Sunday, 26 May 2013

பொறியியல் மற்றும் மருத்துவம் தாண்டி எத்தனையோ படிப்புகள்?

பொறியியல் மற்றும் மருத்துவம் தாண்டி எத்தனையோ படிப்புகள்?
-

“பத்தாவதுல 472 மார்க் எடுத்தான்...இப்பவும் டோட்டல் 1043 இருக்கு...ஆனா கட் ஆஃப் சரியில்லை....என்ன செய்யறது?” என்ற ரீதியில் புலம்பிக் கொண்டிருக்கும் யாரையாவது கடந்த இரண்டு நாட்களில் பார்த்தீர்களா? நான் பார்த்தேன். ஒன்றில்லை ஏகப்பட்ட ஆட்களை.

பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்கிவிட்டு பன்னிரெண்டாம் வகுப்பில் அதே அளவுக்கு பிரகாசிக்க முடியாமல் போவது சர்வ சாதாரணம்தான். அதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருந்தாலும் அடிப்படையான காரணம் ‘உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்கும்’ கான்செப்ட்தான். பத்தாம் வகுப்பில் அதிகமான மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு அவர்களையும் அறியாமல் ஆழ்மனதில் 'Over confidence' உருவாகியிருக்கும். அதை தூபம் போட்டு சுற்றியிருப்பவர்கள் ஊதிவிடுவதால் அதே ‘Over confidence' அடுத்த இரண்டு ஆண்டுகளில் கவிழ்த்து குப்புற போட்டுவிடுகிறது என்கிறார்கள் சில மனோவியல் நண்பர்கள். இது பற்றி தனியாக அலசுவோம்.

இப்போதைக்கு கவிழ்ந்தாகிவிட்டது. அடுத்தது என்ன செய்வது? முதலில் குழம்ப வேண்டாம். கப்பல் எதுவும் கவிழ்ந்துவிடவில்லை. ஜஸ்ட் +2 மதிப்பெண்கள்தான் குறைந்திருக்கிறது. ஒரு விதத்தில் இது நல்லதும் கூட. பொறியியல், மருத்துவம் என்ற பெருங்கூட்டத்தில் இருந்து விலகி வேறொரு நல்ல படிப்பைப் பற்றி யோசிப்பதற்கான நல்ல வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

B.Sc(Statistics) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தப்படிப்பை முடித்தவர்கள் லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா? பி.எஸ்.சியில் Psychology பாடப்பிரிவு இருப்பது தெரியுமா? இந்தப் பாடத்தில் முதுநிலைப் படிப்பிற்கு இருக்கும் பிரகாசமான வேலை வாய்ப்பு பற்றி அறிந்திருக்கிறீர்களா? வனவியல், மீன்வளம் ஆகியன பற்றிய படிப்புகளுக்கு உருவாகியிருக்கும் அளவுக்கதிகமான ‘டிமாண்ட்’ பற்றி எங்கேயாவது படித்திருக்கிறீர்களா?

ம்ஹூம். கேள்விப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.

நமக்கு +2 முடித்தால் இரண்டே குட்டைதான் தெரிந்திருக்கிறது. ஒன்று மருத்துவக் குட்டை. இன்னொன்று பொறியியல் குட்டை.

கோடிக்கணக்கில் டொனேஷன் கொடுப்பதற்காக அப்பனும் ஆத்தாளும் சம்பாதித்து வைத்திருந்தால் மருத்துவக்குட்டையில் விழுந்துவிடலாம்தான். அப்படி வாய்ப்பு இல்லாதவர்கள்? பல் மருத்துவத்திற்கு தனியார் கல்லூரிகளில் ஃபீஸ் மட்டும் ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா ஐந்து லட்சம் கேட்கிறார்கள். டிகிரி முடித்து வரும் போது கிட்டத்தட்ட முப்பது லட்சம் செலவு ஆகியிருக்கும். எதற்காக இத்தனை பல் மருத்துவர்களை இந்த தேசம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது? உண்மையில் அத்தனை பல் மருத்துவர்களுக்கான தேவை இருக்கிறதா? போகிற போக்கைப் பார்த்தால் வெட்டுப்பல் ஸ்பெஷலிஸ்ட், சிங்கப்பல் ஸ்பெஷலிஸ்ட், கடவாய்ப்பல் ஸ்பெஷலிஸ்ட் என்று போர்டுகள் தொங்கும் போலிருக்கிறது.

தமிழ்நாட்டில் இஞ்ஜினியரிங் பற்றி கேட்கவே தேவையில்லை. நூற்றுக்கு அறுபது சதவீத எலெக்ட்ரிக்கல் இஞ்ஜினியர்களுக்கு ‘மின்சாரத்தை’ வரையறுக்கத் தெரியாது. கம்யூனிகேஷன் இஞ்ஜினியர்களுக்கு ‘பைபர் ஆப்டிக் கேபிள்’ இயங்கும் தத்துவம் தெரியாது. கம்ப்யூட்டர் சயின்ஸ் இஞ்சினியர்களால் ‘ஹார்ட் டிஸ்க்’ பற்றி மூன்று நிமிடங்கள் தொடர்ந்து பேச முடியாது. இது ‘டூ மச்’ ஆகத் தெரிந்தால் நீங்களே உங்களுக்குத் தெரிந்த இஞ்ஜினியரிங் மாணவர்களிடம் இத்தகைய கேள்விகளைக் கேட்டுப்பாருங்கள்.இன்னும் ஒருபடி மேலே போய் இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் ஆசிரியர்களாக இருப்பவர்களிடம் கூட ‘டெஸ்ட்’ செய்து பார்க்கலாம்.

தமிழகத்தில் ஐந்நூற்று சொச்சம் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவை ஒவ்வொரு ஆண்டும் ‘வத வத’வென பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. பொறியியல் முடித்தவர்கள் எல்லாம் ஆறு இலக்கச் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வெறும் மாயை. மிகச் சொற்பமான நபர்கள்தான் நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மட்டும்தான் மற்றவர்களின் கண்களுக்குத் தெரிகிறார்கள். ஆனால் பொறியியல் முடித்துவிட்டு திக்குத் தெரியாமல் நிற்கும் மாணவர்கள் ஏராளமாக உண்டு. பி.ஈ. முடித்துவிட்டு மாதம் ஐந்தாயிரம் ரூபாய்க்கு வேலையில் இருப்பவர்களை பார்த்திருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக அவர்களின் நிலைமை மற்றவர்களுக்குத் தெரிவதில்லை. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பன்மடங்காக இருக்கும்.

வேறு வழியும் இல்லை. ‘போனாம் போக்கி’ கல்லூரிகளில் படித்துவிட்டு ‘ஏனோ தானோ’ என வெளியில் வரும் இலட்சக்கணக்கான இளைஞர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள நிறுவனங்கள் தயாராக இல்லை. அவர்கள் அத்தனை பேருக்கும் வேறு ஏதாவதொரு திறன் நிச்சயம் இருந்திருக்கும். ஆனால் அவர்களின் திறமை, ஆர்வம் பற்றிய எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் பக்கத்துவீட்டுக்காரன் சொன்னான், பங்காளி சொன்னான் என பொறியியல் குட்டையில் தள்ளிவிட்டு ‘மந்தைகளாக்கி’ அவர்களின் எதிர்காலத்தை பாழடித்துக் கொண்டிருக்கிறோம். பரிதாபமாக இருக்கிறது.

பொறியியல், மருத்துவம் ஆகியன மட்டுமே படிப்பு இல்லை. ஏகப்பட்ட choice இருக்கின்றன. ப்ளீஸ்...இந்த இரண்டையும் தவிர்த்துவிட்டு வேறு படிப்புகளையும் யோசிப்போம்