Monday, 2 April 2012

தற்கொலை ஒருவரது பிரச்சனைக்கு தீர்வாகுமா ......?


இந்த தகவலை பொறுமையுடன் படியுங்கள் நண்பர்களே. அலச்சியம் வேண்டாம் அவசியம் வேண்டும். இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. சிலரின் வாழ்க்கை வசந்தம் வீசும் இன்பப் பூஞ்சோலையாகிறது, சிலரது வாழ்க்கையோ வறுமையும், துன்பமும் சுழன்று தாக்க வாழ்க்கையே சோகமாகி சுட்டெரிக்கும் பாலைவனமாக மாறிவிடுவதும் உண்டு. ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான், தனக்கு பிரச்சினையே வரக்கூடாது மற்றும் உலகின் சகல சுகமும் ஒருங்கே பெற்று இன்பத்தில் உலா வரவேண்டும் என்று, அதுதான் மனித இயல்பும்கூட. வெளி உலகில் வீராப்பு பேசும் எத்தனையோ நபர்கள் தன் சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை வந்துவிட்டால் உள்ளங்கள் உடைந்து கதறி கண்ணீர் சிந்தி நம்மால் இந்த பிரச்சினையை தீர்க்கவே முடியாது என்றெண்ணி தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளும் தடுக்கப்பட்ட செயலைச் செய்யவும் துணிந்து விடுகின்றனர். உயிரை மாய்த்துக் கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடுமா என்ன ? எதற்கு இந்த கோழைத்தனம் ? அவர்களின் நினைப்பு பிரச்சினைகள் தனக்கு மட்டும்தான் வருகிறது. உலகிலேயே யாருக்கும் வராத தர்ம சங்கடம் ஏன் தனது வாழ்க்கையில் வந்துவிட்டது என்று மனம் உடைந்துதான் இத்தகைய முடிவை எடுக்கின்றார்கள். பிரச்சினைக்கு தீர்வு தற்கொலைதான் என்றால் இன்று உலகில் ஒருவரும் உயிர்வாழ முடியாது ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்துகொண்டுதான் இருக்கின்றது, இருக்கும். ஏழைக்கு பணப்பிரச்சினை என்றால் பணக்காரருக்கு உடல் பிரச்சினை. சிலருக்கு பெற்ற மக்களால் பிரச்சினை என்றால் சிலருக்கு மக்களை பெற்றெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கங்கள், இவ்வாறாக ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் உட்பட்டவனாகவே வாழ்கின்றனர். இன்னும் சோகங்களையும், கஷ்டங்களையும், ஏக்கங்களையும், ஆசைகளையும் மனதில் தேக்கி வைத்துக் கொண்டு உதட்டில் புன்னகை சிந்தும் எத்தனையோ மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆக, பிரச்சினை என்பது தற்கொலை செய்பவருக்கு மட்டுமல்ல, ஊர் முழவதும், நாடு முழவதும் ஏன்! உலகம் முழவதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஏதாவது ஒரு காரணம் அல்லது முக்கிய சம்பவம் தற்கொலைக்குத் தூண்டுகோலாக அமைவதாக இருந்தாலும், நாள்பட்ட தற்கொலை எண்ணங்களும், உணர்வுப் போராட்டங்களும் கூட காரணமாக அமைகின்றன.. துக்கமான சூழ்நிலை அன்பிற்குரியவரின் இறப்பு, மணமுறிவு, முற்றிய சண்டை, கணவனிடமிருந்தோ, மனைவியிடமிருந்தோ பிரிந்திருப்பது. பணப் பிரச்சினை, திடீரென நோய் வாய்ப்படுவது, வேலை இழப்பு, கடன் தொல்லை. தன் மேல் வழக்கு விவகாரம் எதாவது வந்துவிடுமோ என்ற பயம்; தன்னை யாராவது அடித்து விடுவார்களோ என்ற பயம். போதை மருந்துக்கு அல்லது குடிக்கு அடிமை ஆதல். ஏற்கனவே தற்கொலை முயற்சியில் தோல்வி, குடும்பத்தில் வேறு யாராவது தற்கொலை செய்துகொண்டிருப்பது. நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள், துக்கத்தில் ஆழ்ந்து இருப்பது, எதிலும் பற்றில்லாமல் போவது, எரிச்சல், பரபரப்பு, முடிவு எடுக்க முடியாமல் குழப்பம், தூக்கமின்மை, அதீத சோர்வு, கவனமின்மை; அளவுக்கு மிஞ்சி சாப்பிடுவது, அல்லது பசியின்மை; பணக்கவலை, தன்னை நம்பியிருப்பவர்களைப் பற்றிய கவலை; திடீரென்று அழுவது, அல்லது மிதமிஞ்சிய சந்தோஷத்தை காட்டுவது பேச்சில் மாற்றம்: தான் தனிமையை விரும்புவதாக அடிக்கடி கூறுவது; அல்லது தான் தனி, தனக்கு யாருமில்லை என்று சொல்லுவது; தான் எதற்கும் லாயக்கில்லை, தன் வாழ்வு வீண் என்பது; சுய மரியாதையை இழந்துவிட்டதாக நினைப்பது; குற்ற உணர்ச்சி; அவமான உணர்ச்சி; வாழ்வதினால் என்ன பயன் என்பது; இறப்பைப் பற்றியும் தற்கொலையைப் பற்றியும் அடிக்கடி பேசுவ தற்கொலை முயற்சி செய்யும் ஒருவருக்கு வெளியில் இருப்பவர்கள் எப்படி உதவலாம்? அவர்கள் பேசும் போது, அதாவது தங்கள் துக்கத்தையோ, ஏமாற்றத்தையோ வெளியிடும் போது காது கொடுத்துக் கேளுங்கள். அவர்களது உணர்வுகளை மதியுங்கள். விமரிசனம் செய்யாமல் முழுக் கவனத்துடன் கேளுங்கள். தனெக்கென ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு தற்கொலை முயற்சியில் இருந்து ஒருவரை மீட்கும். அவர் உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தை காப்பாற்றுங்கள். வேறு நண்பர்களிடமோ, உறவினரிடமோ அவரது ரகசியம் உங்கள் மூலம் வெளிப் படாமல் இருக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுங்கள். எந்தச் சூழ்நிலையிலும் உங்களது நட்பு மாறாது, அவரை விட்டுக் கொடுத்து பேச மாட்டீர்கள் என்ற உத்திரவாதம் கொடுங்கள். அவரிடம் நீங்கள் எத்தனை அன்பும் அக்கறையும் உடையவர் என்பதை உங்கள் பேச்சில் வெளிப் படுத்துங்கள். கனிவும் கருணையும் நிறைந்த சொற்களால் அவரது மனப் புண்ணுக்கு ஆறுதல் களிம்பு பூசுங்கள். முடிந்து போனவற்றைக் கிளறாதீர்கள். முடிந்தவை முடிந்தவைகளாகவே மடிந்து போகட்டும். அதிகமாக அறிவுரை கூறாதீர்கள். புதிய கோணத்தில் வாழ்க்கையைப் பார்க்க அவருக்கு உதவுங்கள். இததனைதான் வாழ்க்கை என்றில்லை; இன்னும் எத்தனையோ இருக்கிறது என்று புதிய பாதையைக் காட்டுங்கள். குடும்பங்களிலும் கல்விக் கூடங்களிலும் குழந்தைகளுக்கு நல்ல விழுமியங்களை உணர்த்துதல், உறவு, நட்பு, சுற்றம் இவற்றோடு நல்லுறவுகளைப் பேணுதல், தவறான உறவு மற்றும் நட்பு வட்டங்களைத் தவிர்த்தல், நேர்மறைச் சிந்தனைகள், வரவுக்கேற்ற செலவு, திட்டமிட்ட வாழ்க்கை, உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவைகளின் மூலம் மனதை ஒருமுகப்படுத்துதல், இவையெல்லாம் மனம் செம்மைப்பட உதவும். நம் உயிரைப் படைக்கும் உரிமை நமக்கே இல்லை எனும்போது, அதை மாய்க்கும் எண்ணம் மட்டும் எழலாமா ? பயம் காரணமாய் கணப்பொழுதில் பிணமாக விழும் மனிதன், சற்றே சிந்தித்துச் செயல்பட்டால் வையம் போற்றும் வகையில் வாழலாம்.அரிது அரிது மானிடரைப் பிறத்தல் அரிதுஉயிர் வாழ்தல் என்பது மனிதனின் உரிமை. அதைக் காப்பது அவனது கடமை. ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் மனித நேயம் வேறு ஏதாவது உண்டா? சிந்திப்போம் செயல் படுவோம் வாழ்வின் அற்புதத்தை அறிவோம்.