Saturday 18 May 2019

ஐந்து முறை தோல்வி... ஒரு விஷயம்தான் மனசுல ஓடுச்சு!’’ சிவில் சர்வீஸில் வென்ற விழுப்புரம் சித்ரா

'ஐந்து முறை தோல்வி... ஒரு விஷயம்தான் மனசுல ஓடுச்சு!’’ சிவில் சர்வீஸில் வென்ற விழுப்புரம் சித்ரா

";எத்தனை முறை தோற்றாலும் என்னால் முடியும்னு மன தைரியத்துடன் போராடினால் நாம்தான் வெற்றியாளர்"; என புன்னகை பொங்க பேசுகிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த பெண் இன்ஜீனியர் சித்ரா. இவர் நடந்த முடிந்த சிவில்சர்வீஸ் தேர்வில் இறுதித் தேர்வான நேர்முகத் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார். இது குறித்து சித்ராவிடம் பேசினோம்.
"; எனக்குச் சொந்த ஊர் விழுப்புரம். மிடில் க்ளாஸ் குடும்பம். படிச்சது எல்லாம் சாதாரண பள்ளியில்தான். அப்பா ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அம்மா இல்லத்தரசி. பி.டெக் இன்ஜீனியரிங் முடிச்சதும், சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிக்கப்போறேன்னு வீட்டில் சொன்னேன். மிடில் கிளாஸ் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் சராசரி கற்பனைக் கோட்டைத் தாண்டிய ஆசை என்னோடது என்றாலும்,  செலவை நாங்க பார்த்துக்கிறோம்னு அப்பா சொன்னாலும் என் குடும்ப நிலைமை எனக்குத் தெரியும்ங்கிறதுனால வேலைக்குப் போயிட்டே படிக்கிறேன்னு சொன்னேன். முழு நேரமும் படித்தால்தான் வெற்றி பெற முடியும்னு நிறைய பேர் சொன்னாங்க. அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துட்டே தேர்வுக்குப் படிக்க ஆரம்பிச்சேன். முதல் முறை தேர்வு எழுதும்போது தேர்வு பற்றி எந்தப் புரிதலும் இல்லை. எந்த கைடன்ஸும் இல்லாமல் தேர்வு... அதுமூலமா தேர்வு முறை பற்றி புரிதலை நானே வளர்த்துக்கொண்டேன். என்னுடைய விருப்பப் பாடம் தமிழ் என்பதால் தமிழுக்கும் நடப்புச் செய்திகளுக்கும் மட்டும் பயிற்சி வகுப்புகள் போக ஆரம்பிச்சேன். வேலைக்குப் போயிட்டு வந்து ஐந்து மணிநேரமாவது படிப்பேன். தனியார் நிறுவனம் என்பதால் தேர்வு சமயத்தில் படிக்கவும், தேர்வு எழுதவும் தொடர்ச்சியான விடுமுறை கிடைக்காது. அதனால் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு வரும் சமயத்தில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுட்டு எப்படியும் பாஸ் ஆயிருவேன் என்ற நம்பிக்கையில் படிக்க ஆரம்பிப்பேன்.
2013-ம் ஆண்டு முதல் முறையாக எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில் நான் எடுத்த மதிப்பெண் ரொம்பவே குறைவு. அடுத்ததா 2014ம் ஆண்டு தேர்வு எழுதினேன். 15 மதிப்பெண்ணில் வெற்றியை இழந்தேன். அதற்கடுத்த வருஷம் .03-யில் வாய்ப்பு பறிபோனது. போதும்டா இந்தப் படிப்புனு சோர்ந்துபோனது கிடையாது. ஜெயிச்சே ஆகணும்ங்கிற வெறி இருந்துட்டே இருந்தது. நான் பாஸ் ஆகலைன்னு தெயுற அந்த நிமிஷத்துலேருந்து அடுத்த வருடத் தேர்வுக்கு படிக்க ஆரம்பிப்பேன். அந்த நம்பிக்கைதான் ஆறாவது முயற்சியில் எனக்கான வாய்ப்பை வசப்படுத்தியது.
பொதுவா பெண்கள் இந்த மாதிரியான ஒரு துறைக்கு வரணும்னா, அவங்க குடும்பம் முழு சப்போர்ட் பண்ணணும். அந்த கிஃப்ட் எனக்கு கிடைச்சுது. அப்பா என்னை படிச்சது போதும்னு ஒரு நாள்கூட சொன்னது கிடையாது. நான் சென்னையில் தங்கி வேலை பார்த்துக் கொண்டே தேர்வுக்குத் தயாராகிட்டு இருந்தேன். தேர்வு நெருங்கிருச்சுனா அப்பா, அம்மா என் கூடவே வந்து தங்கி கூடவே இருந்து தைரியம் கொடுப்பாங்க. நான் எக்ஸாம் ஹாலுக்குப் போயிட்டா மதிய சாப்பாட்டோடு எனக்காக காத்துட்டு இருப்பாங்க ரெண்டு பேரும். இந்த மாதிரியான எத்தனையோ வழிகளைத் தாண்டிதான் ஒரு வெற்றியாளராக உங்க முன்னாடி நிக்கிறேன்"; என்றவர்,
நான் பள்ளி படிப்பு வரை 60 சதவிகித மதிப்பெண்கள் எடுக்கும் சராசரி மாணவிதான். உண்மையைச் சொன்னா, பள்ளிப் படிப்புக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கிறதைப் புரிஞ்சுகிடணும். சிவில் சர்வீஸ் தேர்வைப் பொறுத்தவரை எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பதைவிட எப்படிப் படிக்கிறோம்ங்கிறதுதான் ரொம்ப முக்கியம். பொதுஅறிவு, நடப்புச் செய்திகள் என எப்போதும் அப்டேட்டா இருக்கணும். சிவில் சர்வீஸ்க்கு ரெடியாகுறீங்கனா... முதல்ல ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து தேர்வு முறைகளைப் பற்றியும், எப்படிப் படிக்கணும் என்பதையும் தெரிந்துகொண்டால் இன்னும் எளிதா வெற்றி பெறலாம். நண்பர்களுடனான குரூப் டிஸ்கஷன், மாதிரித் தேர்வுகள் போன்றவை தேர்வு நேரத்தில் கூடுதல் நம்பிக்கையைக் கொடுக்கும். பொதுவாக நேர்முகத்தேர்வு கொஞ்சம் சிரமமான ஒண்ணுதான். நம்முடைய ரெஸியூம்ல நாம சொல்லியிருக்கிற தகவல்களை வச்சுதான் கேள்விகள் கேட்பாங்க. அதை எதிர்கொள்வதற்குப் பயிற்சிகள் அவசியம்.
என்னிடம் ";ஏன் சாப்ட்ஃவேர் துறையை விட்டுவிட்டு இந்தத் துறையைத் தேர்வு செய்தீர்கள்' என்ற கேள்வியைக் கேட்டார்கள். ''தாமரையைச் செந்தழல் கொண்டு மலர வைக்க முடியாது, அதற்கு இயற்கையான சூரிய ஒளி வேண்டும். சூரிய ஒளி போன்றதுதான் எனக்கு இந்த ஆட்சிப்பணி''னு பதில் அளிச்சேன். ஆனா அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது எனக்கே இன்னும் ஆச்சர்யமாதான் இருக்கு. என்னோட ரேங்க் 296. எந்தத் துறையில எனக்கு போஸ்டிங் வரும்னு தெரியலை. ஆனா, எதுவா இருந்தாலும் அதுல தடம் பதிப்பேன்'' என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறார் சித்ரா.

Best regards,