Wednesday, 31 July 2019

பெண்குழந்தை ரூ. 50,000 பெற என்ன செய்ய வேண்டும்

பெண்குழந்தை ரூ. 50,000 பெற என்ன செய்ய வேண்டும்

சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்’ என்கிற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் அரசு வழங்கும் நிதியான 50 ஆயிரம் ரூபாயைப் பெற எப்படி விண்ணப்பிப்பது, யாரை அணுகுவது என்பது போன்ற தகவல்களை சமூக நலத்துறை சார்பாக நமக்குத் தந்திருக்கிறார்கள். இதோ…

விண்ணப்பம்

ஒவ்வொரு மாவட்ட சமூக நல அலுவலகத்திலும் இதற்கான விண்ணப்பங்களைப் பெறலாம். இணையதள முகவரியில் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்துகொள்ளலாம்

(தரவிறக்கம் செய்யும்போது பெண்கள் தொடர்பான அனைத்து திட்டங்களுக்கான விண்ணப்பங்களும் வரும்.

அதில் நீங்கள் சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்துக்கான விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்).

தரவிறக்கம் செய்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அப்படிவத்தில் இருக்கும் உறுதிமொழிச்சான்றிதழை இணைத்து உங்கள் மாவட்டத்தில் இருக்கும் சமூக நல அலுவலரிடம் கொடுக்க வேண்டும்.

நிதி விவரம்

உங்களுக்கு ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின், அந்தக் குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்பீடாக ரூ.50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் எனில், ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25 ஆயிரமும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் 18 ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்யப்படும்.


நீங்கள் தரவிறக்கம் செய்யும்போது இங்கே சொல்லப்பட்டிருக்கும் தொகையைவிட குறைவாக அதில் சொல்லப்பட்டிருக்கும். அவை பழைய தகவல். தற்போது சலுகைகளை அரசு உயர்த்தியிருக்கிறது.

இணைக்க வேண்டியவை…

குடும்ப அட்டை

வருமானச் சான்று

சாதிச் சான்று

பெற்றோரின் வயதுச் சான்று

கருத்தடை அறுவை சிகிச்சை சான்று

குழந்தைகளின் பிறப்புச்சான்று (பெயர்களுடன்)

குடும்பப் புகைப்படம் – 1

ஆண் வாரிசு இல்லை என வட்டாட்சியர் வழங்கும் உறுதிச்சான்று

 இருப்பிடச் சான்று (விண்ணப்பதாரர் 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டில் வசிப்பவர் என்று வட்டாட்சியர் குறிப்பிட்டு வழங்குவது)

தகுதி

01.08.2011-க்கு பிறகு பிறந்த பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக்கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுக்கவும் கூடாது.

எப்போது விண்ணப்பிப்பது?

குழந்தை பிறந்த 3 ஆண்டுக்குள் விண்ணப்பிப்பது அவசியம்.

உங்கள் குழந்தைகளில் யார் பெயருக்கு நீங்கள் விண்ணப்பித்தீர்களோ, அவர்களுக்கான தொகை அந்த குழந்தை 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த பிறகே அரசு முதிர்வுத் தொகையாக வழங்கும். அவ்வாறு இல்லையெனில் வட்டியுடன் வைப்புத் தொகை அரசுக் கணக்கில் செலுத்தப்படும்.

பெற்றோரின் ஆண்டு வருமானம்

பெண் குழந்தை நலத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் பெற்றோரின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது.

தரகர்களைத் தவிர்க்கலாம்

இத்திட்டத்துக்கு விண்ணப்பிப்பதில் இருந்து அந்த தொகை முதிர்வுபெற்று பெறும்வரை நீங்களே அனைத்து வேலைகளையும் மேற்பார்வையிடுவது நல்லது. இடைத் தரகர்களை நம்பி வீணாக பணத்தை இழக்க வேண்டாம்.

மேலும் அதிக தகவல் பெற…

இது தொடர்பான மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள உங்கள் மாவட்ட சமூகநலத் துறையை அணுகவும்.

Best regards,