Thursday, 26 April 2012

பெண்கள் வீட்டின் கண்கள்


பெண்ணை புரிந்து கொள்ளவேமுடியாதாம்.பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆணைப்போல பெண்ணும் ஒரு உயிர்.பிறகு ஏன் அதிகமான ஆண்களும் புரிந்து கொள்ள முடியாமல் திண்டாடுகிறார்கள்? திறமை குறைவாக இருப்பதாக கருதலாமா? அதே சமயம் பெண் எளிதில் ஆணை புரிந்து கொள்கிறார் என்றும் சொல்கிறார்கள்.அதுவும் உணமைதான்.அதிக வெளிவிவகாரங்களில் ஈடுபடாத அதிகம் படிக்காத பெண்ணும் கூட ஆணை “ உன்னைப்பற்றி எனக்கு தெரியாதா?” என்று சாதாரணமாக சொல்லி விடுகிறார்.உலகில் உள்ள அத்தனை ஆண் பெண்ணுக்கும் இது பொருந்துமா?என்று யாரும் விவாதம் செய்ய வரவேண்டாம்.என்னால் பெண்ணை புரிந்துகொள்ள முடியவில்லை என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
                              
குறிப்பிட்ட ஒன்றை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் என்ன பொருள்? நாம் சரியாக கவனிக்கவில்லை.அதன் இயல்புகளை புரிந்துகொள்ளவில்லை.நாம் சிந்திக்கவில்லை.சுருக்கமாகச் சொன்னால் நாம் தவறாக அணுகியிருக்கிறோம்.பெண்ணைப் புரிந்துகொள்ள முடியாத நிலையும் இப்படித்தான்.அவரைப்பற்றி தவறான பார்வை நமக்கு இருக்கிறது. ஆமாம்.பெண்ணை உடலாக மட்டும் பார்க்கிறோம்.நமக்கு சந்தோஷம் அளிக்க படைக்கப்பட்ட பொருளாக,ஒரு இயந்திரமாக நாம் பெண்ணை பார்க்கிறோம்.நம்மைப்போலவே படைக்கப்பட்ட உயிரை சக மனித உயிராக கருதுவதேயில்லை.ஆனால் உண்மை வேறாக இருக்கிறது.பெண்ணை உடலாக மட்டும் கருதும் கோணல் பார்வை காலந்தோறும் இருந்துவருகிறது.சினிமா,விளம்பரம் எல்லாம்  பெண் என்றால் உடல்தான் என்று உறுதியாக நம்புகிறது.சமூகத்திற்கு பரப்புகிறது.இங்கே உடல் பாகங்களை படம் பிடித்துக்காட்டுவதே ஆகச் சிறந்த கலை.செக்ஸ்பாம்,செக்ஸ்குயின்  என்கிறார்கள்.ஆணுக்கு அப்படி பெயரிடுவதில்லை.உடலை மட்டுமே பார்க்கும் ஆண்களுக்கு ஏற்ப பெண்ணும் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.பெண்ணுக்கு திறமையோ,அறிவோ இருந்தால் அதற்கு பெரிய மரியாதை கிடைப்பதில்லை.எத்தனை படித்த போதிலும் பெண் மட்டும்தான். சிரித்துப்பேசினாலே கற்பனையை ஆண் வளர்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறான்.பிறகு திட்ட ஆரம்பிக்கிறான்.
பெண் ஆணை எளிதில் புரிந்து கொள்கிறார்.ஆண் எதற்காக தன்னிடம் வலிய வந்து பேசுகிறான்,உதவி செய்வது போல நடிக்கிறான்,அவனுடைய நோக்கம் என்ன என்பது பெண்ணுக்கு நன்றாக தெரிகிறது.என்ன பெரிய நோக்கம்?அங்கீகாரத்திற்காக ஏங்குபவனையும்,நல்லவனையும் தெரிந்து கொள்ள முடிகிறது.ஆக மொத்தம் இரண்டு வகைதான் இருக்க முடியும். அவருக்கு எந்த சிக்கலும் இல்லை. உள்ளுக்குள் ஒரு ஆணை,அவர் கணவனாக இருந்தாலும் மதிக்கும் பெண்கள் குறைவு. அது யோக்கியதையை பொருத்த விஷயம். பெண் ஆணை உயிராக பார்க்கிறார். ஆண் உடலை பார்த்துக்கொண்டிருக்கும்போது பெண் அவனுடைய முகத்தை கவனிக்கிறார்.
பொதுவாகவே ஒருவரின் கண்களைப் பார்த்து அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். அத்துடன், நாம் இந்த இடத்தில் இருந்தால், என்னமாதிரி உணர்வோம் என்ற ஒரு பகுத்தறிவு இருந்தால், பெண்களை புரிந்து கொள்வது மட்டுமல்ல, அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதும் இலகுவான ஒன்று தான். ஆனால், இதனை எத்தனை ஆண்கள் பின்பற்றுகிறார்கள்?
ஆராயாமலேயே பெண்கள் விடுவிக்கமுடியாத புதிர்கள், ஆழ்கடலை அறியலாம் பெண்களை அறிவது கடினம் என்று எதுகை, மோனையுடன் எழுதுவது தான் அன்றைய காலத்திலிருந்து இன்று வரைக்கும் தொடரும் முடிவில்லாத பெருங்கதை.

பெண்கள் இல்லாவிட்டால், அச்சாணி இல்லாத வண்டி போன்றது தான் ஆண்களின் நிலை. ஆனாலும், ஆதிக்க குணமும், ஒரு சில பெண்களின் சார்ந்து வாழும் இயல்பு கொடுக்கும் தைரியமும் தான் இன்று வரைக்கும் பெண்களின் தனிப்பட்ட திறமைகளை மழுங்கடித்து, பெண்கள் என்றதனால் கிடைக்கப் பெறும் சலுகைகளை மட்டும் வைத்து அளவிடும் தற்குறித்தனமாகும்.

"இந்த வேலை பெண்களுக்குரியது" என்ற மனப்போக்கு ஆண்களிடத்தில் இருந்து விடுபட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் வெகு விரைவாகவும், இலகுவாகவும் தங்களை வெளிநாட்டுக் கலாச்சாரத்திற்கு மாற்றிக் கொள்ளும் ஆண்கள், வீடுகளில் மனைவிகளுக்கு உதவி செய்வது என்ற நிலை வந்தால் மட்டும் கற்காலத்துக்கே சென்று விடும் மர்மம் என்ன? இதற்குப் பெயர் ஆணாதிக்கமா? அல்லது பெண்கள் மட்டுமே போக வேண்டிய இடமாக சமையலறையை வரையறுத்து வைத்திருக்கிறார்களா? இவை எல்லாவற்றையும் விட, ஆண்களுக்கே உரிய சோம்பேறித்தனமா?

எது எப்படியோ, இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும். ஆணுக்குப் பெண் சரிநிகராக வாழ்வைத் தனக்கேற்றவாறு அமைத்துக்கொள்ள வேண்டும். 
இந்த மாறுதல் வரும்போது தான் குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி போன்ற ஆரோக்கியமான நிகழ்வுகளுக்கும் சாத்தியம்.