Sunday, 23 June 2013

தேவதாசி முறை இன்றும் தொடரும் வன்முறை !!!

பொட்டு கட்டிவிடுதல் அல்லது தேவதாசி முறை என்று சொல்லப்படுகின்ற இந்த பழக்கம் 1947ஆம் ஆண்டே தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு விட்டது.இருப்பினும் தேவதாசி முறை தமிழ்நாட்டில் உள்ள வேலூர்,திருவள்ளூர்,விழுப்ப
ுரம் மாவட்டங்களிலும்,ஆந்திராவிலும், கர்நாடாகவிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தேவதாசிகளைப் பற்றியோ அல்லது அந்த சமூகத்தைப் பற்றியோ பேசினால்,“பேசுபவரது நாக்கு எரிந்துவிடும்” என்று பெரியவர்கள் எச்சரிக்கை செய்வர். அந்த அளவுக்கு தேவதாசி முறைக்கு மதிப்பு கொடுத்து வந்தனர்.ஆனால் நாளடைவில் தேவதாசிகளை மன்னர்களும்,நிலபிரபுக்களும்,முக்கியப் பிரமுகர்களும் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் தேவதாசி என்பது பொதுமகளிர் என்பதாக பொருள் கொள்ளப்பட்டுவிட்டது இது வக்கிரமானது, அக்கிரமமும் கூட. 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சிலபடித்த அறிஞர்கள், பக்தர்கள் இந்த தேவதாசி முறையை வெறுக்கதக்க ஒன்றாகக் கருதி அதனை ஒழிக்க வேண்டும் என குரலெழுப்பத் துவங்கினர். காஞ்சிபுரம் ஆரிய மிஷன் செயலர் ராமச்சந்திரன் தேவதாசி முறையை எதிர்த்து பகிரங்கமாகக்குரல் எழுப்பினார். இந்த பழக்கத்தை தடை செய்யவும், பருவமடையாத குழந்தைகள் அர்ப்பணிக்கப்பட்டால் அவர்களை பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து வெளியேற்றுவதற்கும் சட்டம் ஒன்றை அப்போதைய பிரிட்டிஷ் இந்திய அரசு செயலர் தாதாபாய் 1912 செப்டம்பர் 18ல் “பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம்” என்ற பெயரில் சட்டசபையில் அறிமுகம் செய்தார்.
“தேவதாசி ஒழிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம்” என காந்திஜி தனது ஹரிஜன் இதழில் எழுதினார்.இதனால் இதனை முடிவுக்கு கொண்டு வர டாக்டர் ரெட்டி சட்டமன்றத்தில் ஜனவரி 24, 1930-ல் சென்னை மாகாணத்தில் உள்ள கோயில்களில் இந்த அர்ப்பணிப்பு முறை தடுக்கப்பட வேண்டும் என்ற மசோதாவை சென்னை சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார். பிறகு 1947-இல் ஒ.பி.ராமசாமி முதல்வராக இருந்தபோது சென்னை தேவதாசி தடுப்பு மசோதா கமிட்டியின் தலைவராக இருந்த சுப்பராயன் பரிசீலனையின் பேரில் நவம்பர் மாதம் இம்மசோதா சட்டமாகியது.
சட்டத்தை நிறைவேற்றிவிட்டாலும் கூட சம்பிரதாய ரீதியாக தேவதாசி முறை இன்றும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. தேவதாசி முறை கூடாது என்று சட்டம் இருப்பதால் சம்பிரதாயம், விமர்சையாகப் பின்பற்றப்படுவதில்லை.ஆனாலும் அந்த சம்பிரதாயம் மக்களிடையே வழக்கொழிந்து போய்விடவில்லை.காரைக்குடி பகுதியில் உள்ள சில சாதியினர் இன்றும் தேவதாசி முறையை கடைப்பிடிக்கின்றனர். விராலிமலையில் தேவதாசிகள் உள்ளனர்,புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்பழக்கம் நடைமுறையில் உள்ளது.
தேவதாசி பெண், திருமண உறவில்லாமல் அவருக்கு பிறந்த குழந்தைகள்
தேவதாசியை யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். மனைவியைப் போல் நடத்தலாம். ஆனால் மற்றவர்களால் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட மாட்டது. ஒர் உதாரணத்தைப் பார்ப்போம். பழனியம்மள் என்பவர் 14 ஆண்டுகாலம் ராஜன் என்பவருடன் குடும்பம் நடத்தினார். ஒரு நாள் உன்னை விட்டு நான் விலகிக் கொள்கிறேன் என்று ராஜன் பிரிந்து சென்று விட்டார். பழனியம்மாள் எந்த உரிமையும் கொண்டாட முடியாமல் அவர் இப்போது தவித்து வருகிறார். விவசாய கூலியாகப் பணியாற்றி பிழைப்பை ஓட்டி வருகிறார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் தேவதாசி முறை மறைமுகமாகப் பின்பற்றப்பட்டு ஒரு சில நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.சியோலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா. 25 வயதான அவர் சிறுமியாக இருக்கும் போது இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை அவரது பெற்றோர் கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்தி விட்டனர். அவர் தேவதாசியாகி விட்டார். தேவதாசிகள் அனைவரின் முகப்பெழுத்தும் ‘எம்’ என்பதுதான். மாரியம்மாவைக் குறிக்கும் எழுத்துதான் எம் என்பதாகும். உண்மையில் தேவதாசிகள் அனைவரின் பொதுப் பெயரும் மாரியம்மா தான்.
ராஜவேணி என்ற ஏழுவயதுச் சிறுமியும் மாரியம்மாவுக்கு நேர்ந்துவிடப்பட்டுள்ளார். மூன்றாம் வகுப்பு படித்து வரும் ராஜவேணிக்கு விரைவில் பொட்டுக்கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்திலி கிராமத்தில் உள்ள மாரியம்மனுக்கு நேர்ந்துவிடப்பட்டுள்ள ராஜவேணிக்கு,நித்திய சுமங்கலி’ சடங்கு செய்துவைக்க வேண்டும் என்பதில் அவரது பெற்றோர் உறுதியாக உள்ளனர். ராஜவேணிக்கு பொட்டுக்கட்டும் சடங்கை செய்து கொள்வதில் துளியும் விருப்பம் இல்லை.ராஜவேணிக்கு தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உள்ளது என்கிறார்.
கிருஷ்ணவேணி உளுந்தூர்பேட்டையில் படித்து வருகிறார்.15 வயதான அவர், அவர்களது பெற்றோருக்கு இரண்டாவது மகள்.அந்திலி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்-அஞ்சலி தம்பதியினரின் மூத்தமகள் ராஜலட்சுமி ஆவார்.ராஜலட்சுமியின் கணவர் சிறுது காலத்திற்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சிலிருந்து அந்த குடும்பம் மீளவில்லை. கிருஷ்ணவேணிக்கு பொட்டுக் கட்டி விட்டால்தான் குடும்பத்துக்கு விடியல் ஏற்படும் என்று நினைக்கின்ற அளவுக்கு அஞ்சலியிடம் மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை வலியுறுத்தியுள்ளனர். வேறு வழியில்லாமல் தனது இளையமகள் கிருஷ்ணவேணியை நித்திய கல்யாணியாக்குவது என்ற முடிவுக்கு அஞ்சலி வந்துள்ளார்.அவரது கணவர் ராமகிருஷ்ணரும் இதற்கு உடன்பட்டுள்ளார்.
இந்நிலையில் எதிர்பாராத திடீர் திருப்பமாக சமூகநல ஆர்வலர்கள் சிலர் இப்பிரச்சனையை மாவட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். இப்போது கிருஷ்ணவேணி அரசு நடத்தி வரும் ஆஸ்டல் ஒன்றில் தங்கிப் படித்து வருகிறார்.
ஆதாரங்கள்:
1. http://tehelka.com/story_main4.asp?filename=Ne071704Reluctant.asp
2. http://www.paramparai.eu/html/prod02r4.htm
3.The Lord’s last consort
நன்றி
வலையுகம்