உங்க வீட்டில் நாய் வளர்க்கிறீர்களா.....?
வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கிறீர்களா? செல்ல நாய்க்குட்டிகளை பராமரிக்கும் வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்...
நாய்கள் வளர்ப்பு பிராணிகளல்ல, வளர்ப்புப் பிள்ளைகள் போலவே மாறிவிட்டன.
வீட்டுக் காவலுக்காக நாய்களை வளர்த்த காலம் போய், கவுரவத்துக்காக நாய்கள்
வளர்ப்பவர்கள் பெருகிவிட்டார்கள். தோற்றத்தில் அழகானது, கம்பீரமானது என்று
வகைவகையாகப் பிரித்து அதிக விலைகொடுத்து நாய்க்குட்டி வாங்கி
வளர்க்கிறார்கள். வீட்டு பாதுகாப்பிற்கு ஒரு நாய் என்பதை விட அதற்கு
ஜோடியாக இன்னொரு நாயையும் சேர்த்து வளர்க்கத் தொடங்கிவிட்டனர். நாய்களுக்கு
சாப்பாடு போடுவது மட்டும் போதாது. ஒரு சில பராமரிப்பு முறைகளையும்
கவனித்தால் அவை நலமாக இருக்கும்.
* நாய்க்குட்டியாக வாங்கி வளர்க்க விரும்பினால், குட்டி பிறந்தவுடன்
தாயிடம் இருந்து பிரித்துவிடாதீர்கள். குழந்தைகள்போலவே அவற்றுக்கும்
தாய்ப்பால் அவசியம். 40 நாட்கள் வரை தாய்ப்பால் குடித்து வளர்ந்த பிறகு
நாய்க்குட்டியை வாங்கி வளர்க்கலாம்.
* ஒருவேளை நாய்க்குட்டியை
பிரித்து, வாங்கி வந்துவிட்டால் அதற்கு மாட்டுப்பால் கொடுக்கலாம். பாலில்
கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆறியபிறகு கொடுக்க வேண்டும்.
* குட்டி நாய்களுக்கு ஒரு நாளைக்கு 8 முறை பால் கொடுக்க
வேண்டியதிருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் ஊட்டச்சத்து பானங்களையும்
கொடுக்கலாம்.
* நகரசபை, மாநகராட்சியில் அனுமதி வாங்கித்தான் நாய்
வளர்க்க வேண்டும். அனுமதியில்லாமல் வளர்த்தாலோ அல்லது தெருவில் நாய்களைத்
திரியவிட்டாலோ அவற்றை அப்புறப்படுத்த அவர்களுக்கு உரிமை உண்டு. எனவே அனுமதி
பெற்று கழுத்தில் 'டை' கட்டி, வீட்டில் கட்டிப்போட்டு வளர்க்க வேண்டும்.
* நாய்களுக்கு சத்துணவு கொடுத்து வளர்க்க வேண்டும். இறைச்சி கொடுத்தால் நாய்கள் கொழுகொழுவென்று வளரும்.
* நாய்கள் தரையில் படுத்துக் கிடக்கும். இதனால் கிருமிகள் தொற்ற நிறைய
வாய்ப்புள்ளது. அவற்றுக்கும் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இதற்கு கால்நடை டாக்டரிடம் காண்பிக்கலாம்.
* நாய்களுக்கும் முடி
கொட்டும். பொமரேனியன் போன்ற முடி அதிகம் உள்ள நாய்களுக்கு முடி உதிர்வதை
நாம் பார்க்க முடியும். இரும்புச் சத்து குறைபாடு, வயிற்றில் பூச்சி
இருப்பது போன்ற காரணங்களால் முடி உதிரும். வைட்டமின், தாது உப்புக்கள்
நிறைந்த உணவுகளைக் கொடுத்தால் முடிஉதிர்வதை தடுக்கலாம்.
* எவ்வளவு செல்லமாக வளர்த்தாலும் நாய்களை படுக்கை அறைக்குள் அனுமதிக்க வேண்டாம்.
* ஏ.சி. அறைக்குள்ளும் நாய்களை அனுமதிப்பதை தவிர்க்கலாம். இதனால் அவற்றுக்கு சளி பிடிக்க வாய்ப்புள்ளது.
* நாய் பிறந்து 4 மாதத்தில் இருந்து 8 மாதம் வரை 20 நாட்களுக்கு ஒரு
முறையும், 8 மாதத்தில் இருந்து உயிரோடு இருக்கும் வரையும் நாயின் எடையைப்
பார்த்து அதற்கேற்ப பூச்சி மருந்து கொடுத்து வர வேண்டும்.
*
ஒன்றுக்கு மேற்பட்ட நாய்கள் சேர்ந்து கொண்டால் அவைகளும் விளையாடத் தொடங்கி
விடும். அப்போது ஒன்றையொன்று கடித்துக்கொள்வதும் உண்டு. இதனால் பெரிய
பாதிப்புகள் ஏதும் ஏற்படாது.
* நாய்களால் மனிதர்களுக்கு பாதிப்பு
ஏற்படாமல் இருக்கவும், அதற்கு தடுப்பு ஊசி போட வேண்டும். எல்லாவிதமான
தடுப்பு ஊசிகளையும் போட்டு, பாதுகாப்பாக நாய்களை வளருங்கள்.