Tuesday, 29 September 2020

பத்திரம் பிழைத்திருத்தல் பற்றிய தகவல்

பத்திரம் பிழைத்திருத்தல் பற்றிய தகவல்..! 📋





கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பிழைத்திருத்தல் பத்திரத்தின் 20 தகவல்கள்:

1. பத்திரத்தில் ஏற்படும் எழுத்து மற்றும் வார்த்தை பிழைகள் சரிசெய்யவே பிழைத்திருத்தல் பத்திரம். அதனைச் சரிப்படுத்தும் ஆவணம் (அல்லது) சீர் செய் ஆவணம் ( RECTIFICATION DEED) என்பர்.

2. கிரயம், செடில்மெண்ட், பாகப்பிரிவினை, உயில் சாசனம், பவர் பத்திரம் அடைமானம், விடுதலை, அக்ரிமெண்ட் போன்ற அனைத்து ஆவணங்களையும் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.

3. சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம், உரிமை மாறக்கூடிய பிழைத்திருத்தல் பத்திரம் என இரண்டு வகைப் பிழைத்திருத்தல் இருக்கிறது.

4. திசைகள், ஊர்ப் பெயர், தன்னுடைய பெயர் என யாருக்கும் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல் தனக்கு மட்டுமே பிரச்சனையாகவே உள்ள பிழைகள் சாதாரணப் பிழைகள்.

5. பட்டாவையும், பத்திரத்தையும் காணும்போது. பட்டாவில் உள்ள பெயரும், பத்திரத்தில் உள்ள பெயரும் நேராக இல்லையென்றால் சொத்தை வாங்கப் பலர் தயங்குவர். அதனால் இந்தச் சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் போடப்படுகிறது.

6. செக்குப் பந்தியில் இன்னார் வீட்டுக்கு வடக்கே என எழுதுவதை இன்னார் வீட்டுக்கு கிழக்கே என எழுதுவது. பட்டா எண்ணைப் பத்திரத்தில் தவறாகக் குறிப்பிடுவது, சர்வே எண்ணை தவறாகக் குறிப்பிடுவது, முன்புள்ள பத்திரங்களில் எண்களைத் தற்போது எழுதும்போதும் தவறாக எழுதுவது, இன்சியல், தந்தை பெயர் தவறாக எழுதிவிடுவது. கதவு எண்கள், ஊர்ப் பெயர், தன் பெயர் ஆகியவற்றைத் தவறாக எழுதுவது.

7.கிரயப் பத்திரத்தில் வரைபடம் மேப் விடுபட்டுவிடுவது , மின் இணைப்பு எண் மாற்றி எழுதிவிட்டால், தெருப்பெயர் மாறி விட்டு இருந்தால் திசைகள், எல்லைகள் தவறுதல்கள் எல்லாம், சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் மூலம் திருத்தி விடலாம்.

8. சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரத்திற்கு முத்திரைத்தாள் கட்டணம் ரூ. 1௦௦/- மொத்த செலவும், 5௦௦க்குள் முடியும்.

9. உரிமை மாற்றம் பிழைத்திருத்தலில் 2ஏக்கர் 1 சென்ட் என்பதை 1 ஏக்கர் 2 சென்ட் என்று எழுதி விடுவது ஆனால் 2 ஏக்கர் 1 சென்ட்டுக்கு பணம் கொடுத்து இருப்பார்கள், ஆனால் இந்தப் பிழையால் பட்டா மாறுவது தடையாகி விடும். இதனைத் திருத்துவதற்கு உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட வேண்டும்.

10. மேற்படி பிழைத்திருத்தல் பத்திரம் எழுதும் போது சரியான அளவினை குறிப்பிட்டு அதற்கு உண்டான அன்றைய சந்தை வால்யூவை வைத்து அதற்குண்டான கட்டணம் செலுத்தினால்தான் இந்த உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட முடியும்.

11. குறைவான சதுரஅடி நிலத்தை அதிக சதுரஅடியாக எழுதினால் அதனை தற்பொழுது திருத்தம் செய்யும்போது ஏற்கனவே சார்பதிவகத்தில் கட்டிய முத்திரைத்தாளின் தொகையை திரும்பிப் பெற்று கொள்ள முடியாது.

12. சொத்து விற்ற நபர் பிழைத்திருத்தல் போட வேண்டிய சமயத்தில் உயிருடன் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளை வைத்துப் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.

13. விற்ற நபருக்கு, வாரிசுகள் இல்லை என்றால் இரண்டாம் வாரிசுகள், மூன்றாம் வாரிசுகள் மூலம், பிழைத்திருத்தல் போடலாம். அதற்கும் வழி இல்லை என்றால் நீதிமன்றம் தான் நாட வேண்டும்.

14. சொத்தை விற்ற நபர் உயிருடன் இருக்கிறார், பிழைத்திருத்தல் போட வர மறுக்கிறார் என்றாலும், நீதிமன்றம் நாடி அதனைத் தீர்க்க வேண்டும்.

15. சர்வே எண், விஸ்தீரணம் , நீள அகல அளவுகள், என அனைத்துமே பிழையாக இருந்தால் , பிழை திருத்தம் பத்திரத்திற்குப் பதிலாக புதிய கிரய பத்திரம் போட வேண்டி இருக்கும்.

16. சில ஆவணங்களில் ஏற்படும் சிறு சிறு தவறுகளை உதாரணமாக சர்வே எண், மனை எண், இனிசியல் தவறுகளை பத்திரபதிவு செய்துவிட்ட பிறகு கண்டுப் பிடித்தால் அதனை அமிலம் வைத்தோ ஒயிட்னர் போட்டோ நீங்ளே திருத்தி விடுவது முற்றிலும் தவறு.

17. மனை எண் 10 யை மனை எண் 11 என்று தவறாக டைப் ஆகி இருந்தால், தாங்கள் பத்திர பதிவுக்கு பிறகு பத்திரத்தில் 10 என்று பேனாவில் போட்டாலும் பதிவு அலுவலக பராமரிப்பு ஆவணங்களில்11 என்றே இருக்கும்

18. இது போன்ற திருத்தம் சட்ட விரோத திருத்தமே இதனால் எந்தவித உரிமை மாற்றமும் வாரது. எவே நிச்சயம் பிழை திருத்தல் பத்திரம் போட வேண்டும்.

19. ஆவணங்களில் எழுதப்பட்ட ஷரத்துக்களில் சில வார்த்தைகள் அடிக்கப்பட்டு மாற்றப்பட்டு இருப்பின் அடித்தல் திருத்தல் வரி பிளவுக்கு நேராகவோ , குறுக்காகவோ இரண்டு நபர்களும் சான்று கையொப்பம் இட வேண்டும்.

20. சொத்து விபரம், சர்வே எண்ணில், வரிபிளப்பு ஏற்படுத்தி திருத்தி இருந்து அட்டேஸ்டேசன் வாங்காமல் இருந்தால் அந்த பதிவு நீதி மன்றம் செல்லாது என்றே தீர்ப்பளித்து இருக்கிறது.

Best regards,