Tuesday, 14 February 2012

ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள்

ஆசிரியர்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள் : ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள் உருக்கம்........


"எங்களுடன் இருந்ததை விட, மாணவர்களாகிய உங்களுடன் தான், என் தாய் அதிக நேரம் செலவிட்டுள்ளார். ஆசிரியர்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்' என ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள், மாணவர்களிடையே உருக்கமாக பேசினார்.

பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள செயின்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், மாணவனின் படிப்பு குறித்து கண்டித்ததோடு, பெற்றோரிடமும் புகார் தெரிவித்ததால், ஆசிரியை உமா மகேஸ்வரி, வகுப்பறையிலேயே, ஒன்பதாம் வகுப்பு மாணவனால், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

ஆசிரியைக்கு அஞ்சலி : இதை தொடர்ந்து பள்ளிக்கு, சம்பவம் நடந்த அன்று மதியம் முதல், விடுமுறை விடப்பட்டு, நேற்று காலை திறக்கப்பட்டது. மறைந்த ஆசிரியை உமா மகேஸ்வரிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்காக, மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள், பள்ளிக்கு வந்திருந்தனர்.

பள்ள நிர்வாகத்தின் சார்பில், முதல்வர் சிவி மாத்யூ, முன்னாள் முதல்வர் பால் மண்ணியம், பாதிரியார் ஸ்டான்லி, பள்ளி நிர்வாகிகள் ஆகியோருடன், ஆசிரியை உமா மகேஸ்வரியின் கணவர் ரவி சங்கர், தாயார் அமிர்தம், மகள்கள் சங்கீதா, ஜனனி மற்றும் குடும்பத்தினர், பள்ளிக் கல்வித் துறை சார்பில் குப்புசாமி, உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர். மேடையில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியையின் உருவப்படத்திற்கு, அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்; அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

ஆசிரியை மகள்கள் படிப்புக்கு ரூ.5 லட்சம் : பள்ளி முதல்வர் பேசியதாவது: எங்கள் பள்ளி, திறமையான ஆசிரியரை இழந்து விட்டது. அவரின் மறைவு, ஈடுசெய்ய முடியாத ஒன்று. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு, எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளி நிர்வாகத்தின் சார்பில், ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள்கள் சங்கீதா மற்றும் ஜனனி ஆகியோரது பெயரில், ஐந்து லட்சம் ரூபாய், வங்கியில் டெபாசிட் செய்யப்படும். அவர்களின் மேல்படிப்பு செலவு அனைத்தையும், பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும். இவ்வாறு பள்ளி முதல்வர் பேசினார்.

ஆசிரியர்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள் :
நிகழ்ச்சியில், உமா மகேஸ்வரியின் மகள் சங்கீதா, மாணவர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அவர் கூறியதாவது: எந்த பிரச்னை ஆனாலும், அதை எதிர்த்து நிற்க வேண்டும். மரணம் என்பது, அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று தான். ஆனால், என் தாய் விரும்பி நேசித்த, ஆசிரியர் பணியாலேயே, அவர் மரணமடைய நேர்ந்துள்ளது. அடிக்கிற கை தான் அணைக்கும் என்பர்; அதுபோல், ஆசிரியர்கள் அடிக்க மட்டும் செய்ய மாட்டார்கள்; அணைக்கவும் செய்வர்.

என் தாய், வாரத்தில் ஒரு நாள் மட்டுமே, எங்களுடன் இருப்பார். மற்ற படி, ஆறு நாட்களும், மாணவர்களுக்கு கல்வி போதித்துக் கொண்டு இருந்தார். சொந்த மகள்களுடன் இருந்ததை விட, சொந்த மகன்களாக நினைத்து, மாணவர்களுடன் இருந்ததே அதிகம். அவர் எங்களை விட உங்களைத்தான் அதிகம் நேசித்தார். என்னுடன் படிக்கும் பிள்ளைகள் எல்லாம் என் பிள்ளைகள் என்பார்.

ஆசிரியர் கண்டித்தாலும், திட்டினாலும் மாணவர்கள் கோபப்படக்கூடாது. அடிக்கிற கைதான் அணைக்கும் என்பார்கள். நான் ஒரு மாணவியாக சொல்கிறேன். ஆசிரியர்கள் அடிப்பதும், கண்டிப்பதும் நமது நன் மைக்காகத்தான் என கருத வேண்டும். ஆசிரியர்களிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களிடம் பழகுகங்கள். அவர்கள் கண்டிப்பதை விரோதமாக கருதாதீர்கள் என்று அவர் பேச பலரும் கண் கலங்கினர்.

மாணவர்கள், ஆசிரியர்களை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள், என்றைக்குமே, கெட்டதை கற்றுத் தர மாட்டார்கள். நல்லதே போதிக்கும் ஆசிரியர்களுக்கு, மரியாதை தர மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சங்கீதா கூறினார்.

இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் இங்கிருப்பேன் :
நிகழ்ச்சியில் பேசிய சக ஆசிரியை சசி கூறியதாவது: ஆசிரியை உமா மகேஸ்வரி, இயேசு கிறிஸ்து மீது, அதிக நம்பிக்கை வைத்திருந்தார். "நடக்கும் எல்லாமே இயேசுவால் தான்' என, நம்பினார். சமீபத்தில் ஆசிரியை என்னுடன் பேசியபோது, "இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் நான் இங்கிருப்பேன்' எனக் கூறினார். அவர் எதற்காக அப்படி கூறினார் என, எனக்கு தெரியவில்லை. சம்பவம் நடந்த அன்று எனக்கு ஆசிரியை மரணம் குறித்து தகவல் வந்த போது, பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் என்னிடம் கூறியது ஞாபகம் வந்தது. இவ்வாறு சசி கூறினார்.

அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும், அனைவரும் கலைந்து சென்றனர். பள்ளி நாளை முதல் செயல்படும் என, அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் கலந்து கொண்ட, கவுன்சிலிங் கூட்டம் நடந்தது. இன்று, மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடத்தப்படும் என, பள்ளி முதல்வர் தெரிவித்தார்.