Wednesday, 1 May 2013

மே தினம் வந்தது எப்படி?

தொழிலாளர் தினம் – மே 01


மே தினம் வந்தது எப்படி?
 
உங்கள் வீட்டில் வேலைக்குச் செல்லும் பெரியவர்கள் மே 1 ஆம் தேதி விடுமுறை என்று வீட்டில் இருப்பர். மே தினம் என்றும் தொழிலாளர் தினம் என்றும் கூறக் கேட்டிருப்பீர்கள். இந்த மே தினம் வந்தது எப்படி? உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே முதல் தேதியை மே தினம் என்றும் தொழிலாளர் தினம் என்றும் கொண்டாடி மகிழ்கிறார்கள். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதற்கு எதிரான குரல்கள் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (Chartists). சாசன இயக்கம் 6 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை என்ற கோரிக்கை.
1830 ஆம் ஆண்டு, பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் உழைத்து வந்தனர்.
இதனை எதிர்த்து அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1834 இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற வாசகத்தை முன்வைத்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால், இது தோல்வியில் முடிந்தது. ஆஸ்திரேலியா விலுள்ள மெல் போர்னில் கட்டிடத் தொழிலாளர்கள் 1856 இல் முதன்முதலாக 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்தனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர்.

1896 ஏப்ரலில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறுபிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளர் களின் நிலைமை குறித்து விரிவாக அலசினார். மேலும், ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டம் அரசியல் போராட்டமாக எழுச்சி கொள்ள வேண்டும். என்பதையும் வலியுறுத்தினார். தொழிலாளி களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது எனலாம்.

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் உருவாக்கப் பட்டது. இந்த இயக்கம் 1886, மே 1 ஆம் நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இந்த இயக்கமே மே தினம் தோன்றக் காரணமாக இருந்தது எனலாம்.

1889 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் சோசலிசத் தொழிலா ளர்களின் சர்வதேசத் தொழிலாளர் பாராளு மன்றம் கூடியது. 18 நாடுகளிலிருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேரப் போராட் டத்தை முன்னெடுத்துச் செல்வது என்று முடிவு செய்தனர். 1890 மே 1 ஆம் நாள், அனைத் துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டது. இந்த அறைகூவலே, மே முதல் நாள் சர்வதேச தொழிலாளர் தினமாக - மே தினமாக வருவதற்குக் காரணமாக அமைந்தது. அடுத்த ஆண்டிலிருந்து உலக நாடுகள் பலவற்றில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
மே தினமாக - தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுவதற்கு முன்பே மே முதல் நாளை மக்கள் எப்படியெல்லாம் கொண்டாடியுள்ளார்கள் என்று தெரிந்து கொள்வோம்.

அய்ரோப்பியர்கள் மே தினம் என்பதை அறுவடைத் திருநாளாகக் கொண்டாடியுள் ளார்கள். முந்தைய நாள் இரவு இளைஞர்கள் கேரல் பாடல்களைப் பாடி மகிழ்ந்துள்ளனர். சில இடங்களில் நாடகங்கள் நடத்தப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் அழகிப் போட்டியும் நடனமும் நடத்தியுள்ளனர். இளைஞர்கள் ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மே தின அரசர், மே தின அரசி என்று பெயர் வைத்து அன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக்கியுள்ளனர்.

பசுமையின் விழாவாகவும் இளைஞர்கள் மே தினத்தைக் கொண்டாடியுள்ளார்கள். சில நாடுகளில் கோடைக் காலம், இளவேனிற் காலத்தை வெற்றிகண்ட விழாவாகவும் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள். இப்படி, விழாக் களாகக் கொண்டாடும் வழக்கம் எப்போது எப்படித் தோன்றியது என்பது தெரியவில்லை. இது, நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் விழாவாகக் கொண்டாடி யதுபோல் தெரிகிறது. டுருய்டுகளின் மர வழிபாட்டிலிருந்து மே தினம் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. சிலர் இதனை, பண்டைய கால எகிப்திலும் இந்தியாவிலும் கொண்டாடப்பட்ட வசந்த கால விழாக்களுடன் தொடர்புப்படுத்து கின்றனர். ரோமர்களால் வெற்றி கொள்ளப்பட்ட ஆங்கிலேயரும் மற்றவர் களும் ரோமர் திருவிழாவான புளோராலியாவிலிருந்து மே தினத்தை உரு வாக்கினர். பிரான்ஸ் நாட்டில் மேதினம் சமய உணர்வோடு கடைப்பிடிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் வசந்தத்தின் வருகையை இளை ஞர்கள் நடனமாடிக் கொண்டாடியதோடு பரிசுப் பொருள் களைக் கொடுத்தும் மகிழ்ந்துள்ளனர். இப்படி, பல கதைகள் மே தினம் என்பதற்கு இருப் பினும், இன்று தொழிலாளர் தினம் என்றே அனைத்து மக்களாலும் கொண்டாடப் பட்டு வருகிறது. கிறித்தவத் திருச்சபைகள் மே தினத்தைக் கொண்டாடுவதில்லை என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், முதல் கிறித்தவச் சபையான கத்தோலிக்கத் திருச்சபைத் திருக்குடும்பத்தில் தொழிலாளியான சூசையப்பரின் (ஜோசப்) விழாவாக மே தினம் பின்பற்றப்பட்டு வருகிறது.
வசந்த கால விழா என்று கூறினாலும், வசந்த காலத்தைத் தங்கள் வியர்வையால் உருவாக்கும் தொழிலாளர் விழா என்று சொன்னாலும் மே தினம் மகிழ்ச்சிக்குரிய விழாவாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.

தந்தை பெரியாரும், சிங்காரவேலரும் தமிழகத்தில் மே தினத்தைக் கொண்டாடிய பெருமைக்குரியவர்கள். சென்னையில் மே தினத்தை நினைவுபடுத்தும் விதமாக அதற்கு நினைவுச் சின்னம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்.இந்த நினைவுச் சின்னம் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் உள்ளது. ஒவ்வொரு மே நாளன்றும் தொழிலாளர்கள் இங்கு வந்து மலர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இலங்கை மக்களுக்கு மே தினம் என்றவுடனேயே நினைவுக்கு வருவது அதிமேதகு முன்னால் ஜனாதிபதி பிரேமதாஸ அவர்கள். இலங்கை அரசியல் வரலாற்றில் தனக்கென சிறப்பான ஆட்சியை நடாத்தி பலரது மனங்களில் இன்றும் புனிதவானாக திகழும் இவர் மே தினம் தொழிலாளர் ஊர்வலத்தில் தானும் ஒருவராக நாட்டின் தொழிலாளர்களின் தோளோடு தோல் நின்று தொழிலாளர் ஊர்வலத்தில் கலந்து சென்றபோது மனித வெடிகுண்டொன்றினால் கொல்லப்பட்டார். அன்றையதினம் இலங்கை மக்கள் அனைவருக்குமே துக்க தினமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
(பிரேமதாஸ போன்ற அரசியல்வாதிகளை இன்று எங்கு காணமுடிகிறது?)