Saturday, 10 October 2020

உணவை தான் உண்டேன் எப்படி. மலம் ஆனது?

உணவை தான் உண்டேன்
எப்படி. மலம் ஆனது?
உயிரோடுதானே இருந்தேன்
எப்படி மாண்டு போனேன்?
மலம்தான் உணவாக இருந்ததா?
மரணம்தான் வாழ்வாய் இருந்ததா?

இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா?
இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை கண்கள் வட்டமிட்டது?
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா?

இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே என்று மனைவியும் சுற்றமும் பேசியது. எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன் !

நான் விரும்பியவை எல்லாம் என்னைவெறுத்துகொண்டிருந்தது.
இளமையாய் இருக்கும்போதே முதுமையை பழகி இருக்கவேண்டும். அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன். அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனைப்போல் பதுக்கி இருக்கமாட்டேன்.

காலம் கடந்த ஞானம். பாயும் நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள். இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்?
பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்? சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது?

கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும், காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும் , பிணமானபின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள் !
பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசிசென்ற பிறகு , மண் என்னைப்பார்த்து ,
" மகனே ! நானிருக்கிறேன் .என் மடியில் வந்து உறங்கு" என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது.

அருந்தின மலமாம்
பொருந்தின அழுக்காம் வெறுப்பன உவப்பாம்
உவப்பன வெறுப்பாம்
உலக பொய் வாழ்வை
உடம்பை ஓம்பற்க
நினைமின் மனனே
நினைமின் மனனே
சிவப்பெருமானை
செம்பொன் அம்பலவனை
நினைமின் மனனே
                          - பட்டினத்தடிகள்Best regards,