Thursday, 17 May 2012

பராசக்தி (புத்தம் புதிய காப்பி)


பராசக்தி (புத்தம் புதிய காப்பி)-----------------------------------------------
மடாதிபதி ஆனேன்; நீதிபதி வேண்டாம் என்பதற்காக அல்ல; நீதிபதியின் தீர்ப்பை விட இறைவனின் தீர்ப்பு பெரிது என்பதற்காக.
உனக்கெதற்கு இந்தப் பதவி, பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கும்போது என்று கேட்கலாம்; எனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டது; உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எனது வளர்ச்சி பாதிக்கப்பட்டது; எனது பக்தர்கள் பாதிக்கப்பட்டார்கள்; 293-வது ஆதீனமாக பதவி ஏற்றேன்!நல்லது!
ஞானமும், பேச்சாற்றலும், வீரமும், போர் குணமும், அழகும், ஆங்கில அறிவும் கொண்ட நித்திதான் தனது அடுத்த ஆதீனகர்த்தா என்று கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்தார் மதுரை ஆதீனம்!அப்படி அவர் பாராட்டியது தவறா? இது போறாதா? பொங்கி எழுந்தனர் எங்கள் எதிரிகள்! ஊடகத் துறையை உசுப்பினார்கள், விஷயத்தை ஊதிப் பெரிதாக்கச் சொன்னார்கள்! அந்த விஷமிகள் நினைத்தவாறே விஷயம் இப்போது நீதிமன்றம்வரை வந்துவிட்டது! ஆகாரத்திற்காக அழுக்கை உண்டு தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன்... அதுபோலதான் நானும். உலகின் நன்மைக்காக ஆன்மிகத்தில் குதித்தேன்; நாட்டுக்குத் தொண்டாற்ற மடங்களை ஆரம்பித்தேன்; என் சுயநலத்தில் பக்தர்களின் பொதுநலம் மட்டுமே கலந்திருந்தது!

பாவம் அந்த   ரஞ்சி; சினிமாத் துறையால் ஓரங்கட்டப் பட்ட ஒரு அபலைப் பெண்; அப்போதெல்லாம் கவலைப் பட்டதா இந்த ஊடகங்கள்? அவரை தேடிப் பிடித்து அவரது வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை! அந்த பக்தையை கைபிடித்து கரையேற்றியபோது வந்தார்கள்!

"
கதவைத் திற காற்று வரட்டும்' என்றுதான் சொன்னேன்! ஆனால் காற்றுக்குப் பதிலாக காமெராவுடன் உள்ளே வந்தது ஒரு ஊடகம்! பொல்லாதது எல்லாவற்றையும் படம் பிடித்தான்; பணம் கேட்டு மிரட்டினான், இல்லை என்றேன்! தனது செய்தி சானலின் மூலம் வீடு வீடாக நீலப்படம் காண்பித்து பிஞ்சுகளின் மனத்தில் கூட என் மீது வஞ்சகம் வளரச் செய்தான்! அவனைக் கண்டித்ததா இந்த உலகம்?
நிம்மதியாக வாழவிட்டார்களா என்னை? வழக்குமேல் வழக்கு தொடுத்தார்கள்!கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் போய் விடுவேனோ என்று  பதறினேன்!
முதலில் ரஞ்சி ஓடினாள்; பிறகு நானும் ஓடினேன்; பின்னர் இருவரும் சேர்ந்து ஓடினோம்; ஓடினோம் ஓடினோம் பிடதியில் இருந்து ஊர் ஊராய் ஓடினோம்! மதுரையை அடைந்தோம். இறைவனேஆதீனம் உருவில் வந்து என்னை அடுத்த ஆதீனம் நீதான் என முடிசூட்டி மகிழ்ந்தார்! இப்போதாவது விட்டார்களா?
ஆதீனத்தை போதையிலும் மயக்கத்திலும் வைத்திருக்கிறேன் என்கிறது ஊடகங்கள்? யார்  இவர்கள்? ஐபிஎல், சினிமா செய்திகள், டி.வி. சீரியல்கள்... என பல்வேறு போதை வஸ்துகளுக்கு  மக்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தி வைத்திருப்பவர்கள்! இப்போதாவது கூறுங்கள், இது யார் தவறு?என் தவறா? ஆதீனத்தின் தவறா? இறைவனின் தவறா...?!

பசுவும் பன்றியும்


பாதிரியார் சவரிமுத்து வெகு நன்றாக பிரசங்கம் செய்து முடித்து பெருமிதத்துடன் நோக்கியபோது ஆரோக்கியசாமி  தலை குனிந்து விசனத்துடன் இருப்பதை கண்டார். "எல்லோருக்கும் நல்லதையே செய்யும் நல் மேய்ப்பர்   உன்னை சந்தோஷமாக வாழ வைத்திருக்கும்போது ஏன்  கவலை??  என்றார்.
"சாமி, என்னை எல்லோரும் கஞ்ச பிரபு கருமி என்கிறார்களே, என் சொத்து பூரா இந்த கோயிலுக்கு தானே எழுதி வச்சிருக்கேன். ??
தம்பி,  உனக்கு பசுவும் பன்றியும் என்கிற கதை சொல்றேன்  கேள். 
பசுவை பார்த்து பன்றி கேட்டது.  "உன்னை மட்டும் எல்லோரும் கொண்டாடறாங்களே, என்னை திட்றாங்களே. ; நீ பால்,மட்டும் தான் கொடுக்கிறே.  நான் என்னுடைய உடல் இறைச்சியையே கொடுக்கிறேன் வித விதமாக தின்னுட்டும்  இளக்காரமா பேசுறது ஏன்??
பசு சொல்லிச்சு :  "தம்பி நான் உயிரோடிருக்கும்போதே எல்லோருக்கும் பால் தினமும் தரேன்.   நீ செத்தப்புறம் தான்  உன் சதையை திங்கிறாங்க.  புரிஞ்சுதா.
இந்த கதை பாதிரியார் மூலம் ஆரோக்கியசாமிக்கு  புரியாவிட்டாலும் நாம் புரிந்து கொள்ளவேண்டியது " வாழும் போதே உன்னாலான உதவியை எப்போதும் இடைவிடாமல்   செய்.  பசுவாக உன்னையும் போற்றுவார்கள். "

 
__._,_.___

Monday, 14 May 2012

ஐடி துறையில் பணிபுரிவோர்களுக்கு


ஐடி துறையில் பணிபுரிவோர்களுக்கு

சுகி.சிவம் கூறும் அறிவுரை

""நீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடை யது. வெற்றி என்பது உங்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருள். வாழ்க!

பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல! உங்களின் பெற்றோர் தங்களது பணிக் காலத்தின் இறுதியில் வாங்கும் ஊதியத் தொகையை, நீங்கள் முதல் மாதமே வாங்கி விடலாம். அதற்காக, அவர்களை விடவும் நீங்கள் அதிபுத்திசாலி என்றோ, திறமையாளர் என்றோ, பெரிய மனிதராகவோ எண்ண வேண்டாம்.

உறவினர்களை அற்ப ஜந்துக்கள் போல நினைக்க வேண்டாம். தம்பி- தங்கைகளைப் படிக்க வைக்க நிறைய செலவு செய்யுங்கள். குடும்பத்தின் பந்த- பாசத்தை, இணைய தளத்தில் டௌன் லோட் செய்ய முடியாது! வெளிநாட்டுப் பணம் வரலாம்... வெளிநாட்டுப் பண்பாடு வரலாமா? பிற மனிதர்கள் எல்லோருமே நாம் பயன்படுத்திக் கொள்ள மட்டும் அல்ல!

பத்து ரூபாய் கூடுதல் சம்பளம் என்றதும் கம்பெனியைக் கைகழுவுவது கொஞ்ச காலம் பெருமையாகத் தெரியலாம். ஆனால், ஒரு நாள்... இந்தத் துறையின் செயல்பாடே இதனால் ஸ்தம்பிக்க வாய்ப்பிருக்கிறது.

உணவு, உறக்கம், ஓய்வு, காலா காலத்தில் இல்லாதபடி உடம்பை- மனதைச் சீர்குலைத்தால், 40 வயதுக்குப் பிறகு உயிர் வாழ்வதே பிரச்னை யாகி விடும். யோசியுங்கள்.

எப்போதும் ஏ.ஸி-யில் இருப்பதால், உங்களுக்கு வியர்வையே வருவதில்லை. அது, உடலுக்குக் கெடுதல். உடலை வியர்க்க விடுங்கள். தண்ணீர்த் தாகம் எடுக்காத போதும் நீர் அருந்துங்கள். கண்ட கண்ட குளிர்பானங்கள் குடிப்பதை விட்டு விட்டு, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை சாறு அருந்துங்கள். பார்லியும் சேர்த்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் நிகழ வேண்டிய காலைக் கடனை முடிக்க மாத்திரைகள் சாப்பிடுவதும் நல்லதல்ல. கண்களிலும் கவனம் வையுங்கள்.
உட்கார்ந்தே இருப்பதால் எடை கூடும்; சர்க்கரை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலும் பழுத்துக் கிடக்கும். மூளைக்கு வேலை என்பதால் ரத்த அழுத்தமும், சக்கைப் போடு போடும். எல்லாவற்றையும் எதிர்பார்த்து வெற்றி கொள்ளுங்கள்.

காதலிக்கும்போது அல்லது திருமணத்துக்கு  தேடும் போது... சம்பளம், வேலைவாய்ப்பு, செலவழிக்கும் இயல்பு போன்றவற்றை இரண்டாம்பட்சமாக வைத்துக் கொண்டு, ஒழுக்கம், குணம், பண்பாடான குடும்பம் ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

'இன்று போலவே என்றும் சம்பளம் வரும்' என்று கனவு காணாதீர்கள். சிக்கனமாக செலவழிக்கப் பழகுங்கள். உங்களால் அதிகம் செலவழிக்க முடியும் என்பதற்காக, சிரமப்பட்டு சம்பாதிப்பவர்களது மனம் புண்படும்படி ஜம்பம் அடிக்காதீர்கள். அந்நிய நாட்டின் தயவில் அதிகம் சம்பாதிப்பவர்களாகிய பலரும் இந்த நாட்டு வெற்றிக்கு உழைப்பவரை இளக்காரமாக நினைக்காதீர்கள்.

வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பும் போது, ஓட்டல்களில் தங்கிக் கொண்டு... உறவினர்களை- அம்மா- அப்பாவை, ''என்னால் வர முடியாது. இங்கு வந்து பார்... ஆட்டோவுக்கு வேண்டு மானால் காசு தருகிறேன்!'' என்று கூறி அசிங்கப்படுத்தாதீர்கள். பணத்தை விட ரத்தம் கனமானது.

வெளிநாடுகளில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவு என்பது உண்மைதான். என்றாலும் சிறிது நேரமாவது தாத்தா- பாட்டி... அதாவது உங்களின் பெற்றோர், உங்கள் பிள்ளையைக் கொஞ்சுவதற்கு- உணவு ஊட்டுவதற்கு அனுமதி கொடுங்கள்.

உங்களை காயப்படுத்துவதாக இந்த பதில் அமைந்தால், என்னை மன்னியுங்கள்! உங்களை நோகடிப்பது எனது நோக்கம் அல்ல. இவை யாவும், உங்களைப் போன்றோரின் பெற்றோர்கள், உங்களிடம் சொல்ல முடியாமல் என்னிடம் புலம்பிய புலம்பல்கள்.""



.(நான் வெறும் தபால்காரன்... அவ்வளவே! நமக்கு வரும் எந்த நோட்டீஸூக்கும் தபால்காரனை நோக முடியாது).