள்ளுங்கள்" என்று சொல்லி விட்டார்! பதவி விலகியதும் கேட்டதற்கும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை!
    இத்தனை எளிமையான மனிதர் அந்தப் பதவிக்கான மரியாதையை விட்டுக் கொடுத்தாரா? அதுதான் இல்லை!

  மாகாண முதல்வர் என்பதாலே மாகாணங்களிலேயே முதன்முறையாக விமானம் வாங்கி "ஹனுமன்" என்றப் பெயர் சூட்டி டெல்லி பறப்பார்!
  அப்பாயின்ட்மென்ட் தந்திருக்கும் நேரத்தில் பார்க்காமல் காலதாமதித்தால் எழுந்து வந்து விடுவார்!
  ஒரு முறை மவுன்ட்பேட்டன் பிரபு "பத்து நிமிட காலதாமதத்துக்கு கோபித்துக் கொள்ளலாமா?" என்றார்!
"கோபம் ஓமந்தாரார் ராமசாமிக்கு, இல்லை சென்னை மாகாண முதல்வருக்கு" என்றார்! அடுத்த முறையிலிருந்து அங்கே அவருக்கு ராஜ உபச்சாரம்!
  பதவியின் மாண்பை காப்பாற்றியதற்கு இந்த ஒரு சம்பவம் போதுமென்று நினைக்கிறேன்!
  
500 நாட்களில் அவர் பதவி காலத்தில் நிகழ்த்திய சாதனைகளில் சில!

      இனி உண்டா இத்தனை சாதனை?

1) கோபுர சின்னத்தோடான வாய்மையே வெல்லும்  இலட்ச்சினை!
2) பாரதியார் பாடல்கள் நாட்டுடமை!
3) தமிழ் கலைக்களஞ்சியம் வடிக்க ஏற்பாடு!
4) பள்ளிகளில் திருக்குறள் பாடம்!
5) எல்லா பள்ளிகளிலும் காய்கறி தோட்டம்
6) முதன்முறையாக திருச்சி மாவட்டத்தில் தமிழை ஆட்சி மொழியாக்கியது!
7) பூரண மது விலக்கு!
8) ஜமீன்தாரி முறை ஒழிப்பு சட்டம் (இந்தியாவுக்கே முன் மாதிரி! விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்)
9) மடாதிபதிகள் திருத்த சட்டம் (பதவியை விட்டுப்போக இந்த இரு சட்டங்களும் காரணமாயிற்று)
10) தேவதாசி முறை ஒழிப்பு!
11) இந்து சமய அறநிலைத்துறை சட்டம்!
12) ஹரிசன நல வாரியம்!
13) ஹரிசன ஆலயப்பிரவேசம்!
14) ஒரு லட்சம் கிணறுகள் தோண்ட மானியம்!
15) ஏரி, குளங்கள் ஆழப்படுத்தி, பயன் கொண்டு வர 1947ல்,19கோடியில் திட்டம்!
16) அரசியல் தலையீடற்ற சுதந்திர நிர்வாகம்!
17) வருவாய்துறை சீரமைப்பு!
18) நிலவரி பாக்கி வைத்துள்ள ஜமீன்தார் ஜப்தி நடவடிக்கை சட்டம்!
19) வீடூர் அனைக்கட்டு, பெரியாறு நீர் மின்திட்டம், துங்கபத்ரா திட்டம் என இன்னும் நிறைய!
20) முதன்முறையாக அரசுக்கு பொருளாதார ஆலோசகர் நியமனம்!

 சொல்லிக்கொண்டே போகலாம்! இடம்தான் போதாது!

ஐதராபாத்  நிஜாம் ஆளுமை கீழ்
ரஜாக்கர்கள் என்றால் யார்.
  
 அன்றைய ஹைதராபாத் சமஸ்தானம், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து சேரும் அளவு நிலப்பரப்பு கொண்ட நாடு!
  ஒரு கோடியே அறுபது லட்சம் மக்கள் தொகை! இதில் 86 சதவீதம் இந்துக்கள்! தனி நாணயம், தனி ராணுவம், தனி அரசாங்கம் என ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி விட்டு தன்னிச்சையாக ஆண்டார் நிஜாம் மன்னர்...

  1937 யிலேயே, உலகின் புகழ்பெற்ற 'டைம்' அட்டைப் படத்தில் உலகின் பெரிய ஐந்தாவது பணக்காரர் என்று இடம் பெற்றார்!
  86 மனைவிகள், 216 மக்கட் செல்வங்கள்! 1948ல் தோல்வியுற்று, இந்தியாவின் வற்புறுத்தலுக்கிணங்க வானொலியில் பேசிய போது "என்ன நடந்தது என்றே தெரியவில்லை, ரஜாக்கர் தலைவன் காசிம் ரஜ்வியின் கைப்பாவை ஆகிப் போனேன்!" என்று சொல்லி, இரண்டு லட்சம் அப்பாவி மக்களின் உயிர் பலியிலிருந்து தப்பித்துக் கொண்டார்!

  மத்திய அரசு அவருக்கு "ராஜ்யமுக்" என்ற விருதளித்தது!
    
 ரஜாக்கர்களும், தெலுங்கானா கம்யூனிஸ்ட்டுகளும் சென்னை மாகாணத்தின் எல்லையை தாக்கப்போவதாக 1948 ஒருநாள் இரவு பத்துமணிக்கு ஓமந்தூராருக்கு தகவல் வந்தது!

  ஓமந்தூரார் துளியும் யோசிக்கவில்லை, அடுத்த ஒரே மணி நேரத்தில் எட்டு இராணுவ விமானங்களை எல்லைப்பகுதிக்கு அனுப்பினார்!

 ஆடிப்போனார்கள் ரஜாக்கர்கள்! நிஜாம் உடனடியாக மத்திய அரசுக்கு கடும் ஆட்சேபனைகளை எழுப்பினார்!

  யாருடைய உத்தரவில் விமானங்கள் போனதென அமைச்சரவைக் கூடி கவலையோடு விவாதித்தது!

 பட்டேலுக்கு முழு உண்மை தெரியும்! நேருவுக்கும் புரிந்திருந்தது! ஆக்ரோஷமான விவாதத்தில் பட்டேல், ரஜாக்கர் சதிச் செயலை சொல்லி தாம்தான் இராணுவ விமானங்களை அனுப்பியதாக சமயோசிதமாக சொன்னார்! நேருவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை!

  கொலைகளும், கொள்ளைகளுமாக சமஸ்தானம் அதகளப்பட்டுக் கொண்டிருந்தது!

  இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியாவையும் காந்தியையும் எப்போதும் பிடிக்காத வின்ஸ்டன் சர்ச்சில், ஹைதராபாத் மக்கள் படுகொலையையும், நிஜாமின் செயல்பாடுகளையும் ஆதரித்து பேசினார்!

  வெகுண்டெழுந்த ஓமந்தூரார் அண்டை மாகாண முதல்வர் என்ற முறையில் நீண்ட கண்டனக் கடிதம் எழுதி கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டனுக்கு அனுப்பினார்!

  மவுன்ட்பேட்டன் குறிப்பிட்ட காலத்துக்கும் முன்பே ஓய்வு பெற்று, இங்கிலாந்து திரும்பினார்! முதல் இந்திய கவர்னர் ஜென்ட்ரலாக பதவியேற்ற பெருமை தமிழர் ராஜாஜிக்கு கிடைத்தது!

 ராஜாஜி பொறுப்புக்கு வந்தது ஓமந்தூராருக்கு யானை பலம் தந்தது!

  1948 பிப்ரவரியிலிருந்தே உடனடியாக ராணுவ நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஓமந்தூரார் நாள்தோறும் மத்திய அரசுக்கு அறிக்கைகள் அனுப்பி வந்தார்!

 கர்நாடக பெல்லாரி மாவட்ட ஹாஸ்பட் ரயில்வே பாலத்தை ரஜாக்கர்கள் தகர்க்கப் போகிறார்கள் என்றத் தகவல் ஓமந்தூராருக்கு கிடைக்கவே தீவிரமாக பாடுபட்டார்!

 அந்தப் பாலம் தகர்க்கப்பட்டால் சமஸ்தானம் தனித் தீவாகி விடும்!

 சென்னை அரசாங்க ரிசர்வ் படையும் மைசூர் காலாட்படையும் இரவுபகலாக ஓமந்தூரார் ஆனைக்கிணங்க காவல் காத்தது! 

இந்தியாவின் நாணயத்தை சமஸ்தானம் தடை செய்தது, தேசியக்கொடி பறக்க தடை விதிக்கப்பட்டது! 

 இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லையென்றாலும், மைசூர், பம்பாய் மாகாணங்களையும் சேர்த்துக்கொண்டு சமஸ்தானத்தின் மேல் படையெடுக்க ஓமந்தூரார் முடிவெடுத்தார்!

 அப்போதுதான் எல்லை பாதுகாப்புப் பணியிலிருந்த சென்னை அரசாங்க போலிசார், ரஜாக்கர்களிடம் இருப்பது போன்ற நவீன ஆயுதங்கள் தங்களிடம் இல்லாமல் எப்படி தாக்க முடியும் என்றார்கள்!

  நிஜாம் ஆஸ்திரேலியாவிலிருந்து நவீன ஆயுதங்களை தருவித்திருந்தார்! அதை ஓமந்தூராரும் உளவறிந்து மத்திய அரசுக்கு தகவல் சொல்லியிருந்தார்! வழக்கம் போல் மத்தியஅரசு கண்டு கொள்ளவில்லை!

 ஆயுதம் இல்லாமல் எப்படி போரிடுவது என்று யோசித்த ஓமந்தூரார் செயல்கள்தான் அவரை நிஜ ஹீரோ ஆக்குகிறது!

 தன் யோசனைக்கு மத்திய அரசு தடைதான் விதிக்கும் என்பதை அறிந்திருந்த அவர், பட்டேலிடம் கூட மூச்சு விடவில்லை!

 பெரம்பூரில் அப்போது ஒரு சாதாரண ரயில்வே தொழிற்கூடம் இருந்தது! அங்கு பணியாற்றிய நடராஜன் என்பவர் நாட்டுத் துப்பாக்கி செய்வதில் பயிற்சி பெற்றவர்!

 அவரை அழைத்தார் முதல்வர்! அவரிடம் ஆஸ்திரேலிய துப்பாக்கியை தந்தார்! ஒரே நாளில் அதன் நுட்பங்களை நடராஜன் பிரித்து மேய்ந்து கண்டு வந்தார்!

 துணிச்சலாக ஓமந்தூரார், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் ஒதுக்குகிறேன், இரவுபகலாக துப்பாக்கிகள் தயாரியுங்கள் என்று உத்தரவு போட்டார்!

 1945ல் டெக்ஸ்டூல் ஆலைக்கதிர் தொழிற்சாலை கோயம்புத்தூரில் செயல்பட ஆரம்பித்திருந்தது! அதன் உரிமையாளர் சுந்தரம் தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்! அவரிடம் பேசி, அந்த ஆலைக்கு அனுமதி தந்து இயந்திர துப்பாக்கிகள் செய்ய வைத்தார்! 

பாரதியாரின் கவிதைகளை நாட்டுடமை ஆக்கியவர் அல்லவா! தேசிய மகாகவியின் "வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்" பாடல் அவருக்கு மனப்பாடம்! அதில் வரும் "ஆயுதம் செய்யோம், கல்விச்சாலைகள் செய்வோம்" அவர் நினைவிலிருந்தாலும் சூழ்நிலை ஆயுதமும் செய்வோம் ஆக்கியது! 

 செய்தியறிந்த நேரு, உடனே ஓமந்தூராரை கூப்பிட்டார்! ஆயுதங்கள் செய்ய யார் அனுமதியளித்தது என்று ஆவேசப்பட்டார்!

  இம்முறை ஓமந்தூரார் கோபப்படவில்லை! "என் மாகாண மக்களை காப்பாற்ற வேண்டியது என் கடமை! அப்பாவிகள் உயிர்பலியை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது! இப்போது நான் உங்களிடத்தில் வந்திருப்பது ஆயுதம் தயாரிக்கும் அனுமதிக்காக அல்ல! ஆயுதம் தயாரிக்கும் நிதியுதவிக்காக! விரைந்து தந்தால் நலமாகயிருக்கும்!"

  பண்டிட்ஜிக்கு கோபம் மறைந்து போனது! ஒரு கிராமத்து வெள்ளந்தி மனிதராக ஓமந்தூராரின் யதார்த்த பேச்சைக்கேட்டு புன்னகைதான் வந்தது!
   
      அப்படி ஒன்றும் உடனடியாக ஹைதராபாத் பிரச்னையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து விடவில்லை!
     ஓமந்தூரார் வற்புறுத்தலிணங்க ராஜாக்கர்கள் படையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று நடுவண் அரசு எச்சரிக்கை தரவே 1948 ஏப்ரல் மாதத்திற்கு மேலாகியிருந்தது!
   இதற்குள் ஒரு லட்சம் அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தனர்! பல்லாயிரம் கோடி சொத்துகள் சூறையாடப்பட்டிருந்தது!
  இந்திய அரசின் எச்சரிக்கைக்குப்பிறகு இன்னும் நிலைமை மோசமானது! ஐம்பது லட்சத்திற்கும் மேலான இந்துக்கள் சமஸ்தானத்தை விட்டு வெளியேறி இருந்தனர்! 
      நிலைமை மோசமாவதைப்பார்த்த நேரு, ஹைதராபாத் மேட்டரையும், காஷ்மீர் சங்கதி போல் ஐ.நா.சபைக்கு கொண்டு போய் விடலாம் என்றார்!
   வெகுண்டெழுந்தார் பட்டேல்! நேருக்கு நேராக நேருவிடம் சண்டைக்குப் போனார்! இந்திய அரசாங்கத்தையே ஐ.நா.சபையிடம் ஒப்படைத்து விடலாமே என்றார்! கோபம் கொண்ட பிரதமர், 'நீங்கள் மதவாதி! அப்படித்தான் பேசுவீர்கள்' என்றாராம்!

   கவர்னர் ஜெனரல் ராஜாஜியும் நேருவின் யோசனைக்கு ஒப்புக் கொள்ளாததோடு, இருவரையும் சமாதானப்படுத்தினார்!
  மாதங்கள் ஓடியது! இறப்பு எண்ணிக்கை இரண்டு லட்சம் ஆனது! பாகிஸ்தானிலிருந்து விமானங்களில் ஆயுதங்கள் குவிக்கப்படுவதை ஓமந்தூரார் சொல்லிக் கொண்டேயிருந்தார்!
  சமஸ்தான நிர்வாகக் குழுவிலிருந்த ஜோஷி அதை உறுதி செய்த பிறகே நேருவுக்கு பயம் வந்து போர் தொடுக்க ஒப்புக்கொண்டார்!
  நேரு ஒப்புக்கொண்டதற்கு வேறு காரணமும் சொல்கிறார்கள்!
  காஷ்மீரைப் போலவே, கன்னியாஸ்திரிகளை சூறையாடிய சம்பவமும் ஹைதராபாத்தில் நடந்தது! அதில் 70வயது மூதாட்டியும் ஒருவர்! அந்த மூதாட்டியின் தாய்நாட்டு தூதர் நேருவுக்கு எழுதிய கடுமையான கண்டனக் கடிதமே நேருவை படையெடுப்புக்கு சம்மதிக்க வைத்ததாக சொல்கிறார்கள்!

                   போர்!

 ஓமந்தூரார், ஆயுதங்கள் தயாரித்ததை பட்டேல் மென்மையாக சொல்லி தவிர்த்தார்!

  தயாரித்திருந்த ஆயிரம் துப்பாக்கிகளை இந்திய அரசுக்கு தந்து விட்டு ஓமந்தூரார், "புற்று நோயை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து" என்று கசப்போடு சொன்னார்!

   1948 செப்டம்பர் மாதம்13ந் தேதி பம்பாய் மாகாண சோலாப்பூரிலிருந்தும், சென்னை மாகாண கர்நூலிலிருந்தும், விஜயவாடாவிலிருந்தும் இந்தியப் படைகள் சமஸ்தானத்தை தாக்கத் துவங்கின!

 இதுதான் ஏற்கெனவே ஓமந்தூரார் வகுத்துத் தந்திருந்த திட்டம்! 

  17ந் தேதியே சமஸ்தானப் படைகள் சரணடைந்து விட்டன! 32 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டாலும், 490 நிஜாம் வீரர்களும், 1373 ரஜாக்கர்களும் கொல்லப்பட்டனர்!

  ஆபரேசன் போலோ  ஐந்தே நாட்களில் சக்சஸ்! தற்காலிக கவர்னராக ஜெனரல் செளத்திரி பொறுப்பேற்றுக்கொண்டார்!

  வலிமையான பாரதம் மட்டும் உருவாகவில்லை, நிஜாமின் திரண்ட சொத்துகளும் இந்தியாவுக்கு சேர்ந்தது!

 அண்மையில் கூட லண்டன் வங்கியிலிருக்கும் நிஜாமின் 350 கோடி ரூபாய் சொத்து இந்திய அரசுக்கே சொந்தம் என இங்கிலாந்து கோர்ட்  தீர்ப்பு சொன்னது!

  டெல்லி ரிசர்வ் வங்கி காப்பகத்திலிருக்கும் நிஜாமின் நகைகள் மதிப்பு ஐம்பதாயிரம் கோடி!

 கோல்கொண்டா கோட்டை, கிருஷ்ணா கோதவரி நதிகள் என எல்லாமே இந்தியாவுக்கு சொந்தம்! 
 சொத்துக்களும் நிலங்களும் கிடக்கட்டும்! இந்திய துணைக்கண்டத்தின் ஒற்றுமையும், சமாதானமும், வளர்ச்சியும் தேசம் ஒன்றுபட்டதாலே கிடைத்தது! 

ஓமந்தூர் ராமசாமி மட்டும் இல்லையென்றால் இந்திய வரைப்படம் மாறியிருக்கும்,

  எல்லாப்புகழும் அந்த ஒற்றை நாடி மனிதரையே சேரும்! கதர் தொள தொளா ஜிப்பா, நாலு முழ வேட்டி, கதர் அங்கவஸ்திரம், இரண்டு இட்லி, கப்அளவு சாதம், கொஞ்சூண்டு துவையல், மோர் என்று வாழ்ந்த மனிதனின் புகழை என் ஆயுள் உள்ளவரை சொல்லலாம்!

  பட்டேல்தான் வெற்றிக்குப் பிறகு, ' புற்று நோயை வேரடி மண்ணோடு கிள்ளி எறிந்தவர் ஓமந்தூரார்' என்று புகழ்ந்தார்!

    தனது தேச வரலாற்றை அறியாதவனை குடிமகனாக கொண்ட நாடு தலைநிமிர்ந்து நிற்ப்பதில்லை.

அறிந்து கொள்வோம்

Best regards,

நீட் தேர்வு குறித்து... Dr. T. பெரியசாமி., M. Tech., Ph.D (IIT Madras) எழுதி இருக்கும்... விளக்கமான...தரவுகளுடன் கூடிய... தெளிவான... பதிவு.

நீட் தேர்வு குறித்து...
Dr. T. பெரியசாமி., M. Tech., Ph.D (IIT Madras)  எழுதி இருக்கும்... விளக்கமான...தரவுகளுடன் கூடிய... தெளிவான... பதிவு. 

முழுமையாக படிப்பது அவசியம்.

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியும்- உண்மை நிலை என்ன??- ஒரு அலசல்

1.தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் சுமார் 28000 கோடி. அதில் 60% க்கும் மேல் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்படுகிறது.

2. நுழைவு தேர்வு ரத்துசெய்யப்பட்ட பிறகு நீட் தேர்வு வருவதற்கு முன்னால் 2006 முதல் 2016 வரை தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு கல்லூரி மருத்துவ இடங்கள்(MBBS) -29925.

3. இந்த29925 இடங்களில் அரசுப்பள்ளிகளில்  படித்துMBBS இடங்கள் வாங்கியவர்கள் 213. சராசரியாக ஆண்டிற்கு 19 மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் இருந்து மருத்துவ படிப்பிற்கு தேர்வானார்கள். இது 0.7% சதவிகிதத்திற்கும் குறைவானதாகும்.

4. NCERT எனப்படும் 1961 ம் ஆண்டு மத்திய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு மத்திய மாநில அரசாங்கங்களுக்கு பாடத்திட்டத்தில் உதவி செய்வதற்காக மாதிரி பாடப்புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த பாடப்புத்தகத்தில் இருந்து Medical council of India (MCI) நீட் தேர்விற்க்கான syllabus ஐ வடிவமைத்துள்ளார்கள்.

5. NCERT பாடப்புத்தகங்களை CBSE அப்படியே எடுத்துக்கொண்டுள்ளார்கள். ஆந்திரா போன்ற சிலமாநிலங்கள் NCERT பாடப்புத்தகத்தை மேலும் மெருகேற்றி அவர்களின் மாநில பாடப்புத்தகங்களை வடிவமைத்தார்கள் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அதை எவ்வ்ளவு முடியுமோ அவ்வளவு குறைத்தார்கள்.

6. எனவே நீட் தேர்வு பாடத்திட்டம் NCERT படத்திட்டத்திலிருந்து MCI ஆல் எடுக்கப்பட்ட பாடத்திட்டமாகும். நீட் தேர்வு CBSE பாடத்திட்டத்தில் நடத்தப்படுவதில்லை.

7. நீட் தேர்வில் 11 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் அறிவாற்றல் திறனின் (Cognitive skills) முதல் மூன்று திறன்களை (Remembering, understanding and Application) சோதிக்கும் விதத்தில் இருக்கும்.

8. இந்த மூன்று திறன்கள் பள்ளிக்கல்வியில் வளர்ந்தால்தான் மீதமுள்ள திறன்களை (Analysis, synthesis and creativity) கல்லூரி கல்வியில் வளர்க்க முடியும் இந்த அறிவாற்றல் திறனின் மேல்திறன் (creativity) புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் திறனாகும்.

9. தமிழ்நாட்டில் Blue print எனப்படும் எந்த கேள்விக்கு எந்த பாடத்தில் எந்த பக்கத்தில் இருந்து கேள்வி கேட்க வேண்டும் என்ற தேர்வுமுறை 2017 வரை அமலில் இருந்தது. இந்த தேர்வுமுறை மாணவர்களின் அறிவாற்றலை சோதிக்காமல் மனப்பாடம் செய்யும் முறையை ஊக்குவிக்கும் விதத்தில் இருந்தது.  இது கிட்டத்தட்ட தேர்விற்கு முன்னரே Question paper ஐ out செய்வதற்கு ஒப்பானதாகும். இந்த தேர்வுமுறையில் மாணவர்கள் சில பாடங்களை படிக்காமலேயே முழுமதிப்பெண் எடுக்க முடியும். இதுகூட 12ம் வகுப்பு பாடம் மட்டும்தான்.  11ம் வகுப்பு பாடங்கள் 99% பள்ளிகளில் நடத்தப்படவே இல்லை.

10. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு தமிழ்நாட்டில்தான் ஆசிரியர்கள் பாடத்திட்டதை  குறைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள்.

11. தமிழ்நாட்டின் பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்கு பிறகு 2017 ம் ஆண்டுதான் மாற்றப்பட்டது. 2018ம் ஆண்டிலிருந்து Buleprint தேர்வுமுறை ஒழிக்கப்பட்டது. கேள்விகள் சிறிது அறிவாற்றல் திறனை சோதிக்கும் விதத்தில் கேட்கப்பட்டன. 2020ம் ஆண்டில் நம் மாணவர்களின் 12ம் வகுப்பு தேர்ச்சி 93%. ஆனால் அந்த 93% ல் 50% மாணவர்கள் வெறும் தேர்ச்சி மதிப்பெண்(pass mark) மற்றும்தான் பெற்றுள்ளார்கள்.

12. நீட் தேர்வானது 2013ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு நீதிமன்ற தடைகளை கடந்து 2016ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. 2016ம் ஆண்டு மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு 2017ம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களுக்கும் நீட் மூலமாக மட்டுமே சேர்க்கை நடத்தப்படும் என்று ஒரு ஆண்டிற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வு வருவதன்முலம் இடஒதுக்கீடோ அல்லது சொந்த மாநிலத்தில் உள்ள எந்த ஒதுக்கீடும் பாதிக்கப்படாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. மாநில அரசுகள் அவர்களின் மாநில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை வழக்கம் போல் நடத்தலாம். ஆனால் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதாவது தமிழத்தின் அரசு கல்லூரிகளில் உள்ள 85% சதவிகித இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் 69% இடஒதுக்கீட்டுடன் கொடுக்கப்பட வேண்டும் என்று முடிவாகியது. இது நீட் தேர்வு வருவதற்கு முன்னிருந்த அதே நிலையாகும்.

இப்பொழுது.. சில கேள்விகள் : 

1. தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ இடத்தில் சேர முடியாமல் போனதற்கு நீட் தேர்வு மட்டும்தான் காரணமா? 28000 கோடி பணம் வெறும் 19 மாணவர்களை மருத்துவ படிப்பில் சேருவதற்குத்தான் உபயோகிக்கப்பட்டதா??

2. திறமைவாய்ந்த ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் உள்ளபொழுது அவர்களை விட திறமை குறைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களால் result எப்படி கொடுக்க முடிந்தது? இது அரசின் தோல்வியா??? அரசு பள்ளி ஆசிரியர்களின் தோல்வியா???

3. வெறும் 19 மாணவர்கள் மட்டுமே மருத்துவப்படிப்பிற்கு சென்ற பொழுது நடைபெறாத போராட்டங்கள் நீட் தேர்வை எதிர்த்துமட்டும் நடப்பதன் காரணம் என்ன??

4. NCERT பாடத்திட்டத்தை குறைத்து.. தகுதி குறைந்த பாடத்திட்டத்தை தமிழ்நாட்டில் வைத்ததற்கு யார் பொறுப்பேற்பது???

5. 12 வருடங்களாக ஏன் பாடத்திட்டம் தமிழ்நாட்டில் மாற்றப்படவில்லை?? Blue print எனப்படும் மோசமான தேர்வுமுறை ஏன் மாற்றப்படவில்லை???

6. ஏன் அரசுப்பள்ளிகளின் தரத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறவில்லை?? 28000 கோடி மக்களின் வரிப்பணம் வீணாக்கப்பட்ட பொழுது ஏன் போராட்டங்கள் நடைபெறவில்லை??

7. 11ம் வகுப்பு பாடத்தையே கற்று தராமல் மாணவர்களால் எப்படி நீட் தேர்வு எழுத முடியும்??? 

11ம் வகுப்பு பாடங்கள் கற்றுத்தரப்படாமல் போனதற்கு  நாமும் நமது ஆசிரியர்களும் காரணமாக இருந்துகொண்டு நீட் தேர்வின் மேல் பழி போடுவது எவ்வகையில் நியாயம்??? அவ்வாறு கற்றுத்தரப்படாமல் போனதற்கு ஏன் இங்கு யாரும் போராடவில்லை?? 

இங்கு ஆசிரியர்களின் வசதிக்காக பாடத்திட்டத்தை குறைத்துவிட்டு எங்களுக்கு வேறு பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி வந்தது என்று கேள்வி எழுப்புவது எந்த வகையில் நியாயம்???

8. ஒவ்வொரு ஆண்டும் மாநில பாடத்திட்ட தேர்வு முடிவுகள் வரும்பொழுது குறைந்தது 5 மாணவர்களின் தற்கொலை செய்தியை கடக்க நேரிடுகிறது. மிகவும் வருத்தமான விஷயம். ஆனால் நாம் மாணவர்களின் குறைகளை களைந்து அவர்களுக்கு மன உறுதி கொடுக்க வேண்டுமா??? அல்லது அவர்களின் தற்கொலையை காரணம் காட்டி தேர்வை ரத்து செய்ய வேண்டுமா??

9. அனிதாவின் மரணம் என்னை மிகவும் பதித்த ஒரு விஷயம் அந்த குழந்தையின் மரணத்தை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. தெளிவு பெறுவதற்க்காக சில விஷயங்களை நாம் இதில் விவாதிக்க வேண்டியுள்ளது.

(i) அனிதா அரசுப்பள்ளியில் படிக்கவில்லை

(ii) பெரம்பலூர் மாவட்டத்தில் மேலமாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார்

(iii) தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான பள்ளிகள் போல் அங்கும் 11ம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படவில்லை

(iv) 2016ம் ஆண்டே அடுத்த வருடம் நீட் தேர்வின் மூலம்தான் சேர்க்கை நடக்கும் என்று மத்திய அரசாங்கமும் உச்ச நீதிமன்றமும் அறிவித்த நிலையில் அதை சரியாக மாணவர்களுக்கு கொண்டு செல்லாதது யார் தவறு???

(v) அனிதாவுக்கு தவறான நம்பிக்கையை கொடுத்தது யார்?? 11ம் வகுப்பில் 50% கேள்விகள் கேட்கப்படும் நிலையில் 11ம் வகுப்பு பாடத்தையே படிக்காமல் அவரால் எப்படி நீட் தேர்வில் மதிப்பெண் பெற முடியும்???

 11ம் வகுப்பு பாடத்தை அவருக்கு கற்றுத்தராமல் போனதற்கு ஆசிரியர்கள் காரணமா?? அரசாங்கம் காரணமா??

(vi) நீட் 2017 தேர்விற்கு அவர் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில் மிகத்தெளிவாக அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நீட் மூலமாகத்தான் நடக்கும் என்று குறிப்பிட்டிருந்த நிலையில் அந்த தகவலை அவருக்கு உறுதியாக தெரிவிக்காதது யார் தவறு???

(vii) அந்த விண்ணப்பத்தில் நீட் தேர்வில் இப்படித்தான் கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அதை அவருக்கு கற்றுக்கொடுக்காதது யார் தவறு?? 

நீட் தேர்வை எத்தனை முறை வேண்டுமென்றாலும் 25 வயதிற்குள் எழுதலாம் என்ற வாய்ப்பு உள்ள பொழுது அவருக்கு நம்பிக்கையை கொடுத்து மீண்டும் படிக்க வைக்காதது யார் தவறு?? 

அவரை உச்ச நீதிமன்றம் அழைத்து சென்ற செலவில் 10ல் 1 மடங்கு செலவு செய்திருந்தால் அவரை மீண்டும் படிக்க வைத்து மருத்துவராக்கி இருக்கலாமே?? அதை செய்யாதது  யார் தவறு???

(viii) இப்படி அனைத்து தரப்பிலும் தவறு உள்ள பொழுது நீட் தேர்வின் மீது மட்டும் பழிபோட்டு மாணவர்களுக்கு அந்த தேர்வின் மீது வெறுப்பு வருமாறு செய்வது எந்த வகையில் நியாயம்???

10. நீட் வந்த பிறகும் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமே சேரமுடியும் என்ற நிலை மட்டுமே உள்ளது. நான் தமிழ்நாட்டை சார்ந்தவன் என்று தமிழ்நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் சான்றிதழ் பொய்யாக வாங்கி வந்தால் ஒருவேளை அடுத்தமாநில மாணவர்கள் சேரலாம்.

11. நீயா நானா கோபிநாத் முதல் கரு பழனியப்பன் வரை அனைவரும் நீட் தேர்வு எங்கள் தமிழ்நாட்டு மாணவர்களை மருத்துவ படிப்பு படிக்க விடாமல் செய்வதற்காக கொண்டுவரப்பட்டது என்று பொய் பிரச்சாரம் செய்வது நியாமா?? 

ஏன் பொய்யான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள்?? 

இப்படி பொய்யான தகவல்களை கூறினால் மாணவர்கள் இந்த தேர்வை எழுதாமல் போனால் யாருக்கு பாதிப்பு??

12. அடுத்ததாக நீட் மூலம் சமூகநீதி மறுக்கப்பட்டதாக அனைவரும் மேடைக்கு மேடை ஏன் பொய் பேசுகிறார்கள்?? 

இங்கு சென்ற வருட (2019) தமிழ்நாட்டு MBBS மாணவர் சேர்க்கை தரவுகளை தோராயமாக கொடுத்துள்ளேன்.

a) மொத்த தமிழ்நாட்டு அரசு கல்லூரி மாநில இடங்கள் -3050

b) பொது பிரிவிற்கு (open category) ஒதுக்கப்பட்ட இடங்கள் -945

(i) பொதுப்பிரிவில் BC மாணவர்கள் எடுத்த இடங்கள்- 679

(ii) பொதுப்பிரிவில் MBC மாணவர்கள் எடுத்த இடங்கள்- 110

(iii) பொதுப்பிரிவில் SC மாணவர்கள் எடுத்த இடங்கள் -20

(iv) பொதுப்பிரிவில் FC (Forward caste) மாணவர்கள் எடுத்த இடங்கள் வெறும் 136 மட்டுமே. (இந்த 136 இடங்களில் பிராமணரை தவிர வேறு சாதிகளும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

c) பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு (Backward Caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -915
(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -1594)

d) மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு (Most Backward Caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -610
(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -720)

e) தாழ்த்தப்பட்ட பிரிவிற்கு (Scheduled caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -579
(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் தாழ்த்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -600)

f) சென்ற வருடம் தமிழ்நாட்டில் சமூக வாரியாக பெற்ற MBBS இடங்கள்
(i) FC-136
(ii) BC-1594
(iii) MBC-720
(iv) SC/ST-600

நீட் வந்ததால் எந்த சமூகம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். உண்மை இவ்வாறு இருக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறி வைத்து பொய் பிரச்சாரம் செய்து நவீன தீண்டாமை செய்வது ஏன்? (நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன். இதை இங்கு நான் கூறாவிட்டால் என் சாதி வேறாக பார்க்கப்படும் என்பதால் குறிப்பிடுகிறேன்)

13. அடுத்த விவாதம் நீட் வந்ததால் பணக்காரர்களுக்கு மட்டும் சீட் கிடைக்கிறது என்பது.  நீட் வருவதற்கு முன்னாலும் தனியார் பள்ளிகளில் படித்த பணக்கார மாணவர்கள்தான் சீட் வாங்கினர். நீட்டை ஒழிப்பதன் மூலம் அதை சரிசெய்ய முடியமா??? அதை சரிசெய்ய வேண்டுமென்றால் ஒரு சமூகத்தில் மீண்டும் மீண்டும் இடஒதுக்கீட்டின் மூலம் பலனடைந்து வரும் பணக்காரர்களை விடுத்தது பலனடையாத மக்களுக்கு இடஒதுக்கீடு சென்று சேருமாறு இடஒதுக்கீட்டு முறையை மாற்றவேண்டுமா??? அல்லது நீட் தேர்வை ஒழிக்க வேண்டுமா???

14. அடுத்ததாக நாங்கள் ஏற்கனவே முன்னேறிவிட்டோம். எங்கள் GER Ratio 49% உள்ளது. உத்திரபிரதேசத்தில் 20% தான் உள்ளது. எனவே எங்களுக்கெல்லாம் நீட் போன்ற தேர்வுகள் தேவையில்லை என்கிறார்கள் சிலர். அனைவரையும் படிக்காமலே pass செய்தால் ஒரு பத்திரிக்கை வெளியிட்ட பொய் செய்தியை போல் GER Ratio வில் நாம் அமெரிக்காவை கூட மீறலாம். ஆனால் பலன் என்ன??? மேலும் ஒரு தகவல் தமிழ்நாட்டில் 49% GER Ratio உடன் உயர் கல்வி படிக்கும் மக்கள் 3.5 கோடி (total population-7cr) என்றால் உத்திரபிரதேசத்தில் 20% GER ratio உடன் உயர் கல்வி படிக்கும் மக்களின் எண்ணிக்கை 4.6 கோடி (total population-23cr). நம்மை விட அதிகம் மக்கள் எண்ணிக்கையில் உயர்கல்வி படிக்கிறார்கள். அவர்களும் நம்முடன் போட்டிக்கு வருவார்கள். எனவே யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம்.

15. GER Ratio பெருமை பேசுவதை விடுத்தது ஏன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 93% மாணவர்களில் 50% மாணவர்கள் ஏன் Just pass செய்தார்கள் என்று ஆராய்வது பயனளிக்குமா??? அல்லது நாங்கள் 93% pass என்று பெருமை பேசுவது பயனளிக்குமா??? 

இதுவரையில் நம் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் என்ன குறை என்று யாராவது விவாதித்திருக்கிறோமா??? அதை மேம்படுத்தவேண்டும் என்று போராடியிருக்கிறோமா??? 

முதலில் நம் கல்வித்தரத்தை உயர்த்துவோம். நம் மாணவர்களுக்கு அபரிதமான ஆற்றல் உள்ளது. அவர்களுக்கு முறையான கல்வி கொடுத்தால் அவர்கள் நீட் என்ன எந்த தேர்வையும் ஊதி தள்ளிவிடுவார்கள்.

16. நீட் தேர்வு வருவதற்கு முன்னால் தமிழ்நாடு மருத்துவ கல்லூரிகளில் 50% முதலாண்டு MBBS மாணவர்கள் Human Physiology, Anatomy and Biochemistry என்ற மூன்று பாடங்களில் ஏன் தேர்ச்சி பெறவில்லை?? நீட் தேர்வு மூலம் சென்ற மாணவர்கள் 2017ம் ஆண்டிலிருந்து எப்படி 80% க்கும் மேல் அந்த மூன்று படங்களில் தேர்ச்சி பெறுகிறார்கள்???

17. நம் கல்விமுறை மனப்பாடம் செய்யும் கல்விமுறை என்று பட்டவர்த்தனமாக தெரியும் பொழுது அதைவைத்து மருத்துவ மாணவர்களை தேர்தெடுப்பது சரியா??? 

உண்மையான கல்வியாளர்களை வைத்து ஒரு சிறந்த கல்விமுறையை கொண்டுவரவேண்டியது ஒரு அறிவார்ந்த சமூகத்தின் கடமை அல்லவா?? 

நீட் தேர்வுமுறை சரியில்லை என்றால் அதில் உள்ள குறைகளை மத்திய அரசிடம் கூறி அதை மாற்றுவதும் நம் கடமை அல்லவா?? 

கல்வியின்  தரம் சம்பந்தமாக இதுவரையில் எந்த தமிழ்நாட்டு அரசியல்வாதியோ அல்லது போராளிகளோ போராட்டம் நடத்தியுள்ளார்களா??? அல்லது அதை பற்றியாவது பேசியுள்ளார்களா?? தயவுசெய்து யோசியுங்கள்!

18. நம் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு என்ன பிரச்சனை என்று ஒரு சிறிய ஆராய்ச்சி நடத்தி அதை சரிசெய்யும்  முறைகளை என் மாணவர்களிடம் செயல்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறேன். அதுபோல் நீட் போன்ற திறனறி தேர்வுகள் ஒரு சிறந்த மருத்துவரை உருவாக்குவதில் எப்படி பங்காற்றுகின்றன என்று சில Case study களையும் மருத்துவ படிப்பு படிக்கும் என் மாணவர்கள் மூலம் செய்துள்ளேன். இந்த பதிவு மிக நீளமாக இருப்பதால் அந்த தகவல்களை வேறொரு பதிவில் பகிர்கிறேன். இந்த பதிவில் உள்ள அனைத்து விசயங்களும் என் அனுபவத்தில் கிடைத்த தகவல்கள் மற்றும் மனதில் இருந்த கேள்விகள். நான் கொடுத்த எண்களில் மிக சிறிய தவறுகள் இருக்கலாம். 

இந்த பதிவு உங்களுக்கு நியாயமாக தெரிந்தால் மக்களின் தயவுசெய்து பகிருங்கள்.
Dr. T. பெரியசாமி., M. Tech., Ph. D(IIT Madras)

Best regards,