வட்டக்கல்லை தோளில் தூக்கிய பின்னரே திருமணம் என்ற நிலையில் இருந்த, சமூகத்தில் இன்று, சின்ன பிரச்னை ஏற்பட்டாலும் சோர்ந்து போகும் இளைய தலைமுறை உருவாகி விட்டது.
இந்த சூழலில், வீட்டில் அனைத்து வேலைகளையும் தானே முன்வந்து செய்யும் பாட்டிக்கு, 99 வயது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? கேட்பதற்கு அதிசயமாக இருந்தாலும், அது தான் நிஜம். அம்பத்தூர், திருவேங்கடபுரத்தில் உள்ள சாவித்ரி அம்மாள் தான் அந்த வயதான தேவதை. பேரனுக்கும் பேரன் பார்த்து விட்ட இந்த பாட்டி தான் அவரது வீட்டின் தூண்.
ஈடுபாடு மிகுந்த தினசரிகள்:இந்த தள்ளாத வயதிலும், சாவித்ரி அம்மாள் பாட்டி வாழ்வின் ஒழுங்கு முறைகளை கடைபிடித்து வருகிறார். அதிகாலை 5 மணிக்கு எழுந்திருக்கும் அவர், ஒரு மணி நேரம் ஜெபம் செய்கிறார். பின், 7 மணியிலிருந்து 8 மணி வரை, தன்னுடைய துணிகளை தானே துவைத்து காயப்போடுகிறார். 9 மணி முதல் 10 மணி வரை, சமையலுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்கிறார். காய் நறுக்குவது, வெங்காயம் வெட்டுவது என அனைத்தையும் பொறுமையுடன் செய்கிறார்.
வீட்டிற்கான தினசரி உணவை அவரே முடிவு செய்கிறார். 10 மணிக்கு முழுச் சாப்பாடு சாப்பிட்டவுடன், தினசரி புறட்டுவது, அதன் பிறகு சிறிது உறக்கம் என, அவருடைய தினசரி வாழ்வு நேர்கோடாக செல்கிறது.மதிய நேரங்களில் ஆன்மிக வாசிப்பில் ஈடுபடும் சாவித்ரி அம்மாள், பின், கடவுள் குறித்து பாடல்கள் எழுதுகிறார். அப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் இவரிடம் ஆசிர்வாதம் பெற்ற பின்னரே தேர்வு எழுதச் செல்கின்றனர்.
அப்பகுதியில் புதுமணத் தம்பதிகள், இவரிடம் ஆசி பெற்ற பின்னரே, அவர்களது வீட்டிற்குச் செல்கின்றனர். அனைவரிடமும் ஆன்மிகம் குறித்து போதிக்கிறார். கேட்கும் திறன் இழந்துள்ளதால், கையோடு வைத்திருக்கும் சிலேட்டில், பொதுமக்கள் தங்கள் குறைகளை எழுதி ஆலோசனை பெற்றுச் செல்கின்றனர்.
சத்தான உணவே காரணம்:இயற்கை உணவு முறைகள் தான், அவருடைய ஆரோக்கியத்திற்குக் காரணம் என்கின்றனர், அவருடைய வாரிசுகள். கடந்த, 50 ஆண்டுகளாக காலையில் முழுச் சாப்பாடும், மதியத்திலும் இரவிலும், வெறும் பாலை மட்டுமே அருந்தி வருகிறார். 50 வரையில், தான் பயன்படுத்திய சுத்தமான நிலத்தடி நீரும், சத்தான காய்கறிகளும் தான் தன்னை இந்த வயதிலும் திடமாக செயல்பட உதவியதாக, தன்னுடைய வாரிசுகளிடம் தெரிவித்திருக்கிறார். உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன என்று கேட்டால், வெட்கம் பரவிய சிரிப்பு அவர் முகத்தில் படிகிறது.