வீடு... வாசல்... வில்லங்கம்...
வீடு... வாசல்... வில்லங்கம்...
.................................................
கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்... ஆனாலும் மனதைத் திடப்படுத்திக்கொண்டு படித்து முடியுங்கள்!
அடுத்துச் சொல்லப் போகும் இரண்டு சம்பவங்கள் உங்களுக்கு இரண்டு விதமான படிப்பினையைத் தரும்.
வீடோ, நிலமோ வாங்கப் போகிறவர்களாக இருந்தால் ஏமாறாமல் இருக்க டாக்டர் முரளியின் சம்பவமும்,
வாங்கிப் போட்ட இடத்தைக் கண்காணிக்காமல் இருந்தால்
என்னாகும் என்பதை ஜெயசீலன் சம்பவமும் உங்களுக்கு விளக்கும்.
முதலில் டாக்டர் முரளி...
..........................................
சென்னை சைதாப்பேட்டையில் பிஸியான மசூதி தெருவில் சொந்தமாக க்ளினிக்
கட்டும் ஆசையோடு 55 லட்ச ரூபாய்க்கு வீடு ஒன்றை வாங்கினார் டாக்டர் முரளி.
வீடு இருக்கும் ஏரியாவைப் பார்த்த முரளி, வீட்டைப் பார்க்க வேண்டும் என்றபோது, 'ஏற்கெனவே ஆட்கள் குடியிருக்கிறார்கள்.
விற்பது தெரிந்தால் வில்லங்கம் செய்வார்கள். பத்திரம் முடிந்தவுடன் காலி செய்துவிடலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
பத்திரங்களைச் சரிபார்த்த முரளியும் பணத்தைக் கொடுத்து தன் பெயரில் பத்திரத்தை முடித்துவிட்டார்.
அதன்பிறகு, தான் வாங்கிய வீட்டுக்கு கம்பீரமாகப் போய் இறங்கியபோதுதான்
தெரிந்திருக்கிறது, தனக்குப் பத்திரம் மட்டும்தான் சொந்தம்... இடம்
சொந்தமில்லை என்பது!
''தாய் பத்திரம் முதற்கொண்டு எல்லாவற்றையும் போலியாகத் தயாரித்து என்னை ஏமாற்றிவிட்டார்கள்.
வில்லங்கம்
போட்டுப் பார்த்தபோதுகூட ஒரு பில்டருக்கு அக்ரிமென்ட் போட்டிருந்ததும்,
புரோக்கர் ஒருவருக்கு பவர் கொடுத்திருந்ததும் தெரிய வந்தது.
ஆனால், எனக்கு விற்றவர்கள், பில்டருக்குக் கொடுக்கமாட்டோம் என்றதோடு,
புரோக்கருக்குக் கொடுத்த பவரை கேன்சல் செய்து ரெஜிஸ்தரார் அலுவலகத்தில்
எழுத்துப் பூர்வமாகக் கொடுத்தார்கள். அதை நம்பித்தான் வாங்கினேன்.
பத்திரம் முடிந்த பிறகு அந்த வீட்டுக்குப் போனபோதுதான் தவறு தெரிந்தது.
சரியாக விசாரிக்காமல் பணத்தைக் கொடுத்துவிட்டு மாட்டிக்கொண்டேன். இப்போது காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறேன்'' என்றார்.
முரளிக்கு வீட்டை(?) விற்ற ஜெயலலிதா, அவருடைய கணவர் லோகநாதன் ஆகியோரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது போலீஸ்துறை!
அவர்களும் முரளியைப் போலவே சுரேஷ் பாபு என்பவரிடம் ஏமாந்திருக்கிறார்கள்.
அதன்பிறகு இந்த சொத்தைக் காட்டி வங்கியில் கடன் வாங்க முயற்சித்து அது முடியாமல் போனதால் விற்றிருக்கிறார்கள்.
அடுத்து ஜெயசீலன்...
...................................
சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த இவர், மடிப்பாக்கம் ஏரியாவில் மகேஸ்வரி என்பவரிடம் ஒரு மனையை வாங்கிப் போட்டிருக்கிறார்.
மகளின் திருமண நேரத்தின்போது விற்றுச் செலவுகளை சமாளித்துக்கொள்ளலாம் என்பது திட்டம்.
ஆனால், வாங்கியதோடு சரி... பத்து ஆண்டுகளாக அந்தத் திசைக்கே செல்லவில்லை.
தற்செயலாக ஒருநாள் அந்தப் பக்கமாகப் போனபோது, தன்னுடைய மனையில் ஒரு வீடு முளைத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டார்.
விசாரித் ததில், பாக்கியலட்சுமி என்பவ ரிடம் இருந்து மனையை வாங்கி வீடு
கட்டியதாக வீட்டுச் சொந்தக்காரர் ஆறு முகம் சொல்ல, ஜெய சீலனுக்கு மேலும்
அதிர்ச்சி.
இந்த பாக்கியலட்சுமிதான் மகேஸ்வரிக்குச் சொத்தை விற்றவர். மூலப்பத்திரம் அவர் பெயரில்தான் இருக்கிறது.
ஜெயசீலனின்
மனை நீண்டகாலமாக கவனிப்பாரற்று சும்மா கிடந்ததால், அந்தப் பகுதி
புரோக்கர்கள் 5 பேர் சேர்ந்து, பாக்கியலட்சுமி என்ற பெயரில் மனை
பத்திரத்தைப் போலியாகத் தயாரித்து ஆறுமுகத்துக்கு விற்றுள்ளனர்.
உட்பிரிவு பிரிக்கப்படாத சர்வே எண், பாக்கியலட்சுமிக்கு உரியது என்பதால், வில்லங்கம் போட்டுப் பார்த்தபோது வித்தியாசம் தெரியவில்லை.
இப்போது மனை யாருக்குச் சொந்தம் என்பதில் விவகாரமாகி இருவரும் போலீஸுக்குப் போயிருக்கிறார்கள்.
போலி பத்திர மோசடிகளை விசாரிப்பதற்கு என்று மத்திய குற்றப் பிரிவின்கீழ்
(Central Crime Branch) சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய
வளாகத்தில் தனிப்பிரிவு இயங்கி வருகிறது.
இதர ஊர்களைச் சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள மாவட்ட குற்றப் பிரிவு எஸ்.பி-யிடம் புகார் செய்ய வேண்டும்.
''ஆவணங்களை வைத்து மட்டுமே சொத்தை வாங்கும் முடிவை எடுக்கக் கூடாது.
பல நேரங்களில், சிக்கலுக்குக் காரணம் அதுவாகத்தான் இருக்கிறது. ஒரிஜினலைப்
போலவே கலர் ஜெராக்ஸ் எடுத்து ஏமாற்றும் வேலை நிறையவே நடக்கிறது'' என்று
ஆரம்பித்தார் மத்தியக் குற்றப் பிரிவு துணை ஆணையர் ஜி. தர்மராஜன்.
''அக்ரிமென்ட் போடும் முன் 'பவர்’ வாங்கி யவர் உண்மையான நபர்தானா என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும்.
அதேபோல், சொத் தின் உண்மையான உரிமையாளர் யார் என்று உங்க ளுக்குத் தெரியாதபட்சத்தில், அதை வாங்கும் நட வடிக்கையில் இறங்கக் கூடாது.
பவர் ஏஜென்டாக இருக்கும் புரோக்கர்கள் மூலம் சொத்தைப் பதிவு செய்யக்கூடாது.
முக்கியமாக புரோக்கர்களை அழைத்து சாட்சிக் கையெழுத்துப் போடச் சொல்லக் கூடாது.
பூர்வீகச் சொத்து என்கிறபட்சத்தில், வாரிசுகள் யார் என்பதை எல்லாம் தெரிந்துகொண்டுதான் வாங்கவேண்டும்.
அடமானச் சொத்து என்றால், கோர்ட் தீர்ப்பு வரும்வரை அதை வாங்கக் கூடாது'' என்று அடுக்கிக் கொண்டே போனார்.
சென்னை மற்றும் புற நகரங்களில் சைதாப்பேட்டை, மாம்பலம், மடிப்பாக்கம்,
பள்ளிக்கரணை, நீலாங்கரை, சேலையூர், வேளச்சேரி, தாம்பரம், ஆவடி, கிழக்குக்
கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, அம்பத்தூர், சோழிங்கநல்லூர், போரூர்
போன்ற பகுதிகளில் போலி சொத்துப் பத்திரங்கள் அதிகம் நடமாடுகின்றன என்பது
அவருடைய கருத்து.
கடந்த 25 வருடங்களுக்கு மேல் ரியல் எஸ்டேட் தொடர்பான வழக்குகளைக் கையாண்டு வரும் வக்கீல் கண்ணனைச் சந்தித்தபோது,
''போலி ஆவணங்கள் மூலம் சொத்து விற்பது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க
காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாலும், சொத்துக்களை
வாங்குபவர் கூடுதல் உஷாராக இருக்க வேண்டும்.
கொடுக்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் உண்மையானவைதானா என்று ஆராய வேண்டும்'' என்றவர்,
''தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பத்திரப் பதிவு அலுவலகம் தபால் அலுவலகம் போல்தான் செயல்பட்டு வருகிறது.
ஸ்டாம்ப் ஒட்டிய தபாலை எந்த முகவரிக்கும் யாரும் அனுப்பலாம். அதேபோல,
சர்வே எண்ணுக்குரிய முத்திரைக் கட்டணத்தைச் செலுத்தினால், யாருடைய
சொத்தையும் யாருடைய பெயருக்கும் பதிவு செய்துவிடலாம்.
சாந்தோம் சர்ச் கூட இவ்விதமாக போலியாக ஒருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்றார்.
முத்தாய்ப்பாக கண்ணன் சொன்ன விஷயம் முக்கியமானது.
''பெரும்பாலான ஆவண மோசடிகளில் புரோக்கர்களின் கைங்கரியம் அதிகமாக இருப்பதாகத்தான் தெரிகிறது.
அதனால், புரோக்கர்களை முழுமையாக நம்ப வேண்டாம். சொத்து தொடர்பாக
உரிமையாளர் மற்றும் வாங்குபவர் பேசும்போது, புரோக்கர்களை ஒதுக்கி வைப்பது
நல்லது.
சொத்தை கைகாட்டுவதோடு புரோக்கர்களின் வேலை முடிந்து விடுகிறது'' என்றார்.
மேலே சொன்ன இரண்டு விஷயங்களிலுமே புரோக்கர்கள்தான் விளையாடிஇருக்கிறார்கள்.
அதனால், ஒன்றுக்கு நான்குதடவை நன்கு யோசித்து முடிவு எடுங்கள். ஏனென்றால், சொத்து நம்முடையது!
சொத்து வாங்கும் முன்...
.........................................
ஒரிஜினல் டாகுமென்ட், தாய் பத்திரம் எங்கே, யாரிடம் இருக்கிறது என்று கேட்டு வாங்கிப் பார்ப்பது அவசியம்.
கடந்த 30 வருடமாக சொத்து யார் யார் பெயரில் இருந்து வருகிறது என்பதை
வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து பார்த்துத் தெரிந்துகொள்ள
வேண்டும்.
கிராம நிர்வாக அதிகாரியைச் சந்தித்து மனை மற்றும்
சொத்து விஷயத்தில் தாலூகா அலுவலகம் தொடர்புடைய ஆவணங்கள் குறித்து விவரங்களை
கேட்க வேண்டும்.
அவரிடம் ஃபீல்ட் மேப் (Field Map) கேட்டு வாங்க
வேண்டும். அதில், குறிப்பிட்ட சர்வே எண்ணுக்குரிய சொத்து எங்கே இருக்கிறது
என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்து சர்வேயர் வைத்து மனை
அல்லது வீட்டை அளக்க வேண்டும். ஃபீல்டை அளக்கும்போதே, அதில் பிரச்னை ஏதாவது
இருந்தால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், விஷயங்களைக் கக்கிவிடுவார்கள்.
அ-பதிவேடு (A - Register) வாங்கிப் பார்க்க வேண்டும். இதை நிலத்தின்
ஜாதகம் என்று சொல்லலாம். அதில், சர்வே எண், உட்பிரிவு செய்யப்பட்ட விவரம்,
உரிமையாளர் பெயர் போன்ற விவரங்கள் இருக்கும்.
சொத்தை வாங்குபவர், தன் பெயரில் புதிதாக வாங்கினால், அந்த விவரம் அ-பதிவேட்டில் இடம் பெறும்.
நகரம் என்கிறபோது, தாலூகா அலுவலகத்தில் நிரந்தர நிலப் பதிவேடு (Permanent Land Register) இருக்கும்.
இதில், சர்வே எண், உட்பிரிவு, வீடாக இருந்தால் கதவு எண், உரிமையாளர்
பெயர், சொத்தின் நான்கு எல்லை, சொத்தின் அளவீடுகள் போன்ற விவரங்கள்
இருக்கும்.
பிளான் மற்றும் பில்டிங் அப்ரூவல், கடைசியாக சொத்துவரி கட்டியதற்கான ரசீது போன்ற வற்றை வாங்க வேண்டும்.
இந்த ஆவணங்களை வக்கீல் ஒருவரிடம் கொடுத்தால், அவர் லீகல் ஒப்பீனி யன் தருவார். அதை வைத்து முடிவு செய்யலாம்.
பவர் பத்திரம்...
..........................
பவர் ஆஃப் அட்டர்னி மூலம் சொத்தை வாங்கும்போது, கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுப் பார்க்க வேண்டும்.
2,
3 வருட பழைய பவர் என்றால், உரிமையாளர் உயிருடன் இருக்கிறாரா என்று
விசாரிக்க வேண்டும். அவர் உயிருடன் இருந்தால்தான் பவர் செல்லும்.
ஓனரிடமிருந்து, 'பவர் இப்போதும் செல்லும்’ என்று வக்கீல் மூலம் பிரமாணப்
பத்திரம் (Affidavit) வாங்கிக் கொடுக்கச் சொல்ல வேண்டும். உரிமையாளர் மூலம்
சொத்தை வாங்குவது பல வகையில் நல்லது.
பத்திரிகை விளம்பரம்!
........................................
ஆவணத்தில் ஏதாவது சந்தேகம் வந்தால், உரிமையாளர் அனுமதியுடன் முன்னணி பத்திரிகைகளில், 'இந்தச் சொத்தை வாங்கப் போகிறேன்.
இதில் வில்லங்கம், ஆட்சேபணை ஏதாவது இருந்தால் 15 தினங்களுக்குள் தெரிவிக்கவும்’ என்று விளம்பரம் கொடுப்பது நல்லது.
மோசடியாக கிராமமே விற்பனை...
........................................................
சென்னை புறநகரான தாம்பரம் அருகே கஸ்பாபுரம் என்ற ஊரையே மூன்று பெண்கள்,
புரமோட்டர் ஒருவருக்கு தங்களின் பூர்வீக ஜமீன் சொத்து என்று சொல்லி விற்பனை
செய்துள்ளனர்.
மொத்தம் 80 குடும்பங்கள் வசித்த 282 ஏக்கரை 4 சர்வே எண்களில் விற்றுள்ளனர்.
இதில், 65 ஏக்கரை புரமோட்டர் பிளாட் போட்டு விற்றுவிட்டார். நிலத்தை
வாங்கியவர்கள் கிராம மக்களை காலி செய்யச் சொல்ல... அவர்கள் அதிர்ச்சி
அடைந்தனர்.
மாவட்ட கலெக்டரிடம் முறையிட, மத்திய குற்றப்பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அனைத்துக்கும் ஒரே எண்...
உள்ளாட்சி அமைப்பு கொடுக்கும் கதவு எண், வருவாய் துறையின் வழங்கும் பட்டா
எண், பத்திரப் பதிவு அலுவலகத்தில் கொடுக்கும் பதிவு எண், நிலத்தின் சர்வே
எண்
இந்த நான்கும் ஒரே எண்ணாக இருந்தால் ஒரு சொத்து எங்கே
இருக்கிறது என்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடிவதோடு, மோசடிகளைத் தடுக்கவும்
முடியும் என்பது ஆவண மோசடியால் பாதிக்கப்பட்ட பலருடைய கருத்தாக
இருக்கிறது.
நன்றி:நாணயம் விகடன்..