Wednesday, 12 June 2019

ஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது.

ஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது.

 பற்றாக்குறையிலும் உள்ளம் நிரம்பி வழிந்தது.

பக்கத்து வீடும் நம் வீட்டின் நீட்சியாக நகரங்களிலும் அன்புக் கரம் நீட்டிய மனநிலை அன்று.

எப்போது வேண்டுமானால் நம்மிடம் இல்லாததைப் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பெறலாம் என்பது எத்தனை பெரிய வசதி.

 அன்று பண்டம் மாற்றுமுறை பாசத்தால் நிகழ்ந்தது. புதிதாக நம் வீட்டு வத்தக் குழம்பு சின்னக் கிண்ணத்தில் அடுத்த வீட்டுக்குப் பயணிக்கும்.

அங்கு வைத்த மிளகு ரசம் இங்கு பதிலுக்கு வந்து சேரும்.

 எந்த விசேஷமாக இருந்தாலும் அதற்காகச் செய்த பலகாரம் சுற்றியுள்ள வீடுகளுக் கும் சுடச்சுட வழங்கப்படும்.

நம் வீட்டு முருங்கை அதிகம் காய்த்தால், அது அடுத்த வீட்டினர் சாம்பார் வைப்பதற்காகவும்.

பக்கத்து வீட்டு செவ்வாழை தார் போட்டால் தண்டும் பழமும் கண்டிப்பாக நம் சமையலுக்கு வந்து சேரும்.

பால்காரர் மாடு கன்று போட்டதும் மறக்காமல் சீம்பால் அளிப்பது உண்டு.

அதற்காகவே நாங்கள் அவர்கள் வைத்திருக்கும் மாடு எப்போது கன்று போடும் என்று காத்திருந்ததும் உண்டு.

பாலில் கலக்கும் தண்ணீரை சீம்பாலால் அவர்கள் சரிசெய்து விடுவார்கள்.

இருப்பவர் இல்லாதவருக்குத் தருவதும், அதிகம் இருப்பவர் அடுத்தவரிடம் பகிர்வதும், யாரும் உபதேசிக்காமல் அன்று மக்கள் கடைப்பிடித்த நெறிமுறையாக இருந்தது.

ஒரே பொருளாதார நிலையில் இருப்பவர்கள் அருகருகே வாழ்ந்த சூழல் அது.

 எல்லோரிடமும் அவ்வப்போது பற்றாக்குறை தலைநீட்டும். அதை புரையேறும் தலையைத் தட்டிக்கொடுப்பதைப் போல சுற்றியிருப்பவர்கள் தங்கள் தாராளத்தால் அமுக்கி விடுவார்கள்.

’ரெண்டு தீக்குச்சி வேண்டும்’

நாங்கள் சிறுவராக இருக்கும்போது எங்கள் வீட்டுக்கு எதிரே மாட்டு வண்டி ஓட்டும் அண்ணன் தம்பிகள் ஐவர் இருந்தனர்.

 அவர்களுக்கு நாங்கள் வைத்த பெயர் ’பஞ்ச பாண்டவர்’. காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் நாங்கள் தட்டுப்பட்டால் ஒற்றைக் கைகொடுத்து எங்களை ஏற்றிக்கொண்டு பயணித்துப் பள்ளியில் இறக்கிவிடுவார்கள்.

 நூறு கிலோ அரிசி மூட்டைகளை அலாக்காக முதுகில் தூக்குவார்கள்.

 உடலில் இரும்பையும் உள்ளத்தில் காந்தத்தையும் வைத்திருந்தவர்கள் அவர்கள்.

 சமயத்தில் தீக்குச்சிகளை இரவல் கேட்டு இரவில் வருவார்கள்.

தீப்பெட்டிகூட சமயத்தில் வாங்க முடியாத சூழல் இருந்ததை இன்றையத் தலைமுறை நம்ப மறுக்கும்.

அந்தத் தோழர்கள் வீட்டுப் பெண்கள் அரிசி களைந்து, பருப்பு வேகவைத்து, சாதம் வடித்து பானையில் ஊற்றிய நீரையெல்லாம் எடுத்துக்கொண்டு,

கைநிறைய சாணத்தை வீட்டில் போட்டுவிட்டுச் செல்வார்கள்.

 சமயத்தில் மிஞ்சிய குழம்பையும், சோற்றையும் கொடுத்தால் மறுக்காமல் வாங்கிச் செல்வார்கள்.

 நள்ளிரவில் அரிக்கன் விளக்கோடு வெளியே வந்தால் அலறியடித்துக்கொண்டு ’என்ன ஆபத்தோ!’ என்று விசாரிக்க வருவார்கள்.

 ’அண்ணன்’ என்றும் ’தம்பி’ என்றும் உறவு வைத்து அளவளாவுவார்கள். அத்தனை அந்நியோன்யம்.

அன்று அவசரத்திற்கொன்று கேட்பது கவுரவக் குறைச்சல் அல்ல. அதிகாலையில் காப்பித் தூள் டப்பா வறண்டி ருப்பதைப் பார்த்து, பக்கத்து வீட்டில் ஒரு குவளை இரவல் வாங்கி திருப்பித் தருவது உண்டு.

 இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு வந்தால் பாலுக்குப் புரையூற்ற பக்கத்து வீட்டில் இரண்டு கரண்டி தயிர் வாங்கி வருவது உண்டு.

 அவற்றையெல்லாம் மகிழ்ச்சியோடு கொடுத்தார்கள், மன நிறைவோடு பகிர்ந்தார்கள்.

ஜமுக்காளமும் மடக்கு நாற்காலியும்

மரச் சாமான்கள் அன்று விலை அதிகம். வீட்டடுக்கான முக்கியப் பொருட்களில் அவற்றிற்கு முதலிடம் இல்லை.

 பெரும்பாலும் பெண்களுக்கு பாயே விரியும். கொஞ்சம் வசதி இருந்தால் ஜமக்காளம் விரிக்கப்படும்.

ஆண்கள் அமர ஒன்றிரண்டு இரும்பு மடக்கு நாற்காலிகள். சிறுவர்கள் தரையில் அமர வேண்டும்.

 வருகிற உருப்படி அதிகமானால் மர ஸ்டூல்கள் மேலிருக்கும் அரிசி டின்கள் இறக்கப்பட்டு துணியால் அவசரமாக சுத்தம் செய்யப்பட்டு இருக்கைகளாக மாறும்.

இன்னும் சிலர் கூடுதலாக வந்தால் அண்டை வீடுகளில் இருந்து நாற்காலிகள் இறக்குமதி செய்யப்படும்.

 விருந்தினர் சென்றதும் உடனடியாகத் திருப்பி ஒப்படைக்கப்படும். ஏணி என்பது ஒரு சில வீடுகளில் மட்டுமே இருக்கும்.

பரணில் இருக்கும் பாத்திரம் எடுக்கவும், கூரையில் ஏறி பழுது பார்க்கவும் வேண்டியபோது அடுத்தவர் ஏணி நமக்கு ஏற்றம் தர சித்தமாக இருக்கும்.

 மரணம் என்பது பெரும்பாலும் வயோதிகத்தில் வரும். இறந்தவரை சாய வைக்கிற நாற்காலிகூட இரவலாய்ப் போகிற இடங்கள் உண்டு.

நம்மிடம் போதிய நாற்காலிகள் இல்லையே என்று யாரும் வருத்தப்பட்டதில்லை. உடனே இரவல் வாங்கி வர மகன்கள் என்கிற இரு காலிகள் இருந்ததால்.

தோசை சுடுவதற்கு அம்மாக்கள் கைவசம் முக்காலி இருக்கும். விருந்தினர் அமர்ந்து சாப்பிட நான்கைந்து பலகைகள் இருந்தன.

தரையில் அமர்ந்து சாப்பிடும்போது அளவோடு சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல், மூட்டு வலியும் முழங்கால் வலியும் வராமல் எல்லோரும் திடமாக இருந்தார்கள்.

பக்கத்து வீட்டு அட்டிகை

அவசரம் என்றால் அடுத்த வீட்டினரிடம் மிதிவண்டியை இரவல் வாங்குவது உண்டு.

 திருப்பும்போது மரியாதைக்காக காற்றை நிரப்பித் தருவார்கள்.

சமையல் எரிவாயு திடீரெனத் தீரும்போது பக்கத்து வீட்டு உபயத்தால் அடுப்பைப் பற்ற வைப்பதும் உண்டு.

அன்று கத்தி முதல் சுத்தி வரை தேவையான பொருளை வழங்கிக்கொள்வதில் நட்பும், உரிமையும் சோம்பல் முறித்தன.

 கைக்கும் வாய்க்குமே வருமானம் நீடிக்கும் பரிதாப நிலை நடுத்தரக் குடும்பங்களில் நர்த்தனமாடியது.

பெண் பார்க்க வருகிறபோது பக்கத்து வீட்டு அட்டிகைகூட பெண்ணின் கழுத்தை அலங்கரிக்கப் பயன்படும்.

இரவல் என்பது சின்ன நகரங்களில் மட்டுமே இருந்தது.

 கிராமங்களில் யார் வேண்டுமானாலும் எந்த வேப்ப மரத்திலும் பல் துலக்க குச்சியை ஒடித்துக்கொள்ளலாம்.

 எந்த மோட்டார் ஓடினாலும் தங்கள் துணிகளை மூட்டையாக எடுத்துச் சென்று துவைத்துக்கொள்ளலாம்.

 ஓடுகிற தண்ணீரில் சிண்டுகள் சோப்புத் தேய்த்துக் குளித்துக்கொள்ளலாம்.

அதற்காகவே பெரிய தொட்டிகள். உழவர்கள் தங்கள் நிலத்தில் இன்றும் வாணிகம் செய்வதில்லை.

வருவோர் போவோர் ஆசையோடு மாங்காய் கேட்டால் காசு வாங்காமல் பறித்துத் தருவார்கள்.

 கரும்பு வயல்களில் அங்கேயே ஒடித்து ருசிக்கத் தடையில்லை. குழந்தைகளுக்குப் பால் என்று கேட்டால் பணம் பெற்றுக் கொடுப்பதில்லை.

இந்த அரிய பண்புகளால் சிற்றூர்களில் இன்னமும் மனிதம் ஜீவித்திருக்கிறது.

வீட்டுக்குள்ளேயும் இரவல் உண்டு. அண்ணன் வளர்ந்ததும் தம்பிக்கு அந்த சட்டை தானாக வரும்.

அக்காவின் தாவணி தங்கைக்குத் தாரை வார்க்கப்படும்.

ஐந்தாவது படிக்கும் அண்ணன் முழு ஆண்டுத் தேர்வு முடிந்ததும் நான்காம் வகுப்பை முடித்த தம்பிக்கு புத்தகங்களை அப்படியே ஒப்படைக்க, அவன் அதிலேயே படிப்பைத் தொடரும் சிக்கனங்கள் உண்டு.

 வசதியற்ற மாணவர்கள் மற்றோர் படித்த புத்தகங்களை அரை விலைக்கு வாங்கி அவற்றை வைத்துத் தேறுவது உண்டு. வண்ணப் பென்சில்கள் வீட்டின் பொதுவுடைமை.

 வேண்டியபோது அண்ணன் தம்பிகள் எடுத்துப் பயன்படுத்தி மீள வைப்பது மரபு.

இன்று பொதுவுடைமை என்பது இல்லத்துக்குள்ளேயே இல்லை.

 அண்ணனுக்கு வாங்குவதை தம்பிக்கும் தருவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் தகராறு.

 அவசரத்துக்கு என்று அடுத்தவரிடம் கேட்பது அநாகரிகம்.

அழுது எடுத்து எறிவார்களே தவிர, பகிர்ந்து மகிழ மாட்டார்கள்,

முருங்கைக்காய் அதிகம் காய்த்தால் பக்கத்தில் உள்ள கடைகளில் சென்று விற்க முயல்கின்றனர் ,

பற்றாக்குறை இல்லாத நிலை பல வீடுகளில் இன்று இருக்கிறது.

ஆனாலும் பெட்டியில் இல்லாத வறுமை உள்ளத்தை நிறைத்திருப்பது உண்மை !

Best regards,

Tuesday, 11 June 2019

நம்மவர்கள் கல்யாணம் இந்த நாளை விட அந்த நாட்கள்ளதான் சிறப்பாக கொண்டாடியிருக்கி றார்கள்.

நம்மவர்கள் கல்யாணம் இந்த நாளை விட அந்த நாட்கள்ளதான் சிறப்பாக கொண்டாடியிருக்கி றார்கள்.

1940 கால கட்டங்களில் 5 நாட்கள் கல்யாணம் கோலாகலமா நடக்கும்.

அந்த கால கட்டத்துல சத்திரமெலாம் கிடையாதே.

தெருவில் பந்தலை போட்டு அந்த அக்ரஹாரத்துல உள்ளவாளோட அகங்களையெல்லாம் கல்யாண ஏற்பாடு பண்றவா உபயோகம் பண்ணிப்பா.

நாம் 1970-களில் உள்ள கல்யாணங்களை பார்ப்போமா.

அப்ப பெண்ணாத்துலயோ, பிள்ளையாத்துலயோ கல்யாணம் நிச்சயம் ஆகிடுத்துன்னா தபால் கார்டு ஓரத்துல மஞ்சள் தடவி இரண்டு பக்கத்து சொந்தகாராளாத்துக்கும் உடனே தகவல் பறக்கும்.

இந்த காலம் மாதிரியா முகூர்த்த நேரத்துக்கு நெருங்கின சொந்தகாராளே வர மாதிரி.

ஆத்து வாசல்ல ஜலத்தை தெளிச்சு கோலத்தை போட்டா ஜே ஜேன்னு உறவுகாராள்ளாம் கூடிடுவா.

அதுலயும் பெண்ணோட/பிள்ளையோட அத்தைகளும், மாமாக்களும் முன்னாடி வந்து நிப்பா.

கல்யாணத்துல இவாளோட சீர்தான ரொம்ப முக்கியம் , பந்தா அதவிட தூள் பறக்கும்

அதுலயும் பொண்ணோட அத்தை கடிதாசு கிடைச்ச உடனே அடுத்த ரயிலை பிடித்து ஆத்துக்குள்ள வரச்சயே அண்ணா நீ போட்ட கடிதாசு கிடைச்ச உடனயே ஆத்துல போட்டது போட்டபடி பறந்து வந்துட்டேன்.

 நம்ப அம்மாவும், அப்பாவும் இருந்தா முதல் பேத்திக்கு கல்யாணம்னா எவ்வளவு சந்தோஷப்பட்டுருப்பான்னு கண்ணை தொடச்சுண்டு ஸ்வாதீனமா ஒரு மாசத்துக்கு முன்னாடியே வந்துடுவா.

இப்ப மாதிரியா அந்த கால கட்டத்துல ஸ்டார் கல்யாண மண்டபங்கள். ஒப்பந்த அடிப்படைல ஆட்கள்.

சீர் பக்ஷணங்கள் பண்றதுக்காகவே ஊர்ல இருக்கற அத்தை, மாமி, சித்தி, பாட்டி உறவுகளெல்லாம் கூடிடுவா.

பக்ஷணம், அப்பளம் பண்றச்சே அவா அடிக்கற கூத்தெல்லாம் பார்க்க கண்கள் கோடி வேணும்.

சாப்பாட்டு கடை ஆகியாச்சுன்னா கல்யாணத்துக்கு கடைசி 15 நாளைக்கு முன்னாடி வரைக்கும் கடைகளுக்கு போய் பாத்திரம் பண்டம், மளிகை சாமான்களுக்கு, துணிமணிகள் இத்யாதிகளுக்கெல்லாம் ஆத்துல உள்ள புருஷாளும், சொந்தகார மனுஷாளும் களத்துல இறங்கி வேலை செய்வார்கள்.

இந்த காலம் மாதிரி மாப்பிள்ளையாத்துகாரா ளுக்கும், அவா சொந்த/நட்புகளுக்கும் ஹோட்டல்ல அறைகள் போட மாட்டாளே. சுத்தி இருக்கற அக்கம் பக்கத்து மனுஷாளே தன்னாத்து கல்யாணம் மாதிரி அவா அவாளோட அகங்களையே சுத்தம் பண்ணி சந்தோஷமா கொடுப்பார்கள்.

நினைச்சு பார்த்தா கூட அந்த பொற்காலங்கள் திரும்பி வராதே.

கல்யாணத்துக்கு முதல் நாள் பிள்ளையாத்துகாரா பிள்ளைக்கு யாத்ரா தானம் பண்ணி முடிக்கற துக்குள்ள பொண்ணாத்துல வண்டி ஏற்பாடு பண்ணி அவாத்துக்கு இவா ஒரு தம்பதிகளோட அனுப்பி வச்சுடுவா. வெளியூரா இருந்தா ரயில்வே ஸ்டேஷனுக்கோ/பஸ் நிலையத்துக்கோ வண்டி அனுப்பிடுவா.

பிள்ளையாத்துகாரா சத்திரத்துக்கு வந்த உடனே மாப்பிள்ளைக்கு ஆரத்தி சுத்தி விரதத்துக்கு அழைச்சுண்டு போயிடுவா.

கல்யாண சமையல்லாம் காண்ட்ராக்ட் கிடையாதே. மளிகை, காய்கறிகள்ளாம் மொத்தமா வாங்கி வச்சு உக்கிராண அறையில் பத்திரமா வச்சு அதை பாத்துக்க பெண்ணாத்துல உள்ள உறவுகாராள்ளாம் மாத்தி, மாத்தி ட்யூட்டி போட்டுண்டு பரிஜாரகாளுக்கு வேணும்கறதை எடுத்து கொடுப்பார்கள்.

இதுக்கு அசாத்ய பொறுமை வேணும்.

கார்த்தால பிள்ளையாத்துலயும், பெண்ணாத்து லயும் விரதம் முடிஞ்சு சாப்பாடு ஆன பிறகு சாயந்திரம் நிச்சயதார்த்தம்தான்.

அந்த காலத்துல இந்த காலம் மாதிரி கல்யாணத் துக்கு முன்னாடி நிச்சயதார்த்தம்னா பெரிய ஹால்களில் வைக்கற பழக்கம் கிடையாது.

 பிள்ளையாத்துலதான் பண்ணுவா.
அதுக்கு பெண்ணை கூட்டிண்டு போக மாட்டா.
அத ஒப்புதல் தாம்பூலம்னுதான் சொல்லுவா.

கல்யாயாணத்துக்கு முதல் நாள் விவாஹ பத்திரிக்கை வாசிச்சு பண்றதுதான் ஒரிஜினல் நிச்சயதார்த்தம்.

அந்த கால கட்டத்துல ரிசப்ஷன் கூட ரொம்ப அத்தி பூத்தா மாதிரி மேல்மட்டத்துகாராதான் பண்ணுவா.

அதுவும் கல்யாணம் முடிஞ்சு சாயந்திரம்தான் வச்சுப்பா.

நிச்சயதார்த்தம் முடிஞ்ச உடனே கோயிலுக்கு போய் அர்ச்சனை பண்ணிட்டு திறந்த கார்ல மாப்பிள்ளை ஜான்வாசத்துல வருவார்.

முன்னாடி நாதஸ்வர கச்சேரி, கேஸ் லைட்டோட கோலாகமா ஜான்வாசம் நடக்கும்.

நிச்சயதார்த்த விருந்து முடிஞ்ச பிறகு ஒரு பக்கம் சீட்டு கச்சேரி, இன்னொரு பக்கம் முகூர்த்த தேங்காய் பைகளை பொண்ணாத்துகாரா போட்டுண்டு இருப்பா.

அது மாதிரி பிள்ளையோட அத்தை, மாமா பண்ற ஜபர்தஸ்கள் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கும்.

அதுவும் பிள்ளையோட அத்தை, பெண்ணோட அம்மா, அப்பாட்ட இதோ பாருங்கோ மாமா எங்க பக்கத்து வயசான பெரியவாள்ளாம் காசிக்கு போயிட்டு வந்துருக்கா.

அவாளுக்கு சேஷமில்லாம மடி சமையலுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ.

அப்பறம் நானே உங்களன்ட கேக்கனும்னு நினைச்சேன். அது என்ன முகூர்த்த சாப்பாட்டுல இலைக்கு போட்ட குஞ்சாலாடு க்ருஷ்ண ஜயந்திக்கு உருட்டின உப்பு சீடை சைஸ்ல இருக்கே.

குழந்தை கையால குஞ்சாலாடை பிடிக்க சொன்னேளாக்கும்னு தோள்பட்டைல நக்குனு இடிச்சுப்பா.

பிள்ளையோட மாமா காபி கழனி ஜலமாட்டம் இருக்கு, வெத்தலை வாழை இலை சைசுக்கு இருக்குன்னு இடுப்புல உள்ள பஞ்சகச்சம் நழுவறது தெரியாம ஆகாசத்துக்கும், பூமிக்கும் தை தைன்னு குதிப்பார்.

இந்த களேபரங்களையெல்லாம் தாண்டி மறுநாள் காசியாத்திரைக்கு மாப்பிள்ளை மங்கள ஸ்நானம் பண்ணிட்டு
அத்தை கண்ணுக்கு மையிட்டு அலங்காரம் பண்ணி மாப்பிள்ளை மயில்கண் வேஷ்டி பஞ்சகச்சத்தோடு கையில் விசிறி, வேத புஸ்தகம் இத்யாதிகளோடு காசியாத்திரைக்கு புறப்படுவார்.

சுமங்கலி பொண்டுகள்ளாம் தசரத நந்தன தானவ மாதர பாடுவா.

சாஸ்திரிகள் சொல்றதை பெண்ணோட தகப்பனார் மாப்பிள்ளையிடம் காசி யாத்திரை போகாதீங்கோ, எங்கள் குமாரத்தியை கன்னிகாதானம் பண்ணித்தரோம் அவளை பாணிக்ரஹணம் பண்ணிக்கனும்னு சொல்லி மாலை மாத்தற நிகழ்ச்சிக்கு அழைப்பார்.

இந்த மாலை மாத்தற சம்ப்ரதாய்த்துல பெண்ணையும், மாப்பிள்ளையும் மாமாக்கள் தூக்கிண்டு ஓடுவாளே அப்பப்பா செம கலாட்டாதான்.

பெண்கள்ளாம் சுத்தி நின்னுன்டு மாலை மாற்றினாள் கோதை மாலை சாத்தினாள், மன்மதனுக்கு மாலையிட்டாயேன்னு பாட்டுகளை பாடி கரகோஷம் பண்ணுவா.

இது முடிஞ்சு கன்னூஞ்சலில் பெண், பிள்ளையை உட்கார வைத்து பால், பழம் கொடுத்து பச்சைபிடி சுற்றி

கன்னூஞ்சல் ஆடினாள் காஞ்சனமாலை மன மகிழ்ந்தாள், கந்த மலர் மீதுரையும் பாட்டுகளை பாடி மஞ்சன நீரை சுழற்றி ஹாரத்தி எடுத்து முகூர்த்த மேடைக்கு அழைத்து செல்வார்கள்.

பெண்ணுக்கு அப்பா மடில உட்கார வச்சு கூறைப் புடவையை கொடுத்து நாத்தனார் அவளை மடிசார் கட்ட அழைச்சுண்டு போவா.

பெண்ணை அப்பா மடில உட்கார வச்சுண்டு கன்னிகாதானம் பண்ணி கொடுக்கறச்சே அவரோட மடியை விட மனசு ரொம்ப கனக்கும்.

சும்மாவா விதையை இல்லை கன்னி என்னும் வ்ருக்ஷத்தையே வேரோட பெயர்த்து எடுத்து இன்னொரு குடும்பத்துக்கு கன்னிகாதானமா கொடுக்கறாரே.

இந்த கன்னிகாதானத்துலதான் கொடுக்கறவா கையும், வாங்கறவா கையும் சமமா இருக்கு.

எந்த தானத்துக்கும் இல்லாத விசேஷம் கன்னிகானத்துக்கு மட்டும்தான் உண்டு.

கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் இருவருமே சமமான பலனை அடைகிறார்கள்.

மாங்கால்யதாரணம், சப்தபதி சம்ப்ரதாயங் கள்ளாம் முடிஞ்ச உடனே இரண்டு பக்கத்து உறவு/நட்புகளெல்லாம் தம்பதிகளோட அம்மா, அப்பாவிடம் என்ன மாப்பிள்ளை வந்தாச்சா, மாட்டுப்பொண் வந்தாச்சான்னு சந்தோஷத்துல அவாளை ஆலிங்கனம் பண்ணிப்பா.

 தாத்தா பாட்டிகள்ட்ட பேரன் ஆம்படையா வந்தாச்சா, பேத்தி ஆம்படையான் வந்தாச்சான்னு விஜாரிச்சு ஆசீர்வாதம் வாங்கிப்பா.

பாட்டி, தாத்தாக்களெல்லாம் இதை கண்ல ஆனந்த பாஷ்பம் பொங்க ஆனந்தமா ரசிச்சுண்டுருப்பா.

சப்தபதி ஆனபிறகுதான் எல்லாருமே ஓதியிட்டு ஆசீர்வாதம் பண்ணுவா.

முகூர்த்த சாப்பாடு முடிஞ்சு கிளம்பறவாளுக் கெல்லாம் தாம்பூல பை, சீர் பக்ஷணத்தோட மரியாதை பண்ணி விடை கொடுப்பா.

சாயந்திரம் நலங்கு கலாட்டா அமர்க்களமா இருக்கும்.

இரண்டு பக்கத்து மனுஷாளும் பாட்டு பாடியே சண்டை போட்டுப்பா.

பிள்ளையோட அத்தை கருநாகப் பழம் போல கருத்த பெண்ணுக்கு எலுமிச்சம் பழம் போல எங்காத்து பிள்ளைனு பாடுவா.

 அதற்கு பதிலடி கொடுக்க பெண்ணோட மாமி உடனே எங்கள் சம்பந்தி சாப்பிடவே மாட்டாள் வெகு சங்கோஜகாரி இட்டிலியில் இருநூறும், ஜாங்கிரியில் முன்னூறும், மைசூர்பாகில் நானூறும், தயிர் வடையில் ஐநூறும் சாப்பிட என்று பதிலடி கொடுக்க சபையே அதிரும்.

அன்னிக்கு ராத்திரி மாப்பிள்ளைக்கு வெள்ளித் தட்டில் பால் சாதம் சாப்பிட சொல்லுவா.

வெள்ளித் தட்டை அலம்பி வைக்கற மச்சினிக்கி பதில் சம்பாவனை பண்ணுவா.

அப்ப பெண்ணோட அத்தை பெண்ணோட அம்மாட்ட காதுல மெதுவா சொல்லுவா.

 காமு பாத்தியோன்னோ நம்ப இத்தனை சீரை பண்றோம். அது நொட்டை, நொள்ளைம்பா.

ஆனா இவாளுக்கு மச்சினிக்கும், மச்சினனுக்கும் பதில் சம்பாவணை பண்றச்சே கை கரணா கிழங்கா போயிடும்னு மெதுவா நக்கலடிப்பா.

முகூர்த்தத்துக்கு அன்னிக்கு இரவே சாந்தி முகூர்த்தத்தை ஏற்பாடு பண்ணிடுவா.

 சோபன அறையை நன்னா பூஜோடனையால அலங்காரம் பண்ணி, மெல்லிய ஊதுபத்தி மணம், பால் பழம், பக்ஷண வகைகளோடு இந்திர லோகம் மாதிரி ஜோடனை இருக்கும்.

முதலில் ஒரு வயதான தம்பதிகள் படுக்கையில் சாஸ்திரத்துக்கு உட்கார்ந்து எழுந்திருப்பார்கள்.

அப்புறமா தம்பதிகள் சோபன அறைக்கு போன பிறகு வெளில பெண்கள் கூட்டமா ஒக்காத்துண்டு பள்ளியறை பாடல்களை பாடுவார்கள்.

மறுநாள் காலையில் மச்சினன் படுக்கையை சுருட்டின பிறகு படுக்கையின் அடியில் அவனுக்கு சீர் பணம் வைத்திருப்பார்கள்.

கார்த்தால பாலிகையெல்லாம் தெளிச்சு முளை விட்ட நவதான்ய கூடையை சுத்தி வந்து பெண்களாம் கும்மி பாட்டுக்களை பாடுவார்கள்.

இரண்டு நாள் விருந்து பலமா இருந்ததால கட்டுசாத கூடை சாப்பாடுக்கு முன்னாடி விருந்துல மிளகு குழம்பு, பருப்புத் துகையலோட பத்திய சாப்பாடு தேவாம்ருதமா இருக்கும்.

விருந்தெல்லாம் ஆனபிறகு சம்பந்தி மரியாதை முடிஞ்சு பெண் புக்காத்துக்கு புறப்படறச்சே பெண்ணோட அம்மா புடவை தலைப்பால முகத்தை மூடிண்டு அழறச்சே எல்லாருக்குமே மனசு கலங்கி போயிடும்.

அப்பாவுக்கு வார்த்தைகளை வெளிப்படுத்த முடியாம கண்ல ஜலம் பிரவாகமா இருக்கும்.

அப்பதான் பிள்ளையோட அம்மா, பெண்ணை பெத்தவாகிட்ட மாமா, மாமி கல்யாணத்துல நாங்க ஏதாவது தெரியாத கோபத்துல பேசியிருந்தோம்னா எங்களை மன்னிச்சுடுங்கோ

 எல்லாம் இவரோட உறவுகாரா சுபாவத்துக்காக த்தான் அப்படி நடந்துண்டோம்.

இனிமே உங்காத்து பொண்ணு எம் பொண்ணு மாதிரின்னு சொன்ன உடனே

மாமா, மாமி உடனே நன்னாருக்கு நீங்க சொல்றது கல்யாணம்னா இதெல்லாம் சகஜம்தான். இதுக்கு போய் மன்னிப்பு கேட்கறதாவதுன்னு அவாள சமாதனப் படுத்தி சந்தோஷமா வழியனுப்பி வைப்பா.

மிளகாய்பொடி இட்லி, புளியோதரை, தயிர்சாதம், வற்றல், வடாம், ஊறுகாய் கட்டுசாதங்களோடும், கறிகாய்கள், சீர் பக்ஷணங்களோட மாட்டுப்பெண் மணக்க மணக்க புக்காத்துக்கு வருவா.

அந்த கட்டுசாத கூடை இத்யாதிகள் இருக்கே. ஆஹா அது எந்த தேவலோக அமுதத்துக்கும் ஈடு இணையில்லை.

எனக்கு என்னவோ 1980 - 2000 வரை உள்ள கால கட்டத்துல உள்ள தம்பதிகளோட வாழ்க்கை அமோகமா இருந்துருக்குன்னு தோணறது.

கணவனும், மனைவியும் ஒத்தொருகொருத்தர் நன்னா புரிஞ்சுண்டு அனுசரணையா தாம்பத்யத்தை ரசிச்சு வாழ்ந்துருக்கா.

இன்னும் வாழ்ந்துண்டும் இருக்கா.

மேலே குறிப்பிட்ட கல்யாணங்கள் மாதிரி இனிமே இந்த தலைமுறைகளில் நடக்குமா.

ஆடம்பரம் இல்லாவிட்டாலும் அமோகமா நிஜமான சுற்றமும்/நட்பும் சூழ நடந்த அந்த நாள் கல்யாணங்களை நினைத்துப் பார்த்தால் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், மறு பக்கம் நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை நினைதுப் பார்த்தால் மனம் வேதனைப்படுகிறது.

பசுமை மாறா நினைவுகள்.

Best regards,

Monday, 10 June 2019

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:

படிக்கும் போது பாருங்கள்,  உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...

சம்பவம்-1 👇👇👇👇👇👇

24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..

மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"

அவனருகில் இருந்த அவனது அப்பா

சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்

நம்மோடு வருகின்றன..; என்றான்...

இதைக்கேட்டு தாங்க முடியாத

தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்

"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"

 அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்

கொண்டே சொன்னார்...

"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...

என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு

தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

அன்பு நண்பர்களே.,  உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை

இழந்துவிடலாம்.

சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.

'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்

எடை போடவேண்டாம்.

சம்பவம்-2    👇👇👇👇👇👇👇👇

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..

 அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,...

பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..

தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...

உடனே அந்த சிறுமி, தாயிடம்

சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....

நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..

அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.

அடுத்தவருக்கு போதுமான அளவு

இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.

நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.

எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..

மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.

சம்பவம்-3  👇👇👇👇👇👇

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை

விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.

வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்."

 ஒரு கட்டு கீரை என்ன விலை....?""

 "ஐந்து ரூபாய்"

ஐந்து ரூபாயா ....??? மூன்று ரூபாய் தான்  தருவேன்.

மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"

"இல்லம்மா வராதும்மா"

அதெல்லாம் முடியாது.

 மூன்று ரூபாய் தான்

பேரம் பேசுகிறாள் அந்த தாய்.

பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு

"மேல ஒரு ரூபாய் போட்டு

கொடுங்கம்மா" என்கிறாள்"

முடியவே முடியாது. கட்டுக்கு  மூன்று ரூபாய்தான். தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.

கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு

"சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு  பன்னிரண்டு ரூபாயை  வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.

"என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க"

இல்லம்மா போய்தான் கஞ்சி

காய்ச்சிணும்"

"சரி. இரு இதோ வர்றேன்." என்று

கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..

திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"

என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.

எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..

"ஏம்மா ஐந்து ரூபாய்க்கு

பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு

வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு

முப்பது ரூபாய் வருதும்மா.....?

என்று கேட்கஅதற்கு அந்த தாய்,

"வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று கூறினாள்.

இது தான் உண்மையில் மனித நேயம் ......

சம்பவம் 4 👇👇👇👇👇👇👇

 மாலையில் நடைப் பயிற்சியை

முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்

வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழியில் ஒரு

கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.

சற்று இருட்டியதால் இருவரும்

வேகமாக நடக்கத் தொடங்கினர்...

 திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்

ஓடத்தொடங்கினர்.

கணவர் வேகமாக ஓடினார்.

கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து

முடிக்கும் போது தான் மனைவி

பாலத்தினை வந்தடைந்தார்.

மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து

வந்ததால் மனைவி பாலத்தை கடக்க

பயப்பட்டாள்.

அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...

 இருட்டில் எதுவும் தெரியவில்லை.

மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...

தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு

கணவனை அழைத்தாள்.

கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.

அவளுக்கு அழுகையாய் வந்தது.

இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.

மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.

பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு

இக்கட்டான நிலமையில் கூட உதவி

செய்யாத கணவனை நினைத்து

வருந்தினாள்.

ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...

 கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.

அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்

கொண்டிருந்தார்.

சில சமயம் கணவர் குடும்பத்திற்கு

எதுவும் செய்யாமல் மௌனமாக

இருப்பதாக தோன்றும்...

ஆனால்

உண்மையிலேயே அவர் தன்

குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்

கொண்டுதான் இருப்பார்.

தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.

வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.

தூரத்தில் இருப்பது தெளிவாக

தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.

இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?

நாம் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகவேண்டும்.

 அப்போது தான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடியும்.

வாழ்க்கை பாடத்தில்  நிறைய கற்று கொள்ளலாம்.

எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.

"  Be Positive Always"படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:

படிக்கும் போது பாருங்கள்,  உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...

Best regards,