நீட் தேர்வு குறித்து...
Dr. T. பெரியசாமி., M. Tech., Ph.D (IIT Madras) எழுதி இருக்கும்... விளக்கமான...தரவுகளுடன் கூடிய... தெளிவான... பதிவு.
முழுமையாக படிப்பது அவசியம்.
நீட் தேர்வும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியும்- உண்மை நிலை என்ன??- ஒரு அலசல்
1.தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் சுமார் 28000 கோடி. அதில் 60% க்கும் மேல் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்படுகிறது.
2. நுழைவு தேர்வு ரத்துசெய்யப்பட்ட பிறகு நீட் தேர்வு வருவதற்கு முன்னால் 2006 முதல் 2016 வரை தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு கல்லூரி மருத்துவ இடங்கள்(MBBS) -29925.
3. இந்த29925 இடங்களில் அரசுப்பள்ளிகளில் படித்துMBBS இடங்கள் வாங்கியவர்கள் 213. சராசரியாக ஆண்டிற்கு 19 மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் இருந்து மருத்துவ படிப்பிற்கு தேர்வானார்கள். இது 0.7% சதவிகிதத்திற்கும் குறைவானதாகும்.
4. NCERT எனப்படும் 1961 ம் ஆண்டு மத்திய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு மத்திய மாநில அரசாங்கங்களுக்கு பாடத்திட்டத்தில் உதவி செய்வதற்காக மாதிரி பாடப்புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த பாடப்புத்தகத்தில் இருந்து Medical council of India (MCI) நீட் தேர்விற்க்கான syllabus ஐ வடிவமைத்துள்ளார்கள்.
5. NCERT பாடப்புத்தகங்களை CBSE அப்படியே எடுத்துக்கொண்டுள்ளார்கள். ஆந்திரா போன்ற சிலமாநிலங்கள் NCERT பாடப்புத்தகத்தை மேலும் மெருகேற்றி அவர்களின் மாநில பாடப்புத்தகங்களை வடிவமைத்தார்கள் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அதை எவ்வ்ளவு முடியுமோ அவ்வளவு குறைத்தார்கள்.
6. எனவே நீட் தேர்வு பாடத்திட்டம் NCERT படத்திட்டத்திலிருந்து MCI ஆல் எடுக்கப்பட்ட பாடத்திட்டமாகும். நீட் தேர்வு CBSE பாடத்திட்டத்தில் நடத்தப்படுவதில்லை.
7. நீட் தேர்வில் 11 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் அறிவாற்றல் திறனின் (Cognitive skills) முதல் மூன்று திறன்களை (Remembering, understanding and Application) சோதிக்கும் விதத்தில் இருக்கும்.
8. இந்த மூன்று திறன்கள் பள்ளிக்கல்வியில் வளர்ந்தால்தான் மீதமுள்ள திறன்களை (Analysis, synthesis and creativity) கல்லூரி கல்வியில் வளர்க்க முடியும் இந்த அறிவாற்றல் திறனின் மேல்திறன் (creativity) புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் திறனாகும்.
9. தமிழ்நாட்டில் Blue print எனப்படும் எந்த கேள்விக்கு எந்த பாடத்தில் எந்த பக்கத்தில் இருந்து கேள்வி கேட்க வேண்டும் என்ற தேர்வுமுறை 2017 வரை அமலில் இருந்தது. இந்த தேர்வுமுறை மாணவர்களின் அறிவாற்றலை சோதிக்காமல் மனப்பாடம் செய்யும் முறையை ஊக்குவிக்கும் விதத்தில் இருந்தது. இது கிட்டத்தட்ட தேர்விற்கு முன்னரே Question paper ஐ out செய்வதற்கு ஒப்பானதாகும். இந்த தேர்வுமுறையில் மாணவர்கள் சில பாடங்களை படிக்காமலேயே முழுமதிப்பெண் எடுக்க முடியும். இதுகூட 12ம் வகுப்பு பாடம் மட்டும்தான். 11ம் வகுப்பு பாடங்கள் 99% பள்ளிகளில் நடத்தப்படவே இல்லை.
10. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு தமிழ்நாட்டில்தான் ஆசிரியர்கள் பாடத்திட்டதை குறைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள்.
11. தமிழ்நாட்டின் பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்கு பிறகு 2017 ம் ஆண்டுதான் மாற்றப்பட்டது. 2018ம் ஆண்டிலிருந்து Buleprint தேர்வுமுறை ஒழிக்கப்பட்டது. கேள்விகள் சிறிது அறிவாற்றல் திறனை சோதிக்கும் விதத்தில் கேட்கப்பட்டன. 2020ம் ஆண்டில் நம் மாணவர்களின் 12ம் வகுப்பு தேர்ச்சி 93%. ஆனால் அந்த 93% ல் 50% மாணவர்கள் வெறும் தேர்ச்சி மதிப்பெண்(pass mark) மற்றும்தான் பெற்றுள்ளார்கள்.
12. நீட் தேர்வானது 2013ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு நீதிமன்ற தடைகளை கடந்து 2016ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. 2016ம் ஆண்டு மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு 2017ம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களுக்கும் நீட் மூலமாக மட்டுமே சேர்க்கை நடத்தப்படும் என்று ஒரு ஆண்டிற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வு வருவதன்முலம் இடஒதுக்கீடோ அல்லது சொந்த மாநிலத்தில் உள்ள எந்த ஒதுக்கீடும் பாதிக்கப்படாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. மாநில அரசுகள் அவர்களின் மாநில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை வழக்கம் போல் நடத்தலாம். ஆனால் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதாவது தமிழத்தின் அரசு கல்லூரிகளில் உள்ள 85% சதவிகித இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் 69% இடஒதுக்கீட்டுடன் கொடுக்கப்பட வேண்டும் என்று முடிவாகியது. இது நீட் தேர்வு வருவதற்கு முன்னிருந்த அதே நிலையாகும்.
இப்பொழுது.. சில கேள்விகள் :
1. தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ இடத்தில் சேர முடியாமல் போனதற்கு நீட் தேர்வு மட்டும்தான் காரணமா? 28000 கோடி பணம் வெறும் 19 மாணவர்களை மருத்துவ படிப்பில் சேருவதற்குத்தான் உபயோகிக்கப்பட்டதா??
2. திறமைவாய்ந்த ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் உள்ளபொழுது அவர்களை விட திறமை குறைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களால் result எப்படி கொடுக்க முடிந்தது? இது அரசின் தோல்வியா??? அரசு பள்ளி ஆசிரியர்களின் தோல்வியா???
3. வெறும் 19 மாணவர்கள் மட்டுமே மருத்துவப்படிப்பிற்கு சென்ற பொழுது நடைபெறாத போராட்டங்கள் நீட் தேர்வை எதிர்த்துமட்டும் நடப்பதன் காரணம் என்ன??
4. NCERT பாடத்திட்டத்தை குறைத்து.. தகுதி குறைந்த பாடத்திட்டத்தை தமிழ்நாட்டில் வைத்ததற்கு யார் பொறுப்பேற்பது???
5. 12 வருடங்களாக ஏன் பாடத்திட்டம் தமிழ்நாட்டில் மாற்றப்படவில்லை?? Blue print எனப்படும் மோசமான தேர்வுமுறை ஏன் மாற்றப்படவில்லை???
6. ஏன் அரசுப்பள்ளிகளின் தரத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறவில்லை?? 28000 கோடி மக்களின் வரிப்பணம் வீணாக்கப்பட்ட பொழுது ஏன் போராட்டங்கள் நடைபெறவில்லை??
7. 11ம் வகுப்பு பாடத்தையே கற்று தராமல் மாணவர்களால் எப்படி நீட் தேர்வு எழுத முடியும்???
11ம் வகுப்பு பாடங்கள் கற்றுத்தரப்படாமல் போனதற்கு நாமும் நமது ஆசிரியர்களும் காரணமாக இருந்துகொண்டு நீட் தேர்வின் மேல் பழி போடுவது எவ்வகையில் நியாயம்??? அவ்வாறு கற்றுத்தரப்படாமல் போனதற்கு ஏன் இங்கு யாரும் போராடவில்லை??
இங்கு ஆசிரியர்களின் வசதிக்காக பாடத்திட்டத்தை குறைத்துவிட்டு எங்களுக்கு வேறு பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி வந்தது என்று கேள்வி எழுப்புவது எந்த வகையில் நியாயம்???
8. ஒவ்வொரு ஆண்டும் மாநில பாடத்திட்ட தேர்வு முடிவுகள் வரும்பொழுது குறைந்தது 5 மாணவர்களின் தற்கொலை செய்தியை கடக்க நேரிடுகிறது. மிகவும் வருத்தமான விஷயம். ஆனால் நாம் மாணவர்களின் குறைகளை களைந்து அவர்களுக்கு மன உறுதி கொடுக்க வேண்டுமா??? அல்லது அவர்களின் தற்கொலையை காரணம் காட்டி தேர்வை ரத்து செய்ய வேண்டுமா??
9. அனிதாவின் மரணம் என்னை மிகவும் பதித்த ஒரு விஷயம் அந்த குழந்தையின் மரணத்தை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. தெளிவு பெறுவதற்க்காக சில விஷயங்களை நாம் இதில் விவாதிக்க வேண்டியுள்ளது.
(i) அனிதா அரசுப்பள்ளியில் படிக்கவில்லை
(ii) பெரம்பலூர் மாவட்டத்தில் மேலமாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார்
(iii) தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான பள்ளிகள் போல் அங்கும் 11ம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படவில்லை
(iv) 2016ம் ஆண்டே அடுத்த வருடம் நீட் தேர்வின் மூலம்தான் சேர்க்கை நடக்கும் என்று மத்திய அரசாங்கமும் உச்ச நீதிமன்றமும் அறிவித்த நிலையில் அதை சரியாக மாணவர்களுக்கு கொண்டு செல்லாதது யார் தவறு???
(v) அனிதாவுக்கு தவறான நம்பிக்கையை கொடுத்தது யார்?? 11ம் வகுப்பில் 50% கேள்விகள் கேட்கப்படும் நிலையில் 11ம் வகுப்பு பாடத்தையே படிக்காமல் அவரால் எப்படி நீட் தேர்வில் மதிப்பெண் பெற முடியும்???
11ம் வகுப்பு பாடத்தை அவருக்கு கற்றுத்தராமல் போனதற்கு ஆசிரியர்கள் காரணமா?? அரசாங்கம் காரணமா??
(vi) நீட் 2017 தேர்விற்கு அவர் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில் மிகத்தெளிவாக அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நீட் மூலமாகத்தான் நடக்கும் என்று குறிப்பிட்டிருந்த நிலையில் அந்த தகவலை அவருக்கு உறுதியாக தெரிவிக்காதது யார் தவறு???
(vii) அந்த விண்ணப்பத்தில் நீட் தேர்வில் இப்படித்தான் கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அதை அவருக்கு கற்றுக்கொடுக்காதது யார் தவறு??
நீட் தேர்வை எத்தனை முறை வேண்டுமென்றாலும் 25 வயதிற்குள் எழுதலாம் என்ற வாய்ப்பு உள்ள பொழுது அவருக்கு நம்பிக்கையை கொடுத்து மீண்டும் படிக்க வைக்காதது யார் தவறு??
அவரை உச்ச நீதிமன்றம் அழைத்து சென்ற செலவில் 10ல் 1 மடங்கு செலவு செய்திருந்தால் அவரை மீண்டும் படிக்க வைத்து மருத்துவராக்கி இருக்கலாமே?? அதை செய்யாதது யார் தவறு???
(viii) இப்படி அனைத்து தரப்பிலும் தவறு உள்ள பொழுது நீட் தேர்வின் மீது மட்டும் பழிபோட்டு மாணவர்களுக்கு அந்த தேர்வின் மீது வெறுப்பு வருமாறு செய்வது எந்த வகையில் நியாயம்???
10. நீட் வந்த பிறகும் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமே சேரமுடியும் என்ற நிலை மட்டுமே உள்ளது. நான் தமிழ்நாட்டை சார்ந்தவன் என்று தமிழ்நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் சான்றிதழ் பொய்யாக வாங்கி வந்தால் ஒருவேளை அடுத்தமாநில மாணவர்கள் சேரலாம்.
11. நீயா நானா கோபிநாத் முதல் கரு பழனியப்பன் வரை அனைவரும் நீட் தேர்வு எங்கள் தமிழ்நாட்டு மாணவர்களை மருத்துவ படிப்பு படிக்க விடாமல் செய்வதற்காக கொண்டுவரப்பட்டது என்று பொய் பிரச்சாரம் செய்வது நியாமா??
ஏன் பொய்யான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள்??
இப்படி பொய்யான தகவல்களை கூறினால் மாணவர்கள் இந்த தேர்வை எழுதாமல் போனால் யாருக்கு பாதிப்பு??
12. அடுத்ததாக நீட் மூலம் சமூகநீதி மறுக்கப்பட்டதாக அனைவரும் மேடைக்கு மேடை ஏன் பொய் பேசுகிறார்கள்??
இங்கு சென்ற வருட (2019) தமிழ்நாட்டு MBBS மாணவர் சேர்க்கை தரவுகளை தோராயமாக கொடுத்துள்ளேன்.
a) மொத்த தமிழ்நாட்டு அரசு கல்லூரி மாநில இடங்கள் -3050
b) பொது பிரிவிற்கு (open category) ஒதுக்கப்பட்ட இடங்கள் -945
(i) பொதுப்பிரிவில் BC மாணவர்கள் எடுத்த இடங்கள்- 679
(ii) பொதுப்பிரிவில் MBC மாணவர்கள் எடுத்த இடங்கள்- 110
(iii) பொதுப்பிரிவில் SC மாணவர்கள் எடுத்த இடங்கள் -20
(iv) பொதுப்பிரிவில் FC (Forward caste) மாணவர்கள் எடுத்த இடங்கள் வெறும் 136 மட்டுமே. (இந்த 136 இடங்களில் பிராமணரை தவிர வேறு சாதிகளும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.)
c) பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு (Backward Caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -915
(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -1594)
d) மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு (Most Backward Caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -610
(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -720)
e) தாழ்த்தப்பட்ட பிரிவிற்கு (Scheduled caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -579
(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் தாழ்த்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -600)
f) சென்ற வருடம் தமிழ்நாட்டில் சமூக வாரியாக பெற்ற MBBS இடங்கள்
(i) FC-136
(ii) BC-1594
(iii) MBC-720
(iv) SC/ST-600
நீட் வந்ததால் எந்த சமூகம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். உண்மை இவ்வாறு இருக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறி வைத்து பொய் பிரச்சாரம் செய்து நவீன தீண்டாமை செய்வது ஏன்? (நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன். இதை இங்கு நான் கூறாவிட்டால் என் சாதி வேறாக பார்க்கப்படும் என்பதால் குறிப்பிடுகிறேன்)
13. அடுத்த விவாதம் நீட் வந்ததால் பணக்காரர்களுக்கு மட்டும் சீட் கிடைக்கிறது என்பது. நீட் வருவதற்கு முன்னாலும் தனியார் பள்ளிகளில் படித்த பணக்கார மாணவர்கள்தான் சீட் வாங்கினர். நீட்டை ஒழிப்பதன் மூலம் அதை சரிசெய்ய முடியமா??? அதை சரிசெய்ய வேண்டுமென்றால் ஒரு சமூகத்தில் மீண்டும் மீண்டும் இடஒதுக்கீட்டின் மூலம் பலனடைந்து வரும் பணக்காரர்களை விடுத்தது பலனடையாத மக்களுக்கு இடஒதுக்கீடு சென்று சேருமாறு இடஒதுக்கீட்டு முறையை மாற்றவேண்டுமா??? அல்லது நீட் தேர்வை ஒழிக்க வேண்டுமா???
14. அடுத்ததாக நாங்கள் ஏற்கனவே முன்னேறிவிட்டோம். எங்கள் GER Ratio 49% உள்ளது. உத்திரபிரதேசத்தில் 20% தான் உள்ளது. எனவே எங்களுக்கெல்லாம் நீட் போன்ற தேர்வுகள் தேவையில்லை என்கிறார்கள் சிலர். அனைவரையும் படிக்காமலே pass செய்தால் ஒரு பத்திரிக்கை வெளியிட்ட பொய் செய்தியை போல் GER Ratio வில் நாம் அமெரிக்காவை கூட மீறலாம். ஆனால் பலன் என்ன??? மேலும் ஒரு தகவல் தமிழ்நாட்டில் 49% GER Ratio உடன் உயர் கல்வி படிக்கும் மக்கள் 3.5 கோடி (total population-7cr) என்றால் உத்திரபிரதேசத்தில் 20% GER ratio உடன் உயர் கல்வி படிக்கும் மக்களின் எண்ணிக்கை 4.6 கோடி (total population-23cr). நம்மை விட அதிகம் மக்கள் எண்ணிக்கையில் உயர்கல்வி படிக்கிறார்கள். அவர்களும் நம்முடன் போட்டிக்கு வருவார்கள். எனவே யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம்.
15. GER Ratio பெருமை பேசுவதை விடுத்தது ஏன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 93% மாணவர்களில் 50% மாணவர்கள் ஏன் Just pass செய்தார்கள் என்று ஆராய்வது பயனளிக்குமா??? அல்லது நாங்கள் 93% pass என்று பெருமை பேசுவது பயனளிக்குமா???
இதுவரையில் நம் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் என்ன குறை என்று யாராவது விவாதித்திருக்கிறோமா??? அதை மேம்படுத்தவேண்டும் என்று போராடியிருக்கிறோமா???
முதலில் நம் கல்வித்தரத்தை உயர்த்துவோம். நம் மாணவர்களுக்கு அபரிதமான ஆற்றல் உள்ளது. அவர்களுக்கு முறையான கல்வி கொடுத்தால் அவர்கள் நீட் என்ன எந்த தேர்வையும் ஊதி தள்ளிவிடுவார்கள்.
16. நீட் தேர்வு வருவதற்கு முன்னால் தமிழ்நாடு மருத்துவ கல்லூரிகளில் 50% முதலாண்டு MBBS மாணவர்கள் Human Physiology, Anatomy and Biochemistry என்ற மூன்று பாடங்களில் ஏன் தேர்ச்சி பெறவில்லை?? நீட் தேர்வு மூலம் சென்ற மாணவர்கள் 2017ம் ஆண்டிலிருந்து எப்படி 80% க்கும் மேல் அந்த மூன்று படங்களில் தேர்ச்சி பெறுகிறார்கள்???
17. நம் கல்விமுறை மனப்பாடம் செய்யும் கல்விமுறை என்று பட்டவர்த்தனமாக தெரியும் பொழுது அதைவைத்து மருத்துவ மாணவர்களை தேர்தெடுப்பது சரியா???
உண்மையான கல்வியாளர்களை வைத்து ஒரு சிறந்த கல்விமுறையை கொண்டுவரவேண்டியது ஒரு அறிவார்ந்த சமூகத்தின் கடமை அல்லவா??
நீட் தேர்வுமுறை சரியில்லை என்றால் அதில் உள்ள குறைகளை மத்திய அரசிடம் கூறி அதை மாற்றுவதும் நம் கடமை அல்லவா??
கல்வியின் தரம் சம்பந்தமாக இதுவரையில் எந்த தமிழ்நாட்டு அரசியல்வாதியோ அல்லது போராளிகளோ போராட்டம் நடத்தியுள்ளார்களா??? அல்லது அதை பற்றியாவது பேசியுள்ளார்களா?? தயவுசெய்து யோசியுங்கள்!
18. நம் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு என்ன பிரச்சனை என்று ஒரு சிறிய ஆராய்ச்சி நடத்தி அதை சரிசெய்யும் முறைகளை என் மாணவர்களிடம் செயல்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறேன். அதுபோல் நீட் போன்ற திறனறி தேர்வுகள் ஒரு சிறந்த மருத்துவரை உருவாக்குவதில் எப்படி பங்காற்றுகின்றன என்று சில Case study களையும் மருத்துவ படிப்பு படிக்கும் என் மாணவர்கள் மூலம் செய்துள்ளேன். இந்த பதிவு மிக நீளமாக இருப்பதால் அந்த தகவல்களை வேறொரு பதிவில் பகிர்கிறேன். இந்த பதிவில் உள்ள அனைத்து விசயங்களும் என் அனுபவத்தில் கிடைத்த தகவல்கள் மற்றும் மனதில் இருந்த கேள்விகள். நான் கொடுத்த எண்களில் மிக சிறிய தவறுகள் இருக்கலாம்.
இந்த பதிவு உங்களுக்கு நியாயமாக தெரிந்தால் மக்களின் தயவுசெய்து பகிருங்கள்.
Dr. T. பெரியசாமி., M. Tech., Ph. D(IIT Madras)