Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

Tuesday, 12 November 2013

திருமணம் என்ற சொல்லின் விளக்கம்:

திருமணம் என்ற சொல்லின் விளக்கம்:
=============================

திருமணம் என்ற சொல்லின் உட்பொருள் மணம்.மணம் மலரினின்று தோன்றுவது.திரு என்பது
இங்கு அடைமொழி.மணத்தை நுகர்வோன் மணமகன்.மலராக மணமகள் குறிக்கப்படுவது மரபு.

தாலி:
=====

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன்
மணமகள் கழுத்தில் கட்டி
வந்தபடியால் இதற்கு தாலி என்ற பெயர் வந்தது.தாலமாகிய பனை ஓலையினால்
செய்தது என்பது இதன்
பொருள்.பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க
உலோகத்தால் ஆன தாலி செய்து
பயன்படுத்தினர்.பின்னாளில் அதனைப்பொன்னால் செய்து பொற்றாலி க்கினர்.

அருகு-மணை எடுத்தல்:
==================

தாலிகட்டிய பின்பு வயதும் ஒழுக்கமும் முதிர்ந்த பெரியோர்கள் மணமக்களுக்கு
நல்வாழ்த்துக் கூறுவர்.முற்காலத்தில் அருகம்புல்லை மணமக்கள்மீது தூவி ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம்சூழ
வாழ்வீர் என்று வாழ்த்துவர்.

"அறுகெடுப்பார் அயனும் அரியும்"என்பது திருவாசகம்.இதன் உட்பொருள்
அருகம்புல் படர்கின்ற இடம் எங்கும்
வேரூன்றி நிலைபெறும்.மழையின்றி மேல்பாகம் வரண்டாலும் மழைபெய்தால் மீண்டும் தழைத்து
வளரும்.இத்தகைய அருகுபோன்று வாழ்வின் இடையில் வருகின்ற வறுமை போன்ற துன்பச் சூழலில் அழிந்து
போகாமல் ஆண்டவன் அருள்நீரால் எத்தகைய துன்பச் சூழலையும் தாங்கிப் புத்துணர்வுடன் தளிர்த்து மீண்டும் செழிப்புடன் வாழ்வாயாக என்பது இதன் கருத்தாகும்.

பிற்காலத்தில் அருகுதூவி வாழ்த்துவதற்குப் பதில் மஞ்சள் கலந்த பச்சரிசியைத் தூவும் வழக்கம் வடநாட்டு மக்களின் தொடர்பால் வந்த பழக்கமாகும். அருகைத்தேடும் சிரமம் இல்லாமல் மஞ்சள்
அரிசியைத் தூவுதல் சுலபமானதால் மக்கள் எளிதாக இதைப் பின்பற்றினர்.

ஆயினும் மணமக்கள் மீது மலர்தூவி வாழ்த்துவதே சிறப்பான முறையாகும்.

முகூர்த்தக்கால் நடுதல்:
========================

முகூர்த்தக்கால் திருமணப் பந்தலின் வடகிழக்கு மூலையில் நடவேண்டும். வடகிழக்கு மூலையை "ஈசானதிசை"எனப் போற்றுவர் பெரியோர்.ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.

அரசாணிக்கால் நடுதல்:
========================

மணவறைக்கு முன்னால் அரசாணிக்கால் நடுதல்.அதாவது அரச மரத்தின் கிளையையும்
பேய்க்கரும்பையும் சேர்த்து நடுதல் அரசாணிக்கால். இந்திரன் கற்பக மரமாகக் கொள்ளப்படுகிறான். மரங்களில் சிறந்தது அரசு. அதனால்தான் அதற்கு அரசு என்று பெயர் வைத்தனர். போகியாகிய
இந்திரனை அதில் எழுந்தருளச்செய்து வழிபாடு செய்யப்படுகிறது. மணமக்கள் போகியாகிய இந்திரனைப்போல வாழவேண்டும் மற்றும் அரசமரத்தின் பழங்கள் தித்திப்பு உடையன. பேய்க்கரும்பு
கசப்புடையது. நம் வாழ்வில் இன்பமும் துன்பமும்,விருப்பான செயல்களும் வெறுப்பான செயல்களும் கலந்தே வருவன. இவை இரண்டையும்
சமமாகக்கொண்டு வாழ்க்கையில் சோர்ந்துபோய்விடாமல் கடமைகளைப் பற்றின்றிச்
செய்து காலத்தை வென்று நிமிர்ந்து வாழ்வீர்களாக என்று அர்த்தமாகும்.

மணமக்கள் கிழக்குநோக்கி அமர்தல்:
============================

கிழக்கும் வடக்கும் உத்தம திசை என்று போற்றப்படுவன.உலக வாழ்விற்கு இரு
கண்கள் போன்று ஞாயிறும் மதியும் தோன்றி உயர்ந்து பல உயிர்களுக்கும் நலம் பயப்பன போன்று உங்கள்
வாழ்வு உயர்ந்து சிறந்து நின்று பல்லோருக்கும் பயன்பட நீங்கள் வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.கிழக்கு இந்திரன் திசை. இந்திரன் போகி. அவனைப்போன்று மணமக்கள் போகத்தை நுகர்தல் வேண்டும் என்பதாகும்.

திருமண வேள்வி:
==============

அத்தி,ஆல்,அரசு,மா,பலா முதலிய மரங்களின் உலர்ந்த சுள்ளிகள் கொண்டு தீ வளர்த்துப் பொங்கழல்
வண்ணனாகிய இறைவனை எழுந்தருளச் செய்து வணங்கி வாழ்க்கை வளம் பெற வேண்டுதல்
வேண்டும்.மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய மரங்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத்
தாம் எரிந்து மறையும்போதுகூடத் தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக்கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை தங்கள்
சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன்பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும் குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும்.

பாலிகை இடுதல்:
=============

நவதானியங்களைக் கொண்டு பாலிகையிட்டு வளர்த்து மணவறையின் முன்பு வைப்பது பாலிகை இடுதல் எனப்படும். பாலிகை எட்டு மங்கலப்பொருள்களில் ஒன்று.அதில் நவ தானியங்களும் நன்கு
வளர்ந்து நாட்டுக்கு நலம் பயப்பது போல உங்கள் வாழ்வு சிறந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நலன் பயப்பதாக
இருத்தல் வேண்டும் என்பது கருத்தாகும்.

ஆறு குணங்கள்:
=============

1.உண்மை உரைத்தல்.
2.தர்மம் செய்தல்.
3.சோம்பல் தவிர்த்தல்.
4.பொறாமை விடுதல்.
5.பொறுமை கொளல்.
6.தைரியம் பேணல்.

பதினாறு பேறுகள்:
===============

1.நன்மக்கள்.
2.செல்வம்.
3.அழகு.
4.நோயின்மை.
5.இளமை.
6.கல்வி.
7.வாழ்நாள்.
8.நல்வினை.
9.பெருமை.
10.துணிவு.
11.வலிமை.
12.வெற்றி.
13.நல்லுணர்வு.
14.புகழ்.
15.நுகர்ச்சி.
16.நல்ல நண்பன்.

மஞ்சள்,மருதாணியின் சிறப்பு:
=======================

1.குளிக்கும்போது தாலிச்சரட்டில் மஞ்சள் பூசுவதால் கழுத்து மற்றும் மார்புப்பகுதியில் மஞ்சள்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
2.மருதாணி மூளையின் செயல்திறனை மேம்படுத்தும். எனவே அடிக்கடி மருதாணி இட்டுக்கொள்ளலாம்.
3.மஞ்சளுடன் மருதாணியும் கலந்து உள்ளங்கையில் பூசுவதால் கருச்சிதைவு ஏற்படாது.
4.கை,கால்களில் மஞ்சள் பூசுவதால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை வராது.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்:
==========================

இது மிகத் தொன்மையான பழக்கமாகும்.கல்லானது எவ்வளவு பாரத்தையும் தாங்கும். ஆனால் தன் சக்திக்கு மீறினால் பிளந்து போகுமே தவிர வளைந்து கொடுக்காது. இத்தகைய கல்லைப்போல் உன்
வாழ்க்கையில் உன் கற்பிற்கு சோதனை வருமானாலும் உறுதியுடன் இருந்து உன் கற்பைக் காத்துக்கொள்
என்பதே இதன் பொருள்.

அருந்ததி காணக்கிடைப்பதற்கரிய அருமையான நட்சத்திரம். கற்புடைய பெண் அருந்ததியைப் போல்
போற்றப்படுவாள் என்பதே இதன் உட்பொருளாகும்.

சங்குமோதிரம் எடுத்தலின் ரகசியம்:
============================

மணவறை முன் உள்ள நீர் நிறைந்த மண்பானையில் சங்கும் மோதிரமும் இட்டு மணமக்களை எடுக்கச்
சொல்வார்கள் பெரியவர்கள். அப்போது மணமகன் பொன்னால் ஆன மோதிரத்தையும்
மணமகள் பொன் சங்கையும் எடுக்கவேண்டும். இல்வாழ்க்கைக்கு இன்றியமையாத பொன்னை மணமகன் தேடுதல் வேண்டும். மக்களைப் பாலூட்டி
வளர்க்கும் பாங்கினை மணமகள் மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது இதன் உட்பொருள். நீர் நிறைந்த மட்பானை நீரால் சூழப்பட்ட இப்பூவுலகைக் குறிப்பதாகும்.

வெற்றிலைபாக்கு மாற்றுதல்:
=======================

மணமகனின் தந்தையும் மணமகளின் தந்தையும் கிழக்கு மேற்காக அமர்ந்து
வெற்றிலை பாக்கு வைத்து மூன்று
தலைமுறையினரைச் சொல்லி இன்னார் மகளை இன்னார் மகனுக்கு கொடுக்கின்றோம் என
இருவீட்டாரும் கூறி ஏழு
பாக்கும் ஏழு வெற்றிலையும் வைத்து மாற்றுதல். எழுவகைப் பிறப்பிலும் இன்று
சொன்ன சொல் தவறுவதில்லை
என்று பலர் முன்னிலையில் உறுதியளிப்பதாகும்.

உறவின்முறை விளக்கம்:
====================

கணவன், கொழுநன்:
-------------------------------

கண் அவன்.பெண்ணுக்கு கண் போன்றவன் என்பதாகும்.நம்மை நல்வழி நடத்திச்
செல்லும் கண்ணைப் போல்
பெண்ணை நல்வழிப்படுத்திச் செல்லும் கட்டுப்பாடு உடையவன் கணவன் என்பதாகும்.

கொழுநன் பெண்ணுக்குக் கொழு கொம்பு போன்றவன் என்பதாகும். கொடி படர்ந்து உயர்வதற்குக் கொழு கொம்பு எப்படி இன்றியமையாததோ அதே போல் பெண்மைக்குப் பாதுகாவலுக்குரிய ஆண்மகன் என்பதாகும்.

மனைவி:
--------------

மனைவி,துணைவி,இல்லாள் இச்சொற்கள் இல்லறநெறி காப்பவள் என்பதைக் குறிப்பிடுவனவாகும். மனைக்கு உரியவள் மனைவி என்பதாகும்.

Monday, 10 September 2012

திருமணத்தை தள்ளி போடும் பெண்கள்!!



மணல் கயிறு’ திரைப்படத்தில் ஹீரோ எஸ்.வி.சேகர், தனக்கு வரப்போகிற மனைவி இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பத்து கண்டிஷன்கள் போடுவார்...
திருமண மார்க்கெட்டில் மாப்பிள்ளைகள் கண்டிஷன் போடும் காலமெல்லாம் இன்று மலையேறிவிட்டது. இது அப்படியே தலைகீழாக மாறி இப்போது திருமண மார்க்கெட்டில் பெண்கள்தான் தனக்கு வரும் மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று ஆயிரத்தெட்டு கண்டிஷன்கள் போடுகிறார்கள்!...
உதாரணமாக, நானே சென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வருகிறேன்.
எங்களது மேரேஜ் சென்ட்டரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்செய்து பதிவு செய்யும் முறையை ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக வைத்திருக்கிறேன். சமயங்களில் பெண், பையன்களையும் நேராக ஆபீஸிற்கு வரச் சொல்லி பேசிப்பார்ப்பேன். பெண்கள், பையன்களுக்கு அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும்தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா...
உதாரணமாக சமீபத்தில் தன் பெண்ணுக்கு ரிஜிஸ்டர் செய்ய வந்த பெண்ணின் தாயார் சொன்னது இது...
‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம். ஃபோன்லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு. இந்தக் கல்யாணமே வேண்டாம்னுட்டா, நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி ரிஜிஸ்டர்  செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.
‘‘அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்!’’
‘‘வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா. அதுக்கு அந்தப் பையன் ‘குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான். அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. ‘குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்குவாங்க’ன்னு சொல்ல வேண்டியதுதானே, நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான்? இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே இவ்வளவு(!) பேசறான். சமைக்கணும், காஃபி போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா(!) படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா!...

அடுத்து ஃபைல் பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். ‘‘நீங்க கொடுத்த அந்த ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா, அந்தப் பையனோட செல் நம்பர் கொடுத்தார். பேசிப்பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது. (மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை) நேத்து நான் மூவி போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். ‘யார்கூட போனே?’ன்னு கேட்டான். இந்த மாதிரி கேட்கக்கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே! ஐ வாண்ட் மை ஸ்பேஸ். எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான்!’’ என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.
இது மட்டுமல்ல... இதுபோல் எத்தனையோ விதமான டயலாக்குகளை நான் கேட்டு வருகிறேன்.
‘‘எனக்கு லைஃப்லேயே பிடிக்காத வார்த்தை காம்ப்ரமைஸ். நான் எதுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். அப்படி ஒரு லைஃப் எனக்குத் தேவையே இல்லை’’ என்றாள் ஒரு பெண். அவளும் 30 வயதை நெருங்குகிறாள்....
ஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது.... ‘‘எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம். அதனால பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பாருங்க.... அல்லது வெளியூரிலே குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்கே வேலைபார்க்கற மாதிரி பையன் இருக்கா?’’ என்றார்கள்...
இன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்... ‘‘எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம். அவளுக்கு காஃபி கூட கலக்கத் தெரியாது.’’ இதைச் சொல்லிடுங்க முதல்ல! என்றார்கள்.
‘‘எங்க பொண்ணு மூட் வந்தா நல்லாவே குக் பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்...
‘‘எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபெண்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்.
‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க. அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் ‘மூட் அவுட்’ ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்...
இதையெல்லாம் பார்க்கும்போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மாறிப்போயிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.
வரனுக்காக ரிஜிஸ்டர் செய்துவிட்டுப் போனால்கூட, பையன் வீட்டினர்தான் திரும்ப போன் அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா? என்று பொறுப்பாக கேட்கிறார்கள். பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட பொண்ணு ஃப்ரைடேதான் வருவா... சண்டேதான் பேசணும்... சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா... அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும் என்பார்கள். இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்...!’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறிவிட்டது...
‘இவர்தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கமோ இவர்கூடத்தான்!...’ என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய்விட்டது.
‘‘இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுதான் கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வேன்!’’ என்று சொல்கிறார்கள் பெண்கள்.
பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப்போடச் சொல்லும் காரணமே, இந்த ‘செக்யூரிடி’தான். ‘‘ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன்... அதுக்கான கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு செக்யூரிடி வேணும்!...’’ என்கிறார்கள்.
தவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது. அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே எதிர்பார்க்கிறார்கள்... தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் நினைக்கிறார்கள்.
உதாரணமாக சினிமாவுக்கு யாரோட போனே? என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்!...
சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மைகூட மாறி விட்டது... ‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே!’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும்கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்!’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பர்சன்டேஜ்தான்!...
இன்றைய பெண்களிடம் ‘இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான திருமணமாக அமையும்!’ என்ற நம்பிக்கை இல்லை.
நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது. என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் ‘ஹைட் 2 இன்ச் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று தான் எடுக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில் கணவரை செலக்ட் பண்ணுவது.
தனக்கு வரப் போகும் கணவர் இந்த மாதிரி நல்ல படிப்பு படித்து, வேலையில் இருக்கிறார், நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால் அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், ‘பேரண்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது’ என்று பேசுவது.
இவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா?
பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 70 வயதுக்கு மேல் ஆகி உடல் நலக்குறைவால் அவதிப்படுவது. வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய நிலை.
கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.
படிக்க வைத்து ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலிருக்கும் 60 +வயது பெற்றோர்கள் மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளான மாதிரி உறவினர் நண்பர்களை ஒதுக்கி தனிமைப்பட்டு மன உளைச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இதனால் பெற்றோரின் சந்தோஷத்தை, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்கும் வாய்ப்பையே இந்தப் பெண்கள் இழக்கிறார்கள்.
முதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தை, கணவரை நம்பி, தெய்வ பலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 24 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.