பணம் கொடுக்காவிட்டால் அதிமுகவிற்கு ஓட்டுபோடமாட்டோம் என்று அவர்கள் கூறியதால் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்து அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலை ஓட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா கடந்த சில நாட்களாக ஜாரூராக நடந்து வருகிறது. குறிப்பாக பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு வார்டில் 1700 வாக்காளர்கள் உள்ள நிலையில் 3 பேருக்கு மட்டுமே பண பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காண்பித்ததால் அந்த வார்டு பொறுப்பில் உள்ள அதிமுக உயர் மட்ட நிர்வாகிகளும், அப்பகுதி கட்சியினருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
வியாழக்கிழமை இரவு முதல் நகர் பகுதி முழுவதும் வார்டு வார்டாக அப்பகுதியில் பொறுப்பில் உள்ள அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக எதிர்கட்சியினர் கூறினர்.
ஓட்டுபோட மாட்டோம்
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருவேங்கடம் ரோட்டில் உள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென முற்றுகையிட்டனர். அங்கு முக்கிய நிர்வாகிகள் யாரும் இல்லாத நிலையில் அங்கிருந்த அதிமுகவினரிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எங்களுக்கு ஒரு ஓட்டுடக்கு கூட பணம் வழங்கவில்லை. எங்கள் பகுதிக்கு பணம் கொடுக்காவிட்டால் அதிமுகவுக்கு யாரையும் வாக்களிக்க விடமாட்டோம் என்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.