Showing posts with label சரவணா ஸ்டோர்ஸ். Show all posts
Showing posts with label சரவணா ஸ்டோர்ஸ். Show all posts

Friday, 21 June 2013

தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து கொள்ளையடிக்கும் பணத்தை நடிகைகளிடம் கொட்டும் சரவணா ஸ்டோர் !




 தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து கொள்ளையடிக்கும் பணத்தை நடிகைகளிடம் கொட்டும் சரவணா ஸ்டோர் !
---------------------------------------------------------------------------------------------------

சரவணா ஸ்டோர்ஸ்க்கு அடிக்கடி போவதுண்டு. அங்கு வரும் பல்வேறு விதமான மனிதர்களை பார்க்க பிடிக்கும் என்பதும், அங்கு வேலைப்பார்க்க வந்திருக்கும் நெல்லை மண் மணம் மாறா தொழிலாளர்களுடன் பேசுவது பிடிக்கும் என்பதும் அங்கு போவதற்கான காரணம். 
 வேலைப்பளுவுக்கிடையில் அவர்கள் நெல்லை பேச்சுவழக்கில் ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டும் கிண்டல் செய்து கொண்டுமிருப்பார்கள். சமயங்களில் ரொம்ப நேரம் எதும் வாங்காமல் சும்மா நோண்டிக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களையும் தங்களுக்குள் ஓட்டிக்கொள்வதையும் கவனித்திருக்கிறேன்.

அங்கு எப்போது சென்றாலும் வேலைப்பார்க்கும் ஏதாவது ஒரு பையனிடமோ பெண்ணிடமோ பேச்சுக் கொடுக்க ஆரம்பிப்பேன். ``நானும் திருநெல்வேலிக்காரந்தாம்டே..”னு சொல்லி பேச ஆரம்பித்தால் போதும் அவங்களும் உற்சாகமாப்பேச ஆரம்பிப்பார்கள். அவர்களின் கதைகளை கேட்க பரிதாபமாக இருக்கும். அவர்களிடம் பேசிவிட்டு வரும் நாட்கள் எல்லாம் மனம் கனத்துப்போகும்.

இன்று அங்கு சென்றிருந்தபோது அந்த காட்சியைக் கண்டேன். ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க எலும்பு தோலுமாக இருந்த இளம்பெண் ஒருவர் சோர்ந்துபோய் துணிகள் தொங்கவிடப்பட்ட இடங்களுக்கு நடுவில் மறைவாய் அமர்ந்திருந்தார்.
``என்னம்மா ஆச்சு..” என்றேன்.

``கால்வலிண்ணே... முடியல..” என்றார் பரிதாபமாக.

``ஏன் உங்களுக்கு உட்கார நாற்காலி எதுவும் வைக்க மாட்டாங்களா..?”

``அதெல்லாம் கிடையாதுண்ணே.. காலையில வந்ததுல இருந்து திரும்ப தூங்கப்போறவரைக்கும் பதினாறு மணிநேரம் நாங்க நின்னுட்டு தான் வேலைப்பார்க்கணும்.. வலி எடுக்கும்.. கொஞ்சம் ஓரமா உக்காரலாம்னு பார்த்தா சூப்பர்வைஸருங்க கண்ல பட்டா செத்தோம்..” என்று அவர் கூறியபோது என் கால்கள் வலிக்க ஆரம்பித்தது.

சரவணா ஸ்டோருக்குள் பொருட்கள் வாங்கவோ, குறைந்த பட்சம் அந்த பல அடுக்கு மாளிகைக்குள் சுற்றிப்பார்க்கவாவது நாம் சென்றிருப்போம்.
 
சரவணா ஸ்டோருக்குள் நுழைந்தால் முதல் ஒரு மணிநேரம் உற்சாகமாக சுற்றி வந்து பொருட்களை வாங்க முடியும். அதன்பிறகு தன்னியல்பாக உங்கள் கால்களில் உளைச்சல் ஏற்படும். எங்காவது உட்காரலாம் என்று கால்கள் கெஞ்சும்.

அந்தமாதிரியான தருணத்தில் எப்போதாவது நீங்கள் அங்கு பதினாறு மணிநேரம் நின்றுக்கொண்டே பணிபுரியும் ஊழியர்களின் கால்களைப் பற்றி யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா..

நம்முடைய கால்களைப் போன்றே அந்த ஏழைத் தொழிலாளர்களுக்கும் கால்கள் உண்டு. அந்த கால்களுக்கும் வலி எடுக்கும்.. அவர்கள் எங்கு உட்கார்கிறார்கள் ஏன் அவர்களுக்கு உட்கார இருக்கை கொடுக்கவில்லை என்பது குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..

இப்படி பதினாறு மணிநேரம் நின்றுக்கொண்டே வேலைப்பார்க்கும் நிலைக்கு காரணம் அவர்களின் குடும்ப சூழல். அதைப் பயன்படுத்திக் கொள்ளுகிறது சரவணா ஸ்டோர் கும்பல்.

தென்மாவட்டங்களில் இருந்து குறைவான ஊதியத்திற்கு கொத்தடிமைகளை இறக்குமதி செய்த சரவணா ஸ்டோர் ஓனர்கள் இப்போது வட இந்திய தொழிலாளர்களை குறிவைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழர்களை விட இன்னும்கூட குறைவாக ஊதியம் கொடுக்கலாம். அவர்களின் குடும்ப வறுமையை பயன்படுத்தி சுரண்டுவதுதான் ஓனர்களின் தந்திரம். குறைவான ஊதியத்திலும் முடிவெட்டுறது முதற்கொண்டு பல காரணங்களைச் சொல்லி பிடித்தமும் செய்துக் கொள்வார்கள்.


இப்படி தொழிலாளர்களிடம் ஆட்டையப்போட்ட பணத்தை தான் நடிகைகளுக்கும் நடிகன்களுக்கும் விளம்பரம் என்றப்பெயரில் வாரி இறைக்கிறார்கள் சரவணாஸ்டோர்ஸ் #saravanastores முதலாளிகள்.

இந்தமாதிரி தொழிலாளர்களை சுரண்டும் நிறுவனத்திற்கு `அகரம் பவுண்டேசன்’ என்றப்பெயரில் கல்வி சேவை செய்யும் மனிதநேயமிக்க சூர்யா விளம்பரதாரர்.. எப்படி இருக்கு சேவை.

பதினாறு மணிநேரம் நின்று கொண்டே வேலைப்பார்க்கும் அந்த தொழிலாளர்களைப் பார்க்கும்போதெல்லாம், இவர்களைப்பற்றி அக்கறைக்கொள்ள தமிழக தொழிலாளர் நலத்துறையில் ஒரு யோக்கியன் கூடவா அதிகாரியாக இல்லாமல் இருக்கிறான் என்று தோன்றுகிறது. இந்த கொடுமைகளை மறைமுகமாக சுட்டிக்காட்டி அங்காடித்தெரு என்ற படமும் வந்திருக்கிறது. எந்த நடவடிக்கையும் இல்லை. இடதுசாரி இயக்கங்கள் இந்த தொழிலாளர்கள் விசயத்தில் ஏன் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்பது புரியவில்லை.

தொழிலாளர்களின் உரிமையான எட்டுமணி நேர வேலை என்பதை விடுங்கள்.. குறைந்தபட்சம் முதலில் பதினாறு மணிநேரம் நின்றுக் கொண்டு வேலைப்பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு நாற்காலியாவது போட்டுக்கொடுக்க சொல்லுங்கள் பாவிகளே..

``எடுத்துக்கோ.. எடுத்துக்கோ..
அண்ணாச்சிக்கடையில் எடுத்துக்கோ.. ”

என்று சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் விதவிதமான நடிகைகள் வந்து துள்ளிக் குதிப்பதை பார்க்கும்போது, இனிமேல் கொஞ்சம் இந்த தொழிலாளர்களின் கால்களையும் நினைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே...

அந்த கால்களிலிருந்து சரவணா ஸ்டோர் அண்ணாச்சிகளால் உறிஞ்சப்பட்ட ரத்தமே அந்த நடிகைகளிடம் கொட்டப்படும் கோடிகள்..


Saturday, 9 February 2013

சரவணா ஸ்டோர்ஸ்

சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம்.

‘‘எந்த ஊர் நீங்க?’’
‘‘திருவண்ணாமலை பக்கம்..’’
‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல..’’
‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’
‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’
‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’
‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா?’’
‘‘ஷிப்டா... அதெல்லாம் தெரியாதுண்ணேன். காலையில வரணும். நைட் போகனும். அவ்வளவுதான்..’’
‘‘சாப்பாடு?’’
‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச பேரா போய் சாப்பிட்டு வருவோம்.’’
‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க?’’
‘‘12 மணி, 1 மணி ஆகும். காலையில எழுந்ததும் வந்திருவோம்’’
‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமா?’’
‘‘அது பரவாயில்லண்ணேன். நாள் முழுக்க நின்னுகிட்டே இருக்குறோமா... அதுதான் உடம்பு எல்லாம் வலிக்கும்.’’
‘‘உட்காரவே கூடாதா?’’
‘‘ம்ஹூம்.. உட்காரக் கூடாது. வேலையில சேர்க்கும்போதே அதை எல்லாம் சொல்லித்தான் சேர்ப்பாங்க. மீறி உட்கார்ந்தா கேமராவுல பார்த்துட்டு சூப்பரவைசர் வந்திடுவார்’’

- யாரோ ஒரு வாடிக்கையாளருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையும் சூப்ரவைஸர் கேமராவில் பார்க்கக்கூடும். அதனால் அந்தப் பெண் இங்கும் அங்குமாக துணிகளை எடுத்து வைத்தபடியேப் பேசுகிறார்.

‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’
‘‘5,500 ரூபாய்.’’
‘‘வெறும் 5500 ரூபாய்தானா? வேற ஏதாவது முன்பணம், கல்யாணம் ஆகும்போது பணம் தர்றது... அதெல்லாம் உண்டா?’’
‘‘இல்லண்ணே... அது எதுவும் கிடையாது. இதான் மொத்த சம்பளம்.’’
‘‘இதை வெச்சு என்ன பண்ணுவீங்க?’’
‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ. எனக்கு ஒண்ணும் செலவு இல்லை. சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம் அனுப்புவேன். மீதி பேங்க் அக்கவுண்டுல போட்டுருவேன்’’
‘‘எத்தனை வருஷமா இங்கே வேலைப் பார்க்குறீங்க?’’
‘‘அஞ்சு வருஷம் முடியப் போகுது. அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான். இன்னும் ஏத்தலை..’’
‘‘வேலைக்கு சேர்ந்த முதல் மாசத்துலேர்ந்து மாசம் 5500 ரூபாய்தான் சம்பளமா?’’
‘‘ஆமாம்.’’
‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்களா?’’
‘‘சூப்ரவைசருங்க வாங்குவாங்க. அதுவும் பத்து வருஷம் வேலை பார்த்திருந்தாதான். இல்லேன்னா ஏழாயிரம், எட்டாயிரம்தான்.’’
‘‘லீவு எல்லாம் உண்டா?’’
‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. அதுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளத்துலப் பிடிச்சுக்குவாங்க.’’
‘‘பிடிச்சுக்குவாங்களா? அப்படின்னா லீவே கிடையாதா?’’
‘‘அதான் சொல்றனேண்ணே... லீவு உண்டு. ஆனால் சம்பளம் பிடிச்சுக்குவாங்க. அதனால நாங்க பெரும்பாலும் லீவு போட மாட்டோம்’’
‘‘அப்போ ஊருக்குப் போறது எல்லாம்?’’
‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு வாரம் ஊருக்குப் போயிட்டு வருவேன். அதுக்கு லீவு கொடுப்பாங்க. ஆனால் அந்த லீவுக்கும் சம்பளம் கிடையாது’’
‘‘ஊருக்குப் போகும்போது இங்கேருந்து துணி எடுத்துட்டுப் போவீங்களா?’’
‘‘இங்கே விற்குற விலைக்கு வாங்க முடியுமா? வெளியில பாண்டி பஜார்ல எடுத்துட்டுப் போவோம். இங்கே எடுத்தாலும் சில சுடிதார் மெட்டீரியல் கம்மியா இருந்தா எடுப்போம்’’
‘‘உங்களுக்கு விலை குறைச்சு தரமாட்டாங்களா?’’
‘‘ம்ஹூம்... அதெல்லாம் தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன விலையோ, அதான் எங்களுக்கும்’’
‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’
‘‘தெரியலை..’’
‘‘ஊர்ல என்ன பண்றாங்க..’’
‘‘நெல் விவசாயம்..’’
‘‘எவ்வளவு நிலம் இருக்கு?’’
‘‘தெரியலை.. ஆனால் கம்மியாதான் இருக்கு’’
‘‘இங்கே இப்படி கஷ்டப்பட்டு வேலைப் பார்க்குறதுக்குப் பதிலா சரவணா ஸ்டோர்ஸ்ல வேலைப் பார்த்தேன்னு சொல்லி திருவண்ணாமலையிலேயே ஒரு துணிக்கடையில வேலை வாங்க முடியாதா?’’
‘‘வாங்கலாம். ஆனா இதைவிட கம்மியா சம்பளம் கொடுப்பாங்க. இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும் சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளக் காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..’’
‘‘இங்கே எவ்வளவு பேரு வேலைப் பார்ப்பீங்க?’’
‘‘இந்த ஒரு கடையில மட்டும் பொம்பளைப் பிள்ளைங்க மட்டும் 800 பேர் இருக்கோம்.’’
‘‘மெட்ராஸ்ல எங்கேயாச்சும் சுத்திப் பார்த்திருக்கீங்களா?’’
‘‘ஆவடில எங்க அக்கா வீடு இருக்கு. எப்பவாச்சும் ஒரு நாள் லீவு போட்டுட்டுப் போயிட்டு வருவேன்.’’

- கனத்த மனதுடன் அந்தப் பெண்ணிடம் விடைபெற்று நகர்ந்தோம். அந்த தளம் முழுக்கவும், அடுத்தடுத்த தளங்களிலும் இதேபோன்ற உழைத்துக் களைத்த பெண்கள். அவர்களின் உழைப்பை உறிஞ்சி எழுந்து நிற்கும் சரவணா ஸ்டோர்ஸ் என்ற அந்த பிரமாண்ட கட்டடம் ஓர் ஆறடுக்கு சவக்கிடங்கு போலதே தோன்றியது.