Wednesday 19 June 2013

வந்தே மாதர கீதத்தை வற்புறுத்தி வம்பிழுக்கிறதா ஹிந்துத்துவம்?

வந்தே மாதர கீதத்தை வற்புறுத்தி வம்பிழுக்கிறதா ஹிந்துத்துவம்?
===========================================
ஹிந்துத்துவவாதிகள் வந்தே மாதரத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். ஏனென்றால் அது ஹிந்து தெய்வங்களைப் பாடும் பாடல், அது இஸ்லாமியருக்கு எதிரான பாடல். இந்நிலையில் ஹிந்துத்துவவாதிகள் ஏன் வந்தே மாதரத்தை அனைத்து இந்தியர்களின் பாடல் எனக் கூறுகிறார்கள்? இது இஸ்லாமியரை அன்னியப்படுத்துவது ஆகாதா? இது ஒரு வாதம்.

உண்மையில் இது தவறான பார்வை. 1881இல் எழுதப்பட்ட “ஆனந்தமடம்’ நாவல், முஸ்லிம் ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஹிந்துத் துறவிகளை கதாநாயகர்களாகக் கொண்ட நாவல் என்பது சரியானதல்ல.

வங்காளத்தை அன்று ஆண்ட நவாப், பிரிட்டிஷ் கைப்பொம்மை ஆகிவிட்ட நிலையில், பிரிட்டிஷுக்கு எதிராகத் துறவிகள் போராடும் நாவல் இது. இரண்டு முக்கிய போர்க்களக் காட்சிகள் “ஆனந்தமட’த்தில் காட்டப்படுகின்றன.

ஒன்று காப்டன் தாமஸ் என்கிற வெள்ளையன் தலைமையிலான பிரிட்டிஷ் ராணுவத்தை சந்தான்கள் (அன்னையின் புதல்வர்கள்) எனும் துறவிகள் தாக்கி அழிக்கின்றனர். இறுதிக்கட்டத்தில் மேஜர் எட்வர்ட்ஸ் என்கிற வெள்ளையன் தலைமையிலான ராணுவத்தைத் தாக்கி அழிக்கின்றனர்.

மகாத்மா காந்தி, தேச விடுதலைப் போராட்டக் களத்தில் இறங்குவதற்கு முன்பே, வங்க சுதேசி இயக்கம் வந்தே மாதர கோஷத்தைத் தன் ஜீவகோஷமாக்கி வீறுகொண்டெழுந்தது. தூத்துக்குடியிலும் அது மக்கள் இயக்கமாக உருவெடுத்தது.

அதில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு மிக அதிகம். தேசபக்தியில் ஹிந்துக்களுக்கு எவ்விதத்திலும் சளைக்காத அந்த இஸ்லாமியர்களுக்கு வந்தேமாதரம் எவ்வித பிரச்னையையும் ஏற்படுத்திட வில்லை.

பகத்சிங்கின் குரு தியாகி அஷ்பகுல்லா கான் வந்தேமாதரம் கானத்தைப் பாடியுள்ளார்.
எனில், இஸ்லாமின் பெயரால் வந்தே மாதரத்தை எதிர்க்கும் போக்கு எப்போது இருந்து தொடங்கியது?

பிரிட்டிஷ் விசுவாசிகளாக இருந்த ஓர் இஸ்லாமியப் பிரிவினைர் “முஸ்லீம் லீகர்கள்’ துருக்கி இஸ்லாமிய கலீஃபா ஆட்சிக்கு ஆதரவாக, பிரிட்டனுக்கு எதிராக மாறியபோது அவர்களை காங்கிரஸ் ஆதரிக்கத் தொடங்கியது.

தேசபக்த முஸ்லிம்கள் பின்னால் தள்ளப்பட்டு, அடிப்படைவாத இஸ்லாமிய பிற்போக்காளர்கள் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் பிரதிநிதிகளாக முன்னிறுத்தப்பட்டனர். அப்போதுதான் வந்தே மாதரத்துக்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள், இஸ்லாத்தின் பெயரால் தொடங்கப்பட்டது.

வகுப்புவாத சக்திகள் முதலில் வந்தேமாதரத்தைத் துண்டாடின. காங்கிரஸ் மௌனம் காத்தது. விளைவு, வந்தேமாதரத்தை தொடர்ந்து இந்தியாவும் துண்டாடப்பட்டது. ஆனால், அந்த வகுப்புவாதப் புயல் வீசியபோதுகூட, வந்தே மாதரத்துக்காக குரல் கொடுத்த இஸ்லாமியர்கள் உண்டு.

வங்காளத்தைச் சார்ந்த முகமது ராஸா எனும் மௌலான “வந்தேமாதரம்’ என்றே ஒரு பிரசுரத்தை 1944ல் வெளியிட்டார்.

“”…. நம்மில் சிலர் வாழ்வின் ஆதாரமான விஷயங்களைக்கூட சிலை வழிபாடு எனக்கூறி எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். தேசத்தை அன்னை என்பதுகூட அவர்களுக்குச் சிலை வழிபாடு ஆகிவிட்டது.

பெற்றோர் கால்களைத் தொட்டு வணங்குவதும் ஒரு தேசத்தலைவரின் சித்திரத்தை வீட்டில் மாட்டுவதும்கூட இஸ்லாமிய விரோதம் ஆகிவிட்டது. இவ்வாறு எதிர்ப்பவர்கள் சாதாரண முஸ்லிம்களின் மனத்தில் “இஸ்லாமிய விரோதம்’ என்கிற பெயரில் அச்சத்தை உருவாக்குகிறார்கள்.

இத்தகைய போக்கு உங்கள் சிந்திக்கும் திறனை அழிப்பதுடன் தேச விடுதலைக்குப் போராடும் ஆற்றலையும் அழிக்கிறது. 1944ல் எழுதிய வார்த்தைகள் இன்றைக்கும் நமக்குப் பொருந்துகிறது!

ஷா நாவாஸ்கான் போன்ற முஸ்லிம் ராணுவ அதிகாரிகளையும், பல்லாயிரக்கணக்கான ஹிந்து முஸ்லிம் வீரர்களையும் கொண்ட ஆசாத் ஹிந்த் பவுஜின் ராணுவ அணிவகுப்பில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது.

சுபாஷ் சந்திரபோஸ், திமிர்பரண் எனும் இசையமைப்பாளரிடம் வந்தேமாதரத்தை துர்கா ராகத்தில் ராணுவ அணிவகுப்புக்கு ஏற்ப, அமைக்கப் பணித்தார். ஆஸாத் ஹிந்த் பவுஜ்னின் அணிவகுப்பு வந்தேமாதர இசையுடன் நடைபெற்றது.

அந்த அணிவகுப்பில் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு எவ்வித எதிர்ப்பு உணர்ச்சியும் தோன்றிடவில்லை. விடுதலைக்குப் பின்னரும் இந்திய இஸ்லாமிய பாரம்பரியத்தின் ஆகச் சிறந்த இசை மேதைகள் வந்தே மாதரத்தை இசைத்துள்ளனர்.

இசை அமைப்பாளர் அம்பைகர் பாரத அரசியல் சட்ட நிர்ணயக் குழுவினர் முன்னால் வந்தேமாதரம் இசைத்த போது, மனம் நெகிழ்ந்தவர் அம்பேத்கர்.

இசைக் கலைஞர் கேசர்பாய் கேர்க்கர் குரலில் காம்பவதி ராகத்தில் இசைக்கப்பட்ட வந்தேமாதரத்தின் முதல் இசைத்தட்டை பெறுபவர் தானாக இருக்கும் வேண்டும் என்று கூறினார் அம்பேத்கர்.

பின்னணியில் தேசபக்தியைத் தட்டி எழுப்பும் அரவிந்தரின் வந்தேமாதர மொழிபெயர்ப்பு உச்சாடனத்துடன் உஸ்தாத் சாதிக்கான் ஊனும் உயிரும் கரையப் பாடிய வந்தே மாதரம் 1998ல் வெளியானது.
(பாரத்பாலா வெளியீடு)

உஸ்தாத் ரஷீத் கான் 1999ல் மும்பையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்னால் உணர்ச்சி ததும்ப வந்தே மாதரத்தைப் பாடினார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தேமாதரம் இளைய சமுதாயத்தினை பாரதம் எனும் ஓருணர்வில் திளைக்க வைத்தது.

டாக்டர் அப்துல் கலாம் கூறுகிறார்:

ஏ.ஆர் ரஹ்மான் இஸ்லாமியராக இருக்கலாம். ஆனால் அவர் வந்தே மாதரம் பாடும்போது அவரது குரல் அனைத்து பாரத மக்களின் இதயத்திலும் ஒலிக்கிறது.

நம் ஒற்றுமை மனப்பாங்குக்கும் நம் இலக்கு சார்ந்த முன்னேற்றத்துக்கும் மிகப்பெரிய தடைக்கல்லாக விளங்குவது மக்களைப் பிளக்கும் சித்தாந்தவாதிகள்தாம்.

இன்று கவலை தரக்கூடிய விஷயமென்னவென்றால் மதத்தின் புற உருவை மத உணர்வுகளுக்கு மேலாக மதிக்கிற போக்குதான். நாம் ஏன் கலாசார ரீதியாக மத ரீதியாக அல்ல ஒரு தன்மையை நம் பாரம்பரியத்துக்கும் நம் அனைவரையும் பாரத மக்களாக்கும் ஒரு தன்மையை வளர்க்கக் கூடாது?

அவ்வப்போது வந்தே மாதரத்துக்கு எழக்கூடிய எதிர்ப்புகளும் கூட அடிப்படைவாதிகளால் எழுப்பப்படுபவை தான். உடனே ஊடகங்களும் ஏதோ இந்தக் குரல்தான் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின் குரல் என்பது போன்ற ஒரு சித்திரத்தை ஏற்படுத்துகின்றன.

அதனை நியாயப் படுத்தவும் முனைகின்றன. இத்தகைய மதக்கட்டுப்பாடுகளுக்கு எதிரான உணர்ச்சி பூர்வமான எதிர்ப்புகளும், வந்தேமாதரத்துக்கு ஆதரவான குரல்களும் இஸ்லாமிய சமுதாயத்திலிருந்தும் கிளம்புகின்றன.

ஆனால், அந்தக் குரல்களுக்கு அரசியல்வாதிகளும் சரி, ஊடகங்களும் சரி முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை.

உதாரணமாக, 2006ல் சன்னி உலேமா அமைப்பின் தலைவர் ஒருவர் வந்தேமாதரம் பாடுவதற்கு எதிராக ஃபத்வா கொடுத்தார். இது ஊடகங்களில் பெரிய அளவில் காட்டப்பட்டது.

உடனே தன்னைச் சிறுபான்மை இனக் காவலனாகக் காட்ட அன்றைய மனிதவள மேம்பாட்டு மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங்கும் வந்தேமாதரத்தை அனைத்து மாணவர்களும் பாட வேண்டியதில்லை எனக் கூறினார்.

அதே நேரத்தில் ஆக்ரா சிவில் நீதிமன்றத்தின் முன்னால் மற்றொரு சம்பம் நடந்து கொண்டிருந்தது ஊடக ஒளிவட்டங்களாலும் அரசியல்வாதிகளாலும் கண்டுகொள்ளப் படாமல்! 13 ஆகஸ்ட் 2006 முதல் 21 ஆகஸ்ட் 2006 வரை குல்சமன் ஷெர்வானி எனும் இஸ்லாமிய இளைஞர் ஒரு வாரமாக பாரத அன்னையின் சிலையின் முன் தண்ணீர்கூடப் பருகாமல் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார்.

21 ஆகஸ்ட் அன்று அவருக்கு ஏதாவது நேர்ந்துவிடக் கூடாதே என்பதற்காக மாவட்ட நிர்வாகம் அவருடைய வாயில் வலுக்கட்டாயமாகப் பழச்சாற்றினைத் திணித்து, அவரது உண்ணாவிரதத்தை முறித்தது.

உண்ணாவிரதத்தின் காரணம்?
வந்தே மாதரத்தைப் பாடுவது இஸ்லாமுக்கு எதிரானது என ஃபத்வா அளித்து, கல்விச்சாலைகளில் அது பாடுவதை எதிர்க்கிற ஸன்னி உலேமா அமைப்பின் மௌலானா ஷையது ஷா பத்ருதீனின் செயலைக் கண்டிப்பதுதான்!

உண்மையில் ஷெர்வானி, டாக்டர் அப்துல் கலாம் கூறும் “கலாசார ரீதியாக நம் அனைவரையும் பாரத மக்களாக்கும் ஒரு பாரம்பரியத் தன்மைக்கு தன்னையே ஒரு செயல்படும் உதாரணமாக்கியிருந்தார்.

ஆனால், அவர் தனி ஆளல்ல. இன்று பாரத எல்லைகளுக்கு வெளியிலிருந்து உத்வேகம் பெறும் அடிப்படைவாதத் தாக்குதல்களுக்கு இலக்காகி அழிக்கப்பட்டு வரும் ஒரு மகத்தான பாரத வேர் கொண்ட இஸ்லாமிய பாரம்பரியத்தின் வெளிப்பாடு.

கபீர், ரஸ் கான், ஷா லத்தீப், தாரா ஷûகோ, அஸ்பகுல்லா கான், முகமது கரீம் சாக்லா, தியாகி ஹமீது, ஷேக் சின்னமௌலானா, பிஸ்மில்லா கான், அப்துல் கலாம் எனத் தொடரும் அப்பெரும் பாரம்பரியத்தை, சிலை வழிபாடு என்றும், இசை எனும் ஹராம் என்றும் ஒதுக்கிவிடலாமா?

அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில மத அடிப்படைவாதிகளைத் திருப்தி செய்ய, பாரத இஸ்லாமிய மரபினையே இஸ்லாமிய சமுதாயத்திடம் இருந்து பறித்து, அடிப்படைவாதத்தினால் அழிப்பதுதான் மச்சார்பின்மையா?

இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? சில மதத் தலைவர்கள் ஏற்கெனவே தேசிய கீதத்துக்கும் தேசியக் கொடிக்கும் மரியாதை செய்வது மதத்துக்கு எதிரானது எனப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

“தியாகத்தின் நிறம் காவியல்ல, பச்சை’ என்றுகூடப் பிரசாரம் நடக்கிறது.
இஸ்லாமிய தேசபக்தர்களையும், பாரத மண் சார்ந்த இஸ்லாமிய மரபுகளையும், தொடர்ந்து மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள் புறக்கணித்து வருகின்றனர்.

இந்தப் பார்வையில் நோக்கும்போது, வந்தேமாதரம் பாடும் தேசபக்த இஸ்லாமியர்களின் உரிமை பாதுகாக்கப்படவும், நம் பாரத தேசத்தின் மண்ணுடன் இணைந்த இஸ்லாமிய மரபு காப்பாற்றப்படவும், இஸ்லாமியர்கள் நம் பண்பாட்டிலிருந்து அன்னியமாகாமல் தடுக்கவும் உழைக்கும் ஒற்றுமைப் பார்வை ஹிந்துத்துவத்திடம் மட்டுமே உள்ளது என்பது புலனாகும்.

-----------------நன்றி அரவிந்தன் நீலகண்டன்-------------------