Monday, 11 January 2021

நல்லதங்காள்

 நல்லதங்காள் 🌹




அர்ச்சுனாபுரம் ஒரு கிராமம். இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. வத்திராயிருப்பு அருகில் உள்ளது. இந்தப் பகுதியில் மாந்தோப்பு, தென்னந்தோப்பு ஏராளம். வாழைமரம், பாக்குமரம், தேக்குமரம் ஏராளம். வானம் பொய்க்காத வளமான பூமி.

அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் பிறந்த ஊர். நல்லதங்காளின் தந்தை ராமலிங்க ராஜா. தாயார் இந்திராணி. அண்ணன் நல்லதம்பி.

நல்லதங்காள் சின்னப் பெண்ணாக இருந்தபோது தாயும் தந்தையும் இறந்துவிட்டார்கள். நல்லதம்பிதான் தங்கச்சியை செல்லமாக வளர்த்தான். 

-------------

மானாமதுரை ராஜா காசிராஜனுக்கு நல்லதங்காளைக் கட்டிக்கொடுத்தான் அண்ணன் நல்லதம்பி.  கல்யாணம் ஆகும்போது நல்லதங்காளுக்கு ஏழு வயது. 

காசிராஜன் நல்லதங்காளுக்கு நிறைய பரிசுப் பணம் கொடுத்தார். சித்திரை மாதம் கல்யாணம் நடந்தது. செல்வக் கல்யாணம்.

பனைமரம் பிளந்து பந்தக்கால் நட்டார்கள்.
தென்னைமரம் பிளந்து தெருவெல்லாம் பந்தல் இட்டார்கள்.

நல்ல தம்பி தங்கச்சிக்கு நிறைய சீதனங்கள் கொடுத்தான்.

வேலி நிறைய வெள்ளாடுகள்
பட்டி நிறைய பால்மாடுகள்
மோர் கடைய முக்காலி பொன்னால்
அளக்குற நாழி பொன்னால்
மரக்கால் பொன்னால்.

இன்னமும் சீதனங்கள் நிறைய உண்டு. சொல்லிக்கொண்டே போகலாம். 

கல்யாணம் முடிந்தது. விருந்துச் சாப்பாடு முடிந்தது.

------------------

நல்லதங்காளும் காசிராஜனும் மானாமதுரைக்குப் புறப்பட்டார்கள். நல்லதங்காளுக்கு அண்ணனைப் பிரிய மனம் இல்லை.

அழுதுபுரண்டு அழுதாள்...
ஆபரணம் அற்று விழ.
முட்டி அழுதாள்...
முத்து மணி அற்று விழ.

நல்லதம்பி தங்கச்சிக்கு ஆறுதல் சொன்னான். ஒருவழியாக நல்லதங்காள் மானாமதுரைக்குப் புறப்பட்டுப் போனாள்.

நல்லதம்பிக்கு ஒரு மனைவி உண்டு. அவள் பெயர் மூளி அலங்காரி. அவள் கொடுமைக்காரி. நல்லதங்காள் போன பிறகு நல்லதங்காளைப் பார்க்க நல்லதம்பி ஒரு தடவைகூட மானாமதுரை போகவில்லையாம். அதற்கு மூளி அலங்காரிதான் காரணமாம்.

----------------

நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. பிள்ளை குட்டிகளுடன் அவள் சந்தோஷமாக வாழ்ந்தாள். இதெல்லாம் கொஞ்ச காலம்தான்.

மானாமதுரையில் மழை இல்லை. 12 வருடமாக நல்ல மழை இல்லை. வயல்களில் விளைச்சல் இல்லை. மக்கள் பசியால் வாடினார்கள். பட்டினியால் தவித்தார்கள்.

பஞ்சமோ பஞ்சம்.
மரக்கால் உருண்ட பஞ்சம்
மன்னவரைத் தோற்ற பஞ்சம்
நாழி உருண்ட பஞ்சம்
நாயகரைத் தோற்ற பஞ்சம்
தாலி பறிகொடுத்து
கணவரைப் பறிகொடுத்து
கைக்குழந்தை விற்ற பஞ்சம்

இப்படி மக்கள் பஞ்சத்தில் செத்தார்கள். 

நல்லதங்காள் வீட்டையும் பஞ்சம் விடவில்லை. தாலி தவிர மற்றது எல்லாம் நல்லதங்காள் விற்றாள். குத்தும் உலக்கை, கூடை, முறம்கூட விற்றுவிட்டாள். எல்லாம் விற்றும் பஞ்சம் தீரவில்லை. குழந்தைகள் பசியால் துடித்தன.

நல்லதங்காள் யோசித்து யோசித்துப் பார்த்தாள். இன்னும் கொஞ்ச நாள் நீடித்தால் பிள்ளைகள் பசியால் செத்துப்போகும் என்று பயந்தாள். ஒரு முடிவு எடுத்தாள். அண்ணன் வீட்டுக்குப் பிள்ளைகளுடன் கொஞ்ச நாள் போய் இருக்கலாம் என்று முடிவு எடுத்தாள்.

காசிராஜனிடம் தன் முடிவைச் சொன்னாள். காசிராஜன் நல்லதங்காள் சொன்ன முடிவை ஒப்புக்கொள்ளவில்லை.

“அடி பெண்ணே! வாழ்ந்து கெட்டுப்போனால் ஒரு வகையிலும் சேர்க்கமாட்டார்கள். கெட்டு நொந்துபோனால் கிளையிலும் சேர்க்க மாட்டார்கள். கை கொட்டிச் சிரிப்பார்கள். நீ போக வேண்டாம். கஷ்டம் வருவது சகஜம். நாம் பிடித்து நிற்க வேண்டும். சாணி எடுத்தாவது தப்பிப் பிழைப்போமடி! வேலி விறகொடித்து விற்றுப் பிழைப்போமடி’’ என்று காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளிடம் பலவாறு சொன்னான்.

காசிராஜன் சொன்னதை நல்லதங்காள் கேட்கவில்லை. இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்று நினைத்தாள்.

சந்தனம் தொட்ட கையால் - நான்
சாணி தொட காலமோ!
குங்குமம் எடுக்கும் கையால் - நான்
கூலி வேலை செய்ய காலமோ
என்று சொல்லி நல்லதங்காள் அழுதாள்.

இதற்குமேல் நல்லதங்காளைச் சமாதானப்படுத்த முடியாது என்று காசிராஜன் தெரிந்துகொண்டான். “சரி போய் வா. பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்’’ என்று சொல்லி வழியனுப்பி வைத்தான்.

----------------

நல்லதங்காள் பிள்ளைகளைப் பாசத்தோடு அழைத்தாள். “வாருங்கள் பிள்ளைகளா! உங்கள் மாமன் வீட்டுக்குப் போவோம். அங்கே தின்பதற்கு தேங்காய் கிடைக்கும், மாங்காய் கிடைக்கும், ஓடி விளையாட மான் கிடைக்கும்’’ என்று சொல்லி அழைத்தாள். பிள்ளைகள் ஆசை ஆசையாகப் புறப்பட்டன.

நல்லதங்காளும் பிள்ளைகளும் மானாமதுரையில் இருந்து அர்சசுனாபுரத்துக்குப் புறப்பட்டு வந்தார்கள். காடு மலையெல்லாம் தாண்டி வந்தார்கள். வனாந்திரங்களைக் கடந்து வந்தார்கள்.

அர்ச்சுனாபுரம் பக்கம் வந்துவிட்டார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு நடக்க முடியவில்லை. பசி பசி என்று கத்தினார்கள். அழுதார்கள்.

அந்த நேரம் பார்த்து நல்லதம்பி அந்தப் பக்கம் வந்தான். படை பரிவாரங்களோடு வந்தான். வேட்டையாட வந்தான். வந்த இடத்தில் நல்லதங்காளையும் பிள்ளைகளையும் பார்த்தான்.

அந்தக் கோலத்தில் அவர்களைப் பார்த்ததும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

குதிரை அரிதாச்சோ
குடி இருந்த சீமையிலே!
பல்லக்குதான் பஞ்சமோ
பத்தினியே உனக்கு!
கால்நடையாய் வர
காரணம் ஏன் தங்கச்சி?

என்று அழுது புலம்பினான். நல்லதங்காள் தன் வீட்டு நிலைமைகளைச் சொன்னான். நல்லதம்பி அவளைத் தேற்றினான். 

“சரி தங்கச்சி நம் வீட்டுக்குப் போ. தெற்குமூலையில் தேங்காய் குவிந்திருக்கும் வடக்குமூலையில் மாங்காய் குவிந்திருக்கும். காட்டு யானை வாசலில் கட்டி இருக்கும் காராம் பசுவும் உண்டு. போ தங்கச்சி போ! போய்ப் பிள்ளைகளுடன் பசியாறி இரு’’ என்று நல்லதம்பி சொன்னான்.

நல்லதங்காள் அண்ணன் இல்லாத வீட்டுக்குப் போக தயங்கினாள். அண்ணா! நீயும் கூட வா! என்று அண்ணனைக் கூப்பிட்டாள்.

“அம்மா நல்லதங்காள் நீ முதலில் போ. உன் அண்ணி மூளி அலங்காளி உன்னையும் பிள்ளைகளையும் நன்றாக கவனித்துக்கொள்வாள். நான் பின்னால் வருகிறேன். சீக்கிரன் வந்துவிடுவேன். உன் பிள்ளைகளுக்கு விளையாட புள்ளிமான் கொண்டுவருவேன்’’ என்று சொல்லி சமாதானப்படுத்தினான்.

நல்லதங்காள் அண்ணன் வீட்டுக்கு அரை மனதுடன் புறப்பட்டாள். அப்போது மூளி அலங்காரி வீட்டு மாடியில் இருந்தாள்.

----------------------

நல்லதங்காளும் பிள்ளைகளும் பசியோடு தன் வீடு வருவதைப் பார்த்து விட்டாள். வேகவேகமாக இறங்கி வந்தாள். கதவுகளை அடைக்கச் சொன்னாள். இறுக்கிக் கதவை அடைத்தாள். ஈர மண் போட்டு அடைத்தாள். சோற்றுப் பானையை ஒளித்து வைத்தாள். பழந்துணி ஒன்றை உடுத்திக்கொண்டான். முகத்தில் பத்துப் போட்டு மூலையில் படுத்துக்கொண்டாள்.

நல்லதங்காள் வந்தாள். அண்ணி அண்ணி என்று ஆசையாகக் கூப்பிட்டு கதவைத் தட்டினாள். கதவு திறக்கவில்லை.

''கால் கடுக்குது அண்ணி கதவைத் திற, தண்ணீர் தண்ணீர் என்று தவிக்குறாள் பாலகர். அன்னம் அன்னம் என்று சொல்லி அலையுறார் பாலகர். புத்திரர் பசியாற கதவைத் திறவாயோ?''

என்று அழுது அழுது கூப்பிட்டாள். அதற்கும் கதவு திறக்கவில்லை. நல்லதங்காளுக்கு கோபம் வந்தது.

நான் பத்தினியானால் கதவு படீர் என்று திறக்கட்டும்

என்று கட்டளையிட்டாள். கதவுகள் திறந்தன. பிள்ளைகள் உள்ளே ஓடினார்கள். சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஒரு பண்டமும் இல்லை. மூளி அலங்காரி படுத்திருந்த இடத்தில் தேங்காயும், மாங்காயும் குவிந்து கிடந்தன.

ஓடிச்சென்று ஒரு பிள்ளை தேங்காயை எடுத்தது. தாவிச்சென்று ஒரு பிள்ளை மாங்காயைக் கடித்தது. மூளி அலங்காரி விருட்டென்று எழுந்தாள். மாங்காயைப் பறித்துப் போட்டாள். 

ஆயிரம் அழுகல் மாங்காயில் ஒன்று எடுத்துக் கொடுத்தாள். தேங்காயைப் பறித்துப் போட்டாள். ஆயிரம் தேங்காயில் அழுகல் தேங்காய் ஒன்று எடுத்துக் கொடுத்தாள்.

பார்த்தாள் நல்லதங்காள். மனம் பதறினாள். ''அண்ணி என் மக்களின் பசியை ஆத்துங்க'' என்று கெஞ்சினாள்.

மூளி அலங்காரி, ஏழு வருசம் மக்கிப்போன கேப்பையைக் கொடுத்தாள்.  திரிப்பதற்கு உடைந்த திருகையைக் கொடுத்தாள். உலை வைக்க ஓட்டைப் பானையைக் கொடுத்தாள். எரிக்க  ஈரமட்டைகளை கொடுத்தாள்.  நல்லதங்காள் பொறுமையாகக் கேப்பையைக் திருகையில் போட்டு அரைத்தாள்.

எப்படியோ கஷ்டப்பட்டு கஞ்சி காய்ச்சினாள். ஈரமட்டைகளை வைத்து எரித்தாள். கூழும் கொதிக்கணும், குழந்தை பசியாறணும் என்று தெய்வங்களை வேண்டிக்கொண்டாள்.

ஒருவழியாகக் கஞ்சி கொதித்தது. ஆனால் பிள்ளைகள் கஞ்சியைக் குடிக்கப் போகும் நேரத்தில் மூளி அலங்காரி வந்தாள். பானையைத் தட்டிவிட்டாள். பானை உடைந்தது. கூழ் வழிந்து ஓடியது. பிள்ளைகள் அதை வழித்துக் குடித்தார்கள்.

நல்லதங்காளுக்கு இந்தக் காட்சியைப் பார்க்க சகிக்கவில்லை. இனியும் அவமானப்பட வேண்டாம். செத்துவிடலாம் என்று முடிவு எடுத்தாள்.

------------------

பிள்ளைகளைக் கூப்பிட்டு தெருவில் இறங்கினாள். வீதியில் நடந்தாள். அவளைப் பார்த்தவர்கள் பரிதாபப்பட்டார்கள். சாப்பிடுவதற்கு தங்கள் வீட்டுக்கு அழைத்தார்கள்.

''பச்சரிசி குத்தித் தாரோம்
பாலும் கலந்து தாரோம்!
பாலரும் நீயும்
பசியாறிப் போங்க!''

என்று கூப்பிட்டார்கள். நல்லதங்காள் மறுத்துவிட்டாள்.

''அரச வம்சம் நாங்கள்
அண்டை வீட்டில்
தண்ணீர் குடிக்க மாட்டோம்''
என்று சொல்லிவிட்டாள்.

காட்டு வழியே பிள்ளைகளைக் கூட்டிப் போனாள். பாழும் கிணறு தேடிப் போனாள். அண்ணன் வந்தால் அடையாளம் தெரியட்டும் என்று ஆவாரம் செடிகளை ஒடித்துப் போட்டுக்கொண்டே போனாள்.

நல்லதங்காளும் பிள்ளைகளும் நெடுந்தூரம் வந்து விட்டார்கள். ஒரு கிணறும் காணோம். 

அப்போது சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களைப் பார்த்து நல்லதங்காள் கேட்டாள்...

“தண்ணீர் தாகமப்பா. தண்ணீர் குடிக்கணும். பாழும் கிணறு இருந்தால் பார்த்துச் சொல்லுமப்பா!’’ என்று கேட்டாள். ஒரு சிறுவன் ஓடிச்சென்று ஆழமுள்ள பாழும் கிணற்றைக் காட்டினான்.

நல்லதங்காள் பிள்ளைகளோடு அங்கு போனாள். 

கணவன் கண்ணில் படுமாறு தாலியைக் கழற்றி கிணற்றுப் படியில் வைத்தாள். 

அண்ணன் கண்ணில் படுமாறு பாலூட்டும் சங்கை கிணற்று மேட்டில் வைத்தாள். 

அண்ணி கொடுத்த அழுகல் தேங்காயை ஓர் ஓரத்தில் வைத்தாள்.

---------------

ஒவ்வொரு பிள்ளையாக கிணற்றில் தூக்கிப் போட்டாள். ஒவ்வொரு பிள்ளையும் பயந்து பயந்து அம்மாவின் காலைக் கட்டிக்கொண்டன. 

காலைக் கட்டிய பிள்ளையை பிடித்து இழுத்து கிணற்றில் போட்டாள். இப்படி ஆறு பிள்ளைகளைப் போட்டுவிட்டாள்.

மூத்த பிள்ளை நல்லதங்காளுக்குப் பிடிபடாமல் ஓடினான். 

''என்னை மட்டும் கொல்லாதே என்னைப் பெற்ற மாதாவே!'' என்று கெஞ்சினான்.

''தப்பிப் பிழைத்து அம்மா - நான்
தகப்பன் பேர் சொல்லுவேன்
ஓடிப் பிழைத்து அம்மா - நான்
உனது பேர் சொல்லுவேன்''

என்று சொல்லி தப்பித்து ஓடினான். ஓடிய பிள்ளையை நல்லதங்காள் ஆட்டு இடையர்களை வைத்துப் பிடிக்கச் சொன்னாள். 

இடையர்களுக்கு விசயம் தெரியாது. தாய்க்கு அடங்காத தறுதலைப் பிள்ளை என்று நினைத்து அவனைப் பிடித்துக்கொண்டுவந்து நல்லதங்காளிடம் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

நல்லதங்காள் கதறி அழுத மூத்த மகனையும் பிடித்து கிணற்றுக்குள் போட்டாள். பிறகு தானும் குதித்தாள். நல்லதங்காளும், ஏழு பிள்ளைகளும் இறந்து மிதந்தார்கள். 

நல்லதங்காளுக்கு 16 அடிக் கூந்தல். அவள் கூந்தல் கிணறு பூராவும் பிரிந்து பரந்து கிடந்தது. பிள்ளைகளும் தெரியவில்லை. கிணற்றுத் தண்ணீரும் தெரியவில்லை. நல்லதங்காளின் கூந்தல் மட்டுமே கிணறு பூராவும் தெரிந்தது.

நல்லதங்காள் குடும்பம் இப்படி பட்டினியால் செத்து முடிந்தது.

------------------

நல்லதங்காள் புறப்பட்டு வந்த சில நாட்களிலேயே மானாமதுரையில் நல்ல மழை பெய்தது. பயிர்கள் திகிடுமுகடாக விளைந்தன. நாடு செழிப்பு அடைந்தது. 

காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளையும் தன் பிள்ளைகளையும் அழைப்பதற்கு புறப்பட்டு வந்தான்.

நல்லதம்பி வேட்டை முடித்து வீட்டுக்கு வந்தான். தங்கச்சியைக் காணவில்லை. தங்கச்சி பிள்ளைகளையும் காணவில்லை. பதறிப்போனான்.

மூளி அலங்காரியைப் பார்த்து என் தங்கச்சியையும், தங்கச்சி பிள்ளைகளையும் எங்கே என்று கேட்டாள். 

மூளி கூசாமல் பொய் சொன்னாள்.
“சீரகச் சம்பா சோறு ஆக்கிப் போட்டேன்
பத்து வகைக் காய்கறி வைத்தேன்.
சாப்பிட்டுப் போனாங்க’’
என்று பொய் சொன்னாள்.

நல்லதம்பி இதை நம்பவில்லை. பக்கத்து வீடுகளில் போய்க் கேட்டான். அவர்கள் நடந்தது  நடந்தபடி சொன்னார்கள். பிள்ளைகளைப் பட்டினி போட்டதைச் சொன்னார்கள். 

அவ்வளவுதான் நல்லதம்பிக்கு மீசை துடித்தது. கண் சிவந்தது. பக்கச் சதை எல்லாம் பம்பரம் போல் ஆடியது. தங்கையைத் தேடி காட்டுவழியே போனான். பதறிப் பதறிப் போனான். 

நல்லதங்காள் ஒடித்துப் போட்ட ஆவாரஞ் செடிகள் வழிகாட்டின. நல்லதம்பி பாழும் கிணற்றின் பக்கம் வந்தான். உள்ளே எட்டிப் பார்த்தான். 

''அய்யோ........'' தங்கையும் பிள்ளைகளும் செத்து மிதந்தார்கள். நல்லதம்பி ஓங்காரமிட்டு அழுதான்.

தங்கச்சி தங்கச்சி என்று தரையில் புரண்டு அழுதான். அம்மா அம்மா என்று அடித்துப் புரண்டு அழுதான். இப்படி அவன் அழுது புரண்டு கொண்டு இருந்தபோது காசிராஜனும் அங்கே வந்து விட்டான். 

பிள்ளைகளையும் மனைவியையும் பிணமாகப் பார்த்தான். மனைவியைக் கட்டிக் கொண்டு கதறி அழுதான்.

நல்லதங்காளையும் பிள்ளைகளையும் வெளியே எடுத்து தகனம் செய்தார்கள். 

நல்லதம்பி தன் மனைவி மூளி அலங்காரியைப் பழிவாங்க நினைத்தான். அவளை மட்டுமல்ல. அவள் குலத்தைப் பழிவாங்க ஏற்பாடு செய்தான். 

தன் மகனுக்கு உடனடியாக திருமணம் ஏற்பாடு செய்தான். மூளி அலங்காரியின் உறவினர்கள் உட்காரும் இடத்தில் இடிப்பந்தல் போட்டான். இடிப்பந்தலைத் தட்டிவிட்டு எல்லோரையும் கொன்றான். மூளி அலங்காரியையும் அரிவாளால் வெட்டிக் கொன்றான்.

இத்துடன் கதை முடியவில்லை. நல்லதம்பி ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான். அதேபோல் காசிராஜனும் ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான். 

இவ்வாறு இரண்டு குடும்பங்களும் பூண்டோடு அழிந்தன. இதற்கு அடிப்படையான காரணம் என்ன?

வறுமை ஒரு பக்கம். மூளி அலங்காரியின் கொடுமை மறுபக்கம். வறுமை கொடியது. பசி கொடியது. பட்டினி கொடியது. 

அதைவிடக்கொடியது மனிதத்தன்மையற்ற செயல்.

நல்லதங்காள் பட்ட துன்பத்தை இந்த நாடு மறக்காது!

Best regards,