ஒருமுறை பெரியவா மகாராஷ்ட்ராவில் உள்ள பண்டரிபுரத்துக்கு விஜயம் செய்தார்கள். அந்த ஊரில் பீமா என்ற நதி உண்டு. அவர் சென்றிருந்த காலத்திற்கு பத்து வருஷங்கள் முன்பு அந்த நதி கரை புரண்டு நீரோடு ஓடியது என்றும் தற்போது வறண்டு மணல் காடாக உள்ளதை அறிந்தார். ஊர் மக்கள் அந்த நீரற்ற நதியில் 300 அடிக்கும் மேலாக ஆழமான அனேக கிணறுகளை தோண்டி அதில் கிடைக்கும் நீரில் தான் ஜீவித்து வந்தனர். ஒவ்வொரு குடம் தண்ணீருக்காக நீளமான கயிறுகளை கட்டி கிணற்றில் இறக்கி ஒரு குடம் நிரம்புவதற்கு கிட்ட தட்ட அரை மணியாவது ஆகும். என்ன வறட்சி பாருங்கள்.?
ஆற்றின் மறு கரையில் ஒரு பாழடைந்த மண்டபம். அது தான் பெரியவாளின் தங்குமிடம்.
இதை எல்லாம் பார்த்துகொண்டு பெரியவாளால் சும்மா இருக்க முடியுமா. அன்று சாயந்திரமே ஜபம் தொடங்கினார். ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை. கொட்டோ கொட்டு என்று "ஜோ " மழை பூமிக்கு இறங்கியது. ஆற்றில் வெள்ளம்!!! பெரியவாளுக்கு கரையேற ஒரு ஓடம் தேவை பட்டது. இந்த அதிசயத்தை கண்ணால் கண்ட பக்த கோடிகள் பெரியவாளின் பாதத்தில் விழுந்து வணங்கினர். பெரியவாளோ அமைதியாக " நான் யார் இதையெல்லாம் செய்ய, உங்கள் ஊரில் உள்ள அந்த பண்டரிநாதன் அல்லவோ மழையை கொண்டு வந்தவன். அவனுக்கு நன்றி தெரிவித்து வணங்குங்கள் " என்றார்.