Monday 2 April 2012

படியுங்க இளைஞர்களே! - ராமநவமி!


அக்காலத்தில், மன்னர்கள் சந்திரனை குறித்து, "சோமபவம்' என்ற யாகம் செய்து, தங்கள் தேவைகளைக் கேட்பர். "அதிக பால் கறக்கும் பசுக்கள் வேண்டும், வேகமாக ஓடக்கூடிய குதிரைகள் வேண்டும்...' என்று கேட்டுவிட்டு, "சத்புத்திரர்கள் வேண்டும்...' என்றும் கேட்பர். "சத்புத்திரன்' என்றால் "உத்தமமான பிள்ளை' என்று பொருள்.

பெற்றோருக்கு பணம், ஆடை, ஆபரணம், பங்களா, கார் கிடைப்பதை விட, ஒரு நல்ல பிள்ளை இருந்து விட்டால், அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது. அந்த கொடுப்பினை யாருக்கு இருந்தது தெரியுமா? ராமனின் தந்தை தசரதருக்கும், தாய் கவுசல்யாவுக்கும் அதனால் தான், சுப்ரபாதம் துவங்கும் போது, "கவுசல்யா சுப்ரஜா ராமா' என்று துவங்குகிறது. ராமனைக் காட்டிற்கு அழைத்துச் சென்ற விஸ்வாமித்திரர், அதிகாலை வேளையில் அவரை எழுப்பும்போது, "கவுசல்யாவின் புத்திரனான ராமனே, எழுந்திரு...' என்றார்.

ராமனை அழைத்தார் தசரதர். அவர் உடனடியாக அப்பாவிடம் சென்றார். "ராமா... பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குப் போ..' என்றார். என்ன ஏதென்று எதுவும் கேட்கவில்லை, உடனே கிளம்பி விட்டார். இந்த பண்பு எப்படி வந்தது என்றால், இளமையிலேயே அவரது வளர்ப்பை பொறுத்து அமைந்தது.

தாடகையை வதம் செய்வதற்காக, விஸ்வாமித்திரர் தசரதரின் உதவியை நாடினார். "உன் மகன் ராமனை அனுப்பு...' என்றார். "என் மகன் சிறுவனல்லவா! அவனால் எப்படி அந்த அரக்கியை வதம் செய்ய முடியும்? வேண்டுமானால், நான் வருகிறேன்...' என்றார் தசரதர்; மறுத்து விட்டார் விஸ்வாமித்திரர்; ராமன் தான் வந்தாக வேண்டுமென அடம் பிடித்தார். ராமனும், முனிவருடன் சென்றார். அங்கு சென்றதும், "முனிவரே... ஒரு பெண்ணை வதம் செய்வது, ஆண்மைக்கு அழகல்ல. இருந்தாலும், என் தந்தை, நீங்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றச் சொல்லி அனுப்பியுள்ளார். இதை உங்களுக்காக மட்டுமல்ல, என் தந்தை எனக்கிட்ட கட்டளைக்காகவும் செய்கிறேன்...' என்றார்.

இதை விட ஒரு தந்தைக்கு என்ன பாக்கியம் வேண்டும்!

அப்படிப்பட்ட உத்தமமான பிள்ளையை, "தசரத சுப்ரஜா' என்பதற்கு பதிலாக "கவுசல்யா சுப்ரஜா' என்று விஸ்வாமித்திரர் ஏன் சொல்கிறார் தெரியுமா? ராமன் தூங்கும்போது, அவனது அழகை ரசிக்கிறார் விஸ்வாமித்திரர். "இக்காட்சி நமக்கு தற்காலிக மானது. தாடகை வதம் முடிந்தால், ராமன் அயோத்திக்குப் போய் விடுவான். ஆனால், அவனது தாய், இந்த அழகை தினமும் ரசிக்கிறாள். தகப்பன் சொல்லைக், கேட்கும் உத்தமனை, வீரனைப் புத்திரனாகப் பெற்றவள் எவ்வளவு பெரிய பாக்கியசாலி...' என்பதால், அவளை முன்னிலைப்படுத்தி ராமனை எழுப்புகிறார்.

அது மட்டுமல்ல, அவன், பெண்கள் விஷயத்தில், எவ்வளவு பெரிய மகாத்மா என்பதையும், ஒரு சம்பவத்தால் உணரலாம்.
"இந்த சீதையை அடைய, நீ இவ்வளவு சிரமப்பட வேண்டுமா? நீ தான் மாறுவேடங்கள் புனைவதில் மன்னனாயிற்றே, ராமனைப் போல் வேஷமிட்டு, அவள் அருகில் செல். அவள் மயங்கி விடுவாள்...' என்று ராவணனுக்கு யோசனை கூறினர் அசுரர்கள்.

அப்போது ராவணன் கூறியது...
"நான் என்ன முட்டாளா? இந்த யோசனை எனக்கு வராமல் இருந்திருக்குமா! அவனைப் போல் வேஷமிட்டு அவளை நெருங்கினேன். ஆனால், அதென்னவோ தெரியவில்லை! அவளை கையெடுத்து கும்பிடத்தான் தோன்றுகிறது...' என்றான்.

ராமனை போல் வேஷம் போடுகிற அயோக்கியர்களுக்கே இவ்வளவு பெரிய மகோன்னதம் இருக்கிறதென்றால், ராமநாமத்தை, பக்தி சிரத்தையுடன் உச்சரிப்பவர்கள் எவ்வளவு பெரிய நன்மைகளை அடைவர் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ராமனின் அவதார தினத்தில், "ஸ்ரீராம ஜெயம்' முழக்கம், இல்லங்களில் ஒலிக்கட்டும். "ராம'மந்திரம் எங்கும் கேட்கட்டும். ராமனைப் போல், நல்ல பிள்ளையாய் விளங்கி, பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்க, இளைஞர்கள் உறுதியெடுக்கட்டும்.