Thursday, 2 May 2019

நீர் மேலாண்மை:-

நீர் மேலாண்மை:-
(பெரிய பதிவு என்று படிக்காமல் இருக்காதீர்கள்)

UK (இங்கிலாந்து என்று சிலர் ஒட்டு மொத்தமாக சொல்வர்)  என்று சொன்னவுடன் லண்டன் என்று பலருக்கு நினைவுக்கு வந்தாலும் இங்கு வந்து சென்றவர்களுக்கு நினைவில் நிற்பது இந்த ஊரின் பசுமை.  மீண்டும்.மீண்டும் அதை புகழ்வார்கள். மேலும் இங்கு மக்களுக்கு கிடைக்கும் சுத்தமான தண்ணீர் அவர்களை வியக்க வைக்கும்.

இதன் காரணம் இங்கு இடைவிடாமல் மழை பொழிவதாக நம்பி செல்வார்கள்.
“கொடுத்து வச்சவங்க சார்”...இந்த ஊர்காரங்க என்று சொல்லி செல்வார்கள்.

நம் மாநிலத்த்தின் அளவே மக்கள் தொகை கொண்ட
நம்மை விட பெரிய நிலப்பரப்பு
நம்மை விட குறைந்த அளவு மழை வளம்......ஆமாம் குறைந்த அளவு நீர் வளம்  கொண்ட ஒரு இடம்  UK.

நம் மாநிலத்தை விட பசுமையாக இருப்பது எப்படி?
அங்கு மக்கள் தண்ணீருக்கு ராவும் பகலும் குடத்தை தூக்கி கொண்டு அலைந்து கஷ்டப்படாமல் 24 மணிநேரமும் சிறப்பாக வாழ்வதெப்படி ?????   கேள்விகள்...கேள்விகள்

உண்மை என்ன ?

சில விவரங்களை பார்ப்போம்.
UK மக்கள் தொகை :  6.5 கோடிகள்  (65.65 மில்லியன் – 2016)

தமிழகத்தின் மக்கள் தொகை     6.7 கோடிகள்  (67.86  MILLION  - 2012)

UK யின் நிலப்பரப்பு                      2,42,426 KM  2

தமிழ்நாட்டின் நிலப்பரப்பு          1,30,000 SQR KM

UK யின் வருட மழை பொழிவு     885 mml

TN ன் வருட மழை பொழிவு          945 mml (சுமார் 10% அதிகம்)

இதை தாண்டி இவர்களுக்கு நம்மூரை போல் பக்கத்து மாநிலத்தில் இருந்து வரும் காவிரி போன்ற ஆறுகளும் கிடையாது. முல்லை பெரியார் அணைக்கட்டிலிருந்து நீர் வரத்தும் கிடையாது. நான் மேலே சொன்ன கணக்கில் இந்த நதி நீர்வளங்களை கணக்கில் கொள்ளவில்லை. மேலும் இத்தகைய பெருநதிகள் இல்லாமல் போவதால் இவர்களிடம் பெரும் அணைக்கட்டுகளும் கிடையாது. அது தனிகதை.

இப்படி இருக்க நம் மாநிலம் மட்டும் குடிக்க தண்ணீர் பஞ்சம் என்றும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்றும் புலம்பும் நிலை ஏன்?

சிறப்பான நீர் மேலாண்மை இல்லாததுதான். 
சிறப்பான திட்டமிடலும் நீர் பகிர்வும்தான் காரணம்.

இந்த பிரச்சனையின் பல பக்கங்களில் ஒரு சிறு பகுதியை பார்க்கலாம்.

இங்கு சிறு வாய்க்கால்கள் சிறப்பாக பராமரிக்கப் படுகின்றன. ஏரிகள் ஆக்கிரமிக்கப் படுவதில்லை.
புதிய ஏரிகள் உருவாக்கப்படுகின்றன.
நீர் வளத்தை சுத்திகரித்து பகிர்வதில் தனியார்கள் இருந்தாலும் அவை அரசால் உள்ளூர் நகராட்சிகளால் வெகு சிறப்பாக கண்காணிக்கப் படுகிறது.
எந்த கழிவு நீரும் ஆற்றிலோ வாய்கால்களிலோ விடப்படுவதில்லை. முழுவதும் சுத்திகரிக்கப் பட்டு மறு சுழற்சி முறையில் திரும்ப உபயோகிக்கப் படுகிறது.

இங்கு தனியார் யாரும் வீட்டு உபயோகத்திற்கோ, தொழிற்சாலைக்கோ ஆழ்துளை கிணறு தோண்ட முடியாது. அரசிடம் கேட்டு அவர்கள் மூலமாக குழாய் மூலம் தண்ணீர் பெற்றே பயன்படுத்த முடியும்.  அதனால்தான் இந்த நாட்டில் பல இடங்களில் வெறும் 10 அடியில் நீர் பெருக்கெடுக்கும்.

ஒரு வீடோ, அலுவலகமோ, தண்ணீர், மின்சாரம், கழிவு நீர் சுத்திகரிப்பு வழி ஆகியவற்றை செய்யாமல் இயங்கவே முடியாது. இது நகரபுரமோ, கிராமபுறமோ எங்கிருந்தாலும் ஒரே சட்டம்தான்.  இதை மீறுபவர்கள் கடுமையாக விரைந்து தண்டிக்கப் படுகிறார்கள். அதற்கான சட்டங்கள் உண்டு. இப்படி செய்பவர்க’ளை எத்தனை பெரிய மனிதர்களாக இருந்தாலும் சமுதாயம் புறக்கணித்து அவமதிக்கிறது. எனவே யாரும் செய்ய துணிவதில்லை. முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது.

அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் எந்த ஒரு குடியிருப்போ, தொழில்சாலையோ அமையவே முடியாது.

பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்..இங்கிலாந்தில் எந்த ஒரு வீட்டிலும் தண்ணீர் மேலேற்றும் “பம்பு”களோ “மோட்டார்” களோ கிடையாது. நீங்கள் முதல் மாடியில் இருந்தாலும் மூணாவது மாடியில் இருந்தாலும் தண்ணீரை உங்கள் வீட்டுக்கு ஒரு குறிப்பிட்ட அழுத்தத்துடன் அளிக்க வேண்டியது அந்த நகராட்சியின் கடமை.  இன்றுவரை அதை தவறாமல் செய்கிறார்கள். 3 மாடிக்கு மேல் இருக்கும் கட்டிடங்களுக்கு அதற்கான சிறப்பு வசதிகளை செய்து விட்டுத்தான் அனுமதியே கிடைக்கிறது. அத்தகைய கட்டிடங்களும் குறைவு.

இங்கு தண்ணீர் அசுத்தப்படுத்துவதை பெரும் குற்றமாக பார்க்கின்றனர். சிறு கால்வாய்களின் அவசியமும் அவைஎப்படி இயற்கையுடன் ஒத்து இருத்தல் அவசியத்தையும் மிக கவனமாக உணர்ந்து செயல்படுகின்றனர். அதனால்தான் எந்த கிராமத்திற்கு சென்றாலும் தெள்ளிய நீரோடை பாய்வதை நீங்கள் காணலாம். இங்கு யாரும் வாய்கால்களில் சோப்பு போட்டு குளிக்கவோ, துணி தோய்க்கவோ தடை செய்யப்படுகிறது.

நீரில் மீன்களின் அவசியத்தை உணர்ந்து அவைகளின் வகைகளும்  எண்ணிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர். மீன் இவர்களின் சிறப்பு உணவாக இருந்தாலும் கண்ட இடத்தில் பிடித்து கண்ட இடத்தில் விற்க முடியாது. மேலும் மரங்களை வளர்ப்பதில் தனி கவனம் கொள்கின்றனர். தோட்டங்களை பராமரிப்பதில் ஒவ்வொருவரும் பெருமை கொள்கின்றனர். தனி கவனம் செலுத்தி தன் தோட்டங்கள் சிறப்பாக இருக்க முயல்கின்றனர். இந்த தொட்டக்க்லையை கொண்டு ஒரு பெரிய வியாபரமே உருவாகியுள்ளது. ஊர் அழகாக இருக்க நகரத்தில் இல்லாவிட்டாலும் கிராமங்களில் மக்கள் தங்கள் ஒய்வு நேரத்தை இலவசமாக செலவழிக்கின்றனர். அப்படி செய்பவர்களை அந்த ஊர் மதிக்கிறது பைத்தியக்காரன் என்று சொல்வதில்லை.

சரி...இப்படிப்பட்ட ஊரில் “கெமிகல்” தொழிற்சாலைகளே இல்லையா என்றால் அப்படிப்பட்ட தொழிற்சாலைகள் உண்டு என்பதுதான் உண்மை. மிகப்பெரிய ICI தொழிற்கூடங்கள் உண்டு. கோகோ கோலா, பெப்சி போன்ற தொழிற்கூடங்களும் உண்டு. ஆனால் அவைகளில் இருந்து வரும் கழிவு நீர்களின் தன்மை மிகக்கடுமையாக கவனிக்கப்படுகிறது. சில இடங்களில் கழிவு நீர் வெளியே வருவதே இல்லை. அவை மறுசுழற்சி செய்யப்படுகிறது. அந்த அளவுக்கு கட்டுமானங்கள் செய்யாவிட்டால் அந்த ஆலைகளை அமைக்க ஒப்புதல் அளிக்கப் படுவதேயில்லை.

பொது மக்கள் இந்த விஷயத்தில் ஓரளவு அறிவுடன்தான் இருக்கிறார்கள் அரசு நீர் பங்களிப்பை சிறப்பாக பராமரிக்கிறது. . மாசுக்கட்டுப்பாட்டு துறை லஞ்ச ஊழலுக்கு போகாமல் சமுதாய உணர்வுடன் தொடர்ந்து செயல்படுகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

எல்லோரும் சேர்ந்து ஒழுங்காக தேரை இழுக்கிறார்கள். பலன் கிடைக்கிறது.

இப்போது சொல்லுங்கள் நாம் எங்கிருக்கிறோம்.?
நாம் எங்கு செல்ல வேண்டும்?

நன்றி
ரவி சுந்தரம்

Best regards,