மாரடைப்பைத் தவிர்க்க எளிய வழிகள்
 
சேச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்பு ஆகியவை (ரத்தத்தில் 
கொழுப்பு அளவை அதிகரிப்பதன் மூலம்) கொரனரி மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை 
அதிகப்படுத்தும். அதனால், இவற்றையும் தவிர்க்க வேண்டும். இறைச்சி, பால் 
பொருட்கள், தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய் ஆகியவற்றில் சேச்சுரேட்டட் 
கொழுப்பு அதிக அளவில் உள்ளது. பொரிக்கப்பட்ட துரித உணவுகள், பேக்கரி 
பொருட்கள், அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளில் அதிக அளவில் டிரான்ஸ் 
கொழுப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிக அளவில் மது அருந்துவது 
உடல்பருமனுக்கு வழிவகுக்கிறது. மேலும், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் 
அதிகரிக்கிறது. எனவே, மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
 
 உடற்பயிற்சி
 
 ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய 
வேண்டும். தொடர் உடற்பயிற்சிகள் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கின்றன. 
உங்களுக்குரிய ஆரோக்கியமான எடையை சரிவரப் பராமரியுங்கள். இதய நோய்களை 
ஏற்படுத்தும் உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை 
அளவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உடற்பயிற்சி அவசியம்; மன அழுத்தத்தைக் 
குறைக்கவும் உடற்பயிற்சி உதவும். உங்கள் உடல் எடை ஆரோக்கியமானதுதானா என்பதை
 பாடி மாஸ் இன்டெக்ஸ் மூலம் கணக்கிடலாம். பி.எம்.ஐ. புள்ளிகள் 25 அல்லது 
அதற்கு மேல் இருந்தால், உஷாராகிவிட வேண்டும்.
 
 பெரியவர்களுக்கு 
உடல் எடை கூடுகிறது என்றால், அது பெரும்பாலும் தசை எடை கூடுதலாக இருக்காது,
 கொழுப்பு அதிகரிப்பாகத்தான் இருக்கும். அதிக அளவிலான உடல் எடை என்பது உயர்
 ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பது, சர்க்கரை நோய் 
போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுப்பதுடன் மாரடைப்புக்கான வாய்ப்பையும் 
அதிகரிக்கும். குறைந்த அளவிலான உடல் எடைக் குறைப்புகூட மிகப் பெரிய பலனை 
அளிக்கும். உங்கள் எடையை வெறும் 10 சதவீதம் குறையுங்கள், அது உங்கள் ரத்த 
அழுத்தத்தைக் குறைப்பதுடன், ரத்தத்தில் கொழுப்பு அளவையும் குறைத்து, 
சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
 
 புகை பிடிக்காதீர்கள்
 புகை பிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதை உடனடியாக 
நிறுத்துங்கள். மாரடைப்பு ஏற்பட மிக முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருப்பது
 புகையிலைப் பழக்கம். சிகரெட் புகையில் உள்ள நிகோடின் என்ற நச்சு ரத்தக் 
குழாயினை சுருக்கி, இதயத் துடிப்பு எண்ணிக்கை மற்றும் ரத்த அழுத்தத்தை 
அதிகரிக்கச் செய்கிறது. சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு ரத்தத்தில் 
ஆக்சிஜனுக்கு மாற்றாகப் போய் உட்கார்ந்து கொள்கிறது. இதனால், உடலுக்குத் 
தேவையான போதுமான ஆக்சிஜன் கிடைப்பதற்காக (அதிகம் ரத்தம் செலுத்தும்படி) 
இதயம் கூடுதலாக வேலை செய்யவேண்டி இருக்கிறது. நீங்கள் புகைப்பதை 
நிறுத்தினால் அடுத்த ஓர் ஆண்டுக்குள் ஆச்சரியப்படத்தக்க வகையில் இதய 
நோய்க்கான வாய்ப்-பு-களும் குறைந்துவிடும். புகைப்பழக்கம் இல்லாத, ஆனால் 
ஒருவர் புகைத்துவிட்ட காற்றை சுவாசிப்பவருக்கும் கூட பாதிப்பு ஏற்படும். 
நீங்கள் புகைப்பதால், புகைப்பழக்கமே இல்லாத உங்கள் நண்பர்கள், 
குடும்பத்தினரும்கூட பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
