என்று தணியும் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களின் குமுறல்?!
கஜானா நிரம்ப டாஸ்மாக் கடை, ரசிகர்கள் மனம் மகிழ திரையரங்க திறப்பு, தேர்தல் வசூலுக்கு வியாபாரிகள் தயவு வேண்டும் என அனைத்து வணிக நிறுவனங்களும் திறப்பு... இதிலெல்லாம் வராத கொரோனா, கல்வி நிலையங்களில் வந்துவிடும் என்பதால், அவற்றை மட்டும் திறப்பதில்லை. எல்லாவற்றிலும் மல்லுக்கட்டும் எதிர்க்கட்சியும், இந்த விஷயத்தில் மட்டும் மவுனம் சாதிக்கிறது.
தமிழகத்தில், ஒரு கோடியே 31 லட்சத்து 86 ஆயிரத்து 526 பள்ளி மாணவர்களும், 15 லட்சத்திற்கும் மேலான கல்லூரி மாணவர்களும் உள்ளனர். இது, தமிழக மக்கள் தொகையில் 19.58 சதவிகிதம். ஆனால் எந்த அரசியல் கட்சியும் இவர்கள் நலனில் அக்கறை காட்டத் தயாராக இல்லை.
அனைவருக்கும் கல்வித் திட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் 37,217 அரசு பள்ளிகளும், 8,403 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 12,419 தனியார் பள்ளிகளும் உள்ளன. இதில் தனியார் பள்ளிகளில் மட்டும், 48 லட்சத்து 69 ஆயிரத்து 279 மாணவர்கள் படிக்கின்றனர். ஏறத்தாழ 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ஆசிரியர்கள், தனியார் பள்ளி வேலையை நம்பி உள்ளனர்.
தமிழகத்தில் 550 பொறியியல் கல்லூரிகள், 449 பாலிடெக்னிக் கல்லூரிகள், 566 கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் 37 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் 15 லட்சத்திற்கும் மேலாக மாணவர்கள் படிக்கின்றனர். இதில் அரசால் 11 பொறியியல் கல்லூரிகளும், 47 பாலிடெக்னிக் கல்லூரியும், 79 அரசு அறிவியல் கல்லூரிகளும் நடத்தப்படுகின்றன. ஏனைய அனைத்து கல்வி நிறுவனங்களும், தனியார்களாலேயே நடத்தப்படுகிறது. இந்த தனியார் கல்லூரிகளை நம்பி 1,10,000ற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் அவர்களின் குடும்பங்களும் உள்ளன.
மார்ச் மாதத்திற்கு பிறகு மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள், இன்று வரை திறக்கப்படவில்லை. அரசு திறக்க நினைத்தாலும் எதிர்க்கட்சிகள் அனுமதிப்பதில்லை. கல்விக் கட்டணம் குறைப்பு, கட்டவேண்டிய நாட்களில் தளர்வு, கட்டாவிட்டால் கட்டாயப்படுத்த முடியாத நீதிமன்ற உத்தரவு, இவை அத்தனையும் பாதிப்பது, அந்த வருமானத்தை நம்பியுள்ள 2 லட்சத்து பத்தாயிரம் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களையும், அவர்களை நம்பியுள்ள குடும்பத்தையும் என்பது, யாரும் உணராத, உணர்ந்தாலும் கண்டு கொள்ளாத விஷயம்.
பெரிய அளவில் சங்கம் கூட இல்லாமல், தன் வறுமையை உரக்கச் சொல்ல முடியாத, கையறு நிலையில் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் இருக்கிறார்கள். பிச்சை புகினும் கற்கை நன்றே என்று தான் முன்னோர்கள் சொன்னார்களே தவிர, பிச்சை எடுத்தும் கற்றுக்கொடு என்று சொல்லவில்லையே! கல்வி போதிப்பதை தவிர மற்ற பணிகளை அறியாத தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் நிலை, அவர்களின் துயரம், கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதது.
தனியார் பள்ளிகள், அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்டாலும் மாணவர்களின் கட்டணத்தை வைத்து ஆசிரியர்களின் சம்பளம் தருவதாகவும், அதனால் பல மாதங்கள் சம்பளமே இல்லாமலும், அதன் பின்னர் இன்றுவரை 50 சதவீத ஊதியம் பெற்றுக் கொண்டு, முன்னர் இருந்ததை விட அதிக வேலைப் பளுவுடன், மன அழுத்தத்துடன் நடைபிணமாக நடமாடி வருகிறார்கள். இதைப் பற்றி, ஆள்வோரும் கண்டுகொள்ளவில்லை, சமூக நீதிப் போராளிகளும் குரல் கொடுக்கவில்லை,
அடுத்து நாங்கள் மக்கள் துயர்துடைக்க 30 நாள், 90 நாளில் வருவோம் என கட்டியம் கட்டும் எதிர்க்கட்சிகளோ, மக்கள் நலனில் மக்களுக்காக என மார்தட்டும் ஆளும் அரசோ அக்கறை காட்டவில்லையென்றால் இந்த இரண்டு லட்சம் ஆசிரியர்கள் மட்டுமல்ல அவர்களின் குடும்பங்களும், மாற்றி வாக்களிக்க முடிவு செய்தால், ஓட்டு மட்டும் நஷ்டம் அல்ல; ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் கேடு என்பதை உணர்வோம்.
உடனடியாக அரசு, அவர்கள் குறைகளைக் களைய, பள்ளி கல்லூரிகளை திறந்து, அவர்களை வாழ்வின் விளிம்பில் இருந்து காப்பாற்றலாம். எளிதில் கொரோனா பரவும் என நம்பினால், இந்த ஆசிரியர்களுக்கு, நிலைமை சரியாகும் வரை ஊக்க தொகை தந்தால், உங்களுக்கு ஓட்டும் கிடைக்கும்; ஆசிரியர்களுக்கு நோட்டும் கிடைக்கும்.
Dr.R.காயத்ரி
கல்வியாளர்.