Tuesday, 15 January 2019

தை பொங்கல்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.....○●
தை பொங்கல் 2019: சூரியனுக்கு நன்றி சொல்லும் திருநாள் - பொங்கல் வைக்க நல்ல நேரம்.
தை பொங்கல் திருநாளான நாளை 15ஆம் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும். உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது.
தை மாதம் முதல் நாள் அன்று உலகிற்கு வெளிச்சம் கொடுத்து விளைச்சலுக்கு உதவி புரியும் சூரியன், தாய் மண், கால்நடைகள் அனைத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
மழைக்குக் காரணமான இந்திரன், பயிர் நன்றாக வளர்ந்து தானியங்கள் அதிகமாக விளைவதற்கு காரணமான சூரியன், இந்திரனுடைய சகோதரன் உபேந்திரன் ஆகியோர்களுக்கு நன்றி கூறும் விதமாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
○□சூரியன் பயணம்.
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு உத்தராயணம் என்றும் தெற்கு நோக்கிய நகர்வு தட்சிணாயணம் என்று அழைக்கப்படுகிறது. தை முதல்நாள் உத்தரயணத்தின் துவக்கம் ஆனி மாதம் முடியும் வரை உத்தராயணம். ஆடி மாதம் முதல் மார்கழி முடிய தட்சிணாயணம். உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது.
○□அலங்காரமும் சுத்தமும்.
ஜீவராசிகளின் வாழ்வாதத்திற்குத் தேவையான ஜீவனை தரும் சூரியனை போற்றும் விதமாகவும், விளைச்சலுக்கும், உழவுத் தொழிலுக்குத் தேவையான உதவிகளை செய்யும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அறுவடைத்திருநாளான பொங்கல் திருநாளுக்காக 10 நாட்களுக்கு முன்பே வீடுகளுக்கு வெள்ளையடித்து தயாராவது தமிழர் மரபு. வீடுகளை அலங்கரித்து மாவிலை தோரணங்கள் கட்டி, சிறுபீழைப்பூக்கள், கம்பு, ஆவாரம்பூ, வேப்பிலை வைத்து காப்பு கட்டி பொங்கலை வரவேற்பார்கள்.
○□புதுப்பானையில் பொங்கல்.
வீட்டின் நடு கூடத்திலோ, வெளியிலோ அழகான கோலமிட்டு புது அடுப்பு வைத்து புது மண்பானையை அலங்கரித்து கோலமிட்டு கழுத்தில் இஞ்சி கொத்து மஞ்சள் கொத்து கட்டி அடுப்பு மூட்டி புதுப்பானையில் புது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய் போட்டு சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். பானையில் பொங்கல் பொங்கி வரும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாக குரல் எழுப்பி நம் வளர்ச்சிக்கு காரணமான இயற்கைக்கு படையல் போட்டு செங்கரும்பு வைத்து அலங்கரித்து நன்றி கூறி வழிபடுவார்கள்.
○□தை பொங்கல் நல்ல நேரம்□○
இந்த ஆண்டு நாளைய தினம் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. காலை 7.30 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும். இரண்டாம் நாள் 16ஆம் தேதி கால்நடைகளை குளிப்பாட்டி அலங்கரித்து மாட்டு தொழுவத்தையும் அலங்கரித்து பொங்கல் வைக்கலாம். மாட்டுப்பொங்கல் நாளில் நல்ல நேரம் காலை 9 மணி முதல் 10 மணிவரை பொங்கல் வைத்து வழிபடலாம்.

Best regards,