Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, 9 April 2020

பாசப் போராட்டம்

சிறுகதை

பாசப் போராட்டம்

என்னங்க மூட்டை

ஒண்ணுமில்ல. ரேசன் கடையில ஆயிரம் ரூபா குடுத்தாங்க அதான் கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு வந்தேன்

ஓடிவந்து மூட்டையைக் பிரிக்கும் மனைவியை அதட்டினார்

ஏய் அத எடுக்காத இது நமக்கு இல்ல. இது நம்ம பொண்ணு வீட்டுக்கு

ஏன் நமக்கு வாயும் வயிறும் இல்லையா. உங்க பொண்ணுக்கு மட்டும் தான் வாயும் வயிறும் இருக்குதா. ஆயிரம் ரூபா வாங்கிட்டு வந்துருக்கீங்க. மீதிய குடுங்க

இதுவே 1400 ரூபாய் ஆச்சு, 400 ரூபாய் கடன் சொல்லிட்டு வந்திருக்கேன்

அப்போ எனக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கலே. அந்த உறிஞ்சிர மிசினு இன்னும் வாங்கல அதானே

வாங்கிக்கலாம். எப்படியும் காசு வரும்போது உனக்கு வாங்கி தரேன். உனக்கு வாங்கித் தராம வேற யாருக்கு வாங்கி தர போறேன்

அய்யோ வாங்கி கொடுத்தாலும், நான் ஆறு மாசமா கேட்டுட்டு இருக்கேன். மூச்சு விட முடியல. கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன். அதை வாங்கி கொடுக்க முடியல. 1000 வா வாங்கி அப்படியே மகளுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு வந்துட்டீங்க

எப்படி போவீங்க பஸ் இல்ல. ட்ரெயின் இல்ல. ஆட்டோவும் கிடையாது.எப்படி போவீங்க.

சைக்கிள் ல போவேன்

ஏன் பாதிலேயே வெய்யில்ல சுருண்டு விழுந்து சாகுறதுக்கா

நல்ல வார்த்தையே பேச மாட்டியா நீ

இப்ப போக வேணாம் நாளைக்கு காலைல போய் குடுத்துக்கலாம்

இல்லல்ல நான் இப்பவே கிளம்புறேன்

போங்க. போலீஸ்காரன் சாமானையும் சைக்கிளையும் புடுங்கி வச்சுகிட்டு, உங்களை தோப்புக்கரணம் போட சொல்லுவானோ, குட்டிக்கரணம் போட சொல்லுவானோ. நடந்து தான் வரப் போறீங்க

நல்ல வார்த்தையே பேச மாட்டியா

அய்யய்யோ துரை போருக்கு போறாரு. நல்ல வார்த்தை சொல்லி அனுப்பனும்.

சரி கிளம்பனும் பழைய சோறு இருந்தா கொடு

அதான் மக வீட்டுக்கு போறீங்கள்ள. உங்க மக சமைச்சு வச்சிருப்பா. அங்கே போய் சாப்பிட்டு வாங்க

சரி நான் கிளம்புறேன்

சொன்னா கேக்க மாட்டீங்க. பட்டா தான் உங்களுக்கு புத்தி வரும்.போலீஸ்காரன் உங்கள அடிச்சு உதைச்சு அனுப்பும்போது தான் நான் சொன்னது ஞாபகத்துக்கு வரும்

அவர் சைக்கிளில் எல்லா மளிகை சாமான்களையும் மூட்டையாக கட்டி, பின்பக்கம் வைத்துக் கொண்டு கிளம்பினார்

ஒரு ஐந்து கிலோமீட்டர் வந்திருப்பார்.அங்கே சாலையில் தடுப்பு அமைத்து ஜிப்போடு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
மனைவி சொன்னது போல் போலீஸ்காரர்கள் சாமானையும் சைக்கிளையும் பிடிங்கி கொள்வார்களோ. தோப்புக்கரணம் போடச் சொல்லி போட்டோ எடுத்து டிவியில் போடுவார்களோ.தெரியாமல் வந்து விட்டோமோ.
பயம் தொற்றிக் கொண்டது.

அவர் அருகில் சென்றபோது ஒரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார்

என்னா பெருசு எங்க கிளம்பிட்டே

ஐயா அயனாவரம் வரை போறேங்கய்யா. மக வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு போறேங்கய்யா

சைக்கிளை ஓரமாக நிறுத்து.  அந்த மூட்டைய தூக்கிட்டு வா

அவ்வளவுதான் 1,400 ரூபாய் மளிகை சாமான் போக போவுது

மிதிவண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு, மளிகை சாமான் மூட்டையை இறக்கி கீழே வைத்தார்

யோவ் பெருசு அந்த ஜீப்புக்குள்ள இன்ஸ்பெக்டர் உக்காந்திருக்காரு அவரை போய் பாரு

அவர் போலீஸ் வண்டியை நோக்கி நடந்தார். வண்டியில் வாட்டசாட்டமாய் கூலிங் கிளாஸ் போட்ட பெரிய மீசை வைத்திருந்த அந்த இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார்

என்ன பெரியவரே எங்க கிளம்பிட்டீங்க

ஐயா அயனாவரம் வரை போறேங்கய்யா. பொண்ணு அங்க இருக்கு.  மாப்பிள்ளை டிரைவரா இருக்காரு. வேலை இல்ல. அதான் கவர்மெண்ட் கொடுத்த ஆயிரம் ரூபாயில கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு போறேங்கய்யா

ஊர்ல தடை போட்டுருக்காங்க தெரியாதா பெரியவரே

தெரியுங்கய்யா. ஆனா நாலு உசுரு அங்க சோத்துக்கு இல்லாம கஷ்டப்படுமே. அதனாலதான் இத போயி கொடுத்துட்டு வந்துடலாம்னு கெளம்பினேய்யா

என்ன வயசு ஆகுது பெரியவரே உங்களுக்கு

63 வயசு ஆகுதுங்கய்யா

அருகில், நடு சாலையில் பத்துப் பதினைந்து இளைஞர்கள் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தார்கள். இவருக்கு மனசு பிசைந்தது. நடுக்கம் வந்தது.

கான்ஸ்டபிள் வந்தார்.

சார் இந்த ஆள் கொண்டு வந்த மூட்டைய சீஸ் பண்ணிட்டேன் சார்

உன் வயசென்னை அவரு வயசு என்ன ஆளுன்ற

சாரி சார்

அந்த கான்ஸ்டபிள் தள்ளி போய் நின்று கொண்டார்.

பெரியவரே சாப்பிட்டீங்களா

இல்லீங்க சார்

கான்ஸ்டபிள் அந்த சாப்பாடு பொட்டலத்துல ஒண்ணு  எடுத்து குடு

ஐயா எனக்கு வேண்டாய்யா. நான் மகள் வீட்டுல போய் சாப்பிடுகிறேன்

 சாலையில் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவன் ஏதோ சொல்ல,

சட்டமா பேசறே என்று ஒரு கான்ஸ்டபிள் அவனை முதுகில் அடித்தார்

அங்க போய் கறியும் சோறும் தின்னுங்க.  இது சும்மா பிரிஞ்ஜி தான்.  சாப்பிட்டுக்கங்க. வெயில்ல எப்படி சைக்கிள் மிதிப்பீங்க

சாப்பிட்ட பின் தோப்புக்கரணம் போட சொல்வார்களோ

ஜீப் மைக் கர கரவென்று பேசிக்கொண்டே இருந்தது.

நாளைக்கு காலையில் சீக்கிரமா கிளம்பி போயிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டார்.
கான்ஸ்டபிள் எடுத்து வந்து கொடுத்த ஒரு பொட்டலத்தையும் ஒரு தண்ணீர் பாட்டிலையும் வாங்கிக்கொண்டார்.

பெரியவரே அதோ ரூம் இருக்குல்ல. அங்க உக்காந்து சாப்பிடுங்க.
இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்

பெரியவரே நல்லா சாப்பிடுங்க இன்னொரு பொட்டலம் வேணுமா

இன்ஸ்பெக்டர் கேட்க, அவர் வேண்டாம் என்று தலையாட்டினார்.

சாப்பிட்டு தண்ணீர் குடித்து கை கழுவினார். பரவாயில்லை வயிறு ரொம்பிடுச்சி. இப்ப முட்டி போடலாம். தோப்புக்கரணம் போடலாம்.

பெரியவரே சாப்பிட்டீங்களா

சாப்பிடங்கய்யா

ஜீப்ல கொண்டு வந்து உங்க மகள் வீட்டுல விடட்டுமா

ஐயா வேண்டாங்கய்யா நான் போயிடுவேங்கய்யா

சரி இந்த பனியனை போட்டுக்கோங்க. இந்த தொப்பிய போட்டுக்கோங்க. இது வாலண்டியர்ஸ்  போட்டுக்கறது. அரசாங்கம் கொடுக்கிற பணத்தை வாங்கினமா தண்ணி அடிச்சமா தலைகுப்புற விழுந்தமான்னு இல்லாம, நாலு உசுருக்கு சோறு போட சாமான் வாங்கிட்டு போறீங்களே. நீங்க தான் உண்மையான வாலண்டியர்.
 இந்த பனியனை  போட்டுக்கோங்க. பத்திரமா போயிட்டு வாங்க.

அது கனவா நனவா என்று நம்ப முடியாமல் பனியனை வாங்கி மாட்டிக்கொண்டார்.

இன்ஸ்பெக்டருக்கு இரண்டு கை குவித்து வணக்கம் வைத்தார்.
 சைக்கிளில் ஏறி, மகள் வீட்டை நோக்கி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார்.
*
அப்பா எப்படி வந்தீங்க. எதுக்குப்பா சைக்கிள்ல வந்தீங்க. கை கழுவுங்க.

பேரன்கள் ஓடி வந்து கட்டிக் கொண்டார்கள்.

பேரன்களை அணைத்து உடனே தள்ளிப் போகச் சொன்னார்.

மகள், அவர் வாங்கி வந்த பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிட்டு

என்னப்பா தனியா வந்துருக்கீங்க அம்மாவை கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல

இல்லம்மா. இன்னொரு நாளைக்கு  கூட்டிட்டு வரேன். நான் கிளம்பட்டுமா. இங்க இருக்கிறது அவ்வளவு நல்லது இல்லம்மா. நான் வீட்டுக்கு போயிடுறேன். உங்க அம்மா தனியா இருக்கும்.

அப்பா சாப்பிட்டு போங்கப்பா. சாப்பாடு ரெடியா இருக்குப்பா

நான் சாப்பிட்டேன்மா

ஏதுப்பா இந்த பனியன் நீங்க வாலண்டியரா இருக்கீங்களா

நடந்த எல்லா விஷயங்களையும் மகளிடம் சொன்னார்

பேரன்களை அழைத்து அவர்களுக்கு காசு கொடுத்து விட்டு கிளம்பினார்

மகள் ஒரு பையோடு வந்தாள்.

அப்பா  பையில கொஞ்சம் பழங்கள் இருக்கு. எடுத்துட்டு போயி அம்மாகிட்ட கொடுங்கப்பா. அம்மாவுக்கு ரோட்ஹெலர் மெஷின் வாங்கினேன். அத கொடுத்துடுங்கப்பா.  அம்மாவுக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கி இருக்கேன் அதையும் மறக்காம குடுத்துடுங்கப்பா.

பையை வாங்கிக்கொண்டார்.

மாப்பிள்ளை எங்கம்மா

அப்பா அரசாங்கத்துல  காய்கறி எல்லாம் வண்டியில் போய் விக்க சொல்லியிருக்காங்க. அதான் ஒரு காய்கறி வண்டியில டிரைவரா போயிருக்காருப்பா

இந்த ஆஸ்துமா மெஷினுக்கும்,'ஆஸ்துமா மாத்திரைக்கும் ஏதும்மா காசு

போன மாசம் சம்பளத்திலேயே இது இரண்டும் வாங்கி வச்சுட்டேன் பா

அவர் சைக்கிளை எடுக்க வீட்டை விட்டு வெளியே வந்தபோது மகள் ஓடிவந்து அவர் சட்டைப்பையில்  இரண்டு ஐநாறு ரூபாய் நோட்டுகளை வைத்தார்

அப்பா எங்களுக்கும் நேத்துதான் அரசாங்கத்திலிருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க. நேத்து நைட்டு உங்க மாப்பிள்ளை சொல்லிட்டாரு, உங்க அப்பா அம்மாக்கு கொடுத்துடு. நம்ம ஏதாவது வேலை செஞ்சி சம்பாரிச்சுக்கலாம். வயசானவங்க என்ன பண்ணுவாங்கன்னு சொன்னாருப்பா.

சரிம்மா. மாப்பிள்ளைய கேட்டேன்னு சொல்லு. பத்திரமா இருங்கம்மா.

அவர் உயிரை தன் மகள் வீட்டில் வைத்து விட்டு மிதிவண்டியில் ஏறி தன் வீட்டை நோக்கி மிதிவண்டியை இயக்க ஆரம்பித்தார்.
- புஷ்பா ராஜ்குமார்

Best regards,

Wednesday, 14 November 2018

காக்காவும்_மணியனும் - சிறுகதை

காக்காவும்_மணியனும்

சுபுஹு தொழுதுவிட்டு தனது மளிகை கடையை திறந்த தீன் காக்கா காலண்டரில் 10.06.1984 என்ற தேதியை கிழித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார். பணியாட்கள் சாமான்களை பரத்த ஆரம்பித்தனர். வியாபாரமும் ஆரம்பித்து சூடுப்பிடித்து ஓய்ந்திருந்த நேரம்.

கடைக்கு வெளியே பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் அலங்கோலமாக நின்றிருந்தான். அவனது கோலம் பிச்சை கேட்பதாக காக்காவுக்கு தோன்றியது.

“தம்பி இங்கிட்டு வா..!” என்று கூப்பிட்டு 20 பைசாவை நீட்டினார். வந்தவன் எந்த அசைவுமின்றி சுரத்தியில்லாமல் “பசிக்குது..!” என்றான். ஒரு வட்டபன்னை எடுத்து அவனிடம் நீட்டினார். வாங்கிக் கொண்டு செல்ல எத்தனித்தவனிடம் “இங்கேயே உட்கார்ந்து சாப்பிடு..!” என்று வெளியில் கிடந்த முக்காலியை காட்டினார். வீட்டிலிருந்து தேத்தண்ணி வரவே அதில் அவனுக்கு ஒரு லோட்டாவில் ஊத்தி கொடுத்துவிட்டு “இன்னொரு வட்ட பன்னு சாப்பிடுறியா..!” என்றார்.

“வேணா போதும்..” என்றவன் தேத்தண்ணியை குடித்துவிட்டு “கெளம்புறேன்..!” என்றான், “இங்கிட்டு வா.. உன்னோட அப்பா அம்மா எங்கே..? ஏன் இப்படி இருக்குறே..?” என்றார் காக்கா.

“அம்மா இல்ல.. அப்பா இறந்து ஏழு நாளாச்சு..! நா பக்கத்துல கரியாப்பட்டிணம்..” என்றான். தீன் காக்கா கண்ணீர் விட்டுவிட்டார். “சரிடாப்பா.. சொந்தக்காரங்க யாரும் இல்லையா..? எங்கே போறே இப்போ..?” என்றார் கரிசனத்துடன்.
“யாரோடவும் இருக்க பிடிக்கல. ஏதாவது வேலை தேடி போறேன்..!” என்றவனிடம் “நம்ம கடையில வேலை செய்றியா..?” என்று கேட்ட காக்கவிடம் மகிழ்வாக தலையாட்டினான். “சரி வா.. வீட்டுக்கு போய்ட்டு வருவோம்..” என்று அவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றார்.

“ஜொஹரா பீவி..! இந்த பையனை புதுசா வேலைக்கு சேர்த்திருக்கேன்.. அப்துல்லா கைலி சட்டையில் நல்லதா ஒன்னு எடுத்து கொடுங்க.. காலை பசியார இவருக்கு சேர்த்து செய்யுங்க..” என்று தன் மனைவியிடம் சொல்லிவிட்டு, “என் சின்ன மவனோட கைலி சட்டை தருவாங்க.. இப்போதைக்கு போட்டுக்க, பழசுன்னு எதும் நெனச்சுக்காத, மதியம் புதுசு வாங்கி தரேன்..” என்ற காக்காவை பார்த்து மகிழ்வா சிரித்தான் மணியன்.

“ஆமா.. உன் பேர் என்னுன்னு கேட்கவே இல்ல பாத்தியா.. உன் பேர் என்ன..?” என்ற காக்காவுக்கு “மணியன்..” என்று பதிலளித்தான் மணி..!

கடை வேலை, வீட்டு வேலை, வெளி வேலைன்னு மணி சுறுசுறுப்பா வேலை பார்த்து கொண்டிருந்தான். மூணு வேலையும் வீட்டு சாப்பாடு, அது இதுன்னு குறைவில்லாமல் ஒரு மாதமும் ஓடிவிட்டது.

“மணியா.. இங்கே வாங்க..!” என்ற அழைத்த காக்காவின் குரலுக்கு “வந்துட்டேன் காக்கா..!” என்று வந்து நின்றான் மணியன். இந்தாங்க உங்க சம்பளம் முன்னூறு ரூபா..!” என்ற காக்காவிடம் “இப்ப பணம் வேணாம் காக்கா.. நீங்களே வச்சுக்குங்க.. எனக்கு தேவைப்படும் போது கொடுங்க..!” என்ற மணிக்கு, “அப்படியா.. அதுவும் நல்லதுதான்..!” என்று அப்பணத்தை தனியே பத்திரப்படுத்தினார்..

காலங்கள் உருண்டோடியது. கிட்டத்தட்ட பத்து வருடங்கள் தாண்டிவிட்டது மணி தீன் காக்காவிடம் வேலைக்கு வந்து. இளைஞனாகிவிட்டான். அவனுக்கு திருமணத்திற்கு பொண்ணு பார்க்கனும் என்ற நினைப்பில் இருந்தார் காக்கா.

“காக்கா..! நா மெட்ராஸ் வரையிலும் போகனும்..!” என்று இழுத்தான் மணியன்.. “ஏனப்பா.. இப்ப மெட்ராஸுக்கு..!” என்ற காக்காவிடம், “விஜிபி கோல்டன் பீச்சுன்னு ஒன்னு இருக்காம்.. அதெல்லாம் பார்த்திட்டு மெட்ராஸை சுத்திப் பார்த்திட்டு வரேன்.. ஆசையா இருக்கு..!” என்றான் மணியன்.

“உன் வாயிலிருந்து இப்பதான்ப்பா ஆசைன்ற வார்த்தையே வந்திருக்கு.. சரி சரி போய்ட்டு வா..! எவ்வளவு பணம் வேணுமோ வாங்கிக்க..! ஆனா பத்திரமா போய்ட்டு வரணும்.. வெள்ளந்தியான புள்ள நீ.. அதான் பயமாயிருக்கு..!” என்ற காக்காவிடம் “நா என்ன சின்ன புள்ளையா காக்கா..? அதெல்லாம் பார்த்து போயிட்டு வந்திடுறேன்..! நாளைக்கு ரயில்ல கிளம்பவா..?” என்றவனுக்கு “ம்ம்..” என்று அரை மனசா உத்தரவு கொடுத்தார் காக்கா..!

மணியன் புறப்பட்டு சென்று இன்றோடு பத்து நாளாச்சு.. இன்னும் திரும்பவில்லை எந்த தொடர்பும் இல்லை. தீன் காக்காவுக்கு கவலையாகிவிட்டது. மெட்ராஸில் அவருக்கு தெரிந்தவர்களை தொடர்பு கொண்டு விசாரித்த வகையில் ஒரு தகவலும் இல்லை. அவரே நேரில் சென்று மூன்று நாட்கள் மெட்ராஸில் தங்கி அலைந்து திரிந்து விசாரித்து பார்த்துவிட்டார். ஒரு தகவலும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு வந்து சேர்ந்தார்.

மணியா.. மணியா என்று மூச்சுக்கு முண்ணூறு தடவை கூப்பிடுபவர் ஊமையாகிவிட்டதை போல் உணர்ந்தார். அவனது சேமிப்பு பணத்தை பார்த்து கண்ணீர் விட்டார். தான் கடனாளியாக போய்விட்டதாக அவரது மனம் ரணமாகியது.

நாட்கள் வாரங்களாகி, மாதங்களாகி, வருடங்களாகவும் உருண்டோடியது. மணியன் திரும்பவில்லை.

எதிர் கடை ராமச்சந்திரன் வந்து, “காக்கா.. நா கடையை காலிப்பண்ண போறேன். நீங்க வாடகைக்கு எடுத்துக்குங்க..!” என்றார். “அப்படியா.. யோசிச்சு சொல்றேன்..!” என்றார் தீன் காக்கா.

பட்டுக்கோட்டையிலிருந்து பீட்டன் பாக்கு வியாபாரி வந்திருந்தார். “காக்கா.. உங்கக்கிட்ட ஒரு யாவார சங்கதி பேசனும்..!” என்று பீடிகை வைத்தார். “சொல்லுங்க வைரவ தேவரே..!” என்ற காக்காவிடம், “மச்சினர் பெரிய அளவில் கயிறு கால்மிதியடி தயாரிக்கும் தொழிற்சாலை ஆரம்பித்திருக்கிறார். இந்த ஊருக்கு நீங்க தான் மொத்த வியாபாரம் செய்து கொடுக்கனும்..” என்றார்.

காக்கா யோசித்தார். “அப்படியா..! நாளை நா நேரில் வரேன். பொருளை பார்த்திட்டு பேசிக்கிடுவோம்..!” என்றார். மகிழ்வோடு விடைப் பெற்று சென்றார் வைரவ தேவர்.

மதிய சாப்பாட்டிற்கு வீட்டுக்கு சென்றவர், “ஜொஹரா பீவி.. எதிர்க்கடை ராமச்சந்திரன் கடை காலியாகுதாம்.. நம்மள எடுத்துக்க சொல்றார்.. பட்டுக்கோட்டை வைரவ தேவர் கால் மிதியடி யாவாரம் ஆரம்பிச்சிருக்காராம்.. அதை வாங்கி எதிர் கடையில் வைத்து யாவாரம் ஆரம்பிக்கலாமான்னு யோசனையா இருக்கு..!” என்றார். “பாடுப்பட ஆள் வேணும்.. பாத்து யோச்சிச்சு செய்ங்க..!” என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார் ஜொஹரா.. “இல்ல புள்ள.. மணியன் காசு அப்படியே இருக்கு.. அவனையும் காணோம்.. அதான் அத ஒரு முதலீடா போட்டு செய்யலாமேன்னு..!” என்று இழுத்தார்.. அவரது எண்ணத்தை உணர்ந்த ஜொஹராவும் இறைவனிடம் பிரார்த்தித்தார்.

அன்று சாயங்காலமே ராமச்சந்திரனை கூப்பிட்டு கடைக்கு அட்வான்ஸை கொடுத்துவிட்டார். அடுத்த நாள் புறப்பட்டு போய் மிதியடிகளின் தரத்தையும் அழகையும் கண்டு திருப்தி கொண்டு, வைரவ தேவரின் மைத்துனரிடம் தொகையையும் கொடுத்து, பொருளை அனுப்பும்படி சொல்லிவிட்டு ஊர் திரும்பினார் தீன் காக்கா..!

அடுத்தடுத்த வாரங்களில் புதியக்கடை திறக்கப்பட்டது. மிதியடி மட்டுமல்லாமல், கயிறு, கயிறு சார்ந்த பொருட்கள், துணிப் பைகள், ட்ரங்கு பெட்டிகள், தலையனை, பாய் என பல பொருட்களை கொண்டு.

வியாபாரம் சூடுப்பிடிக்க இன்னும் பல வகையான பொருட்களை கடையில் இறக்கினார் தீன் காக்கா. நல்ல திருப்தியான வியாபாரம். போதுமான லாபம். தரமான பொருட்கள் என அக்கடை அந்நகரின் ஒரு அடையாளமாக மாறிப் போனது. தீன் காக்காவினால் நம்ப முடியவில்லை அக்கடையின் வளர்ச்சியையும் வியாபாரத்தையும்.

இவ்வாறாக அக்கடையும் ஆரம்பித்து ஏழாண்டுகளை கடந்துவிட்டது.

சுபுஹு தொழுதுவிட்டு கடையை திறந்து உட்கார்ந்தார் தீன் காக்கா. ஒருவர் தளர்வாக கடையை நோக்கி வருவதை கண்டு, பார்வையை கூர்மையாக்கினார்..

“மணியா..!” என்று பதட்டமாக சொல்லியவாறு எழுந்தார் காக்கா. மணியனோ வெறுமையான பார்வையை கீழ் நோக்கி செலுத்திக் கொண்டே, “நல்லா இருக்கீங்களா காக்கா..!” என்றான். “என்னாச்சுப்பா உனக்கு..? மெட்ராஸ் போயிட்டு வரேன்னு போனவந்தான்.. ஒரு சேதியும் இல்ல.. நா தேடாத இடமும் இல்ல.. எங்கே போனே..? என்ன ஆச்சு..? ஒரு கடுதாசி கூட இல்ல..? தவிச்சு போய்ட்டேமே மணியா..!” என்றார் காக்கா கண்களில் ஈரத்துடன்.

“சொல்ல முடியா வேதனைகள் காக்கா..! ஒரு பெண்ணின் மானத்தை காப்பாத்த போய் கொலை குற்றவாளியாக்கப்பட்டு சிறை தண்டனை பெற்றுவிட்டேன் காக்கா..! உங்கள் முகத்தை பார்க்கவும் கூச்சமா இருக்கு காக்கா..!” என்றான் மணியன்.

“அப்படியல்ல மணி.. நீ தப்பு பண்ண மாட்டேடா.. நா அறிவேனப்பா..! வா.. உள்ளே வா..!” என்ற காக்காவிடம், “காக்கா.. நா ஒன்னு இல்லாதவனா அப்போ சிறுவனா உங்க முன்னாடி நின்ன மாதிரியே இப்பவும் நிக்கிறேன் காக்கா..! என் வாலிபம் சிறையில் போச்சு.. மானமும் போச்சு.. உடல் வலிவும் போச்சு.. பசிக்குது காக்கா..!” என்றான் கண்ணீருடன் மணியன்.

காக்காவும் கலங்கிவிட்டார். “அப்படி சொல்லாதடா மணியா..! நாங்க இல்லையாடா உனக்கு.. இந்தா இத முதல்ல சாப்பிடு..!” என்று பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்துவிட்டு, தேத்தண்ணியை லோட்டாவில் ஊத்தினார் காக்கா.

தேத்தண்ணியை குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்ட மணி, “உங்கள பாக்கனும் போல தோனுச்சு.. பார்த்துட்டேன்.. நா கெளம்புறேன் காக்கா..” என்ற மணியின் பேச்சை குறிக்கிட்டவராக, “எங்கப்பா போறே..?” என்றார் காக்கா. “தெரியல காக்கா..! எங்கேயாவது..! தெரிந்தவர்களை பார்க்கவே கூச்சமா இருக்கு.. சிறைக்கு போயிட்டு வந்தாலே தப்பு செய்தவன்னுதானே என்று எல்லோரும் நெனப்பாங்க.. என்னால அத தாங்க முடியல காக்கா..! எங்கேயாவது போயி..” என்றவனை குறுக்கிட்டு, “போயி..!” என்ற காக்காவுக்கு, “போயி.. ஏதாவது வேலை பாத்து, கிடைக்கிறதை சாப்பிட்டு என் காலத்தை ஓட்டி முடிச்சுக்கிறேன்..!” என்றான் மணியன் கண்களில் கண்ணீர் கசிந்தப்படி.

“ஏன் அப்படி நெனச்சிட்ட..? நா இல்லையா..? என்னைப் பத்தி நீ என்ன நெனச்சிட்ட..?” என்ற காக்காவுக்கு, “நா அநாதையா வந்தப்போ, என்னை உங்க வீட்ல ஒருத்தனா நெனச்சு வளர்த்தீங்க.. பெரிய மனசு காக்கா உங்களுக்கு, நா தான் உங்க பேர கெடுக்குற மாதிரி நடந்து போச்சு, ஊரு எப்படி பேசுச்சோ..? மேற்கொண்டு உங்களுக்கு கஷ்டம் கொடுக்க மனசு வரல காக்கா..? நா எங்கேயாச்சும் போறேன்..” என்ற மணியனை மறித்து,

“போ.. எங்கே வேணாலும் போ.. அதோ அந்த எதிர்ல இருக்குற கடை உனக்கு சொந்தமானது.. அதை வித்து காசை எடுத்துக்கிட்டு போ..!” என்று காக்கா சொன்னதும் திகைத்து அவர் கைக்காட்டிய திசையில் நோக்கினான் மணியன்.

“மணியன் மெர்ச்சண்ட்ஸ்” என்ற பெயருடன் கடை பளப்பளத்தது. குழப்பத்துடன் “என்ன காக்கா இது..?” என்ற மணியனுக்கு,
“உன் காசுதான்டா..! பத்து வருசத்துக்கு மேலா நீ உழைச்சதுக்கான சம்பள காசில் நா திறந்த கடை அது..! அல்லா அதில் அபிவிருத்தியை உண்டாக்கி மேலே மேலே வளர்த்து இப்போ பெருமரமா வளர்ந்து நிக்குது.. உன்னோட ஹக்கு மணியா அது..! உனக்கு மட்டுமே சொந்தமானது டா..! இந்தா சாவி..! போ.. போயி கடையை தொறந்து கல்லாவுல உக்காரு..! அதுக்கு முன்னாடி வீட்டுக்கு போயி குளிச்சிட்டு புது ஆடையா போட்டுட்டு வா..!” என்று சொல்லிவிட்டு, “எங்களையெல்லாம் விட்டுட்டு போறாராம்லே..” என்று முணங்கிவிட்டு முகத்தை பொய் கோபமாக வைத்துக் கொண்டார் தீன் காக்கா.

மணியனோ திகைத்து மிரண்டு போய் நின்றிருந்தான். “இன்னும் ஏன் நிக்க.. கெளம்பு போய் குளிச்சிட்டு வா.. என்ன கடன்காரனாவே வச்சிடலாம்ன்னு முடிவு பன்னிட்டியா..? உன் கடனை அடைக்காம நா ஹஜ்ஜுக்கு கூட போகாம கெடக்கேன் மணியா..! நீ கூச்சநாச்சப்படாம பெரும்பாடு பட்டு சம்பாதிச்ச காசு மணியா இது..! சாவிய வாங்கிக்க மணியா..!” என்றார் குரல் தழுதழுக்க..

ஒரு முழுமையான மனிதனாக தீன் காக்காவை கண்டான் மணியன், கண்களில் நீர் சாரை சாரையாக வழிந்தோட..!

#சிறுகதை

இம்மாத #சமூக_உயிரோட்டம் இதழில் வெளிவந்தது.

* ஒரு நபிமொழியை அடிப்படையாக கொண்டது..

Best regards,