Monday, 27 May 2019

ஆண்களே வாய் விட்டு அழுங்கள்😢😭

ஆண்களே வாய் விட்டு அழுங்கள்😢😭

ஓர் ஆண் வாய் விட்டு அழுவது நல்லது என்று சொல்லப் போகும் கட்டுரை.

நம் ஊரில் ஒரு ஆண் அழுதால் அதை அவனது பலவீனம் என்றும், “பொட்டச்சி போல அழாதே” என்றும் சொல்லி அடக்கி விடுகிறோம். ஆனால் உலகின் புகழ் பெற்ற ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை பொதுவிடத்தில் காட்டிக்கொள்ளத் தயங்குவதே இல்லை.

டென்னிஸ் விளையாட்டுச் வீரர் திரு. ஃபெடரர் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அழுது விடுவார். இதற்கு அவர் சொல்லும் காரணம்: “விளையாட்டு வீரர்கள் உணர்ச்சி வசப்பட்டு அழுவதை அவர்களது விசிறிகளால் புரிந்து கொள்ள முடியும்.

அழுகை என்பது நல்ல உரையாடலை விட பலமடங்கு சிறந்தது. வெற்றியோ, தோல்வியோ, இரண்டும் எங்களைப் பாதிக்கின்றன.

இரண்டைப் பற்றியும் நாங்கள் சிந்திக்கிறோம். மனது உடைந்து அழுவது, மன பாரத்தை வெளியில் கொட்டுவது எல்லாமே சரிதான்;

நாங்களும் மனிதர்கள் தான் என்பதை எங்கள் அழுகை காண்பிக்கிறது. அழுவது ஆண்களின் இயல்பான குணம்!”

இவரைப் போலவே, திரு அமீர்கான், தனது ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சிகளின் இடையிலும், சில சமயம் முடிவிலும் தன் கண்களில் இருந்து வரும் கண்ணீரைத் துடைக்காமலேயே உட்கார்ந்திருப்பார்.

 பார்வையாளர்களும் அந்நிகழ்ச்சியில் பங்குபெறுவோர்களின் துன்பங்களையும் அதிலிருந்து மீண்டு வந்ததையும் கேட்டு கண்ணீர் மல்க உட்கார்ந்திருப்பார்கள்.

அழுகை நம் மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை லேசாக்குகிறது. அழுகை என்பது நல்லியல்பு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கண்ணீர் என்பது நம் கண்களில் அமைந்துள்ள கண்ணீர் சுரப்பிகளிலிருந்து உண்டாகிறது.

கண்ணீரில் மூன்று விதம் உண்டு.

அடிப்படை கண்ணீர்: (Basal tears) இது நமது கண்களை ஈரப்பசையுடன் வைக்கவும், தூசியை அகற்றவும் உதவுகிறது.

எதிர்வினைக் கண்ணீர்: (Reflex tears) கண்களில் ஏதாவது விழுந்து விட்டாலோ, அதிக நெடியினால் கண்கள் பாதிக்கப் பட்டாலோ, அல்லது இருமும்போதும், தும்மும்போதும், வெங்காயம் நறுக்கும்போதும் வருவது இந்தவகைக் கண்ணீர்.

கடைசி வகையும் முக்கியமானதும் தான்

உணர்வுசார் கண்ணீர்: (emotional tears) பலமான உணர்ச்சிக் கொந்தளிப்பு, கோபம், பயம், மன அழுத்தம், துக்கம், சில சமயம் மித மிஞ்சிய சந்தோஷம் இவை இந்த வகைக் கண்ணீருக்குக் காரணம்.

மின்னசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சிகள், உணர்வுசார் கண்ணீரின் பயன்களை பேசுகிறது..

உணர்வுசார் கண்ணீர் நம் உடலில் மன அழுத்தத்தாலும், கவலையினாலும் சேர்ந்து இருக்கும் வேண்டாத நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

ஆண்களை விட பெண்கள் 4 மடங்கு அதிகம் அழுகிறார்கள். பெண்கள் உணர்வுகளில் வாழ்கிறார்கள். ஆண்களோ எல்லாவற்றையும் வெளிக்காட்டாமல் உள்ளேயே அடக்கிக் கொள்ளுகிறார்கள்.

ஆண்களைப்போல் குழந்தைகளும் பிறந்த மூன்று மாதத்திற்கு கண்ணீர் வடிப்பதில்லை.

ஆண்கள் ஒரு வருடத்தில் சிலமுறை அழுகிறார்கள். ஆனால் பெண்கள் மாதத்தில் ஒருமுறையாவது அழுகிறார்கள்.

உணர்வு சார் கண்ணீர் பலசமயங்களில் மன அழுத்தத்தை குறைக்க பயன்படும். அதனால்தான் சிலர் தனிமையில் அழுகிறார்கள். அழுதபின் நம் மனது புத்துணர்வு பெருகிறதும் இதனால்தான்.

 உணர்வு சார் கண்ணீரில், மற்ற இரண்டு கண்ணீர்களில் இல்லாத மாறுபட்ட இரசாயனப் பொருட்கள் இருக்கின்றன;

 இவை நமக்கு ஓர் இயற்கையான வலி நிவாரணியாக செயல் படுகிறது. அதன் காரணமாகவே நம் மன அழுத்தம் குறைகிறது.

உணர்வுசார் கண்ணீர் வருவதற்கு மிகப் பலமான, உணர்வு பூர்வமான தூண்டுதல் இருக்க வேண்டும். யாரும் சும்மா அழுவதுபோல ‘பாவ்லா’ செய்யமுடியாது. அழுகையோ, சிரிப்போ உணர்வு பூர்வமான சூழலை மூளை உணர வேண்டும்.

 அதனால் ஒருவர் அழும்போது மூளையின் பல பகுதிகள் வேலை செய்கின்றன. இதன் காரணமாக, உடல்ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அழுகையோ, சிரிப்போ முகத்தின் தசைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இதயத் துடிப்பு, மூச்சுவிடும் அளவு இவை அதிகரிக்கின்றன. குரலும் மாறுகிறது.

ஆனால் சிலர் அதிகம் அழுவதற்கு என்ன காரணம் என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை. சமூகத் தாக்கம், சூழ்நிலைகளைக் காரணம் காட்டலாம்.

 பெண்களை விட ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப் படுத்திக்கொள்ள முடியும் என்று நம்புவதால், அவர்கள் அழுவதை சமூகம் என்றுக் கொள்ளுவதில்லை.

இதனாலேயே ஆண்கள் தங்களது மன அழுத்தத்தை சரி செய்ய நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளுகிறார்கள்.

நமக்குப் பிடித்தவர்களின் அருகாமையில், அண்மையில் அழுது, நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது நேர்மறையான விளைவுகளை கொடுக்கும்.

ஒருவர் அதீதமான மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது இதயத் துடிப்பு அதிகமாகிறது; வியர்வை பெருகுகிறது. அழுவது இதயத் துடிப்பை நிதானப் படுத்தி, அமைதியைக் கொடுக்கிறது.

மிக நெருங்கியவர்களின் மரணம், காதல் தோல்வி முதலியன ஆண்களை அழவைக்கின்றன.

ஆண்கள் அழுவதைப் பற்றி ஆண்கள் என்ன சொல்லுகிறார்கள்..?

ஆண்கள் உணர்வுபூர்வமானவர்கள் என்பதைக் காண்பிப்பதாக 32% ஆண்கள் கூறுகிறார்கள்.

அழும் ஆண் உண்மையானவன் என்று 29% கூறுகிறார்கள்.

ஆண் அழுவதை ஏற்றுக் கொள்ளுவதாகவும் அழுவதால் தங்களது ஆண்மைக்கு இழுக்கு இல்லை என்றும் 20% கூறுகிறார்கள்.

அழுவது தங்களது பலவீனத்தைக் காட்டுகிறது என்று 19% சொல்லுகிறார்கள்.

கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியுமா ?

தேவை இல்லை என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பின் அழுகையாக மாறுகிறது. அதனால் அழுகையை அடக்குவது சரியான செயல் அல்ல என்கிறார்கள்.

அழுவது நல்லது என்றாலும், நீண்ட நேரம் அல்லது நீண்ட நாட்கள் அழுவது நல்லதல்ல. இது மனச் சோர்வின் அறிகுறி.

அவ்வப்போது கண்ணீர் விடுவது நம் கண்களை கழுவி நமது வாழ்க்கையை நல்ல முறையில் பார்க்க உதவும்.


Best regards,