Tuesday, 10 September 2013

விநாயகர் சதுர்த்தி

விநாயகர்.......... யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன. நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும். அதாவது ஆண்,பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். யாநை அக்ரிணைப் பொருள், மனிதர் உயர்திணை. ஆக, அக்ரிணை , உயர்திணை அனைத்தும் கலந்தவர். பெரும் வயிறைக் கொண்டதால் பூதர்களை உள்ளடக்கியவர் . அவரே அனைத்தும் என்பதே இந்த தத்துவம்.

ஆனைமுகத்தான் விநாயகருக்குரிய ஆறுபடைவீட்டுக் கோவில்கள் இருக்கின்றன. முதல் படைவீடு திருவண்ணாமலை. கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பெயர் பெற்ற இங்கு, "அல்லம் போக்கும் விநாயகர்' வீற்றிருக்கிறார்.

வணங்குபவர்களின் அல்லலைக் களைவதில் இவர் நிகரற்றவராகத் திகழ்கிறார்.இரண்டாம் படைவீடாக இருப்பது விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில். காசிக்குச் சமமாகத் திகழும் இக்கோவிலில் "ஆழத்துப்பிள்ளையார்' என்ற பெயரில் இவர் காட்சி தருகிறார்.


 பெயருக்கேற்ப பள்ளத்திற்குள் படியிறங்கி இவரைத் தரிசனம் செய்ய வேண்டும். (காளஹஸ்தியிலும் இவ்வாறு ஒரு சந்நிதி உள்ளது) தனியாக கொடிமரம் இவருக்கு அமைந்திருப்பதும் தனிச்சிறப்பு. இவரை வழிபாடு செய்தபின் படியேறி மேலேறுவது போல், வாழ்வில் மேன்மைகளைத் தந்தருள்பவர் இப்பெருமான்.வள்ளலாக விளங்குகிறார்:

மூன்றாவது படைவீடு திருக்கடையூர் அபிராமி கோவில். இங்கு "கள்ளவாரணப்பிள்ளையார்' என்ற திருநாமம் கொண்டுள் ளார். இவரை வழிபடுவோர் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று மகிழ்வர். அபிராமிப்பட்டர் அந்தாதியில் இவரைப் போற்றி வணங்குகிறார்.மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், சித்தி விநாயகராக தன்னை நாடி வருபவர்களுக்கு வாழ்வில் சித்தியை (வெற்றியை) அருளும் வள்ளலாக விளங்குகிறார்.

 அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியிலுள்ள ஊஞ்சல் மண்டபம் அருகில் இவர் உள்ளார். "மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்பதற்கேற்ப, அளவில் சிறியவர் என்றாலும், சக்தி வாய்ந்தவராக உள்ளார். (பிற்காலத்தில் முக்குறுணிப் பிள்ளையார் சன்னிதி உருவானதும் இவரது சந்நிதியில் வழிபாடு குறைந்து விட்டது) மாணிக்கவாசகர், பாண்டியநாட்டு படைக்காக குதிரைவாங்கச் செல்லும் போது இவரை வழிபாடு செய்துவிட்டே கிளம்பினார்.

ஐந்தாம் படைவீடாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பிடம் பெறுகிறார். சிவலிங்கத்தை வலக்கையில் தாங்கி, சிவபூஜை செய்யும் நிலையில் இப்பெருமான் கேட்ட வரம் தரும் கற்பகவிருட்சமாகத் திகழ்கிறார்.

ஆறாம் படைவீடு பொல்லாப் பிள்ளையார் கோவில் கொண்டிருக்கும் திருநாரையூர் (கடலூர் மாவட்டம்)ஆகும். பொள்ளுதல் என்றால் செதுக்குதல் என்பது பொருள். உளியால் செதுக்கப்படாமல் தானாகத் தோன்றிய சுயம்பு மூர்த்தியாவார். காலப்போக்கில் இப்பெயர் மருவி பொல்லாப்பிள்ளையார் என்று மாறிவிட்டது.

கிரகதோஷம் போக்குபவர் :ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நன்மையோ தீமையோ அவற்றை நிர்ணயிப்பது கிரகங்களே. நவக்கிரக சுழற்சியினால் வாழ்வில் ஏற்படும் சாதக, பாதகங்களைக் கட்டுப்படுத்தி நம்மை காத்தருள்பவர் நவக்கிரக விநாயகர்.

விநாயகரின் பலவிதமான அவதாரங்களில் நவக்கிரக விநாயகர் தனிச்சிறப்புடையது. ஒன்பது கிரகங்களையும் இவர் தன்னுள் அடக்கி இருப்பதால், சக்தி மிக்கவராக விளங்குகிறார்.

இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழக்கையிலும், வியாழனைத் தலையிலும், வெள்ளியை இடதுகீழ்க்கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சியளிக்கிறார். நவக்கிரக விநாயகரை வழிபாடு செய்வதால் நவக்கிரகதோஷம் நீங்கி நன்மை உண்டாகும்.

கூப்பிடு விநாயகர் :காட்டிக் கொடுத்த விநாயகர் என்றதும் தப்புக்கணக்கு போடாதீர்கள். தொலைந்த பொருள் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்தவர் இப்பிள்ளையார். ஒருமுறை, தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர், தன் நண்பரான சேரமான் பெருமாள் நாயனாரிடம் பொன்னும் பொருளும் ஏராளமாகப் பெற்றுக் கொண்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

சுந்தரருடன் திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார் சிவன். சிவகணங்களை வேடர் வடிவில் அவரிடம் அனுப்பி, அவரிடமிருந்த பொன்னையும், பொருளையும் பறித்து மறைத்து வைக்கும்படி ஆணையிட்டார்.

திருமுருகன்பூண்டி என்ற தலத்துக்கு சுந்தரர் சென்றபோது, பொருள்களை வேடர்களிடம் இழந்தார். இதுபற்றி இறைவனிடம் முறையிட்டார். அங்கிருந்த விநாயகர் சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டி அருளினார். அதனால் இவ்விநாயகருக்கு "கூப்பிடு விநாயகர்' என்ற சிறப்புப் பெயர் உண்டானது. 

 கையில் இருக்கும் பொருள்களை தவறுதலாகவோ அல்லது தீயவர்களாலோ இழந்தவர்கள் கூப்பிடு விநாயகரை வழிபட்டால், அவர் அருளால் தொலைந்த பொருள் மீண்டும் வந்து சேரும். கோவை மாவட்டத்தில் திருமுருகன்பூண்டி உள்ளது.

விக்னேஷ் விளக்கம்:"விக்னம்' என்றால் "தடை'. எனவே தான், தடைகளை நீக்கும் விநாயகரை "விக்னேஷ்' என்பர். ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் முன், அது தடையின்றி நடக்க, விநாயகரை வணங்கி அவருடைய அருளை வேண்டுகிறோம்.

லலிதா சகஸ்ர நாமத்தில் "மஹாகணேச நிர்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா' என்ற நாமா வருகிறது.அதாவது, அம்பிகை பண்டாசுரனை வதம் செய்யும்போது, விநாயகர் பெரும் உதவி செய்தார் என்பது இதன் பொருள். தனது (விநாயக) யந்திரத்தினால் பண்டாசுரனும், அவனுடைய சகாக்களும் விடுத்த அத்தனை பாணங்களையும் வீழ்த்தி தேவியை வெற்றி பெறச் செய்தார் விநாயகர். இதனால் தேவி மகிழ்ச்சி அடைந்தாள். வாழ்வில் குறுக்கிடும் தடைகள் அடியோடு நீங்க விநாயகப் பெருமானை வணங்க வேண்டும்.