Thursday, 5 July 2012

வங்கி

கேட்பாரின்றி கிடக்கிறது ரூ.1,700 கோடி

வங்கிகளில் பணம் போட்டவர்களை கண்டுபிடித்து திருப்பி தர வேண்டும்

 புதுடெல்லி : வங்கிகளில் செயல்படாத சேமிப்பு, பிக்சட் டெபாசிட் கணக்குகளில் இருக்கும் தொகையை வாடிக்கையாளர்களை கண்டறிந்து திருப்பி அளிக்குமாறு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. வங்கிகளில் சேமிப்பு, ரெக்கரிங், பிக்சட் டெபாசிட் கணக்கு தொடங்குவோரில் பலர் இட மாற்றம், ஊர் மாற்றம் காரணமாக கணக்கில் உள்ள பணத்தை அப்படியே விட்டு விடுவதுண்டு. இதுபோல கைவிடப்பட்ட டெபாசிட் கணக்குகளில் வங்கிகளிடம் ரூ.1,700 கோடிக்கு மேல் பணம் உள்ளது.

அதை உரியவர்களுக்கு திருப்பி அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் அது சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: செயல்படாத கணக்குகள், கேட்கப்படாத டெபாசிட் ஆகியவற்றை முறைப்படுத்துவதற்கான நடைமுறைகளை வங்கிகள் மேலும் வலிமைப்படுத்த வேண்டியது அவசியம். தொகையை திரும்ப கேட்டு வரும் கோரிக்கைகளை விரைவாக பரிசீலித்து செட்டில் செய்ய வேண்டும். அதற்கான புகார் தீர்வு, ஆவண பராமரிப்பு, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு ஆகியவை அவசியம்.

செயல்படாமல் விட்ட கணக்கை வாடிக்கையாளர் மீண்டும் தொடர விரும்பினால் கட்டணம் இல்லாமல் செயல்படுத்த வேண்டும். நீண்ட காலமாக கேட்பாரற்று பணம் கிடக்கும் கணக்குகளில் வாடிக்கையாளரை கண்டறியும் நடவடிக்கையை வங்கிகள் விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல், பணம் இருக்கும் கணக்குகள் குறித்த விவரத்தை வங்கிகள் இணைய தளத்தில் ஜூன் 30, 2012க்குள் வெளியிட வேண்டும்  என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே பிப்ரவரி மாதம் சுற்றறிக்கை அனுப்பியது. அந்த பட்டியலில் வாடிக்கையாளரின் பெயர், முகவரி மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தது. செயல்படாத கணக்குகள், அவற்றில் இருக்கும் தொகை குறித்து அடிக்கடி மறுஆய்வு செய்து வங்கிகளின் இயக்குனர் வாரிய கூட்டத்தில் விவாதிக்கவும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.