Tuesday, 4 June 2013

லொக் . . . லொக் . . . யாரங்கே பிடி! டி.பி.கிருமியை

காசநோயின் கொடூரத்தை இரண்டு சம்பவங்களில் நான் பார்த்திருக்கிறேன். எனக்கு பத்து வயதிருக்கும் ....(1962) பக்கத்து வீட்டில் புதிதாக திருமணமான பெண் ஒருத்தியின் இருமல் சப்தம் ஒயாமல் கேட்டுக்கொண்டேயிருக்கும். ஒரு நாள் அது ஓய்ந்துபோனது. பாடையில் அவள் உடலைப் பார்த்தபோது அதிர்ந்து போனேன். உடம்பு உருகி, எலும்பில் தோல் போர்த்தியது போலிருந்தது.

நுரையீரலில் பேக்டீரியா வசிக்கும் இடம்
காசநோய்க்கு சரியான மருந்து கிடைக்காத காலத்தில் நடந்த சம்பவம் இது. நான் புதுமுகவகுப்பில் கல்லூரியில் காலடி வைத்தநேரம். நண்பனுடன் மின்சார இரயில் ஏறி நுங்கம்பாக்கத்திலுள்ள கல்லூரிக்குச் செல்லுவோம். பெரியவர்களின் துணையின்றி தனியாக நண்பர்களுடன் வெளியுலகில் சுற்றித்திரியும் காலம். ஆனால் என் நண்பன் படிப்பை பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சென்னை பொது மருத்துவமனையில் காசநோய் வார்டில் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தான், மிகவும் ஸ்ட்ராங்கான மருந்தினால் தலை முடியெல்லாம் கொட்டிப்போய் எலும்பும் தோலுமாக இருந்தான். நல்லவேளையாக தக்க மருந்து அப்போது இருந்ததால் அவன் பிழைத்துக் கொண்டான். பிறகு படிப்பைத் தொடர்ந்து டிகிரி வாங்கி இன்று ஆபிசராக நல்ல நிலையிலிருக்கிறான்.

சென்னையில் காசநோய் பரவலாக இருந்த சகாப்தம் 1960. சென்னைக்குப் புறநகரில் சானடோரியம் என்று தனி மருத்துவமனையை நிறுவி காசநோயைப் பரவவிடாமல் அன்று நிறுத்தினார்கள். காசநோய்க்கு வேக்சின் கண்டிபிடிக்கப்பட்டது. பிறந்த உடனேயே BCG என்று முத்தடுப்பூசி குழந்தைகளுக்குக் குத்தப்பட்டு வருகிறது.

ஒரு வழியாக காசநோய் ஒழிந்தது என்று நிம்மதியாக இருக்கும் நேரத்தில் மீண்டும் அதன் தீ நாக்குகள் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற வளரும் நாடிகளில் தீண்ட ஆரம்பித்துள்ளது. இம்முறை காசநோய் மருந்துகளையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பமிடும் பூதமாக உருவெடுத்து வந்திருக்கிறது. உலகில் இன்று HIV நோய்க்கு அடுத்தபடியாக கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்களின் வரிசையில் இரண்டாவதாக இருப்பது காசநோயாகும்.

காசநோயை ஆங்கிலத்தில் டியூபர்குலோஸிஸ் (Tuberculosis) என்பார்கள். ராபர்ட் கோஷ் என்ற ஜெர்மன் நுண்ணுயிரியல் வல்லுநர் 1882 இல் காசநோய்க்கான கிருமி மைக்கோபேக்டிரியம் டியூபர்குலோஸிஸ் (Mycobacteriun Tuberculosis) என்று கண்டுபிடித்தார். காசநோயைப் பொது ஜனங்கள் டி.பி என்றும் கூப்பிடுவார்கள்.

டி.பி தாக்காத மனித இனமே இல்லை. அரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் உடம்பில் கூட டி.பி இருந்திருப்பதை புதைபடிவ ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. ஏழை பணக்காரன், சிறுவர், பெரியவர் என்று பேதம் காட்டாமல் அனைவரையும் டி.பி தாக்குகிறது.

டி.பி. கிருமி இரண்டு நிலையில் மனித உடலில் தங்கி வாழ்கிறது. 90% மனிதர்களிடம் டி.பி கிருமி பதுங்கிய நிலையில் இருக்கும். மனிதரது நோயெதிர்ப்பு ஆற்றலின் தாக்குதலுக்கு பயந்து அடங்கி ஒடுங்கி உடலில் திசுக்களில் எங்காவது பதுங்கி வாழும். பதுங்கிய நிலையில் இக்கிருமி பல்கிப் பெருக முயலுவதில்லை. உயர் பிழைத்திருந்தாலே போதும் என்று மறைவாகவே இருந்துவிடுகிறது.

டி.பி கிருமி காற்றை மிகவும் விரும்பி வாழ்வதால், மனிதரின் நுரையீரல்களில்தான் இது முதலில் குடியேறும். ஆனால் இரத்தம் வழியாக மூளையின் சவ்வுகளுக்கு இடையிலுள்ள செரிப்ரோ ஸ்பைனல் திரவத்திலும் நுழைந்து வளரும். டி.பி மூளையைத் தாக்கும்போது அதை மெனிஞ்சைட்டிஸ் என்கிறார்கள். எலும்புக்குள்ளேயும் இது வாழும். கிருமி நுழைந்து பெருகும் திசு முடிச்சு முடிச்சாக மாறிவிடுவதால் அதை டியூபர்க்கிள் என்று ஆங்கிலப் பெயரால் டியுபர்குல ோஸிஸ் என்கிறார்கள். குச்சி குச்சியாக இருக்கும் டி.பி. கிருமி ஒன்றுடன் ஒன்று தொடர் சங்கிலி மாதிரி நீண்ட இழைபோல இருக்கும். மனிதத் திசுவிலும் ஒட்டிக் கொண்டு முண்டு முடிச்சாக திசுவை மாற்றிவிடும்.

கிருமி தாக்கும் உறுப்புகள்
டி.பி கிருமியின் வெளிப்புறத் தோல் (உறை) மனித செல்லில் ஒட்டிக் கொள்ளும் வகையில் இருக்கிறது. இதைப் பயன்படுத்தி (உறையை மட்டும் பயன்படுத்தி) பிரான்ஸில், பாரிஸில் உள்ள பாஸ்த்தர் நிறுவன விஞ்ஞானிகள் ஆல்பெர்ட் கால்மெட் மற்றும் க்வெரின் (Albert callmerle, camile Guerin) என்போர் டி.பிக்கான தடுப்பூசி மருந்தைத் தயாரித்தனர். இவர்களைத் தொடர்ந்து சால்மன் வேக்ஸ்மன் (Salman Waksman) என்ற ரஷ்ய விஞ்ஞானி ஸ்ட்ரெப்டோமைசின் என்ற ஆண்ட்டிபயாட்டிக் மருந்தைக் கண்டுபிடித்தார். அது டி.பிக்கு சிறந்த மருந்தாக வேலை செய்தது.

ஐஸோநியாசிட், இதம்ப்யூட்டால், பைராசினமைட், மற்றும் ரிஃபாம்பின் போன்ற கெமிக்கல் டி.பியை அழிக்க வந்த முதல் வரிசை மருந்துகள். இவற்றைத் தொடர்ந்து 130 நாட்கள் சாப்பிட்டால்தான் நோய்க்கிருமி அழியும்.

ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்கு போதிய மருந்துகள் கிடைக்காததினாலும், சிகிச்சையை பாதியிலேயே நிறுத்துவதாலும், அங்கே முதல் வரிசை மருந்துகளுக்கு மசியாத டி.பி கிருமிகள் தோன்றிவிட்டன. இதுதான் பரிணாமம் என்பது. பெருங்கூட்டத்தில் இயல்பாகவே வித்தியாசமான பிரஜைகள் தோன்றுவதுண்டு. அப்படித் தோன்றிய டி.பி கிருமியை வளர வாய்ப்பு தரும்போது அவை மருந்துகளால் அழிக்கப்பட்ட கிருமிகளின் விட்டுச்சென்ற இடத்தைப் பிடித்துக்கொண்டு நிரம்பிவிடிகின்றன.

அதன் பிறகு வந்த இரண்டாம் வரிசை மருந்துகளுக்கும் அதே நிலை ஏற்பட்டு இன்று கைவசமுள்ள எல்லா மருந்துகளையும் தாண்டி வளரக்கூடிய கொடிய டி.பி கிருமி உருவாகிவிட்டது. இக்கிருமி தாக்கிய மனிதரின் நிலை 1960க்கு முன் இருந்த நிலை! எந்த மருந்தாலும் அவரை குணப்படுத்த முடியாது. பரமபத விளையாட்டில் பெரிய பாம்பின் வழியாக, துவங்கிய இடத்திற்கே வந்து நின்ற கதையாகிவிட்டது. முதலில் சில மருந்துகளுக்குத்தான் எதிர்ப்பு இருந்தது. இந்நிலை மாறி ஏராளமான மருந்துகளுக்கும் எதிர்ப்பு ரகம் வளர்ந்துவிட்டது. (Multi drug Resistant-TB MDR-TB; Extensive Drug Resistsnt – TB, xDR-TB).

விஞ்ஞானிகள் மறுபடியும் டி பி க்கு புதிய மருந்துகளைத் தேடியபடி இருக்கிறார்கள். எந்த மருந்தும் நான்கு சோதனை நிலைகளைக் கடந்த பிறகுதான் மருந்து கடைக்கு வர முடியும். முதல் நிலை நச்சுத்தன்மையை சோதிக்கும் நிலை, இதை ஃபேஸ் 1 ( phase 1) என்பார்கள். SQ109 என்ற மருந்து, நிலை ஒன்றைத் தாண்டிவிட்டது. அதாவது இது மனிதருக்கு விஷமல்ல என்பது தெரிந்துவிட்டது. அடத்து 3 நிலை தாண்ட வேண்டும். இந்த கிருமியின் வெளி உறையை சிதைக்கும் குணம் கொண்டது. PA284 என்ற இன்னொரு மருந்து இரண்டாம் நிலையை தாண்டிவிட்டது. இது மருந்தின் திறமையை சோதிக்கும் கட்டம் (Efficacy). டி.பி கிருமியைக் கொல்லும் முயற்சி உலகெங்கிலும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. டி.பி கிருமியைக் கொல்லும் மருந்தை எப்படிக் கண்டுபிடிப்பது.?

குருட்டாம் போக்கில் மூலிகை சாறுகளைப் பயன்படுத்திப் பார்ப்பது ஒரு வகை. சோதனைச் சாலையில் கிருமியை சத்துணவு ஊடகத்தில் வளர்த்து அவற்றின்மிது மூலிகை சாறைப் பிழிந்து, அவை சாகின்றனவா என பார்ப்பது ஒரு வகை. ஆயிரம் மூலிகைகளில் ஒரு சில பலனளிக்கலாம். அளித்தாலும் அவை மனித உடம்புக்கு ஒத்துக் கொள்ளுமா? நோயைக் குணமாக்குமா? என்பது அடுத்த கேள்வி.

இன்னொரு வழி ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள மருந்துகளின் அடிப்படையில் உருவ ஒற்றுமையும் பண்பு ஒற்றுமையும் உடைய புதிய கெமிக்கல்களைத் தயாரித்துப் பரிசோதிப்பது. மூன்றாவது வழி கிருமியின் ஜீன்களை ஆராய்வது. ஆராய்ந்து கிருமியின் பலவீனத்தைக் கண்டுபிடித்து, அதற்குத்தக்க கெமிக்கலை மருந்தாக தயாரிப்பது. கிருமியின் பலவீன அம்சத்தை இலக்கு (Target) என்பது வழக்கம். விஞ்ஞானிகள் பயோ இன்ஃப்ஃர்மேட்டிக்ஸ் என்ற புதிய கம்ப்யூட்டர் உயிரியல் மூலம் டி.பி கிருமியின் டார்கெட்டுகளைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள்.

டி.பி. தாக்கப்பட்ட நுரையீரலில் காணப்படும் முடிச்சுகள்
கிருமியின் பலவீன அம்சத்தைக் கண்டிபிடிப்பது அத்தனை எளிய காரியமல்லை. பலவீனமே தெரியாதபடி அவை பல மாற்றுத் திட்டங்களை தம் கைவசம் வைத்திருக்கின்றன. உதாரணத்திற்கு, என்னை எழுதவிடாமல் தடுப்பதற்கு நீங்கள் என் பேனாவைப் பிடுங்கிக் கொள்ளலாம். ஆனால் என்னிடம் மாற்றுப் பேனா ஒன்றல்ல பல பையிலும், கையிலும் வைத்திருக்கிறேன் என்பது தெரிந்தால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்க்கும். சுதந்திரமாக வாழும் நுண்கிருமிகளும் கைவசம் பல மாற்று வழிகளையும் தந்திரங்களையும் வைத்திருக்கின்றன. ஜினொமிக்ஸ், மெட்டபலோமிக்ஸ் என்று புதிய பல பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் துறைகள் பிறந்துள்ளன. அவற்றின் உதவியால் கிருமிகளின் மாற்றுத் திட்டங்களையும் உபரி வழிகளையும் கண்டிபிடிக்க முடிகிறது.

ஒரு காலத்தில் வேக்ஸின் தயாரிப்பதற்குப் பயன்படுத்திய டி.பி கிருமி மிகவும் சாதுவானது. அதற்கு நோய் உண்டாக்கத் தெரியாது. அதன் ஜீனோமை, நோய் உண்டாக்கும் டி.பி நோய்க்கிருமியின் ஜீனோமுடன் ஒப்பிட்டபோது சாதுவில் இல்லாத ஒரு நீண்ட டி என் ஏ பகுதி இதில் இருந்தது. அந்த டி.என்.ஏ பகுதிதான் கிருமியின் துருப்புச் சீட்டாக இருக்கும் என்று அனுமானித்து அந்தத் திசையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. வேறு சிலர் கிருமியின் செல்லிலுள்ள அத்தனை புரதங்களையும் அலசிப்பார்க்க இறங்கிவிட்டனர். கிட்டதட்ட 17 நாட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.

கோயம்புத்தூரிலும் என்னுடைய வழிநடத்துதலின் பேரில் டி.பி கிருமியைக் கொல்ல சில ஆய்வுகள் நடந்தன. அதில் பென்ஸிமிடஸோல் என்ற கெமிக்கல்லுக்கு அசாத்திய திறமை இருப்பது வெளிப்பட்டது. அது டி.பிக்கு மட்டுமல்லாமல் வேறு பல கிருமிகளையும் தகர்க்கும் ஆற்றலுடையது எனபது தெரியவந்தது. ஆயிரக்கணக்கான மூலிகைகளின் வேதிமங்களை கையில் தொடாமலேயே கம்ப்யூட்டர் உதவியுடன் கணித ரீதியாக டி.பி கிருமியை அழிக்குமா அழிக்காதா என்று ஆராயும் முறையை கெமிக்கல் ஜினோமிக்ஸ் என்பார்கள். இந்த முறையையும் கோவையில் செல்வி கிருஷ்ணப்பிரியா, மற்றும் திருமதி.ஷமிதா போன்ற ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் முதலியவை வரும் போகும் டி.பி மட்டும் வந்தால் போகாது. அதை அண்டவிடாமல் தடுப்பதுதான் நமது சாமர்த்தியம்.