Friday, 10 July 2020

#சோறு_சாதம்

 #படித்ததில்_உரைத்தது

#சோறு_சாதம்

#பார்ப்பதற்கு மிக எளிய சொல் போல் தோன்றும் இந்த சொற்களுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. நம்மில் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். கல்யாண விருந்தில் சத்தமாக "சோறு கொண்டு வாங்க" என்று நாம் கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை. காரணம், நம்மை அறியாமல் சோறு என்ற சொல்லை ஒரு தாழ்ச்சிக்குரிய ஒன்றாக மாற்றி வைத்திருக்கிறார்கள். சோறு என்றால் தாழ்வு போலவும் சாதம் என்றால் உயர்வு போலவும் ஒரு கற்பிதம் கட்டமைக்கப்பட்டுள்ளது. கல்யாண வீடுகளில் தன்மையான குரலில் பரிமாறுபவரிடம் "கொஞ்சம் சாதம் போடுங்க" என்று நாகரீகமான மனிதனாக காட்டிக் கொள்கிறோம். சோறு என்ன அப்படி ஒரு அவச்சொல்லா?

நகைச்சுவைத் துணுக்குகளில், திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளில் பிச்சைக்காரர் கதாபாத்திரம் "அம்மா, தாயே சோறு போடு தாயீ" என்று கூறுவதாக வரும். திரைப்படங்களில், பத்திரிகைகளின் நகைச்சுவைகளில் எந்த பிச்சைக்காரனாவது "அம்மா தாயே சாதம் போடுங்க" என்று வருகிறதா? அது ஏன்?. திட்டமிட்டு சோறு கீழான ஒன்றாக காட்டப்படுகிறது. சாதம் உயர்வான ஒன்றாக மாற்றப்படுகிறது.

#சோறு என்பது சங்க இலக்கிய காலத்தில் இருந்து நம்முடன் பயணித்து வருகிறது. "பெருஞ்சோற்று உதியன்" என்ற அடைமொழியுடன் புறநானூற்றில் வேந்தர்கள் வந்து போகிறார்கள். "வயிற்றுக்கு சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்" என்று பாரதி வரை சோறு என்றே குறிப்பிடப்படுகிறது.

ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சோறு என்று வருகிற இடங்களில் சாதம் என்பது இடம்பெயரப்பட்டு வருகிறது. ஆனால் இழிவு செய்யும் இடங்களில் மறக்காமல் சோறு என குறிப்பிடப்படுகிறது. "சோத்துக்கு வழியில்லாத நாயி" என்று திரைப்படங்களில் பேசப்படுவதை பார்க்கிறோம். "சாதத்துக்கு வழியில்லாத நாயி" என்று எழுதப்படுகிறதா? காரணம்? அதன் பின்னால் உள்ள அரசியல். "கல்யாண சமையல் சாதம்" என்று புகழ்ந்து பாடல் வரும்.. "எச்ச சோறு" என்று இகழ்ந்து வசனம் வரும்.. இதில் இருந்தே இதன் பின்னுள்ள அரசியலை புரிந்து கொள்ளலாம்.

சாதம் என்ற சொல், பிரசாதம் என்ற சொல்லின் விகுதி. பிரசாதம் என்பது உயர்வான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கோயில்களில் பூசனைகளுக்குப் பிறகு வழங்கப்படும் தேங்காய் - பழம் போன்றவற்றுக்கு பிரசாதம் என்று பெயரிடப்பட்டுள்ளது. மதிப்பிற்குரிய ஒன்றாக பொதுஇடங்களில் பிரசாதம் பயன்படுத்தப்படுகிறது. அந்த சொல்லின் சரிபாதி சாதம் என்பது ஏதோ ஒரு நன்னாளில் பெயர்சூட்டுவிழா கண்டுள்ளது.

உணவு விடுதிகளில் புளியஞ்சோறு, எலுமிச்சைச் சோறு, தக்காளிச் சோறு என்பது இடமாறி, புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் என்று பட்டியல் நீள்கிறது. குழந்தைகளுக்கு பருப்புச் சோறு ஊட்டப்பட்டது போய் பருப்பு சாதம் கொடுப்பது உயர்வாக மாறி நிற்கிறது.

இதுவெறும் வடமொழிச் சொல் - தமிழ்ச் சொல் வேறுபாட்டை அறிவதற்கான பதிவல்ல. தமிழ்ச் சொற்கள் தாழ்வான ஒன்றாக நம் மனத்திலே பதிய வைத்து நம்மையை அச்சொல்லை சொல்ல முடியாமல் போகும் அளவுக்கு மாற்றுவதற்கு பின்னுள்ள அரசியலை விவரிக்கும் பதிவே. தாய்மொழியில் பேசவும் முடியாத ஒருவன், எப்படி தாய்மொழிக்காக சிந்திக்க செய்வான்?.

#சோர்வை நீக்குவது சோறு, #சோம்பலை போக்குவது சோறு, #சோகத்தை ஆற்றுவது சோறு... #கீழ்மையை - ஏற்றத்தாழ்வை புகுத்துவது சாதம்..

#சாதம் என்பதற்கு பதிலாக
#சோறு என்பதையே  பயன்படுத்துவோம்

#நல்லசோறு
#பாரிவேள்

Best regards,