Thursday, 11 February 2016

சிட்டுக் குருவிக்கு தட்டுப்பாடு?

சிட்டுக் குருவிக்கு தட்டுப்பாடு?
அம்மாவைக் கொண்டு போய் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு, ‘உலக அன்னையர் தினம்’கொண்டாடுவது நகரவாசியின் வழக்கமாகப் போய் விட்டது. அதே மாதிரிதான் சில நாட்களுக்கு முன்பாக கடந்து போனது ‘உலக சிட்டுக்குருவிகள் தினம்’.
“சிட்டுக்குருவியா.. அது எப்படி இருக்கும்?” என்று அப்பாவை, அம்மாவை கேட்கக்கூடிய ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருப்பது வேதனையான விஷயம்தான்.
நம் முற்றங்களிலும்,வாசல்களிலும்,
தெருக்களிலும்.. எங்கெங்கு காணினும் காணப்படக்கூடிய மிகச்சிறிய பறவையினமாக சிட்டுக்குருவி இருந்தது.
சாம்பலும், பிரவுனும் கலந்த அழகான இறக்கைகள். சிறிய முகம். துறுதுறுக்கும் கண்கள். குட்டியான அலகு. சுறுசுறுப்புக்கு பேர் போனவை இந்த குருவிகள். பெரும்பாலும் வீடுகளில் கூடு கட்டி வசிப்பதால் வீட்டுக் குருவிகள் என்றும் சொல்வார்கள். செல்லப் பறவையாக வளர்க்கப்பட்டதில்லை என்றாலும்,அதிகாலையில் இக்குருவிகளின் சத்தம் கேட்டால்தான் நாளே நிம்மதியாக பலருக்கும் விடியும்.
துரதிருஷ்டவசமாக சிலகாலமாக இப்புள்ளினம் அருகிக் கொண்டே போகும் உயிரினம் ஆகிவிட்டது.
காரணம்.. ஒன்றா, ரெண்டா?சிட்டுக்குருவிகள் மறைகின்றன என்று ஒரே காரணத்தை சுட்டிக் காட்ட முடியாது. மெது மெதுவாக நம் கண் முன்னால் மறைந்து கொண்டே போகின்றன இந்த சுட்டிப் பறவைகள்.
இங்கிலாந்தின் முன்னணிப் பத்திரிகை ஒன்று சிட்டுக்குருவிகளின் மீது அக்கறை கொண்டு,சிட்டுக் குருவிகளை காப்பாற்றும் உருப்படியான ஐடியா ஒன்றினை தருவபவருக்கு கோடிக்கணக்கில் பணம் பரிசாக வழங்குவதாக அறிவித்தது. இன்று வரை கேட்பாரின்றி கிடக்கிறது அந்த பரிசுப்பணம்.
நம் ஊர் சூழலில் சிட்டுக்குருவிகள் குறைந்து வருவதற்கு முதன்மையான மூன்று காரணங்களை பட்டியலிடுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
ஒன்று:
பூச்சி மருந்துகள். ரசாயன பூச்சி மருந்துகளாலும்,வேதியியல் உரங்களாலும் நிலம், நீர் அனைத்துமே மாசுபட்டு வருகின்றன. சிறு பூச்சிகளும், புழுக்களும் பறவையினங்களின் உணவு. அவை பூச்சி மருந்துகளால் கொல்லப்படும் சூழலில் பறவைகளுக்கு உணவுப் பஞ்சம் ஏற்படுகிறது. மேலும் தானியங்களிலும் பூச்சி மருந்துகளின் பாதிப்பு இருப்பதால், அவற்றை உண்ணும் பறவைகள் இடும் முட்டைகள் குஞ்சு பொரிக்கும் தன்மையை இழக்கின்றன.
இரண்டு:
ஓட்டு வீடுகள் குறைந்தது. முன்பு பெரும்பாலான வீடுகள் ஓட்டு வீடுகளாக இருந்தன. அந்த ஓடுகளின் இடைவெளி குருவிகள் கூடுகட்டி வாழ ஏதுவாக அமைந்திருந்தது. ஓடுகள் குறைந்து,கான்க்ரீட் இல்லங்கள் அதிகமாக அதிகமாக குருவிகளுக்கான வாழ்விடம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
மூன்று:
செல்போன் டவர்களின் கதிர்வீச்சு. கோவை சலிம் அலி பறவையியல் இயற்கை வரலாறு மையத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் இதை சோதனை அடிப்படையில் நிரூபித்திருக்கிறார்கள். ஐம்பது முட்டைகளை கதிரியக்கத்தின் தாக்கத்தில் முப்பது நிமிடம் வைத்திருந்து பரிசோதித்ததில், எல்லா முட்டைகளின் கருக்களுமே சிதைக்கப்பட்டு விட்டன என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.
சிட்டுக் குருவிகளுக்கு இடம் கொடுங்கள்!
வீணாகும் அட்டைப்பெட்டிகளை குப்பைத் தொட்டிகளில் தூக்கி எறியாதீர்கள். அவற்றை உங்கள் வீட்டு மொட்டை மாடியில் கூடு போன்ற அமைப்பில் பாதுகாப்பாக நிறுவுங்கள். நெல், அரிசி என்று தானியங்களை தினமும் இறையுங்கள்.
சிறிய கிண்ணத்தில் நீர் வையுங்கள்.
சிட்டுக்குருவி உங்கள் வீட்டிலும் வசிக்கும்.

Best regards,